இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
இ-சிகரெட்—எல்லா புகையும் நமக்குப் பகையா?
“எங்கள் ஊரில் 25 வயதான ஒருவர் சாதாரண சிகரெட்டோ இ-சிகரெட்டோ பிடிக்காமல் இருந்தால்தான் அது அதிசயம்.“—ஜூலியா.
இந்தக் கட்டுரையில்
நீங்கள் என்ன தெரிந்து வைத்திருக்க வேண்டும்?
சிகரெட் உயிரைக் கொல்லும். புகையிலையில் இருக்கிற முக்கியமான மூலப்பொருள் நிக்கோடின். அது விஷத்தன்மை உள்ளது. அதைப் பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக அதற்கு அடிமை ஆகிவிடுவார்கள். “புகையிலை பயன்படுத்துவதை நிறுத்தினாலே போதும். உலகம் முழுவதும் நிறைய பேர் நோய்வாய்ப்பட்டு அல்ப்ப ஆயுசில் சாவதை பெரிய அளவில் தடுக்க முடியும்” என்று அமெரிக்காவில் இருக்கிற நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் சொல்கின்றன.
“நான் அல்ட்ரா சவுண்ட் (ultrasound) எடுக்கிற வேலை செய்கிறேன். புகைப்பிடிப்பது ஒருவருடைய உடலை எந்தளவுக்கு பாதிக்கும் என்பதை அந்த ஸ்கேனில் நான் பார்த்திருக்கிறேன். புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தவர்களுடைய இரத்த குழாய்களுக்குள் மெழுகு மாதிரியான ஒரு பொருள் எக்கச்சக்கமாக படிந்திருப்பதை பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. என் உடம்பை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால் நான் சிகரெட் பக்கமே போக மாட்டேன்.”—தெரசா.
உங்களுக்கு தெரியுமா? சிகரெட்டுகளில் கிட்டத்தட்ட 7,000 கெமிக்கல்கள் இருக்கின்றன. அவை விஷத்தன்மையுள்ளவை. புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படுகிற நோய்கள் ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கானவர்களின் உயிரைப் பறிக்கிறது.
இ-சிகரெட் பிடிக்கும்போது, விஷத்தன்மையுள்ள நிறைய கெமிக்கல்களை நாம் சுவாசிக்கிறோம். இ-சிகரெட் (எலெக்ட்ரானிக் சிகரெட்) பிடிப்பதால் நுரையீரல் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது, மரணம் கூட ஏற்படுகிறது. சாதாரண சிகரெட்டுகளில் இருப்பது போலவே நிறைய இ-சிகரெட்டுகளில் நிக்கோடின் இருக்கிறது. நிக்கோடின் அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் நிக்கோடினுக்கு அடிமையாகிற “இளைஞர்கள் மற்ற போதைப் பொருள்களுக்கும் சுலபமாக அடிமையாகிவிடுகிறார்கள்“ என்று இ-சிகரெட் பற்றிய ஒரு அறிக்கை சொல்கிறது.
“குழந்தைகளையும் இளைஞர்களையும் கவருகிற விதத்தில் இனிப்பு சுவையில் காட்டன் கேன்டி, செர்ரி பாம் போன்ற பெயர்களில் நிறைய இ-சிகரெட் வருகிறது. அந்த டேஸ்ட்டில் மயங்கி அதில் இருக்கிற ஆபத்தை மறந்துவிடுகிறார்கள்.”—மிரான்டா.
உங்களுக்கு தெரியுமா? இ-சிகரெட்டிலிருந்து வருவது சாதாரண நீராவி கிடையாது. ரொம்ப ஆபத்தான பொருள்கள், அதுவும் விஷத்தன்மை உள்ள கெமிக்கல்கள், நிறைந்த நீராவி. அது நேரடியாக உங்களுடைய நுரையீரல்களுக்குள் போய்விடுகிறது.
சிகரெட் மற்றும் இ-சிகரெட் பயன்படுத்துவதால் வரும் ஆபத்துகள்
(1) மூளை வளர்ச்சி அடைகிற பருவத்தில், அறிவுத்திறனிலும் கவனம் செலுத்தும் திறனிலும் மனம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் குறைபாடு
(2) ஈறுகளில் வீக்கம் மற்றும் பல் சொத்தை
(3) நீண்ட கால நுரையீரல் வீக்கம் மற்றும் இதய நோய்
ஆஸ்துமா கடுமையாதல்
வயிற்றுக் கோளாறு மற்றும் குமட்டல்
நீங்கள் என்ன செய்யலாம்?
உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். ‘ஸ்ட்ரெஸை குறைக்க வேண்டுமென்றால் இ-சிகரெட் பிடிங்க, அதுல அவ்வளவு ஒன்னும் ஆபத்து இல்லை’ என்று மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள். நீங்களே அதை பற்றி படித்து தெரிந்துகொண்டு பின்பு சரியான முடிவு எடுங்கள்.
பைபிள் ஆலோசனை: “விவரம் தெரியாதவன் யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிறான். ஆனால், சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.
”சிகரெட் பிடிப்பது, இ-சிகரெட் பிடிப்பது, எல்லாமே ஒரு ஜாலிக்காகத்தான் என்று உங்கள் நண்பர்களோ சில பிரபலங்களோ உங்களை நினைக்க வைக்கலாம். ஆனால் அதில் இருக்கிற ஆபத்துகளை பற்றி யோசித்து பார்த்தீர்கள் என்றால், அது உண்மை இல்லை என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.”—இவான்.
யோசித்துப் பார்க்க: சிகரெட்டோ இ-சிகரெட்டோ பிடிக்கிற இளைஞர்கள் உண்மையாகவே சந்தோஷமாக இருக்கிறார்களா? இப்போதும் எதிர்காலத்திலும் வருகிற பிரச்சினைகளை சமாளிக்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா? இன்னும் நிறைய பிரச்சினைகளுக்கு அவர்களே வழியை திறந்து வைக்கிறார்களா?
ஸ்ட்ரெஸை சமாளிக்க நல்ல வழிகளைக் கண்டுபிடியுங்கள். ஸ்ட்ரெஸை சமாளிப்பதற்கு நிறைய நல்ல நல்ல வழிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, உடற்பயிற்சி செய்வது... புத்தகங்கள் படிப்பது... நல்ல நண்பர்களோடு நேரம் செலவு பண்ணுவது. இந்த மாதிரி நிறைய நல்ல விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்தினால் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு வராது.
பைபிள் ஆலோசனை: “கவலை ஒருவருடைய இதயத்தைப் பாரமாக்கும். ஆனால், நல்ல வார்த்தை அதைச் சந்தோஷப்படுத்தும்.”—நீதிமொழிகள் 12:25.
“சிகரெட், இ-சிகரெட் பிடித்தால் ஸ்ட்ரெஸை குறைத்துவிடலாம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். சிகரெட் பிடிக்கும்போது உங்க மனசு கொஞ்சம் லேசான மாதிரி இருக்கும். ஆனால் அதனுடைய பின்விளைவுகளை நீங்கள்தான் வாழ்க்கை முழுவதும் அனுபவிக்க வேண்டியிருக்கும். ஸ்ட்ரெஸை சமாளிக்க நிறைய நல்ல வழிகளும் இருக்கின்றன.”—ஏஞ்செலா.
யோசித்துப் பார்க்க: ஸ்ட்ரெஸை சமாளிக்க வேறு என்ன நல்ல வழிகள் இருக்கின்றன? இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், “இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்“ என்ற தொடரில் வரும் ”கவலைகளை எப்படிச் சமாளிப்பது?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.
நண்பர்கள் கொடுக்கிற தொல்லையை சமாளிக்க தயாராக இருங்கள். கூடப் படிக்கிறவர்கள் உங்களை சிகரெட் பிடிக்க சொல்லி தொல்லை பண்ணலாம், நீங்கள் பார்க்கிற பொழுதுபோக்கு கூட அந்த ஆசையை தூண்டலாம். சிகரெட் பிடிப்பது, இ-சிகரெட் பிடிப்பது எல்லாம் ஒரு ‘ஸ்டைல்’-க்காக, ஜாலிக்காக என்று சோஷியல் மீடியா, திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.
பைபிள் ஆலோசனை: ‘முதிர்ச்சியுள்ளவர்கள் சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்திப் பயிற்றுவித்திருக்கிறார்கள்.’—எபிரெயர் 5:14.
“நான் ஸ்கூலில் படிக்கும்போது சிகரெட், இ-சிகரெட் பிடிக்காததால், கூடப் படிக்கிறவர்களிடம் எனக்கு தனி மரியாதை கிடைச்சது. இதெல்லாம் நான் ஏன் செய்ய மாட்டேன் என்று அவர்களிடம் தெளிவாக சொன்னேன். சிகரெட் பிடிக்கச் சொல்லி தொல்லை வரும்போது, அவர்கள் எனக்காக சப்போர்ட் பண்ணி பேசினார்கள். அதனால், இதைப் பற்றியெல்லாம் ஏன் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைக்காதீர்கள். அப்படி சொல்வது உங்களுக்குத்தான் பாதுகாப்பு.”—அன்னா.
