சுயமாகத் தீர்மானிக்கிற சுதந்திரத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? கடவுள்தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறாரா?
பைபிள் தரும் பதில்
நாம் செய்ய வேண்டிய காரியங்களைக் கடவுளோ விதியோ முன்தீர்மானிப்பதற்குப் பதிலாக, சுயமாய்த் தீர்மானிக்கிற சுதந்திரத்தைக் கொடுத்து கடவுள் நம்மைக் கௌரவிக்கிறார். பைபிள் என்ன கற்பிக்கிறது என்று கவனியுங்கள்:
கடவுள் தன்னுடைய சாயலில் மனிதர்களைப் படைத்திருக்கிறார். (ஆதியாகமம் 1:26) இயல்புணர்ச்சியால் செயல்படுகிற மிருகங்களைப் போல அல்லாமல், நாம் நம்முடைய படைப்பாளரைப் போல அன்பு, நீதி போன்ற குணங்களைக் காட்டுகிற திறனுடன் படைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய படைப்பாளரைப் போலவே சுயமாகத் தீர்மானிக்கிற சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம்.
பெருமளவு, நாமே நம்முடைய எதிர்காலத்தைத் தீர்மானித்துக்கொள்ளலாம். ‘கடவுளுடைய பேச்சைக் கேட்டு நடப்பதன் மூலம் [அதாவது, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம்] வாழ்வைத் தேர்ந்தெடுக்கும்படி’ பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (உபாகமம் 30:19, 20) சுயமாகத் தீர்மானக்கிற சுதந்திரம் நமக்கு இல்லையென்றால், அந்த வசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு அர்த்தமற்றதாக இருக்கும், ஏன் இரக்கமற்றதாகக்கூட இருக்கும். கடவுள் தன் இஷ்டப்படி நம்மை ஆட்டி வைப்பதற்குப் பதிலாக, நம்மிடம் ரொம்ப அன்பாக இப்படிச் சொல்கிறார்: ‘நீங்கள் என்னுடைய கட்டளைகளைக் கேட்டு நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்போது, உங்கள் சமாதானம் ஆற்றைப் போல இருக்கும்.’—ஏசாயா 48:18.
வெற்றியோ தோல்வியோ அது விதியின் கையில் இல்லை. ஏதோவொரு முயற்சியில் வெற்றி கிடைக்க வேண்டுமானால், நாம்தான் கடினமாக உழைக்க வேண்டும். “உன் கைகளால் எதைச் செய்தாலும் அதை முழு பலத்தோடு செய்” என்கிறது பைபிள். (பிரசங்கி 9:10) “கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும்” என்றுகூட அது சொல்கிறது.—நீதிமொழிகள் 21:5.
சுயமாகத் தீர்மானிக்கிற சுதந்திரம் கடவுளிடமிருந்து கிடைத்த விலைமதிப்புள்ள ஒரு பரிசு; அது இருப்பதால்தான், கடவுள்மேல் நம்மால் “முழு இதயத்தோடு—நாமாகவே இஷ்டப்பட்டு—அன்பு காட்ட முடிகிறது.—மத்தேயு 22:37.
எல்லாவற்றையும் கடவுள்தானே கட்டுப்படுத்துகிறார்?
கடவுள் சர்வவல்லமையுள்ளவர் என்றும், அவருடைய வல்லமை ஈடிணையற்றது என்றும் பைபிள் கற்பிக்கிறது. (யோபு 37:23; ஏசாயா 40:26) ஆனாலும் அவர் தன்னுடைய வல்லமையைப் பயன்படுத்தி எல்லா காரியங்களையும் கட்டுப்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு, தன்னுடைய மக்களின் எதிரி தேசமாக இருந்த பூர்வ பாபிலோனை அழிப்பது சம்பந்தமாகச் சொல்லும்போது, கடவுள் ‘தன்னையே அடக்கிக்கொண்டு இருந்ததாக’ பைபிள் சொல்கிறது. (ஏசாயா 42:14) சுயமாகத் தீர்மானிக்கிற சுதந்திரத்தைப் பயன்படுத்தி மற்றவர்களுக்குக் கெடுதல் செய்கிறவர்களின் விஷயத்திலும் இப்போதைக்கு அவர் அதேபோல தன்னையே அடக்கிக்கொண்டு இருக்கத் தீர்மானித்திருக்கிறார். ஆனால், என்றென்றைக்கும் அப்படியே இருந்துவிட மாட்டார்.—சங்கீதம் 37:10, 11.