Skip to content

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்கான அறிவுரைகள்

நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்கான அறிவுரைகள்

பொருளடக்கம்

1. நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் எல்லாருக்கும் இந்த டாக்குமென்டில் உள்ள அறிவுரைகள் உதவி செய்யும். நியமிப்பு உள்ளவர்கள் தங்கள் நியமிப்பை தயாரிப்பதற்கு முன்பு நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற குறிப்புகளையும், இந்த டாக்குமென்டில் உள்ள அறிவுரைகளையும் நன்றாக படித்து பார்க்க வேண்டும். நியமிப்புகளைச் செய்ய பிரஸ்தாபிகள் எல்லாரையும் உற்சாகப்படுத்த வேண்டும். தொடர்ந்து சபைக் கூட்டங்களுக்கு வருகிறவர்கள், பைபிள் போதனைகளை ஏற்றுக்கொண்டு, அதில் இருக்கிற நியமங்களின்படி வாழ்ந்தால் அவர்களுக்கும் மாணவர் நியமிப்புகளைக் கொடுக்கலாம். பிரஸ்தாபியாக இல்லாத ஒரு நபர், நியமிப்பை செய்ய விரும்பினால் வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் கண்காணி, அதற்கான தகுதிகளைப் பற்றி அவரிடம் கலந்துபேசுவார். பிறகு, அவர் தகுதி பெற்றிருக்கிறாரா என்பதை அவரிடம் தெரிவிப்பார். அவருக்கு பைபிள் படிப்பு எடுப்பவர் (அல்லது சத்தியத்தில் உள்ள அவருடைய பெற்றோரில் ஒருவர்) அந்த சமயத்தில் அவருடன் இருக்க வேண்டும். ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக இருப்பதற்கு ஒருவருக்கு தேவைப்படும் அதே தகுதிகள் தான் இதற்கும் பொருந்தும்.—od அதி. 8 பாரா. 8.

 ஆரம்பக் குறிப்புகள்

2. ஒரு நிமிடம். ஒவ்வொரு வாரமும், ஆரம்பப் பாட்டு மற்றும் ஜெபத்துக்குப் பிறகு, வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் சேர்மன் அன்றைய கூட்டத்தின்மீது ஆர்வத்தைத் தூண்டும் விதமாகப் பேசுவார். சபையில் இருப்பவர்களுக்கு எந்தெந்த குறிப்புகள் ரொம்பப் பிரயோஜனமாக இருக்குமோ அவற்றை அவர் முக்கியமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

  பைபிளில் இருக்கும் புதையல்கள்

 3பேச்சு: பத்து நிமிடங்கள். பேச்சின் தலைப்பும், அது சம்பந்தமான இரண்டு அல்லது மூன்று முக்கியக் குறிப்புகளும் வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகத்தில் இருக்கும். இந்தப் பேச்சை ஒரு மூப்பருக்கோ, தகுதிவாய்ந்த உதவி ஊழியருக்கோ நியமிக்க வேண்டும். அந்த வாரத்துக்கான பைபிள் வாசிப்பு பகுதியில், புதிய பைபிள் புத்தகம் ஆரம்பமானால் அதை அறிமுகப்படுத்துவதற்காக ஒரு வீடியோ காட்டப்படும். பேச்சோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை அந்த வீடியோவிலிருந்து பேச்சாளர் எடுத்துச் சொல்லலாம். ஆனால், பயிற்சி புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற குறிப்புகள் எல்லாவற்றையும் அவர் கண்டிப்பாக விளக்க வேண்டும். நேரம் இருந்தால், பேச்சை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள உதவுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கிற படங்களை நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால், பயிற்சிப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை விளக்குவதற்கு, அதோடு சம்பந்தப்பட்ட இன்னொரு ஆராய்ச்சி குறிப்பையும் சேர்த்துக்கொள்ளலாம்.

 4புதையல்களைத் தோண்டி எடுங்கள்: பத்து நிமிடங்கள். இது ஒரு கேள்வி-பதில் பகுதி. இதில் முன்னுரையோ முடிவுரையோ இருக்காது. இதை ஒரு மூப்பரோ தகுதிவாய்ந்த உதவி ஊழியரோ நடத்துவார். கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு கேள்விகளையும் அவர் கேட்க வேண்டும். குறிப்பிடப்பட்டிருக்கிற வசனங்களை வாசிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை அவர் தீர்மானிக்கலாம். பதில் சொல்கிறவர்கள் 30 நொடிகளுக்குள் அதைச் சொல்ல வேண்டும்.

