இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
மனச்சோர்வைச் சமாளிப்பது எப்படி?
நல்ல நல்ல டிப்ஸுகள் உங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்!
நீங்கள் என்ன செய்வீர்கள்?
சிலருடைய அனுபவத்தைக் கவனியுங்கள்:
இப்போதெல்லாம் ஜெனிஃபருக்கு எதுவுமே சந்தோஷம் தருவதில்லை. காரணமே இல்லாமல் தினமும் தேம்பித் தேம்பி அழுகிறாள். யாரோடும் ஒட்டாமல் ஒதுங்கி ஒதுங்கிப் போய்விடுகிறாள், சரியாகவே சாப்பிடுவதில்லை. தூங்க முடியாமல், எதிலும் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறாள். “என்ன ஆச்சு எனக்கு? பழைய ஜெனஃபரா என்னால ஆக முடியுமா?” என்று அவள் கவலைப்படுகிறாள்.
மார்க் ரொம்பக் கெட்டிக்கார மாணவனாக இருந்தான். ஆனால், இப்போது ஸ்கூல் என்றாலே அவனுக்கு வெறுப்பாக இருக்கிறது, பரீட்சையில் அவன் எடுக்கிற மார்க்குகளெல்லாம் இறங்கு முகமாகவே இருக்கிறது. ஸ்போர்ட்ஸில் கலந்துகொள்ள முன்பிருந்த உற்சாகமும் தெம்பும் இப்போது அவனுக்குச் சுத்தமாக இல்லை. அவனுடைய நண்பர்களுக்குக் குழப்பமாக இருக்கிறது. அவனுடைய அப்பா அம்மாவுக்குக் கவலையாக இருக்கிறது. இது வெறுமனே தற்காலிக பிரச்சினையா அல்லது சீரியஸான பிரச்சினையா?
ஜெனிஃபர், மார்க் போலவே நீங்களும் அடிக்கடி உணருகிறீர்களா? ‘ஆம்’ என்றால், நீங்கள் என்ன செய்யலாம்? இந்த இரண்டு சாய்ஸில் ஒன்றை முயற்சி செய்யலாம்:
யாரிடமும் உதவி கேட்காமல் நீங்களாகவே ஏதாவது செய்ய முயற்சிக்கலாம்
வயதில் மூத்தவராகவும் நம்பகமானவராகவும் இருக்கிற ஒருவரிடம் மனம்விட்டுப் பேசலாம்
முதல் சாய்ஸ்படி செய்ய உங்கள் மனம் ஒருவேளை உங்களைத் தூண்டலாம், அதுவும் பேசவே பிடிக்காத சமயங்களில் அப்படிச் செய்யத் தூண்டலாம். ஆனால், அது புத்திசாலித்தனமா? பைபிள் இப்படிச் சொல்கிறது: “தனியாக இருப்பதைவிட இரண்டு பேராகச் சேர்ந்திருப்பது நல்லது. அப்போது, . . . ஒருவன் விழுந்தால் இன்னொருவன் தூக்கிவிட முடியும். ஆனால், தனியாக இருப்பவன் கீழே விழுந்தால் அவனை யார் தூக்கிவிடுவது?”—பிரசங்கி 4:9, 10.
உதாரணத்திற்கு: கொலையும் கொள்ளையும் அதிகமாக நடக்கிற ஓர் ஆபத்தான இடத்தில் வழிதெரியாமல் மாட்டிக்கொள்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கே இருட்டாக இருக்கிறது, முன்பின் தெரியாத ஆட்கள் மூலைமுடுக்கெல்லாம் அலைந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்? அங்கிருந்து தப்பிக்க நீங்களாகவே முயற்சி செய்யலாம். ஆனால், நம்பகமான ஒருவரிடம் உதவி கேட்பது அதைவிட ஞானமாக இருக்கும், இல்லையா?
ஒருவிதத்தில், மனச்சோர்வும்கூட அப்படிப்பட்ட ஓர் ஆபத்தான இடம் என்று சொல்லலாம். சிலருக்கு அவ்வப்போது மனதில் சோகம் குடிபுகுந்தாலும், அது தானாகவே போய்விடும் என்பது உண்மைதான். ஆனால், மனச்சோர்வு ரொம்ப நாளைக்கு மனதில் குடியிருக்கிறது என்றால் உதவி கேட்பதுதான் நல்லது.
பைபிள் நியமம்: “தன்னைத் தனிமைப்படுத்துகிறவன் . . . எல்லா ஞானத்தையும் ஒதுக்கித்தள்ளுகிறான்.”—நீதிமொழிகள் 18:1.
இரண்டாவது சாய்ஸ்படி செய்வதால், அதாவது உங்கள் அப்பா அம்மாவிடமோ நம்பகமான ஒருவரிடமோ மனம்விட்டுப் பேசுவதால், நன்மை கிடைக்கலாம்; ஆம், உணர்ச்சிப் போராட்டத்தில் வெற்றிபெற்ற ஒருவருடைய அனுபவத்திலிருந்து நீங்கள் பயனடையலாம்.
‘ஆனா என் மனசுக்குள்ள நடக்கற போராட்டமெல்லாம் என் அம்மா அப்பாவுக்குச் சுத்தமா புரியாது!’ என ஒருவேளை நீங்கள் சொல்லலாம். ஆனால், அவர்களுக்கு அது சுத்தமாகப் புரியாதென்று உங்களால் அடித்துச் சொல்ல முடியுமா? அவர்களுடைய டீனேஜ் காலத்தில் இருந்த நிலைமை வேறு... உங்களுடைய தற்போதைய நிலைமை வேறு என்பது உண்மைதான்; ஆனால், உங்களுக்கு இருக்கிற அதே உணர்ச்சிகள் அப்போது அவர்களுக்கும் இருந்திருக்கலாம். அதிலிருந்து மீண்டுவர அவர்கள் ஏதாவதொரு வழியைத் தெரிந்துவைத்திருக்கலாம்!
பைபிள் நியமம்: “வயதானவர்கள் ஞானம் உள்ளவர்கள்தானே? பெரியவர்கள் அனுபவம் உள்ளவர்கள்தானே?”—யோபு 12:12.
முக்கியக் குறிப்பு இதுதான்: உங்கள் அப்பா அம்மாவிடம் அல்லது வயதில் மூத்தவராகவும் நம்பகமானவராகவும் இருக்கிற ஒருவரிடம் நீங்கள் மனம்விட்டுப் பேசினால், பிரயோஜனமான ஆலோசனைகள் கிடைக்கும்.
உங்களுக்கு இருப்பது மனநலப் பிரச்சினையாக இருந்தால் என்ன செய்வது?
தினம்தினம் மனச்சோர்வு உங்களை வாட்டி வதைக்கிறது என்றால், மன உளைச்சல் நோய் போன்ற மனநலப் பிரச்சினைக்கு நீங்கள் ஒருவேளை சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கலாம்.
டீனேஜ் பிள்ளைகளிடம் காணப்படுகிற மன உளைச்சல் நோய்க்கான அறிகுறிகள், டீனேஜில் அடிக்கடி வருகிற ‘மூட் அவுட்’ பிரச்சினை போலவே இருக்கலாம்; ஆனால் அவை அதிகளவில் இருக்கும், அதிக நாட்களுக்கு நீடிக்கும். அதனால், உங்கள் மனதில் சோகம் ரொம்ப அதிகமாக இருக்கிறதென்றால், ரொம்ப நாளைக்கு நீடிக்கிறதென்றால், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது பற்றி உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள்.
பைபிள் நியமம்: “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை.”—மத்தேயு 9:12.
உங்களுக்கு மன உளைச்சல் நோய் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தால், நீங்கள் அவமானத்தில் கூனிக்குறுகத் தேவையில்லை. இளைஞர்கள் மத்தியில் மனச்சோர்வு என்ற பிரச்சினை சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது, அதைக் குணப்படுத்தக்கூட முடியும்! உங்களுடைய உண்மையான நண்பர்கள் உங்களை எந்த விதத்திலும் தாழ்வாகப் பார்க்க மாட்டார்கள்.
டிப்ஸ்: பொறுமையாக இருங்கள். மனச்சோர்விலிருந்து மீண்டுவருவதற்குக் கொஞ்சக் காலமெடுக்கும்; அப்போது, சில நாட்கள் நன்றாக இருக்கும், சில நாட்கள் மோசமாக இருக்கும் என நீங்கள் எதிர்பார்க்கலாம். a
குணமாவதற்கு எடுக்க வேண்டிய படிகள்
நீங்கள் மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தாலும் சரி, எடுக்கத் தேவையில்லை என்றாலும் சரி, மனதிலுள்ள தீரா சோகத்தை விரட்டியடிக்க சில காரியங்களை நீங்கள் செய்தாக வேண்டும். உதாரணத்திற்கு, தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும், சத்தான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும், போதுமானளவு தூங்க வேண்டும்; உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைக்க இதெல்லாம் உதவும். (பிரசங்கி 4:6; 1 தீமோத்தேயு 4:8) அதோடு, டைரி எழுதுவதும்கூட உங்களுக்கு உதவும்; அதில் உங்களுடைய உணர்ச்சிகளையும், குணமாவதற்காக நீங்கள் வைத்திருக்கிற குறிக்கோள்களையும், செய்யத் தவறிய காரியங்களையும், செய்துமுடித்த காரியங்களையும் பற்றி எழுதி வைக்கலாம்.
மன உளைச்சல் நோயினால் நீங்கள் கஷ்டப்பட்டாலும் சரி, அல்லது மனச்சோர்வினால் தற்காலிகமாகக் கஷ்டப்பட்டாலும் சரி, இந்த விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: மற்றவர்களுடைய உதவியை ஏற்றுக்கொள்வதன் மூலமும், குணமாவதற்குத் தனிப்பட்ட விதத்தில் சில படிகளை எடுப்பதன் மூலமும் மனச்சோர்வை உங்களால் சமாளிக்க முடியும்.
உபயோகமான பைபிள் வசனங்கள்
“உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார். மனம் நொந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்.”—சங்கீதம் 34:18.
“யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு. அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்.”—சங்கீதம் 55:22.
“யெகோவாவாகிய நான் உன்னுடைய வலது கையைப் பிடித்திருக்கிறேன். ‘பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன்’ என்று சொல்கிறேன்.”—ஏசாயா 41:13.
“நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்.”—மத்தேயு 6:34.
‘உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் கடவுளிடம் சொல்லுங்கள். அப்போது, எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும்.’—பிலிப்பியர் 4:6, 7.
a தற்கொலை எண்ணம் உங்கள் மனதை அலைக்கழிக்கிறது என்றால், நம்பகமான ஒருவரிடம் உடனடியாக உதவி கேளுங்கள். கூடுதலான விவரங்களுக்கு, ஜூலை-செப்டம்பர் 2014 விழித்தெழு! பத்திரிகையில் “ஏன் வாழ வேண்டும்?” என்ற தலைப்பில் வெளிவந்த நான்கு பாகத் தொடர்கட்டுரையைப் பாருங்கள்.