Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

ஞானஸ்நானத்துக்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும்?​—பாகம் 1: சுறுசுறுப்பாக சேவை செய்யுங்கள்

ஞானஸ்நானத்துக்குப் பிறகு நான் என்ன செய்ய வேண்டும்?​—பாகம் 1: சுறுசுறுப்பாக சேவை செய்யுங்கள்

 நம்மிடம் ஒரு காரோ அல்லது வீடோ போன்ற விலைமதிப்புள்ள ஒரு சொத்து இருந்தால் அதை ஒழுங்காக பராமரிப்போம். அதே மாதிரிதான் கடவுளோடு இருக்கிற நம்முடைய நட்பையும்கூட நாம் ஒழுங்காக பராமரிக்க வேண்டும். ஞானஸ்நானம் எடுத்த பிறகு கடவுளோடு நமக்கு இருக்கிற நட்பை எப்படி இன்னும் பலப்படுத்திக்கொள்ளலாம்?

இந்தக் கட்டுரையில்

 பைபிளைத் தொடர்ந்து படியுங்கள்

 முக்கிய வசனம்: “நீங்கள் செய்கிற எல்லா நல்ல செயல்களும் பலன் தரும், அவரைப் பற்றிய திருத்தமான அறிவில் மேலும் மேலும் வளருவீர்கள்.”​—கொலோசெயர் 1:10.

 அர்த்தம்: ஞானஸ்நானத்துக்குப் பின்பு நீங்கள் தொடர்ந்து பைபிளைப் படிக்க வேண்டும். படித்த விஷயத்தை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும்.​—சங்கீதம் 25:4; 119:97.

 எதார்த்தம்: சில சமயங்களில் படிக்க வேண்டும் என்ற ஆர்வமே உங்களுக்கு இருக்காது. ‘எனக்கு படிக்கிற பழக்கமே கிடையாது’ என்றும்கூட உங்களைப் பற்றி நீங்கள் நினைக்கலாம்.

 என்ன செய்ய வேண்டும்: உங்களுக்கு ஆர்வமூட்டுகிற பைபிள் விஷயங்களை ஆழமாகப் படியுங்கள். எங்கே, எப்படிப் படிக்கலாம் என்று உங்களுக்காக ஒரு பிளான் போட்டு படியுங்கள். அப்படிப் படித்தால் உங்களுக்கு அது கஷ்டமாகவோ சலிப்பாகவோ இருக்காது. யெகோவாமேலும் அவருடைய வார்த்தைமேலும் அன்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு படியுங்கள். அப்படிப் படித்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும். அதுமட்டுமல்ல, அதை நீங்கள் என்ஜாய் பண்ணி படிப்பீர்கள்.​—சங்கீதம் 16:11.

 டிப்ஸ்: படிக்கிற விஷயங்களிலிருந்து முழுமையாக பிரயோஜனம் அடைய வேண்டுமென்றால் கவனச்சிதறல் இல்லாத ஒரு அமைதியான இடத்தில் படியுங்கள்.

 அதிகம் தெரிந்துகொள்ள:

 யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்

 முக்கிய வசனம்: “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள்.”​—பிலிப்பியர் 4:6.

 அர்த்தம்: கடவுளுடைய நண்பராக வேண்டுமென்றால் நாம் அவரிடம் பேச வேண்டும், அவரும் நம்மிடம் பேச வேண்டும். பைபிளைப் படிக்கும்போது அவர் பேசுவதை நீங்கள் கேட்கிறீர்கள். ஜெபம் பண்ணும்போது அவரிடம் நீங்கள் பேசுகிறீர்கள். நீங்கள் ஜெபம் பண்ணும்போது கடவுளிடம் ‘இது வேண்டும், அது வேண்டும்’ என்று கேட்டால் மட்டும் போதாது. அவர் உங்களுக்கு செய்த நல்ல விஷயங்களுக்கு நன்றியும் சொல்ல வேண்டும்.

 எதார்த்தம்: சிலசமயம் ஜெபத்தில் நீங்கள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிற மாதிரி உங்களுக்குத் தோன்றலாம். அதோடு, ‘நான் ஜெபம் செய்யும்போது கடவுள் அதை கேட்கிறாரா, அதை கேட்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கிறதா’ என்றும்கூட நீங்கள் சந்தேகப்படலாம்.​—சங்கீதம் 10:1.

 என்ன செய்ய வேண்டும்: என்னென்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாம் என்று நாள் முழுவதும் யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, அந்தச் சமயத்தில் உங்களால் நீண்ட நேரம் ஜெபம் செய்ய முடியவில்லை என்றால்கூட அந்த விஷயங்களை உங்கள் மனதில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நேரம் கிடைக்கும்போது அந்த விஷயங்களை சொல்லி நீங்கள் ஜெபம் செய்ய முடியும். உங்களுக்காக மட்டும் ஜெபம் செய்யாதீர்கள், மற்றவர்களுக்காகவும் ஜெபம் செய்யுங்கள்.​—பிலிப்பியர் 2:4.