 5பைபிள் வாசிப்பு: நான்கு நிமிடங்கள். பைபிள் வாசிப்பை ஒரு ஆண் மாணவர் செய்வார். முன்னுரையோ முடிவுரையோ இல்லாமல், தனக்கு நியமிக்கப்பட்ட பகுதியை அவர் வாசிப்பார். அந்த மாணவர் பைபிள் வாசிப்புப் பகுதியைத் திருத்தமாகவும், புரிந்துகொள்ளும் விதமாகவும், சரளமாகவும், சரியான இடங்களில் அழுத்தி, ஏற்ற இறக்கத்துடனும், சரியான இடங்களில் நிறுத்தி, இயல்பாகவும் வாசிப்பதில் முன்னேற சேர்மன் உதவி செய்வார். பைபிள் வாசிப்பு பகுதிகள் பெரியதாகவோ சிறியதாகவோ இருக்கலாம். அதனால், வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் கண்காணி நியமிப்புகளைக் கொடுக்கும்போது மாணவர்களின் திறமைகளை மனதில் வைத்து அவர்களுக்கு நியமிப்புகளைக் கொடுக்க வேண்டும்.

 ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

6. பதினைந்து நிமிடங்கள். ஊழியத்துக்காகப் பயிற்சி பெறவும், உரையாடல் கலையை வளர்த்துக்கொள்ளவும், பிரசங்கிப்பதிலும் போதிப்பதிலும் முன்னேறவும் எல்லாருக்கும் வாய்ப்பு கொடுப்பதுதான் இந்தப் பகுதியின் நோக்கம். தேவைப்பட்டால், மூப்பர்களுக்கும் மாணவர் நியமிப்பு கொடுக்கலாம். பயிற்சி புத்தகத்தில் இருக்கிற நியமிப்புக்கு பக்கத்திலுள்ள அடைப்புக்குறிக்குள் கற்றுக்கொடுப்பது அல்லது அன்பு காட்டுங்கள் சிற்றேட்டிலிருந்து உழைக்க வேண்டிய படிப்பு குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கும். அதை மனதில் வைத்து ஒவ்வொரு மாணவரும் தங்கள் நியமிப்பை செய்ய வேண்டும். சில நேரங்களில், கலந்தாலோசிப்பு பகுதியும் இருக்கும். இதை ஒரு மூப்பரோ தகுதிவாய்ந்த உதவி ஊழியரோ நடத்துவார். கலந்தாலோசிப்பு பகுதியை எப்படி நடத்துவது என்பதை தெரிந்துகொள்ள  பாரா 15-ஐ பாருங்கள்.

 7பேச்சை ஆரம்பிப்பது: இந்த நியமிப்பை ஒரு ஆண் அல்லது பெண் மாணவர் செய்யலாம். எதிர்பாலாரை உதவியாளராக நியமிக்க கூடாது, அல்லது அவருடைய குடும்ப அங்கத்தினரை உதவியாளராக நியமிக்க வேண்டும். இருவரும் நின்றுகொண்டோ உட்கார்ந்துகொண்டோ இதைச் செய்யலாம்.—பொருள் மற்றும் நியமிப்புக்கான செட்டிங் பற்றி கூடுதலாக தெரிந்துகொள்ள  பாராக்கள் 12 மற்றும்  13-ஐ பாருங்கள்.

 8மறுபடியும் சந்திப்பது: இந்த நியமிப்பை ஒரு ஆண் அல்லது பெண் மாணவர் செய்யலாம். எதிர்பாலாரை உதவியாளராக நியமிக்க கூடாது. (km 5/97 பக். 2) இருவரும் நின்றுகொண்டோ உட்கார்ந்துகொண்டோ இதைச் செய்யலாம். முன்பு சந்தித்து பேசிய ஒருவரை அடுத்த முறை சந்திக்கும்போது என்ன பேச வேண்டும் என்பதை மாணவர் நடித்துக் காட்ட வேண்டும்.—பொருள் மற்றும் நியமிப்புக்கான செட்டிங் பற்றி கூடுதலாக தெரிந்துகொள்ள  பாராக்கள் 12 மற்றும்  13-ஐ பாருங்கள்.

