குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு
உங்கள் டீனேஜ் பிள்ளை உங்கள் நம்பிக்கையை உடைக்கும்போது
உங்கள் டீனேஜ் பிள்ளை சொன்ன நேரத்துக்கு வீட்டுக்கு வருவது இல்லையா? உங்களிடம் பொய் சொல்லி உங்களை ஏமாற்றுகிறானா? a ஃபிரெண்ட்ஸோடு இருக்க வேண்டும் என்பதற்காக உங்களுக்கே தெரியாமல் வீட்டில் இருந்து ரகசியமாக வெளியே போகிறானா? இப்படியெல்லாம் செய்து நீங்கள் அவன்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை சிதைத்து விடுகிறானா? அப்போது நீங்கள் என்ன செய்யலாம்?
என்னுடைய டீனேஜ் பிள்ளை ஒரு அடங்காப்பிடாரியாக மாறிவிட்டானா?
உங்கள் பிள்ளை முட்டாள்தனமாக நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதற்காக, அடங்காப்பிடாரியாக மாறிவிட்டான் என்று நினைக்காதீர்கள். ஏனென்றால், “பிள்ளையின் நெஞ்சில் முட்டாள்தனம் வேரூன்றியிருக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:15) இது எவ்வளவு உண்மை என்பதை நம்மால் சிலசமயம் புரிந்துகொள்ள முடிகிறது. “டீனேஜ் பிள்ளைகள் அவசரப்பட்டு சில முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பார்கள் . . . அவர்கள் தவறு செய்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று டாக்டர் லாரன்ஸ் ஸ்டீன்பர்க் சொல்கிறார். b
என்னுடைய டீனேஜ் பிள்ளை என்னை ஏமாற்றுகிறானா?
உங்கள் பேச்சை கேட்கவே கூடாது என்று உங்கள் பிள்ளை கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறான் என்று நினைக்காதீர்கள். பெற்றோர்கள் தங்களை பற்றி நல்ல விதமாக நினைக்க வேண்டும் என்றுதான் டீனேஜ் பிள்ளைகள் ஆசைப்படுவார்கள் என்று சில ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஒருவேளை, அவர்கள் நடந்துகொள்வதை பார்த்தால் அப்படி தெரியவில்லையே என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், அதுதான் உண்மை! பெற்றோர்களுடைய மனதை கஷ்டப்படுத்திவிட்டதை நினைத்து ஒருவேளை அவன் தன்னையே நொந்துகொள்ளலாம். ஆனால், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம்.
என்னுடைய பிள்ளை இப்படி செய்வதற்கு யார் காரணம்?
பிள்ளையை சுற்றி இருக்கும் விஷயங்களா? “கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களை கெடுத்துவிடும்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:33) அது உண்மைதான்! ஏனென்றால், உங்கள் பிள்ளையுடைய நண்பர்கள் அவன்மேல் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதோடு, இன்றைக்கு இருக்கும் சோஷியல் மீடியாவும் விளம்பர உலகமும் அவனை ரொம்பவே பாதிக்கும். அதுமட்டுமல்ல, அவனுக்கு வாழ்க்கையில் அனுபவம் குறைவு. அதனால், முட்டாள்தனமான முடிவுகளை அவன் எடுக்கலாம். ஆனால், அவன் எடுத்த முடிவுகளால் வரும் விளைவுகளுக்கு அவன்தான் பொறுப்பேற்க வேண்டும். அப்போதுதான், அவன் பெரியவனாக ஆகும்போது பொறுப்புள்ளவனாக இருப்பான்.
நானே ஒரு காரணமாக இருப்பேனோ? ”நான் ரொம்ப ‘ஸ்ட்ரிக்டாக’ இருந்ததால் அவன் தவறு செய்துவிட்டானா? அல்லது, நான் அவனுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து ஓவராக சுதந்திரம் கொடுத்துவிட்டேனா?“ என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், நீங்கள் என்ன தவறு செய்துவிட்டீர்கள் என்பதைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக்காமல், இப்போது அந்த தவறை எப்படி சரி செய்வது என்று யோசியுங்கள்.
மறுபடியும் நம்பிக்கையை சம்பாதிப்பதற்கு அவனுக்கு நான் எப்படி உதவலாம்?
உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நீங்கள் கோபப்படுவீர்கள் என்றுதான் உங்கள் பையன் நினைப்பான். ஆனால், ஏன் கொஞ்சம் வித்தியாசமாக நடந்துகொள்ளக்கூடாது! இந்த பிரச்சினை வந்ததற்கான காரணத்தை உங்கள் பையனோடு சேர்ந்து கொஞ்சம் நிதானமாக பேசுங்கள். அவன் என்ன காரணத்தினால் அந்த தவறை செய்தான்? சும்மா செய்துதான் பார்க்கலாமே என்று நினைத்து செய்தானா அல்லது என்ன செய்வதென்றே தெரியாமல் ‘போர்’ அடித்ததால் அதை செய்தானா? ரொம்ப தனிமையாக உணர்ந்ததால் அப்படி செய்தானா? அல்லது எப்படியாவது நண்பர்களை சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து செய்தானா? காரணம் எதுவாக இருந்தாலும், அது அவன் செய்த தவறை நியாயப்படுத்தாது. இருந்தாலும், நீங்களும் உங்கள் பையனும் சேர்ந்து உட்கார்ந்து பேசும்போது எதனால் அந்த தவறை செய்தான் என்று நன்றாக புரிந்துகொள்ள முடியும்.
பைபிள் ஆலோசனை: “நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும், சட்டென்று கோபப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்.”—யாக்கோபு 1:19.
செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள உதவுங்கள். இந்த மாதிரி கேள்விகளை கேளுங்கள்: “நீ செய்த தவறால் வந்த பிரச்சினையிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொண்டாய்? அடுத்த தடவை இதே மாதிரி ஒரு சூழ்நிலை வந்தால், நீ எப்படி நடந்துகொள்வாய்?“ சரி எது தவறு எது என்பதை பிரித்து பார்க்கும் திறமையை வளர்த்துக்கொள்ள, இப்படிப்பட்ட கேள்விகள் உங்கள் பிள்ளைக்கு உதவும்.
பைபிள் ஆலோசனை: “கற்பிக்கும் கலையைப் பயன்படுத்தி பொறுமையோடு கண்டித்துப் பேசு, கடுமையாக எச்சரி, அறிவுரை சொல்.”—2 தீமோத்தேயு 4:2.
உப்பை தின்றவன் தண்ணீரை குடிக்க வேண்டும் என்பதை புரிய வையுங்கள். உங்கள் பிள்ளை ஏதோ ஒரு தவறு செய்துவிட்டால் கண்ணா பின்னாவென்று தண்டிக்காதீர்கள். அதற்கு பதிலாக, அவன் செய்த தவறால் வரும் விளைவுகளை புரிந்துகொள்ளும் விதத்தில் சில கட்டுப்பாடுகளை போடுங்கள். உதாரணத்துக்கு, உங்களுடைய பிள்ளை உங்கள் அனுமதி இல்லாமல் காரை எடுத்துக்கொண்டு போயிருக்கிறான் என்றால், கொஞ்சம் நாளைக்கு காரை தொடக்கூடாது என்று ஒரு கட்டுப்பாட்டை போடலாம்.
பைபிள் ஆலோசனை: “ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.”—கலாத்தியர் 6:7.
பிரச்சினையைப் பற்றி அதிகமாக பேசாமல், நம்பிக்கையை சம்பாதிப்பதைப் பற்றி பேசுங்கள். உண்மைதான், நம்பிக்கையை சம்பாதிப்பது திடீரென்று ஒரே நாளில் நடக்கிற விஷயம் கிடையாது. ஆனாலும், உங்களுடைய நம்பிக்கையை சம்பாதிக்க முடியும் என்பதை பிள்ளைக்கு சொல்லிக்கொடுங்கள். இது ஏன் முக்கியம்? நம்பிக்கையை சம்பாதிக்கவே முடியாது என்று உங்கள் பிள்ளை நினைத்துவிட்டால், அவன் அதற்கான முயற்சியையே எடுக்காமல் போய்விடுவான். இரவுக்குப்பின் ஒரு விடியல் வரும் என்பதை அவனுக்கு புரிய வையுங்கள். அதாவது, போகப்போக நம்பிக்கையை சம்பாதிக்க முடியும் என்பதை அவனுக்கு புரிய வையுங்கள்.
பைபிள் ஆலோசனை: “உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் உண்டாக்காதீர்கள்; அவர்கள் சோர்ந்துபோவார்கள்.”—கொலோசெயர் 3:21.