குடும்ப ஸ்பெஷல்
என் பிள்ளைக்கு யாராவது தொல்லை கொடுத்தால் என்ன செய்வது?
பள்ளியில் வம்பு இழுக்கப்படுவதாக உங்கள் மகன் உங்களிடம் சொல்கிறான். நீங்கள் என்ன செய்வீர்கள்? தொல்லை கொடுத்த மாணவனுக்கு பள்ளி நிர்வாகம் தண்டனை கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்களா? அல்லது எப்படிப் பதிலடி கொடுக்கலாம் என்று உங்கள் மகனுக்குச் சொல்லிக் கொடுப்பீர்களா? அதைத் தீர்மானிப்பதற்கு முன்பு, வம்பு பண்ணுவதைப் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். a
‘வம்பு பண்ணுவதை’ பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்?
‘வம்பு பண்ணுவது’ என்றால் என்ன? வம்பு பண்ணுவது என்பது தொடர்ந்து, வேண்டுமென்றே உடல் ரீதியாகவோ உணர்ச்சி ரீதியாகவோ தாக்குவதாகும். அதனால், யாராவது ஒருவர் ஓரிருமுறை அவமானப்படுத்திவிட்டார் என்பதற்காக அவர் தொல்லை கொடுக்கிறார் அல்லது வம்பு இழுக்கிறார் என்று அர்த்தம் கிடையாது.
இதைத் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்? ‘வம்பு இழுப்பது’ என்றால் என்னவென்று சிலருக்குச் சரியாகத் தெரிவதில்லை. ஒருவர் தங்களுக்கு எதிராக எதைச் செய்தாலும், அது சிறிய விஷயமாக இருந்தாலும்கூட, அதை ‘வம்பு இழுப்பதோடு’ சம்பந்தபடுத்திவிடுகிறார்கள். இப்படி, அந்த விஷயத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள். நீங்களும் அப்படிச் செய்தால், பிரச்சினைகளைச் சரிசெய்யும் திறன் உங்கள் மகனுக்கு இல்லை என்று நீங்களே அவனிடம் சொல்வதுபோல் இருக்கும். இந்தத் திறன் இப்போது மட்டுமல்ல, அவன் வளர்ந்து ஆளான பிறகும்கூட அவனுக்குத் தேவை என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
பைபிள் ஆலோசனை: “சட்டென்று கோபப்படாதே.”—பிரசங்கி 7:9.
சுருங்கச் சொன்னால்... சில சூழ்நிலைகளில் நீங்கள் தலையிட வேண்டியிருக்கும் என்பது உண்மைதான். ஆனால் சில சூழ்நிலைகள், மனவலிமையை வளர்த்துக்கொள்ளவும் மற்றவர்களோடு ஏற்பட்ட உரசல்களைச் சரிசெய்யவும் உங்கள் பிள்ளைக்குக் கற்றுக்கொடுக்கும்.—கொலோசெயர் 3:13.
ஆனால், உங்கள் மகனுக்கு யாராவது வேண்டுமென்றே தொடர்ந்து தொல்லை கொடுத்துவந்தால் என்ன செய்வது?
நான் எப்படி உதவலாம்?
உங்கள் பிள்ளை சொல்வதைப் பொறுமையாகக் கேளுங்கள். (1) என்ன நடக்கிறது (2) அது ஏன் உங்கள் பிள்ளைக்கு நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். எல்லா உண்மைகளையும் தெரிந்துகொள்வதற்கு முன்பு நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். என்ன நடந்தது என்று முழுமையாகத் தெரிந்துகொள்ள, உங்கள் மகனின் ஆசிரியரிடமோ தொல்லை கொடுக்கிற பிள்ளையின் அப்பா-அம்மாவிடமோ நீங்கள் பேச வேண்டியிருக்கலாம்.
பைபிள் ஆலோசனை: “ஒரு விஷயத்தை முழுமையாகக் கேட்பதற்குமுன் பதில் சொல்வது முட்டாள்தனம். அது அவமானத்தைத்தான் தேடித்தரும்.”—நீதிமொழிகள் 18:13.
உங்கள் பிள்ளைக்கு யாராவது தொல்லை கொடுக்கிறார்கள் என்றால், இதைப் புரிந்துகொள்ள அவனுக்கு உதவி செய்யுங்கள்: வம்பு இழுக்கப்படும் சமயத்தில் அவன் என்ன பேசுகிறான், எப்படி நடந்துகொள்கிறான் என்பது ரொம்ப முக்கியம். சூழ்நிலை நல்ல விதத்திலோ மோசமாகவோ மாறுவது அதைப் பொறுத்துதான் இருக்கிறது. உதாரணத்துக்கு, பைபிள் இப்படிச் சொல்கிறது: “சாந்தமாகப் பதில் சொல்வது கடும் கோபத்தைத் தணிக்கும். ஆனால், கடுகடுப்பாகப் பேசுவது கோபத்தைத் தூண்டும்.” (நீதிமொழிகள் 15:1) பழிவாங்குவது நிலைமையை மோசமாக்கிவிடலாம். தொல்லை குறைவதற்குப் பதிலாக முன்பைவிட அதிகரித்துவிடலாம்.