 9சீஷர்களை உருவாக்குவது: இந்த நியமிப்பை ஒரு ஆண் அல்லது பெண் மாணவர் செய்யலாம். எதிர்பாலாரை உதவியாளராக நியமிக்க கூடாது. (km 5/97 பக். 2) இருவரும் நின்றுகொண்டோ உட்கார்ந்துகொண்டோ இதைச் செய்யலாம். ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கும் பைபிள் படிப்பின் ஒரு பகுதி நடித்துக் காட்டப்படும். முன்னுரை அல்லது முடிவுரை சம்பந்தமான படிப்பு குறிப்பு மாணவருக்கு நியமிக்கப்பட்டிருந்தால் தவிர, முன்னுரையோ முடிவுரையோ தேவையில்லை. எல்லா பாராக்களையும் வாசிக்க வேண்டிய அவசியமில்லை, தேவைப்பட்டால் வாசிக்கலாம்.

 10நம்பிக்கைகளை விளக்குவது: இந்த நியமிப்பு ஒரு பேச்சாக இருந்தால், இதை ஒரு ஆண் மாணவர் செய்ய வேண்டும். ஒரு நடிப்பாக இருந்தால், இதை ஒரு ஆண் அல்லது பெண் மாணவர் செய்யலாம். எதிர்பாலாரை உதவியாளராக நியமிக்க கூடாது, அல்லது அவருடைய குடும்ப அங்கத்தினரை உதவியாளராக நியமிக்க வேண்டும். மேற்கோள் காட்டப்பட்ட குறிப்புகளைப் பயன்படுத்தி, முக்கிய கேள்விக்கு மாணவர் தெளிவாகவும், சாதுரியமாகவும் பதிலளிக்க வேண்டும். அந்தக் குறிப்புகள் எந்த பிரசுரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடலாமா வேண்டாமா என்று மாணவரே தீர்மானிக்கலாம்.

 11பேச்சு: இந்த நியமிப்பை ஒரு ஆண் மாணவர்தான் செய்ய வேண்டும். அதை ஒரு பேச்சாக அவர் கொடுப்பார். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-வில் உள்ள ஒரு குறிப்பின் அடிப்படையில் இந்த பேச்சு இருந்தால், ஊழியத்தில் அந்த வசனத்தை(வசனங்களை) எப்படி பயன்படுத்தலாம் என்பதை மாணவர் சிறப்பித்துக் காட்ட வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு வசனத்தை எப்போது பயன்படுத்தலாம் என்றும், அந்த வசனத்தின் அர்த்தத்தையும், அதை ஒருவரிடம் எப்படி நியாயங்காட்டி பேசலாம் என்பதையும் அவர் விளக்கலாம். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டில் உள்ள பாடத்தில் இருக்கும் ஏதாவது ஒரு குறிப்பின் அடிப்படையில் பேச்சு இருந்தால், அந்த குறிப்பை ஊழியத்தில் எப்படி கடைப்பிடிக்கலாம் என்பதை மாணவர் வலியுறுத்த வேண்டும். அந்த பாடத்தின், குறிப்பு 1-ல் உள்ள உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டலாம் அல்லது பாடத்தில் இருக்கும் கூடுதல் வசனங்களையும் தேவைப்பட்டால் அவர் பயன்படுத்தலாம்.

   12பொருள்: இந்த பாராவிலும், அடுத்த பாராவிலும் இருக்கும் குறிப்புகள் “பேச்சை ஆரம்பிப்பது” மற்றும் “மறுபடியும் சந்திப்பது” ஆகிய நியமிப்புகளுக்குப் பொருந்தும். நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றால், பேசும் நபருக்குப் பொருத்தமான ஒரு எளிய பைபிள் உண்மையைச் சொல்வதும், மறுபடியும் அவரை சந்திப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதும் மாணவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும். உள்ளூர் சூழ்நிலைமைக்கு பொருத்தமான ஒரு தலைப்பை மாணவர் தேர்ந்தெடுக்க வேண்டும். கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் வீடியோவை காட்டலாமா அல்லது பத்திரிகையை கொடுக்கலாமா என்பதை அவரே தீர்மானிக்கலாம். மாணவர்களுடைய நடிப்புகள் மனப்பாடம் செய்து பேசுவது போல் இல்லாமல், உரையாடல் கலையை வளர்க்கும் விதத்தில் இருக்க வேண்டும். அதாவது தனிப்பட்ட அக்கறையை காட்ட வேண்டும், இயல்பாக இருக்க வேண்டும்.