 டிப்ஸ்: சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி ஜெபம் செய்கிற மாதிரி தோன்றினால் அதைப் பற்றியும் நீங்கள் யெகோவாவிடம் சொல்லுங்கள். உங்கள் மனதில் இருக்கிற எல்லா கவலைகளையும் அவரிடம் கொட்ட வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார்​—நீங்கள் எப்படி ஜெபம் செய்கிறீர்கள் என்பதையும்கூட.​—1 யோவான் 5:14.

 அதிகம் தெரிந்துகொள்ள:

 உங்களுடைய நம்பிக்கைகளை தொடர்ந்து மற்றவர்களிடம் சொல்லுங்கள்

 முக்கிய வசனம்: “உன் மீதும் உன் போதனையின் மீதும் எப்போதும் கவனம் செலுத்து. . . . இப்படிச் செய்யும்போது நீயும் மீட்புப் பெறுவாய், நீ சொல்வதைக் கேட்கிறவர்களும் மீட்புப் பெறுவார்கள்.”​—1 தீமோத்தேயு 4:16.

 அர்த்தம்: உங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது உங்களுடைய விசுவாசம் பலப்படும். இதனால் உங்களுடைய உயிர் மட்டுமல்ல நீங்கள் சொல்வதைக் கேட்கிறவர்களுடைய உயிரையும் காப்பாற்றலாம்.

 எதார்த்தம்: சிலசமயம் உங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதற்கு உங்களுக்கு ஆர்வமில்லாமல் இருக்கலாம். சிலசமயம் அதைப் பற்றி பேசுவதற்குப் பயமாகக் கூட இருக்கலாம்​—அதுவும் ஸ்கூலில்.

 என்ன செய்ய வேண்டும்: பயம் அல்லது அதுபோன்ற உணர்வுகள் உங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். “அதை [நல்ல செய்தியை அறிவிப்பதை] விருப்பமில்லாமல் செய்தால்கூட, என்னிடம் ஒரு நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 9:​16, 17) ஒருசமயம் பவுலுக்கும்கூட மற்றவர்களிடம் தன்னுடைய நம்பிக்கைகளைப் பற்றிச் சொல்வது கஷ்டமாகத்தான் இருந்தது. இருந்தாலும், அது கடவுள் தனக்குக் கொடுத்த பொறுப்பு என்பதை உணர்ந்ததால் மற்றவர்களிடம் பேசினார்.

 டிப்ஸ்: உங்கள் அப்பா-அம்மாவுடைய அனுமதியோடு ஊழியத்தை ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் செய்கிற ஒருவரிடம் உங்களுக்கு உதவச் சொல்லி கேளுங்கள்.​—நீதிமொழிகள் 27:17.

 அதிகம் தெரிந்துகொள்ள:

 கிறிஸ்தவ கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொள்ளுங்கள்

  முக்கிய வசனம்: “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்; . . . சபைக் கூட்டங்களுக்கு வராமல் . . . இருந்துவிடக் கூடாது.”​—எபிரெயர் 10:​24, 25.

 அர்த்தம்: நாம் கூட்டங்களுக்குப் போவதற்கான முக்கிய காரணமே யெகோவாவை வணங்குவதற்காகத்தான். ஆனாலும் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன. முதலாவதாக, கூட்டங்களில் சகோதர சகோதரிகளிடம் இருந்து உங்களுக்கு உற்சாகம் கிடைக்கிறது. இரண்டாவதாக, கூட்டங்களில் கலந்துகொண்டு பதில் சொல்லும்போது நீங்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்.​—ரோமர் 1:​11, 12.

 எதார்த்தம்: சிலசமயம் கூட்டங்களில் இருக்கும்போது உங்கள் மனம் அலைபாயலாம். அதனால் சொல்லப்படுகிற முக்கியமான விஷயங்களை கற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். சிலசமயம் நீங்கள் கூட்டங்களுக்கு வருவதையே நிறுத்திவிடலாம். ஏனென்றால், கூட்டங்களுக்கு வருவதற்கு நேரமே இல்லாத அளவுக்கு மற்ற விஷயங்களில், அதாவது ஸ்கூல் ஹோம்வொர்க் போன்ற விஷயங்களில் நீங்கள் மூழ்கிப் போய்விடலாம்.

 என்ன செய்ய வேண்டும்: உங்களுடைய ஹோம்வொர்க்கை நீங்கள் செய்து முடிக்க வேண்டும்தான். ஆனாலும், கூட்டங்களுக்கு தவறாமல் வர வேண்டும் என்பதிலும் அதிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதிலும் தீர்மானமாக இருங்கள். கூட்டங்களில் நீங்கள் கையை தூக்கி பதில் சொல்லுங்கள். கூட்டம் முடிந்த பின்பு நன்றாக பதில் சொன்ன ஒருவரையாவது பாராட்டுங்கள்.

 டிப்ஸ்: கூட்டங்களுக்கு நன்றாகத் தயாரித்துவிட்டு போங்கள். அதற்காக JW லைப்ரரி ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள். அதில் “கூட்டங்கள்” என்ற பட்டனை கிளிக் செய்தால் ஒவ்வொரு கூட்டத்திலும் என்ன கலந்துபேசுவார்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

 அதிகம் தெரிந்துகொள்ள: