குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு
விவாகரத்து பிள்ளைகளை எப்படி பாதிக்கிறது?
‘உனக்கும் எனக்கும் ஒத்துவராது’ என்று நினைக்கிற சில கணவன்-மனைவி, ‘நாம் விவாகரத்து செய்வதே மேல், அது பிள்ளைகளுக்கு ரொம்ப நல்லது’ என்று யோசிக்கிறார்கள். ‘எப்போதும் சண்டையும் சச்சரவும் இருக்கிற குடும்பத்தில் பிள்ளைகள் ஏன் வளர வேண்டும்’ என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்று தெரியுமா?
விவாகரத்தால் பிள்ளைகளுக்கு ஏற்படும் வலிகள்
அப்பா-அம்மா விவாகரத்து செய்யும்போது பிள்ளைகள் நொறுங்கிப்போய் விடுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. விவாகரத்தால் பாதிக்கப்படுகிற பிள்ளைகள்:
கோபம், கவலை, மன அழுத்தத்தால் கஷ்டப்படுகிறார்கள்
தங்களையும் மற்றவர்களையும் கஷ்டப்படுத்துகிற மாதிரி முரட்டுத்தனமான குணங்களை வளர்த்துக்கொள்கிறார்கள்
சரியாக படிப்பது இல்லை அல்லது பள்ளியிலிருந்து நின்றுவிடுகிறார்கள்
அடிக்கடி உடம்பு முடியாமல் போய்விடுகிறது
அதோடு, ‘அப்பா-அம்மா விவாகரத்து செய்ததற்கு நான்தான் காரணம்’ என்று நிறைய பிள்ளைகள் அவர்கள்மீதே பழிபோட்டுக் கொள்கிறார்கள். ‘என்னால்தான் இப்படி நடந்துவிட்டதோ... இதை தடுக்க நான் ஏதாவது செய்திருக்க வேண்டுமோ’ என்று யோசிக்கிறார்கள்.
விவாகரத்தினால் பிள்ளைகளுக்கு ஏற்படுகிற வலி வளர்ந்து பெரியவர்களான பிறகும் அவர்களுக்கு இருக்கும். அதனால், அவர்கள் எதற்குமே லாயக்கில்லை என்று யோசிக்கலாம். மற்றவர்களை நம்புவதுகூட கஷ்டமாக இருக்கலாம். அவர்களுக்குக் கல்யாணமாகி திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது, விவாகரத்து பண்ணுவதுதான் சரி என்று அவர்களுக்குத் தோணலாம்.
நெஞ்சில் நிறுத்த: ‘விவாகரத்து செய்தால் நம் பிள்ளைகளால் நல்லபடியாக வளர முடியும்’ என்று சில கணவன்-மனைவி நினைக்கிறார்கள். ஆனால், அது சுத்தப் பொய் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. “விவாகரத்து பிள்ளைகளுடைய வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடுகிறது” என்று குழந்தை நல நிபுணர் பெனிலோப் லீச் சொல்கிறார். a
பைபிள் சொல்லும் உண்மை: “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.“—பிலிப்பியர் 2:4.
நான் விவாகரத்து செய்துகொண்டால் என் பிள்ளை சந்தோஷமாக இருக்குமா?
இந்தக் கேள்விக்கு சிலர் ‘ஆம்!’ என்று சொல்கிறார்கள். ஆனால், நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், பெற்றோர்களுடைய தேவைகளும் பிள்ளைகளுடைய தேவைகளும் எப்போதுமே ஒன்றாக இருப்பது கிடையாது. விவாகரத்து செய்ய வேண்டும் என்று நினைக்கிற அப்பாவோ, அம்மாவோ வாழ்க்கையில் ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைக்கலாம். ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க ஆசைப்படலாம். ஆனால், பிள்ளைகள் மாற்றத்தை விரும்புவது இல்லை. அப்பா-அம்மாவிடம் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்றுதான் அவர்கள் ஆசைப்படுவார்கள்.
ஆயிரக்கணக்கான விவாகரத்து கதைகளை ஆராய்ச்சி செய்து பார்த்த பிறகு, த அன்எக்ஸ்பெக்டெட் லெகசி ஆஃப் டிவோர்ஸ் என்ற புத்தகத்தை எழுதிய மூன்று எழுத்தாளர்கள் இப்படிச் சொல்கிறார்கள்: “ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரிகிறது. அப்பா-அம்மா விவாகரத்து செய்த பிறகு பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பது இல்லை. ‘அப்பா-அம்மா எப்போது விவாகரத்து செய்தார்களோ, அப்போதே எங்களுடைய சந்தோஷம், நிம்மதி எல்லாமே பறந்துபோய்விட்டது’ என்று சொல்கிறார்கள்.” “இந்த உலகம் ரொம்ப அந்நியமாகவும் யாரையுமே நம்ப முடியாத ஒரு இடமாகவும் அவர்களுக்குத் தெரியலாம். ஏனென்றால், ரொம்ப ரொம்ப நெருக்கமாக இருந்த அப்பா-அம்மா என்ற உறவே நிலைக்கவில்லை என்றால், வேறு யாரை நம்புவது என்று பிள்ளைகள் யோசிக்கலாம்” என்றும் அந்த புத்தகம் சொல்கிறது.
நெஞ்சில் நிறுத்த: அப்பா-அம்மா விவாகரத்து செய்த பிறகு, பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள்.
பைபிள் உண்மை: ”உடைந்த உள்ளம் ஒருவருடைய பலத்தை உறிஞ்சிவிடும்.“—நீதிமொழிகள் 17:22.
