குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு
வாசிக்கும் பழக்கம் பிள்ளைகளுக்கு முக்கியம்—பகுதி 1: வாசிப்பதா பார்ப்பதா?
ஓய்வு நேரத்தில் உங்கள் பிள்ளைகள் பொதுவாக என்ன செய்ய ஆசைப்படுகிறார்கள்? வீடியோ பார்க்கவா, எதையாவது வாசிக்கவா? எதைக் கையில் எடுக்கிறார்கள்? மொபைல் போனையா, ஏதாவது புத்தகத்தையா?
டிவியும் இன்டர்நெட்டும் வந்ததிலிருந்து வாசிக்கும் பழக்கம் மறைந்துகொண்டே வருகிறது. “போகப்போக, வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போய்விடும்போல் தெரிகிறது” என்று 1990-ல் ஜேன் ஹீலி என்ற எழுத்தாளர் சொன்னார் (மறைந்துவரும் மனங்கள் [ஆங்கிலம்]).
அப்படியெல்லாம் நடக்காது என்று அந்தக் காலத்தில் இருந்தவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், 30 வருஷங்கள் கழித்து பார்க்கும்போது இப்போது நிலைமை அந்த எழுத்தாளர் சொன்ன மாதிரிதான் இருக்கிறது. தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளில் பிள்ளைகளின் வாசிப்புத் திறன் ரொம்பவே குறைந்துவிட்டதாக சில கல்வியாளர்கள் சொல்கிறார்கள்.
இந்தக் கட்டுரையில்
வாசிக்கும் பழக்கம் பிள்ளைகளுக்கு ஏன் முக்கியம்?
வாசிக்கும் பழக்கம் கற்பனைத் திறனை வளர்க்கிறது. உதாரணமாக, ஒரு கதையில் வரும் கதாபாத்திரங்களின் குரல் எப்படி இருக்கும்? பார்ப்பதற்கு அவர்கள் எப்படி இருப்பார்கள்? சுற்றியிருக்கும் காட்சிகள் எப்படி இருக்கும்? இதில் சில விவரங்களை எழுத்தாளர் எழுதியிருப்பார். ஆனால், மற்ற விவரங்களை வாசிப்பவர்கள்தான் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
லாரா என்ற ஒரு அம்மா இப்படிச் சொல்கிறார்: “சினிமாவையோ வீடியோவையோ பார்க்குறப்போ, வேற ஒருத்தர் செஞ்ச கற்பனையத்தான் நாம பார்க்குறோம். அது நல்லாத்தான் இருக்கும். ஆனாலும், புத்தகம் வாசிக்குறதுல தனி சுகம் இருக்கு. ஏனா, இன்னொருத்தர் எழுதியிருக்குறத நாம கற்பனை செஞ்சு பார்க்குறோம்.”
வாசிக்கும் பழக்கம் நல்ல குணங்களை வளர்க்கிறது. பிள்ளைகள் வாசிக்க வாசிக்க, அவர்களுடைய சிந்திக்கும் திறமை வளர்கிறது. அதனால், பிரச்சினைகளுக்கான காரணத்தை யோசித்துப் பார்த்து அவற்றை சரிசெய்ய அவர்களால் முடிகிறது. அதுமட்டுமல்ல, வாசிக்கும்போது பிள்ளைகள் ஒரே விஷயத்தின்மேல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதனால், பொறுமை, சுயக்கட்டுப்பாடு, அனுதாபம் போன்ற குணங்களை வளர்க்க முடிகிறது.
அனுதாபமா? அது எப்படி? பிள்ளைகள் நிதானமாகவும் கவனமாகவும் ஒரு கதையைப் படிக்கும்போது, அதில் வரும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும் உணரவும் முடிகிறது என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதனால், நிஜ வாழ்க்கையில் அவர்களால் மற்றவர்கள்மேல் அனுதாபம் காட்ட முடிகிறது.
வாசிக்கும் பழக்கம் ஆழமாக யோசிக்க உதவுகிறது. கவனமாக வாசிப்பவர்கள் பொதுவாக நிறுத்தி நிதானமாக வாசிக்கிறார்கள். எழுத்தாளர் சொல்ல வருவதைப் புரிந்துகொள்வதற்காகத் திரும்பத் திரும்பக்கூடப் படிக்கிறார்கள். அப்படிச் செய்வதால், வாசிக்கும் விஷயங்களை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிகிறது, அதிலிருந்து பயன் பெறவும் முடிகிறது.—1 தீமோத்தேயு 4:15.
ஜோசஃப் என்ற அப்பா இப்படிச் சொல்கிறார்: “வாசிக்குறப்போ, ஒவ்வொரு வரியோட அர்த்தத்தை பத்தியும் யோசிக்க முடியுது, நமக்கு தெரிஞ்ச விஷயங்களோட சம்பந்தப்படுத்தி பார்க்க முடியுது, அதிலிருந்து என்ன கத்துக்கலாம்னு யோசிக்கவும் முடியுது. ஆனா, வீடியோவையோ சினிமாவையோ பார்க்குறப்போ இப்படி ஆழமா யோசிக்க முடியாது.”
