கடவுளுடைய ராஜ்யம் உங்கள் இதயத்தில்தான் இருக்கிறதா?
பைபிள் தரும் பதில்
இல்லை. கடவுளுடைய ராஜ்யம் என்பது கிறிஸ்தவர்களின் இதயத்தில் இருக்கும் ஒரு விஷயம் கிடையாது. a பைபிள் அதை “பரலோக ராஜ்யம்” என்று சொல்கிறது. (மத்தேயு 4:17, தமிழ் O.V. பைபிள்) அப்படியென்றால், அது எங்கு இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யும் ஒரு நிஜமான அரசாங்கம் என்று பைபிள் காட்டுகிறது. எப்படி என்று பார்க்கலாம்.
கடவுளுடைய ராஜ்யத்துக்கு அரசர்களும் குடிமக்களும் இருக்கிறார்கள். அதற்கு சட்டங்களும் இருக்கின்றன. அதோடு, கடவுளுடைய விருப்பத்தைப் பரலோகத்திலும் பூமியிலும் நிறைவேற்றுவதற்கான அதிகாரமும் அந்த ராஜ்யத்துக்கு இருக்கிறது.—மத்தேயு 6:10; வெளிப்படுத்துதல் 5:10.
கடவுளுடைய ராஜ்யம், அதாவது அரசாங்கம், இந்தப் பூமியில் இருக்கும் ‘எல்லா இனத்தினரையும் தேசத்தினரையும் மொழியினரையும்’ ஆட்சி செய்யும். (தானியேல் 7:13, 14) இந்த ராஜ்யத்தை மனிதர்கள் ஏற்படுத்தவில்லை, கடவுளே நேரடியாக ஏற்படுத்தியிருக்கிறார்.—சங்கீதம் 2:4-6; ஏசாயா 9:7.
இயேசு தன்னுடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களிடம், பரலோக ராஜ்யத்தில் அவர்களும் தன்னோடு ‘சிம்மாசனங்களில் உட்காருவார்கள்’ என்று சொன்னார்.—லூக்கா 22:28, 30.
கடவுளுடைய ராஜ்யத்துக்கு எதிரிகள் இருக்கிறார்கள். அவர்களை அது ஒழித்துக்கட்டும்.—சங்கீதம் 2:1, 2, 8, 9; 110:1, 2; 1 கொரிந்தியர் 15:25, 26.
கடவுளுடைய ராஜ்யத்துக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது அது தங்கள் இதயத்தில் இருக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், பைபிள் அப்படிச் சொல்வதில்லை. அதேசமயத்தில், “பரலோக அரசாங்கத்தைப் பற்றிய செய்தி” அல்லது ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி’ நம் இதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், அந்த செய்தியால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் பைபிள் சொல்கிறது.—மத்தேயு 13:19; 24:14.
‘தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது’ என்பதன் அர்த்தம் என்ன?
லூக்கா 17:21-ஐ சில பைபிள் மொழிபெயர்ப்புகளில் படிக்கும்போது, கடவுளுடைய ராஜ்யம் எங்கே இருக்கிறது என்ற குழப்பம் சிலருக்கு வருகிறது. உதாரணத்துக்கு, ‘தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது’ என்று தமிழ் O.V. பைபிள் சொல்கிறது. இந்த வசனத்தை நாம் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு, இயேசு இதை யாரிடம் சொன்னார் என்று முதலில் கவனிக்க வேண்டும்.
இயேசு இந்த வார்த்தைகளைப் பரிசேயர்களிடம் சொன்னார். இவர்கள்தான் இயேசுவை எதிர்த்த மதத் தலைவர்கள், அவரைக் கொலை செய்யக்கூட உடந்தையாக இருந்தவர்கள். (மத்தேயு 12:14; லூக்கா 17:20) இப்படிப்பட்ட மோசமான ஆட்களுடைய இதயத்தில் கடவுளுடைய ராஜ்யம் இருப்பதாக இயேசு சொல்லியிருப்பாரா? கண்டிப்பாகச் சொல்லியிருக்க மாட்டார். சொல்லப்போனால், இயேசு அவர்களிடம், “உங்களுக்குள்ளே போலித்தனமும் அக்கிரமமும்தான் நிறைந்திருக்கின்றன” என்று சொன்னார்.—மத்தேயு 23:27, 28.
லூக்கா 17:21-ல் இயேசு சொன்ன வார்த்தைகள் மற்ற மொழிபெயர்ப்புகளில் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, “கடவுளுடைய ராஜ்யம் இங்கே உங்களோடு இருக்கிறது” என்று கன்டம்பரெரி இங்லிஷ் வர்ஷன் சொல்கிறது. (தடித்த எழுத்துகள் எங்களுடையது.) அதேபோல், “கடவுளுடைய அரசாங்கம் உங்கள் மத்தியிலேயே இருக்கிறது” என்று புதிய உலக மொழிபெயர்ப்பு சொல்கிறது. அப்படியென்றால், கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக இருக்கப்போகும் இயேசு அப்போது அந்தப் பரிசேயர்களோடு இருந்ததால், பரலோக ராஜ்யம் ‘அவர்களோடு’ அல்லது ‘அவர்கள் மத்தியில்’ இருந்ததாகச் சொன்னார்.—லூக்கா 1:32, 33.
a கடவுளுடைய ராஜ்யம் என்பது ஒருவருக்குள் அல்லது ஒருவருடைய இதயத்தில் அல்லது மனதில் இருப்பதாக நிறைய சர்ச்சுகள் சொல்லித்தருகின்றன. உதாரணத்துக்கு, “நம்முடைய இதயங்களைக் கடவுள் ஆட்சி செய்வதுதான் கடவுளுடைய ராஜ்யம்” என்று கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. அதேபோல், “நம் இதயத்தைத் திறந்து கடவுள் சொல்வதைக் கேட்கும்போது கடவுளுடைய ராஜ்யம் வரும்” என்று நாசரேத்தூர் இயேசு என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் பதினாறாம் போப் பெனடிக்ட் சொன்னார்.