விவாகரத்தான பிறகும் பிள்ளையைச் சேர்ந்து வளர்ப்பதைப் பற்றி நான் என்ன தெரிந்துவைத்திருக்க வேண்டும்?
‘விவாகரத்துக்கு முன்பு நாம் எப்படி பிள்ளைகளைச் சேர்ந்தே வளர்த்தோமோ அதேபோல் இப்போதும் செய்யலாம்’ என்று விவாகரத்தான அப்பா-அம்மா நினைக்கிறார்கள். ஆனால், இப்படி செய்வது ரொம்ப கஷ்டம். ஆராய்ச்சிகள் என்ன காட்டுகின்றன என்றால், விவாகரத்து செய்த அப்பாவும் அம்மாவும்:
பெரும்பாலும் பிள்ளைகளோடு அதிக நேரம் செலவு பண்ணுவது கிடையாது
ஆளுக்கொன்று சொல்லிக் கொடுக்கிறார்கள். ஒரு விஷயத்தைச் ‘செய்’ என்று அப்பா சொல்கிறார். அதே விஷயத்தைச் ‘செய்ய வேண்டாம்’ என்று அம்மா சொல்கிறார்
குற்றயுணர்ச்சியாலும் ரொம்ப களைப்பாக இருப்பதாலும், ‘உன் இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்’ என்று பிள்ளைகளை விட்டுவிடுகிறார்கள்
அப்பா-அம்மாவுக்கு விவாகரத்தான பிறகு, ‘அவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்’ என்று பிள்ளைகள் நினைக்கலாம். ஏனென்றால், அப்பா-அம்மாவே சரியானதைச் செய்யவில்லை. ‘ஒன்றாக சேர்ந்திருப்போம்’ என்று கொடுத்த வாக்கையும் காப்பாற்றவில்லை, நம்பிக்கையையும் உடைத்துவிட்டார்கள். இப்படி இருக்கும்போது ‘அவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்?’ என்று பிள்ளைகள் வாதாடலாம்.
நெஞ்சில் நிறுத்த: விவாகரத்தான பிறகு, அப்பாவும் அம்மாவும் சேர்ந்து பிள்ளையை வளர்ப்பது கஷ்டமான விஷயம்தான். ஆனால், அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளருவது பிள்ளைகளுக்கு இன்னும் ரொம்ப கஷ்டமாக இருக்கும்.
பைபிள் உண்மை: ”உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் உண்டாக்காதீர்கள்; அவர்கள் சோர்ந்துபோவார்கள்.“—கொலோசெயர் 3:21.
வேறு ஏதாவது வழி இருக்கிறதா?
பெரும்பாலும் விவாகரத்துக்கு பிறகு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க நிறைய முயற்சி தேவைப்படுகிறது. ஆனால், விவாகரத்து பண்ணுவதற்கு முன்பாகவே இரண்டு பேரும் சேர்ந்து வாழ்வதற்கு இந்த எல்லா முயற்சியையும் போட்டால், எவ்வளவு நன்றாக இருக்கும்! “கல்யாண வாழ்க்கை கசக்கிறது என்பதற்காக அது எப்போதுமே அப்படித்தான் இருக்கும், மாறவே மாறாது என்று சொல்ல முடியாது” என்று த கேஃஸ் ஃபார் மேரேஜ் என்ற புத்தகம் சொல்கிறது. ”கொஞ்சம்கூட சந்தோஷமே இல்லாத கணவனும் மனைவியும் பிரிந்துபோகாமல் சேர்ந்தே வாழ்ந்ததால், காலப்போக்கில் அவர்களுடைய கல்யாண வாழ்க்கை ரொம்ப ரொம்ப சந்தோஷமாக மாறியிருக்கிறது“ என்றும் அந்தப் புத்தகம் சொல்கிறது. பொதுவாக, அப்பாவும் அம்மாவும் சேர்ந்து இருக்கும்போது, பிள்ளைகள் நல்லபடியாக வளருவார்கள்.
அதற்காக விவாகரத்து செய்யவேகூடாது என்று அர்த்தம் கிடையாது. சொல்லப்போனால், பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டால் விவாகரத்து செய்யலாம் என பைபிள் சொல்கிறது. (மத்தேயு 19:9) ஆனாலும், “சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்” என்றும் பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 14:15) திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருப்பதால் விவாகரத்து செய்ய வேண்டும் என்று நினைக்கும் கணவனும் மனைவியும் அந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு முன், நாலாபக்கமும் நன்றாக, நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டும். விவாகரத்து செய்வது பிள்ளைகளுக்கு எவ்வளவு வலியைக் கொடுக்கும் என்பதைக்கூட யோசித்துப் பார்க்க வேண்டும்.
கல்யாண வாழ்க்கை கசக்கும்போது, அப்படியே பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்திருந்தால் மட்டும் போதாது. பைபிள் சொல்வதுபோல் கணவனும் மனைவியும் திருமண வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழவும், சகித்திருக்கவும் சில குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. திருமணத்தைப் பற்றி பைபிள் சொல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால், பைபிளின் எழுத்தாளர் யெகோவாதான் திருமண ஏற்பாட்டையே ஆரம்பித்து வைத்தவர்.—மத்தேயு 19:4-6.
பைபிள் உண்மை: “யெகோவாவாகிய நானே உங்கள் கடவுள். உங்களுக்குப் பிரயோஜனமானதை நான் கற்றுக்கொடுக்கிறேன்.“—ஏசாயா 48:17.
a யுவர் க்ரோயிங் சையில்ட் ப்ஃரம் பேபிஹூட் துரு அடாலஸன்ஸ் என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.