   13நியமிப்புக்கான செட்டிங்: நியமிக்கப்பட்ட செட்டிங்கை, உள்ளூர் சூழ்நிலைமைக்கு ஏற்ப மாணவர் பயன்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு:

  1.  (1) வீட்டுக்கு வீடு ஊழியம்: நேரில் சென்றோ, போன் மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ வீடுகளில் இருக்கும் நபர்களிடம் சாட்சி கொடுப்பது போல இந்த செட்டிங் இருக்கும். மறுபடியும் செய்யப்படும் சந்திப்புகளுக்கும் இது பொருந்தும்.

  2.  (2) சந்தர்ப்ப சாட்சி: சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே, கிடைக்கும் சந்தர்ப்பத்தில் சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பை எப்படி உருவாக்குவது என்பதை விளக்க இந்த செட்டிங் உதவும். வேலை செய்யும் இடத்தில், பள்ளியில், அக்கம்பக்கத்தில், பொது வாகனங்களில் பயணம் செய்யும்போது அல்லது தினசரி வேலைகளில் ஈடுபடும்போது நாம் சந்திக்கும் ஆட்களிடம் நம் நம்பிக்கைகளைப் பற்றி பேசுவதும் இதில் உட்படும்.

  3.  (3) பொது ஊழியம்: வீல் ஸ்டாண்ட் ஊழியம், வியாபாரம் செய்யும் இடங்களில் மக்களை சந்திப்பது, தெரு ஊழியம், அல்லது பூங்காக்களில், வாகன நிறுத்துமிடங்களில், அல்லது மக்களைப் பார்க்கும் இடங்களில் எல்லாம் சாட்சி கொடுப்பது போல் இந்த செட்டிங் இருக்கும்.

 14வீடியோக்கள் மற்றும் பிரசுரங்களை பயன்படுத்துவது: சூழ்நிலைமையைப் பொறுத்து, ஒரு மாணவர் தன்னுடைய நியமிப்பில் வீடியோ அல்லது பிரசுரத்தை பயன்படுத்த முடிவு செய்யலாம். ஒரு பகுதியில் வீடியோ இருந்தால் அல்லது ஒரு பகுதியில் வீடியோவை பயன்படுத்த மாணவர் விரும்பினால், அதை அறிமுகப்படுத்திவிட்டு, அதில் உள்ள குறிப்புகளை கலந்துபேச வேண்டும்; ஆனால் வீடியோவை போட்டு காட்டக் கூடாது.

  கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

15. பாட்டுக்குப் பிறகு, அடுத்த 15 நிமிடங்களுக்கு இந்தப் பகுதி இருக்கும். கடவுளுடைய வார்த்தையை வாழ்க்கையில் கடைப்பிடிக்க சபையாருக்கு உதவி செய்யும் விதத்தில் ஓரிரு பகுதிகள் இருக்கும். நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றால், இந்தப் பகுதிகளை மூப்பர்களுக்கோ தகுதிவாய்ந்த உதவி ஊழியர்களுக்கோ நியமிக்கலாம். சபைத் தேவைகள் பகுதியை ஒரு மூப்பர் நடத்துவார். கலந்துபேசுங்கள் பகுதியை நடத்தும்போது, கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுடன், கூடுதலான சில கேள்விகளை அந்த முழு பகுதியிலிருந்தும் நடத்துபவர் கேட்கலாம். அவருடைய அறிமுகம் சுருக்கமாக இருக்க வேண்டும். இப்படி செய்யும்போது, முக்கிய குறிப்புகளை கலந்து பேசுவதற்கும், சகோதர சகோதரிகள் தாராளமாக கலந்துகொள்வதற்கும் போதுமான நேரம் இருக்கும். பேட்டி இருந்தால், தன்னுடைய இடத்திலிருந்தே பேட்டி கொடுப்பதற்கு பதிலாக முடிந்தவரை மேடையில் இருந்து பேட்டி கொடுப்பது நல்லது.