யோசித்துப் பார்க்க: நண்பர்களிடம் இருந்து வரும் தொல்லையை உங்களால் சமாளிக்க முடியுமா? இந்த மாதிரியான தொல்லைகளை நீங்கள் இதற்கு முன்பே சமாளித்திருக்கிறீர்களா? உங்களுக்கு இந்த விஷயத்தில் இன்னும் உதவி தேவைப்பட்டால், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள், தொகுதி 2, அதிகாரம் 15-ல், “நண்பர்கள் தரும் தொல்லைகள்—நீங்கள் செய்ய வேண்டியவை“ (ஆங்கிலம்) என்ற பகுதியைப் பாருங்கள்.
உங்கள் நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுங்கள். சிகரெட்டோ, இ-சிகரெட்டோ பிடிப்பது தப்பு என்று உங்களைப் போலவே உங்கள் நண்பர்களும் யோசித்தால் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு வராது.
பைபிள் ஆலோசனை: “ஞானமுள்ளவர்களோடு நட்பாக இரு, நீயும் ஞானம் அடைவாய். ஆனால் நீ முட்டாள்களை நண்பர்களாக்கினால் உனக்குத் துன்பங்கள் ஏற்படும்.“—நீதிமொழிகள் 13:20, ஈஸி டு ரீட் வர்ஷன்.
“சுயக்கட்டுப்பாடு, நேர்மை மாதிரி நல்ல குணங்கள் இருக்கிறவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளுங்கள், அது உங்களுக்குத்தான் நல்லது. அவர்கள் வாழ்க்கை சூப்பராக இருப்பதை பார்க்கும்போது உங்களுக்கும் அவர்களை மாதிரி வாழ வேண்டும் என்ற ஆசை வரும்.”—கேல்வின்.
யோசித்துப் பார்க்க: ‘எந்த கெட்ட பழக்கத்திலும் விழுந்துவிடக் கூடாது, என்னுடைய உடம்பை கெடுத்துக்கொள்ள கூடாது’ என்று நீங்கள் எடுத்த தீர்மானத்தை உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் சப்போர்ட் பண்ணுகிறார்களா, சவால் ஆக்குகிறார்களா?
கஞ்சா பயன்படுத்துவதை பற்றி என்ன சொல்லலாம்?
கஞ்சா பயன்படுத்துவதால் எந்தக் கெடுதலும் இல்லை என்று நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால் அது எல்லாமே சுத்தப் பொய்!
கஞ்சா பயன்படுத்துகிற இளைஞர்கள் அதற்கு அடிமை ஆகிவிடுகிற ஆபத்தும் இருக்கிறது. கஞ்சா பயன்படுத்துவதால் சரிசெய்ய முடியாத அளவுக்கு அவர்களுடைய மூளை சேதமாகிவிடுகிறது, அதனால் அவர்களுடைய அறிவுத்திறன் (IQ) கூட குறைந்து விடலாம் என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது.
அமெரிக்க போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மனநல சுகாதார சேவைகள் நிர்வாகம் சொல்கிறபடி, ”கஞ்சா பயன்படுத்துபவர்கள் உறவுகளில் விரிசல்... படிப்பில் மந்தம்... வேலையில் சொதப்பல்... திருப்தியில்லாத வாழ்க்கை போன்ற பல பிரச்சினைகளால் கஷ்டப்படுகிறார்கள்.“
“என்னுடைய ஸ்ட்ரெஸை குறைப்பதற்குத்தான் கஞ்சா பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதை பயன்படுத்தினால் அதற்கு அடிமையாகி விடுவேனோ ... என்னுடைய பணத்தை எல்லாம் அதற்கே செலவு செய்ய வேண்டியிருக்குமோ... என்னுடைய ஆரோக்கியம் போய்விடுமோ என்றெல்லாம் யோசித்து பார்த்தேன். அப்படி யோசித்துப் பார்த்தபோது கஞ்சா பயன்படுத்துவது என்னுடைய ஸ்ட்ரெஸை அதிகமாக்குமே தவிர குறைக்காது என்று தெரிந்துகொண்டேன்.”—ஜூடா.