இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
மாயமந்திரம்—விளையாட்டா? வினையா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஜாதகம் பார்ப்பதில், வீஜா பலகைகளைப் பயன்படுத்துவதில் அல்லது ஜோதிடம் பார்ப்பதில் ஏதாவது ஆபத்து இருக்கிறதா?
மாயமந்திரக் கதைகளில் ஏதாவது ஆபத்து மறைந்திருக்கிறதா? அல்லது அவை வெறுமனே நீதிக்கும் அநீதிக்கும் இடையில் நடக்கும் சண்டைகளைப் பற்றி சொல்லும் கட்டுக்கதைகள்தானா?
ஆவியுலகத் தொடர்பு நம்மை எப்படிக் கவர்ந்து இழுக்கிறது என்றும், நாம் ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
எப்படிக் கவர்ந்து இழுக்கிறது?
மாயமந்திரக் கதைகளை வைத்து பொழுதுபோக்கு துறை ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கிறது. சினிமாக்கள், டிவி நிகழ்ச்சிகள், வீடியோ கேம்ஸ்கள் மற்றும் புத்தகங்கள் பெரும்பாலும் மாயமந்திரக் கதைகளைச் சுற்றிதான் இருக்கின்றன. அதனால், நிறைய இளைஞர்கள் ஜோதிடம், பேய்கள், காட்டேரிகள், சூனியம் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுடைய ஆர்வத்துக்கு இவைகூட காரணங்களாக இருக்கலாம்:
என்ன-ஏது என்று தெரிந்துகொள்வதற்கான ஆசை: ஆவிகள் நிஜமாகவே இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்ள
கவலை: எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள
இறந்தவர்களைத் தொடர்புகொள்ள: இறந்துபோன நெருக்கமானவர்களோடு பேசுவதற்கு முயற்சி செய்ய
இந்தக் காரணங்களை தவறு என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யோசிப்பதும் இறந்தவர்களை நினைத்து வருத்தப்படுவதும் இயல்புதான். ஆனால், அதில் ஆபத்தும் இருக்கிறது. அதனால், நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஏன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்?
ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்ட எதையும் செய்யக் கூடாது என்று பைபிள் எச்சரிக்கிறது. ஒரு உதாரணம்:
“உங்களில் யாருமே . . . குறிசொல்லவோ, மாயமந்திரம் செய்யவோ, சகுனம் பார்க்கவோ, சூனியம் வைக்கவோ, வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம் அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ, இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது. ஏனென்றால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.”—உபாகமம் 18:10-12.
ஆவியுலகத் தொடர்பை பைபிள் ஏன் இந்தளவுக்கு கண்டனம் செய்கிறது?
ஆவியுலகத் தொடர்பு, பேய்களுடைய நண்பராக ஒருவரை ஆக்கிவிடுகிறது. சில தூதர்கள் கடவுளை எதிர்த்ததால், அவருடைய எதிரிகளாக ஆனார்கள் என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 6:2; யூதா 6) இந்தப் பொல்லாத தூதர்கள்தான் பேய்களாக ஆனார்கள். இந்தப் பேய்கள், ஆவி மத்தியஸ்தர்கள்... குறிசொல்பவர்கள்... சகுனம் பார்ப்பவர்கள்... மற்றும் ஜோதிடர்கள் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்துகின்றன. இந்தப் பழக்கங்களில் ஈடுபடும்போது நாம் கடவுளுடைய எதிரிகளுக்கு நண்பர்களாகிவிடுகிறோம்.
எதிர்காலத்தில் நடக்கப்போவதை சில மனிதர்களால் சரியாகக் கணிக்க முடியும் என்ற பொய்யை ஆவியுலகத் தொடர்பு பரப்புகிறது. ஆனால், கடவுளால் மட்டும்தான் அதைச் செய்ய முடியும் என்று பைபிள் சொல்கிறது: “நடக்கப்போகும் விஷயங்களை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். அதை ரொம்பக் காலத்துக்கு முன்பிருந்தே சொல்லி வருகிறேன்.”—ஏசாயா 46:10; யாக்கோபு 4:13, 14.
உயிரோடு இருப்பவர்களால் இறந்தவர்களோடு பேச முடியும் என்ற பொய்யை ஆவியுலகத் தொடர்பு பரப்புகிறது. ஆனால், “இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது . . . கல்லறையில் வேலை செய்யவோ திட்டம் போடவோ முடியாது; அங்கே அறிவோ ஞானமோ இல்லை” என்று பைபிள் சொல்கிறது.—பிரசங்கி 9:5, 10.
இதனால்தான், ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்ட எல்லா பழக்கங்களையும் யெகோவாவின் சாட்சிகள் ஒதுக்கித்தள்ளுகிறார்கள். ஸாம்பீஸ், காட்டேரிகள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு பொழுதுபோக்கிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. “ஆவியுலகத்தோட சம்பந்தப்பட்ட விஷயம் ஏதாவது இருந்தா, அத நான் பார்க்கவே மாட்டேன்” என்று இளம் பெண் மரியா சொல்கிறார். a
நீங்கள் என்ன செய்யலாம்?
மாயமந்திரத்தோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு பழக்கத்தையும் பொழுபோக்கையும் தவிர்த்து, யெகோவாவுக்கு “முன்னால் சுத்தமான மனசாட்சியோடு” இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.—அப்போஸ்தலர் 24:16.
மாயமந்திரத்தோடு சம்பந்தப்பட்ட பொருள்கள் ஏதாவது உங்களிடம் இருந்தால், அதைத் தூக்கி எறிந்துவிடுங்கள். இது சம்பந்தமாக முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் நமக்கு நல்ல முன்மாதிரி வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி அப்போஸ்தலர் 19:19, 20-ல் வாசித்துப்பாருங்கள்.
மறந்துவிடாதீர்கள்: மாயமந்திரம் சம்பந்தப்பட்ட பழக்கங்களையும் பொழுதுபோக்கையும் நீங்கள் ஒதுக்கித்தள்ளும்போது, நீங்கள் யெகோவாவின் பக்கம் நிற்கிறீர்கள். அது யெகோவாவின் இதயத்தைச் சந்தோஷப்படுத்தும்!—நீதிமொழிகள் 27:11.
a அதற்காக, எல்லா கற்பனைக் கதைகளும் ஆவியுலகக் கருத்துகளைத்தான் பரப்புகின்றன என்று சொல்லிவிட முடியாது. ஆனால், ஆவியுலகத்தோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு பழக்கத்தையும் பொழுதுபோக்கையும் தவிர்ப்பதற்கு பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறது.—2 கொரிந்தியர் 6:17; எபிரெயர் 5:14.