பைபிள் ஆலோசனை: “யாராவது கெட்டது செய்தால் பதிலுக்குக் கெட்டது செய்யாதீர்கள், யாராவது அவமானப்படுத்தினால் பதிலுக்கு அவமானப்படுத்தாதீர்கள்;”—1 பேதுரு 3:9.
பழிவாங்காமல் இருப்பது கோழைத்தனம் கிடையாது. அதற்குப் பதிலாக அது தைரியமாக இருப்பதைத்தான் காட்டுகிறது. இதை உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள். ஏனென்றால், பழிவாங்க மறுக்கும்போது ஒருவர் வம்பு பண்ணுகிறவரின் கட்டுப்பாட்டில் போக மறுக்கிறார். ஒருவிதத்தில் தொல்லை கொடுப்பவரை உங்கள் பிள்ளையால் வம்பு பண்ணாமலேயே தோற்கடிக்க முடியும்.
உங்கள் பிள்ளை இன்டர்நெட்டில் வம்பு இழுக்கப்பட்டாலும் இதுவே உண்மை. ஆன்லைனில் காரசாரமாக வாக்குவாதம் செய்யும்போது வம்பு பண்ணுகிறவருக்கு மேலும் வம்பு பண்ண நாமே வாய்ப்பு கொடுப்பதுபோல் ஆகிவிடும். அதோடு உங்கள் பிள்ளையும்கூட வம்பு பண்ணுகிறவராக ஆகிவிடலாம். அதனால், சிலசமயங்களில் அமைதியாக இருப்பதே நல்லது. அப்போது வம்பு பண்ணுகிறவர் தொல்லை கொடுப்பதை நிறுத்திவிடலாம்.
பைபிள் ஆலோசனை: “விறகு இல்லையென்றால் நெருப்பு அணைந்துவிடும்.”—நீதிமொழிகள் 26:20.
சில சந்தர்ப்பங்களில், வம்பு பண்ணும் ஆட்களையும் அதற்கான வாய்ப்பை உருவாக்கும் இடங்களையும் உங்கள் பிள்ளையால் தவிர்க்க முடியும். உதாரணத்துக்கு, வம்பு பண்ணுகிற ஒருவனோ ஒரு கும்பலோ குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருப்பது உங்கள் பிள்ளைக்கு தெரியவந்தால், வேறு வழியில் போவதன் மூலம் ஆபத்தை அவன் தவிர்க்கலாம்.
பைபிள் ஆலோசனை: “சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான். ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.”—நீதிமொழிகள் 22:3.
இதைச் செய்துபாருங்கள்: உங்கள் பிள்ளை எதைச் செய்யத் தீர்மானித்தாலும் அதில் இருக்கிற நல்லதையும் கெட்டதையும் யோசித்துப்பார்க்க அவனுக்கு உதவுங்கள். உதாரணத்துக்கு,
தொல்லை கொடுப்பவரைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் என்ன ஆகலாம்?
வம்பு இழுப்பவரிடம் தொல்லை கொடுப்பதை நிறுத்தச் சொல்லி நேரடியாக சொன்னால் என்ன நடக்கலாம்?
இந்த விஷயத்தைப் பற்றி பள்ளி ஆசிரியரிடம் சொன்னால் என்ன ஆகலாம்?
நகைச்சுவை உணர்வோடு இருப்பதோ நட்புடன் பழகுவதோ எப்படி உதவலாம்?
வம்பு இழுக்கப்படும் ஒவ்வொரு சூழ்நிலையும் வித்தியாசமானது. அது நேரடியாக நடந்தாலும் சரி, ஆன்லைனில் நடந்தாலும் சரி. அதனால், உங்கள் பிள்ளையோடு சேர்ந்து ஒரு நடைமுறையான தீர்வைக் கண்டுபிடியுங்கள். உங்கள் பிள்ளைக்கு உதவ எப்போதும் நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்ற உறுதியை அவனுக்குக் கொடுங்கள்.
பைபிள் ஆலோசனை: “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.
a இந்தக் கட்டுரை முழுக்க பிள்ளையை மகன் என்று குறிப்பிட்டிருந்தாலும், இதிலிருக்கிற ஆலோசனைகள் பெண் குழந்தைகளுக்கும் பொருந்தும்.