பூமியில் சமாதானம்—எப்படி வரும்?
பைபிள் தரும் பதில்
பூமியில் சமாதானம் மனித முயற்சிகளினால் வராது, இயேசு கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்ட கடவுளுடைய பரலோக அரசாங்கத்தினால்தான் வரும். இந்த அருமையான நம்பிக்கையைப் பற்றி பைபிள் எப்படிக் கற்பிக்கிறது என்று கவனியுங்கள்.
கடவுள் ‘பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுவார்,’ இப்படி, ‘பூமியில் அவருடைய அனுக்கிரகம் பெற்ற மக்களுக்குச் சமாதானம் உண்டாகும்’ என்ற அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார்.—சங்கீதம் 46:9; லூக்கா 2:14.
கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்திலிருந்து முழு பூமியின்மீது ஆட்சி செய்யும். (தானியேல் 7:14) அந்த ஒரே உலக அரசாங்கம், எத்தனையோ சண்டைகளுக்குக் காரணமாக இருக்கிற தேசப்பற்றை வேரோடு பிடுங்கிப்போட்டுவிடும்.
அந்தக் கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இருக்கிற இயேசு “சமாதானத்தின் அதிபதி” என்று அழைக்கப்படுகிறார், ‘சமாதானத்துக்கு முடிவே இல்லாதபடி’ அவர் பார்த்துக்கொள்வார்.—ஏசாயா 9:6, 7.
சண்டை போடுவதிலேயே குறியாய் இருக்கிற ஆட்கள் அந்த அரசாங்கத்தின்கீழ் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள்; ஏனென்றால், “வன்முறையை விரும்புகிற எவனையும் [கடவுள்] வெறுக்கிறார்.”—சங்கீதம் 11:5; நீதிமொழிகள் 2:22.
எப்படிச் சமாதானமாக வாழ வேண்டுமென்று கடவுள் தன்னுடைய குடிமக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். இதனால் வருகிற பலன்களைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள். ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள். ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது. போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.”—ஏசாயா 2:3, 4.
ஏற்கெனவே, உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் எப்படிச் சமாதானமாக இருக்க வேண்டுமென்று கற்றுக்கொண்டு வருகிறார்கள். (மத்தேயு 5:9) யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களாக, 230-க்கும் அதிகமான நாடுகளில் வாழ்கிறவர்களாக இருந்தாலும், சக மனிதருக்கு எதிராகப் போராயுதங்களை எடுக்க நாங்கள் மறுக்கிறோம்.
இன்று யெகோவாவின் சாட்சிகள் சமாதானமாக வாழ்கிற வழிகளைக் கற்றுக்கொண்டு வருகிறார்கள்