ஒரே பாலினத்தவரின் திருமணம் பற்றி பைபிள் ஏதாவது சொல்கிறதா?
பைபிள் தரும் பதில்
அரசாங்கங்கள் திருமண சட்டதிட்டங்களை ஏற்படுத்துவதற்கு வெகு காலத்திற்கு முன்னரே நம் படைப்பாளர் அதற்கான சட்டங்களை ஏற்படுத்தினார். பைபிளின் முதல் புத்தகம் இப்படிச் சொல்கிறது: “மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான். அவர்கள் ஒரே உடலாக இருப்பார்கள்.” (ஆதியாகமம் 2:24) “மனைவி” என்பதற்கான எபிரெய வார்த்தை “ஒரு பெண்ணைக் குறிக்கிறது” என்று வைன்ஸ் எக்ஸ்பாசிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் பிப்ளிக்கல் உவர்ட்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது. திருமண பந்தத்தில் பிணைக்கப்படுபவர்கள் “ஆணாகவும் பெண்ணாகவும்” இருக்க வேண்டும் என்பதை இயேசு உறுதிப்படுத்தினார்.—மத்தேயு 19:4.
எனவே, ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நிரந்தரமான, நெருக்கமான பந்தம் இருக்க வேண்டும் என்பதற்காகவே கடவுள் திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தார். ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் ஏற்ற துணையாக இருக்கும் விதத்திலேயே படைக்கப்பட்டிருக்கிறார்கள்; இதனால், உணர்ச்சி ரீதியான, பாலியல் ரீதியான தேவைகளை ஒருவருக்கொருவர் திருப்தி செய்ய முடிகிறது, பிள்ளைகளைப் பிறப்பிக்க முடிகிறது.