Skip to content

இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்

டேட்டிங்​—பாகம் 2: டேட்டிங் செய்யும்போது நான் என்ன எதிர்பார்க்கலாம்?

டேட்டிங்​—பாகம் 2: டேட்டிங் செய்யும்போது நான் என்ன எதிர்பார்க்கலாம்?

 நீங்கள் ஒருவரைப் பார்க்கிறீர்கள். உங்களுக்கு அவரை ரொம்ப பிடித்திருக்கிறது. நீங்கள் இரண்டு பேரும் பொருத்தமான ஜோடியாக இருப்பீர்களா என்று தெரிந்துகொள்வதற்காக டேட்டிங் பண்ணலாம் என்று முடிவெடுக்கிறீர்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாக தெரிந்துகொள்ளும்போது நீங்கள் என்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம்?

இந்தக் கட்டுரையில்

 மனம் திறந்து பேச வேண்டியிருக்கும்

 நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நேரம் செலவு செய்யும்போது ஒருவரைப் பற்றி ஒருவர் நன்றாக தெரிந்துகொள்வீர்கள். அதோடு, ஒவ்வொரு சூழ்நிலைமையிலும் அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை கவனிக்கவும் முடியும்.

 இருந்தாலும், சில விஷயங்களை நீங்கள் இரண்டு பேருமே மனம்விட்டு வெளிப்படையாக பேச வேண்டும். அப்படிப் பேசும்போது உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு முடிவு எடுக்காதீர்கள், நன்றாக யோசித்து முடிவெடுங்கள்.

 நீங்கள் இரண்டு பேருமே பேச வேண்டிய சில விஷயங்கள்:

  •   பணம். உங்களுக்கு ஏதாவது கடன் இருக்கிறதா? நீங்கள் கன்னாபின்னா என்று செலவு செய்பவரா? ஒருவேளை நீங்கள் கல்யாணம் செய்துகொண்டால் வரவுசெலவு விஷயத்தைப் பற்றி நீங்களும் உங்கள் துணையும் எப்படி முடிவெடுப்பீர்கள்?

  •   உடல் நலம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறீர்களா? இதற்கு முன்னால் உங்களுக்கு ஏதாவது மோசமான உடல்நலப் பிரச்சினை வந்திருக்கிறதா?

  •   லட்சியம். உங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்ன? உங்களுடைய லட்சியமும் நீங்கள் டேட்டிங் செய்கிறவருடைய லட்சியமும் ஒத்துப்போகிறதா? ஒருவேளை கல்யாணத்துக்குப் பிறகு உங்களுடைய லட்சியத்தை அடைய முடியாத சூழ்நிலைமைகள் வந்தாலும் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியுமா?

  •   குடும்பம். இப்போதைக்கு உங்கள் குடும்பத்தில் யாரையாவது கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா? எதிர்காலத்தில் அப்படி யாரையாவது பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் வரும் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசையா? அப்படியென்றால் எவ்வளவு குழந்தைகள்?

 இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் பேசும்போது ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக பேச வேண்டும். அவரை இம்ப்ரஸ் பண்ண வேண்டும் என்பதற்காக எதையும் மறைக்காதீர்கள்... எதையும் மாற்றி சொல்லாதீர்கள்... உள்ளதை உள்ளபடி சொல்லுங்கள்.​—எபிரெயர் 13:18.

 இப்படி யோசித்துப் பாருங்கள்: நீங்கள் டேட்டிங் செய்கிற நபரை பற்றி என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும்? உங்களைப் பற்றி அவர் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்? இப்போதே இருவரும் மனம்விட்டு பேசுவது, ஒருவேளை நீங்கள் கல்யாணம் செய்துகொண்டால் அதற்கு பின்பும் மனம்விட்டுப் பேசுவதற்கு எப்படிக் கைகொடுக்கும்?

 பைபிள் ஆலோசனை: “ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எப்போதும் உண்மை பேசுங்கள்.”​—எபேசியர் 4:25.

 “‘ஆறு மாசம் டேட்டிங் பண்ணலாம், அதற்குப் பின்பு கல்யாணத்தைப் பற்றி முடிவெடுத்துவிடலாம்’ என்று அந்தப் பெண் நினைக்கலாம். ஆனால் அந்தப் பையனோ ‘ஒரு வருஷத்துக்குப் பின்பு பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைக்கலாம். அந்த மாதிரி சூழ்நிலையில் அந்தப் பெண்ணுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் அவளுடைய மனம் குழம்பிப்போகும். ஏனென்றால், எல்லாமே சீக்கிரம் நடக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்த்திருப்பாள். அதனால் ஒரு விஷயத்தைப் பற்றி இரண்டு பேரும் என்ன நினைக்கிறீர்கள் என்பதை தெரிந்து வைத்திருப்பது ரொம்பவே முக்கியம்.”​—அரியானா, கல்யாணமாகி ஒரு வருடம்.