  16சபை பைபிள் படிப்பு: முப்பது நிமிடங்கள். இந்தப் பகுதி தகுதிவாய்ந்த மூப்பருக்கு நியமிக்கப்பட வேண்டும். (மூப்பர்கள் குறைவாக இருந்தால், தகுதிவாய்ந்த உதவி ஊழியர்களுக்கு நியமிக்கலாம்.) சபை பைபிள் படிப்பை யார் நடத்தலாம் என்பதை மூப்பர் குழு தீர்மானிக்க வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் படிப்பை நல்ல விதத்தில் நடத்தி, நேரத்துக்குள் முடிக்க வேண்டும்; முக்கிய வசனங்களை வலியுறுத்த வேண்டும்; நடைமுறைப் பயனைப் புரிந்துகொள்ள எல்லாருக்கும் உதவி செய்ய வேண்டும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கேள்வி-பதில் பகுதியை எப்படி நடத்த வேண்டும் என்பது சம்பந்தமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை மறுபார்வை செய்வது இந்தப் பகுதியை நடத்த உதவியாக இருக்கும். (w23.04 பக். 24, பெட்டி) அந்த வாரத்துக்கான பகுதியை முழுமையாக கலந்தாலோசித்த பிறகு படிப்பை முடித்துவிடலாம்; தொடர்ந்து கலந்துபேச வேண்டிய அவசியம் இல்லை. முடிந்தவரை, படிப்பை நடத்தவும் பாராக்களை வாசிக்கவும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சகோதரரைப் பயன்படுத்த வேண்டும். படிப்பைச் சுருக்கமாக நடத்தும்படி சேர்மன் சொன்னால், அதை எப்படிச் செய்வது என்பதைப் படிப்பை நடத்துபவர் தீர்மானிக்கலாம். ஒருவேளை, சில பாராக்களை வாசிக்காமல் விட்டுவிடலாம்.

  முடிவான குறிப்புகள்

17. மூன்று நிமிடங்கள். வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் சேர்மன், அந்தக் கூட்டத்தில் கற்றுக்கொண்ட பயனுள்ள விஷயங்களை மறுபார்வை செய்வார். அடுத்த வார கூட்டத்தில் சிந்திக்கப்போகிற தகவலைப் பற்றிச் சொல்வார். நேரம் இருந்தால், அடுத்த வாரம் எந்தெந்த மாணவர்கள் நியமிப்புகளைச் செய்வார்கள் என்பதைச் சொல்லலாம். நேரடியாக எதுவும் குறிப்பிடப்படாதவரை, தேவையான அறிவிப்புகளை சேர்மன் இந்தச் சமயத்தில் செய்யலாம்; சபையாருக்கு வாசிக்க வேண்டிய கடிதங்களை வாசிக்கலாம். வழக்கமான தகவல்கள், அதாவது வெளி ஊழிய ஏற்பாடுகள், சபையைச் சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் போன்றவற்றை அறிவிக்கக் கூடாது. அவற்றைத் தகவல் பலகையில் போட வேண்டும். முடிவான குறிப்புகள் பகுதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நேரத்தில், அறிவிப்புகளை செய்து முடிக்க முடியாது அல்லது கடிதங்களை வாசித்து முடிக்க முடியாது என்றால் கிறிஸ்தவர்களாக வாழுங்கள் பகுதியை நடத்தும் சகோதரர்களிடம் அவர்களுடைய பகுதியைச் சுருக்கமாக நடத்தும்படி சேர்மன் கேட்டுக்கொள்ளலாம். ( பாராக்கள் 16 மற்றும்  19-ஐ பாருங்கள்.) பாட்டு மற்றும் ஜெபத்துடன் கூட்டத்தை முடிக்க வேண்டும்.

  பாராட்டும் ஆலோசனையும்

18. ஒவ்வொரு மாணவர் நியமிப்பும் முடிந்த பிறகு, வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் சேர்மன் கொடுக்கப்பட்டுள்ள படிப்புக் குறிப்பின் அடிப்படையில் பாராட்டுவார், ஆலோசனை கொடுப்பார். இதைச் சுமார் ஒரு நிமிடத்தில் செய்வார். மாணவர் நியமிப்பை சேர்மன் அறிமுகப்படுத்தும்போது, படிப்புக் குறிப்பை சொல்ல மாட்டார். ஆனால், மாணவர் தன்னுடைய நியமிப்பை முடித்த பிறகு, சேர்மன் அவரைப் பாராட்டிவிட்டு, அந்த மாணவர் பயன்படுத்திய படிப்பு குறிப்பைச் சொல்லலாம். அந்த மாணவர் அந்தக் குறிப்பை எப்படிச் சிறப்பாக செய்தார் என்பதையோ அல்லது அதில் இன்னும் எப்படி முன்னேறலாம் என்பதையும் அது ஏன் முக்கியம் என்பதையும் கனிவாகக் குறிப்பிடலாம். மாணவருக்கோ, சபையாருக்கோ உதவியாக இருக்குமென்றால், அந்த நடிப்பில் இருந்த மற்ற அம்சங்களைப் பற்றியும் சேர்மன் சொல்லலாம். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டையோ, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டையோ ஊழியப் பள்ளி புத்தகத்தையோ பயன்படுத்தி இன்னும் கூடுதலான ஆலோசனைகளை கூட்டம் முடிந்த பிறகோ, வேறொரு சமயத்திலோ கொடுக்கலாம். அது அந்த மாணவர் பயன்படுத்திய படிப்பு குறிப்பு சம்பந்தமாகவோ, வேறொரு படிப்பு குறிப்பு சம்பந்தமாகவோ இருக்கலாம். வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் சேர்மன் மற்றும் துணை ஆலோசகர் ஆகியோரின் பொறுப்பைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள  பாராக்கள் 19,  24, மற்றும்  25-ஐ பாருங்கள்.