விஷயம் இதுதான்: வீடியோக்களையும் படங்களையும் பார்ப்பது சில விதங்களில் பிரயோஜனமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், வாசிக்கும் பழக்கம் இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றைத் தவறவிடுகிறார்கள் என்று அர்த்தம்.
வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?
ஆரம்பத்திலேயே ஆரம்பியுங்கள். இரண்டு பையன்களுக்கு அம்மாவாக இருக்கும் க்ளோயி இப்படிச் சொல்கிறார்: “பிள்ளைங்க வயித்துல இருந்த சமயத்திலேயே அவங்களுக்கு வாசிச்சு காட்டுனோம். அவங்க பிறந்ததுக்கு அப்புறமும் அதே மாதிரி வாசிச்சு காட்டுனோம். நாங்க அப்படி விடாம செஞ்சது நல்லதா போயிடுச்சு. ஏனா, எதையாவது தெரிஞ்சுக்குறதுக்காக வாசிச்சாலும் சரி, சும்மா ஜாலிக்காக வாசிச்சாலும் சரி, வாசிக்குறது அவங்களோட பழக்கமாவே ஆயிடுச்சு.”
பைபிள் ஆலோசனை: “பரிசுத்த எழுத்துக்களை நீ சிசுப் பருவத்திலிருந்தே அறிந்திருக்கிறாய்.”—2 தீமோத்தேயு 3:15.
வாசிப்பதற்கு ஏற்ற சூழலை அமைத்துக்கொடுங்கள். பிள்ளைகள் படிப்பதற்கு வீட்டில் நிறைய புத்தகங்களை வாங்கி வையுங்கள், அதுவும் அவர்களுடைய கைக்கு எட்டும் விதத்தில் வையுங்கள். “உங்க பிள்ளைகளுக்கு பிடிச்ச புத்தகங்கள வாங்கி, அவங்க படுக்கைக்கு பக்கத்துலயே வையுங்க” என்று நான்கு பிள்ளைகளுக்கு அம்மாவாக இருக்கும் தமாரா சொல்கிறார்.
பைபிள் ஆலோசனை: “நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு. வயதானாலும் அவன் அதைவிட்டு விலக மாட்டான்.”—நீதிமொழிகள் 22:6.
இன்டர்நெட் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஒரே ஒருநாள் சாயங்காலமாவது குடும்பத்தில் இருக்கும் யாரும் எலெக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்று டானியல் என்ற ஒரு அப்பா சொல்கிறார். “வாரத்துல ஒரு நாள் சாயங்காலமாவது நாங்க டிவி பார்க்காம அமைதியா உட்கார்ந்து எதையாவது படிச்சிட்டு இருப்போம். ஒண்ணா சேர்ந்தோ தனித்தனியாவோ படிப்போம்” என்று அவர் சொல்கிறார்.
பைபிள் ஆலோசனை: “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.”—பிலிப்பியர் 1:10.
முன்மாதிரி வையுங்கள். இரண்டு பெண்களுக்கு அம்மாவாக இருக்கும் கரீனா இப்படிச் சொல்கிறார்: “பிள்ளைகளுக்கு ஏதாவது கதைய வாசிச்சு காட்டுறப்போ நல்ல உணர்ச்சியோட வாசியுங்க, ரசிச்சு வாசியுங்க. அப்போதான் அந்த கதைக்கு உயிர் கொடுக்க முடியும். வாசிக்குறது உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க பிள்ளைகளுக்கும் பிடிச்சுப்போயிடும்.”
பைபிள் ஆலோசனை: ‘சபையார் முன்னால் வாசிப்பதில் . . . முழு மூச்சோடு ஈடுபட்டுக்கொண்டிரு.’—1 தீமோத்தேயு 4:13.
எல்லா பிள்ளைகளுமே வாசிப்பதில் ரொம்ப ஆர்வம் காட்டுவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், நீங்கள் கொடுக்கும் ஊக்கத்தினால் அவர்களுக்கு அதில் ஆர்வம் வரலாம். இரண்டு பெண்களுக்கு அப்பாவாக இருக்கும் டேவிட் இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு நல்ல ஐடியா தருகிறார்: “என் பொண்ணுங்க படிக்கிற புத்தங்களயெல்லாம் நானும் படிப்பேன். அதனால, அவங்களுக்கு எதுல ஆர்வம் இருக்குனு தெரிஞ்சுக்க முடிஞ்சுது. அத பத்தி நாங்க பேசிக்கவும் முடிஞ்சுது. நாங்க ஒரு குட்டி ரீடிங் க்ளப் மாதிரி இருந்தோம். ரொம்ப ஜாலியா இருந்துது!”