 கருத்துக்கள் வித்தியாசப்படும்

 நீங்கள் இருவரும் ஒரே மாதிரிதான் யோசிப்பீர்கள், ஒரே மாதிரிதான் எல்லாவற்றையும் செய்வீர்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால், நீங்கள் இரண்டு பேருமே இரண்டு வித்தியாசமான நபர்கள். அதோடு, நீங்கள் வளர்க்கப்பட்ட சூழ்நிலைமையும் உங்களுடைய கலாச்சாரமும் வித்தியாசமாக இருக்கலாம்.

 இப்படி யோசித்துப் பாருங்கள்: சின்னச் சின்ன விஷயங்களில் உங்களுக்கு கருத்துவேறுபாடு வந்தால், ஒருவேளை அது கடவுள் சொல்வதற்கு எதிராக இல்லாவிட்டால் நீங்கள் இரண்டு பேரும் விட்டுக்கொடுத்து போவீர்களா?

 பைபிள் ஆலோசனை: “நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்.”​—பிலிப்பியர் 4:5.

 “நாங்கள் ‘ரொம்ப பொருத்தமான ஜோடி’ என்று நீங்கள் நினைத்துக்கொண்டாலும் கூட உங்களுக்கு இடையேயும் கருத்துவேறுபாடு வரும். நிறைய விஷயங்களில் நீங்கள் ஒத்துப்போக வேண்டியது முக்கியம்தான். இருந்தாலும், ஒத்துப்போகாத சமயத்தில் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதுதான் ரொம்பவே முக்கியம்.”​—மேத்யூ, கல்யாணமாகி ஐந்து வருடங்கள்.

 டேட்டிங் சமயத்தில் உங்களுக்கு ஸ்ட்ரெஸ் (மன அழுத்தம்) வரலாம்

 உண்மைதான். உங்களுடைய நேரத்தையெல்லாம் டேட்டிங்கே எடுத்துக்கொள்கிற மாதிரி உங்களுக்கு தோன்றும். அதனால் சிலசமயம் நீங்கள் ஸ்ட்ரெஸ் ஆகலாம். அப்போது நீங்கள் என்ன செய்யலாம்?

 ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரத்தை ஒதுக்குங்கள். உங்களுடைய நண்பர்களையோ அல்லது உங்களுடைய மற்ற பொறுப்புகளையோ ஓரங்கட்டுகிற அளவுக்கு டேட்டிங்கிலேயே ரொம்ப மூழ்கிப் போய்விடாதீர்கள். கல்யாணமாகி ஐந்து வருஷங்கள் ஆன அலேனா இப்படிச் சொல்கிறார்: “கல்யாணம் ஆனாலும் உங்களுக்கு ஃபிரண்ட்ஸ் தேவைதான். அவர்களுக்கும் நீங்கள் தேவைதான். அதனால் இப்போது உங்களுக்கு ஒரு ஆள் கிடைத்துவிட்டார் என்பதற்காக உங்கள் ஃபிரண்ட்ஸை அம்போ என்று விட்டுவிடாதீர்கள்.”

 ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். கல்யாணம் ஆன பின்பும் ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரத்தை நீங்கள் ஒதுக்க வேண்டியிருக்கும். அப்படியென்றால் டேட்டிங் பண்ணும்போதே ஏன் இதை நீங்கள் ட்ரை பண்ணக் கூடாது?

 இப்படி யோசித்துப் பாருங்கள்: நீங்கள் டேட்டிங் செய்கிற நபர் உங்களோடுதான் நேரம் செலவழிக்க வேண்டும் என்றோ உங்களுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றோ எதிர்பார்க்கிறீர்களா? அவரும் உங்களிடம் அளவுக்கு மீறி எதிர்பார்ப்பதாக உங்களுக்கு தோன்றுகிறதா? ‘இப்படி வசமாக வந்து மாட்டிக்கொண்டோமே’ என்று நீங்கள் இரண்டு பேரும் நினைக்காத மாதிரி எப்படி நியாயமாக நடந்துகொள்ளலாம்?

 பைபிள் ஆலோசனை: “எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது. . . . ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது.”​—பிரசங்கி 3:1.

 “டேட்டிங் செய்யும்போது நீங்கள் இரண்டு பேருமே பொழுதுபோக்குக்கு மட்டும் நேரம் அதிகமாக செலவு செய்தீர்கள் என்றால் கல்யாணத்துக்குப் பிறகு உங்கள் பாடு திண்டாட்டம்தான். அதனால் டேட்டிங் செய்யும்போதே ஷாப்பிங், வீட்டு வேலை செய்வது, கடவுளை வணங்குவது இந்த மாதிரி விஷயங்களை சேர்ந்து செய்வது நல்லது. அப்படிச் செய்தால், கல்யாணத்துக்குப் பிறகும் எல்லாவற்றையும் சேர்ந்து செய்வது ரொம்பவே ஈசியாக இருக்கும்.”​—டேனியல், கல்யாணமாகி இரண்டு வருடங்கள்.

 இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். ஒருமனமாய் திருமணத்தில் இணைய வேண்டுமா, இல்லையென்றால் இருமனமாய் பிரிந்துவிட வேண்டுமா என்று முடிவு செய்கிற ஒரு காலப்பகுதிதான் டேட்டிங். இந்த முடிவை எடுப்பதற்கு உதவி செய்கிற சில விஷயங்கள் பாகம் 3-ல் இருக்கும்.