     நேரம்

19. சேர்மன் உட்பட, எல்லாரும் கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பகுதிகளை முடிக்க வேண்டும். வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். ஒருவேளை அதற்கு முன்னதாகவே அந்த பகுதி முடிந்துவிட்டால், அந்த நேரத்தை சரிசெய்ய கூடுதல் தகவல்களைச் சொல்ல வேண்டியதில்லை. ஒருவேளை பகுதிகளை நடத்தும்போது அதிக நேரம் எடுத்துக்கொண்டால், வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் சேர்மன் அல்லது துணை ஆலோசகர் அவர்களுக்குத் தனிப்பட்ட விதத்தில் ஆலோசனை கொடுப்பார். ( பாராக்கள் 24 மற்றும்  25-ஐ பாருங்கள்.) பாட்டு, ஜெபம் உட்பட, முழு கூட்டத்தையும் 1 மணிநேரம், 45 நிமிடங்களில் முடிக்க வேண்டும்.

 வட்டாரக் கண்காணியின் சந்திப்பு

20. வட்டாரக் கண்காணி சபையைச் சந்திக்கும்போது, வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா பகுதிகளும் நடத்தப்படும். ஆனால், சபை பைபிள் படிப்புக்குப் பதிலாக, வட்டாரக் கண்காணி 30 நிமிடங்களுக்கு ஊழிய பேச்சைக் கொடுப்பார். ஊழியப் பேச்சுக்கு முன்னால், அன்றைய கூட்டத்தில் கற்றுக்கொண்ட குறிப்புகளையும், அடுத்த வார கூட்டத்தில் கற்றுக்கொள்ளபோகும் குறிப்புகளையும் சேர்மன் சொல்வார். தேவையான அறிவிப்புகளைச் செய்வார், தேவையான கடிதங்களை வாசிப்பார். அதற்குப் பிறகு, வட்டாரக் கண்காணியை அறிமுகப்படுத்துவார். ஊழியப் பேச்சுக்குப் பிறகு, பாட வேண்டிய பாடலை வட்டாரக் கண்காணியே தேர்ந்தெடுப்பார். அதோடு, வேறொரு சகோதரரை ஜெபம் செய்வதற்காக அவர் அழைக்கலாம். சபையின் மொழியிலேயே நடக்கும் துணை வகுப்புகள், வட்டார கண்காணியின் சந்திப்பின்போது நடக்காது. அந்தச் சபையில் வேறொரு தொகுதி இருந்தால், அவர்கள் தங்களுடைய கூட்டங்களை நடத்திக்கொள்ளலாம். ஆனால், வட்டார கண்காணி ஊழிய பேச்சைக் கொடுக்கும்போது அந்தத் தொகுதி தங்கள் சபையோடு சேர்ந்துகொள்ள வேண்டும்.

 மாநாடு நடக்கும் வாரம்

21. வட்டார மாநாடோ, மண்டல மாநாடோ நடக்கும் வாரத்தில், கூட்டங்கள் எதுவும் நடக்காது. அந்த வார கூட்டத்துக்கான பகுதிகளைத் தனிப்பட்ட விதமாகவோ, குடும்பமாகவோ படிக்கும்படி சபையாருக்கு ஞாபகப்படுத்த வேண்டும்.

 நினைவுநாள் வாரம்

22. நினைவுநாள் நிகழ்ச்சி வார நாளில் வந்தால், அந்த வாரம் வாழ்க்கையும் ஊழியமும் கூட்டம் இருக்காது.

 வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் கண்காணி

23. மூப்பர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரு மூப்பர், வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் கண்காணியாக இருப்பார். இந்தக் கூட்டம் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டு, இங்கே கொடுக்கப்பட்டிருக்கிற ஆலோசனைகளின்படி நடக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்வது அவருடைய பொறுப்பு. அவர் துணை ஆலோசகரோடு ஒன்றுசேர்ந்து வேலை செய்வார். பயிற்சிப் புத்தகம் வெளிவந்தவுடன், வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் கண்காணி அந்த இரண்டு மாதங்களுக்கான எல்லா நியமிப்புகளையும் போடுவார். அதாவது, மாணவர் நியமிப்புகளை போடுவார்; அதோடு, மூப்பர் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சகோதரர்களை சேர்மனாக இருப்பதற்கும் கூட்டத்தின் மற்ற நியமிப்புகளை செய்வதற்கும் நியமிப்பார். ( பாராக்கள் 3-16 மற்றும்  24-ஐ பாருங்கள்.) மாணவர்களை நியமிக்கும்போது அவர்களுடைய வயது, அனுபவம், கலந்தாலோசிக்கப்படும் விஷயத்தை தயக்கம் இல்லாமல் பேசுவாரா என்பதையெல்லாம் கருத்தில்கொள்ள வேண்டும். கூட்டங்களுக்கான மற்ற பகுதிகளை நியமிக்கும்போதும் இதே விஷயங்களின் அடிப்படையில் நியமிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தங்கள் நியமிப்பைச் செய்வதற்கு குறைந்தது மூன்று வாரங்களுக்கு முன்பே நியமிப்பைக் கொடுக்க வேண்டும். மாணவர் நியமிப்புகளை கொடுப்பதற்கு நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் நியமிப்பு (S-89) படிவத்தைப் பயன்படுத்த வேண்டும். யாருக்கெல்லாம் நியமிப்பு இருக்கிறது என்ற அட்டவணை அறிவிப்பு பலகையில் போடப்பட்டிருக்கிறதா என்பதை வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் கண்காணி உறுதி செய்துகொள்ள வேண்டும். அவருக்கு உதவுவதற்கு வேறொரு மூப்பரையோ, ஒரு உதவி ஊழியரையோ மூப்பர் குழு நியமிக்கலாம். ஆனால் மாணவர் நியமிப்புகள் தவிர, மற்ற நியமிப்புகளை மூப்பர்கள் மட்டுமே நியமிக்க வேண்டும்.

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் சேர்மன்

24. ஒவ்வொரு வாரமும் ஒரு மூப்பர், வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் சேர்மனாக இருப்பார். (மூப்பர்கள் குறைவாக இருந்தால், தகுதிவாய்ந்த உதவி ஊழியர்களை சேர்மனாக நியமிக்கலாம்.) ஆரம்பக் குறிப்புகளையும் முடிவான குறிப்புகளையும் அவர் தயாரிப்பார். எல்லா பகுதிகளையும் அவர் அறிமுகப்படுத்துவார். மூப்பர்கள் குறைவாக இருந்தால், கூட்டத்தின் மற்ற பகுதிகளையும் அவர் கையாளுவார். முக்கியமாக, கலந்துபேச வேண்டிய அவசியமில்லாமல் வீடியோவை மட்டும் காட்ட வேண்டிய பகுதிகளை அவரே கையாளுவார். ஒவ்வொரு பகுதிக்கும் இடையில் சொல்லப்படுகிற குறிப்புகள் மிகவும் சுருக்கமாக இருக்க வேண்டும். யார் சேர்மனாக இருக்கலாம் என்பதை மூப்பர் குழு தீர்மானிக்க வேண்டும். தகுதிவாய்ந்த மூப்பர்கள் அவ்வப்போது சேர்மனாக இருப்பார்கள். சபையின் சூழ்நிலையைப் பொறுத்து, தகுதிவாய்ந்த மற்ற மூப்பர்களைவிட, வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் கண்காணியை அடிக்கடி சேர்மனாக பயன்படுத்தலாம். ஒரு மூப்பர் சபை பைபிள் படிப்பை நடத்த தகுதியுள்ளவராக இருந்தால், சேர்மனாக இருக்கவும் அவருக்குத் தகுதி இருக்கிறது. சேர்மனாக இருக்கிற மூப்பர், மாணவர் நியமிப்புகளைச் செய்கிறவர்களை அன்பாகப் பாராட்ட வேண்டும், தேவைப்படும் சமயத்தில், பயனுள்ள ஆலோசனைகளைக் கொடுக்க வேண்டும் என்பதைத் தயவுசெய்து மனதில் வைத்துக்கொள்ளுங்கள். சரியான நேரத்துக்குள் கூட்டத்தை முடிப்பதும் சேர்மனின் பொறுப்புதான். ( பாராக்கள் 17 மற்றும்  19-ஐ பாருங்கள்.) சேர்மன் விரும்பினால், அதேசமயத்தில் மேடையில் இடம் இருந்தால், மேடையில் சேர்மனுக்காக ஒரு மைக் ஸ்டாண்டை தனியாக வைக்கலாம். அடுத்தடுத்த பகுதிகளை அவர் அங்கிருந்தே அறிமுகப்படுத்தலாம். இப்படிச் செய்தால், சேர்மன் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கும் சமயத்தில் அந்தப் பகுதியை நடத்த வேண்டிய சகோதரர்கள் மேடையில் தங்கள் இடத்தில் வந்து தயாராக நிற்க முடியும். அதேபோல, மாணவர்கள் பைபிள் வாசிப்பு பகுதியைச் செய்யும்போதும், ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் பகுதியின்போதும் அவர் விரும்பினால் மேடையிலேயே உட்கார்ந்துகொள்ளலாம். இப்படிச் செய்தால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

