குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க பைபிள் எனக்கு உதவுமா?
பைபிள் தரும் பதில்
நிச்சயம் உதவும்! குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க, பல லட்சக்கணக்கான ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவிய சில ஞானமான பைபிள் ஆலோசனைகளைக் கவனியுங்கள்:
திருமணத்தைச் சட்டப்படி பதிவு செய்யுங்கள். சட்டப்படி பதிவு செய்யப்பட்ட திருமணம் ஒரு நீண்டகால ஒப்பந்தம்! இப்படிப் பதிவு செய்யப்பட்ட திருமணம், சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு அடித்தளமாக இருக்கிறது.—மத்தேயு 19:4-6.
அன்பும் மரியாதையும் காட்டுங்கள். உங்கள் துணை உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதே போல உங்கள் துணையையும் நடத்துங்கள்.—மத்தேயு 7:12; எபேசியர் 5:25, 33.
கடுகடுப்பாகப் பேசாதீர்கள். உங்கள் துணை உங்களைப் புண்படுத்தும் விதத்தில் ஏதாவது செய்தாலும், பேசினாலும்கூட அவரிடம் அன்பாகப் பேசுங்கள். (எபேசியர் 4:31, 32) நீதிமொழிகள் 15:1 சொல்வதுபோல், “சாந்தமாகப் பதில் சொல்வது கடும் கோபத்தைத் தணிக்கும். ஆனால், கடுகடுப்பாகப் பேசுவது கோபத்தைத் தூண்டும்.”
ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள். உங்கள் துணையை மட்டுமே காதலியுங்கள்; அவரோடு மட்டுமே உடலுறவு கொள்ளுங்கள். (மத்தேயு 5:28) “திருமண ஏற்பாட்டை எல்லாரும் மதியுங்கள்; தாம்பத்திய உறவின் புனிதத்தைக் கெடுக்காதீர்கள்” என்று பைபிள் சொல்கிறது.—எபிரெயர் 13:4.
உங்கள் பிள்ளைகளுக்கு அன்பாகப் பயிற்சிக் கொடுங்கள். கண்டும் காணாமல் இருக்காதீர்கள்; கோபமாகவும் நடந்துகொள்ளாதீர்கள்.—நீதிமொழிகள் 29:15; கொலோசெயர் 3:21.