   துணை ஆலோசகர்

25. முடிந்தவரை, அனுபவமுள்ள பேச்சாளராக இருக்கும் ஒரு மூப்பரை துணை ஆலோசகராக நியமிக்க வேண்டும். வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் பகுதிகளை நடத்துவது, பொதுப் பேச்சு கொடுப்பது, காவற்கோபுர படிப்பை நடத்துவது, அதை வாசிப்பது, சபை பைபிள் படிப்பை நடத்துவது, சபை பைபிள் படிப்பில் வாசிப்பது என மூப்பர்களும் உதவி ஊழியர்களும் கையாளுகிற எந்தப் பேச்சு நியமிப்பு சம்பந்தமாகவும், தனிப்பட்ட விதமாக அவர் ஆலோசனை கொடுக்கலாம். ( பாரா 19-ஐ பாருங்கள்.) சபையில் இருக்கிற மூப்பர்களில் நிறைய பேர், திறமையான பேச்சாளர்களாகவும் போதகர்களாகவும் இருந்தால், ஒவ்வொரு வருஷமும் தகுதிவாய்ந்த ஒவ்வொரு மூப்பரை துணை ஆலோசகராக நியமிக்கலாம். ஒவ்வொரு பேச்சு நியமிப்புக்குப் பிறகும், துணை ஆலோசகர் மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

 துணை வகுப்புகள்

26. சபையில் எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, மாணவர் நியமிப்புகளுக்காக துணை வகுப்புகளை நடத்தலாம். ஒவ்வொரு துணை வகுப்பிலும், தகுதிவாய்ந்த ஆலோசகர் ஒருவர் இருக்க வேண்டும். முடிந்தவரை, ஒரு மூப்பரை ஆலோசகராக நியமிக்க வேண்டும். தேவைப்பட்டால், தகுதிவாய்ந்த உதவி ஊழியரை நியமிக்கலாம். யாரெல்லாம் இந்த நியமிப்பைக் கையாளலாம், இந்த நியமிப்பை வெவ்வேறு சகோதரர்கள் சுற்று முறையில் கையாள வேண்டுமா என்பதையெல்லாம் மூப்பர் குழு தீர்மானிக்க வேண்டும்.  18-வது பாராவில் கொடுக்கப்பட்டுள்ள வழிநடத்துதலை ஆலோசகர் பின்பற்ற வேண்டும். துணை வகுப்பு நடத்தப்பட்டால், புதையல்களைத் தோண்டி எடுங்கள் பகுதிக்குப் பிறகு துணை வகுப்புக்குப் போகும்படி மாணவர்களிடம் சொல்ல வேண்டும். கூட்டத்தின் கடைசி மாணவரின் நியமிப்பு முடிந்த பிறகு, அவர்கள் சபையோடு மறுபடியும் சேர்ந்துகொள்ள வேண்டும்.

 வீடியோக்கள்

27. தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோக்கள் இந்தக் கூட்டத்தில் காட்டப்படும். வார நாட்களில் நடக்கும் கூட்டத்திற்கான வீடியோக்கள் JW லைப்ரரி® அப்ளிகேஷனில் கிடைக்கும். இந்த வீடியோக்களை வித்தியாசமான கருவிகளைப் பயன்படுத்தி பார்க்க முடியும்.

© 2023 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

S-38-TL 11/23