Skip to content

பைபிள் வசனங்களின் விளக்கம்

நீதிமொழிகள் 17:17—“நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்”

நீதிமொழிகள் 17:17—“நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்”

“உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17, புதிய உலக மொழிபெயர்ப்பு.

“நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான்.”—நீதிமொழிகள் 17:17, பொது மொழிபெயர்ப்பு.

நீதிமொழிகள் 17:17-ன் அர்த்தம்

 உண்மையான நண்பர்களை எப்போதுமே நம்பலாம். கூடப் பிறந்தவர்களை போல், அவர்கள் நம்மை அக்கறையாக பார்த்துக்கொள்வார்கள். நம்மை விட்டுப் போகவே மாட்டார்கள், அதுவும் கஷ்ட காலங்களில்.

 “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான்.” “ஒரு நண்பன் எப்பொழுதும் நேசிக்கிறான்” என்றும் இந்த வார்த்தைகளை மொழிபெயர்க்கலாம். “அன்பு” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை, ஒருவர்மேல் நமக்கு வருகிற பாச உணர்ச்சிகளை மட்டுமே அர்த்தப்படுத்துவது கிடையாது. அது செயல்களில் காட்டப்படுகிற சுயநலமில்லாத அன்பைக் குறிக்கிறது. (1 கொரிந்தியர் 13:4-7) இப்படிப்பட்ட அன்பைக் காட்டுகிற நண்பர்கள் எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும்சரி, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்தாலும்சரி, எல்லா சமயத்திலும் பாசமாக ஒட்டிக்கொண்டிருப்பார்கள். அதோடு, ஒருவரையொருவர் மன்னிக்கவும் தயாராக இருப்பார்கள். (நீதிமொழிகள் 10:12) அவர்களில் யாராவது ஒருவருக்கு நல்லது நடந்தால் அதைப் பார்த்து இன்னொருவர் வயிற்றெரிச்சல் பட மாட்டார். அதற்குப் பதிலாக, அவரோடு சேர்ந்து சந்தோஷப்படுவார்.—ரோமர் 12:15.

 “உண்மையான நண்பன் . . . கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.” பொதுவாகவே, மற்றவர்களைவிட கூடப் பிறந்தவர்கள் நெருக்கமாக இருப்பார்கள் என்ற உண்மையின் அடிப்படையில்தான் இந்தப் பழமொழி எழுதப்பட்டிருக்கிறது. கஷ்டத்தில் தவிக்கிற ஒரு நண்பருக்கு நம்மால் முடிந்த உதவிகளையெல்லாம் செய்யும்போது, கூடப் பிறந்த சகோதரனைப் போலவோ சகோதரியைப் போலவோ நடந்துகொள்கிறோம். அதுமட்டுமல்ல, எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் இப்படிப்பட்ட நட்பு உடைந்து போகாது. ஏனென்றால், பிரச்சினைகள் வரும்போது அவர்களுக்கு இடையே இருக்கிற அன்பும் மரியாதையும் அதிகமாகும், இதுதான் அவர்களுடைய நட்பைப் பலப்படுத்தும்.

நீதிமொழிகள் 17:17-ன் பின்னணி

 நீதிமொழிகள் புத்தகத்தில் ஞானமான ஆலோசனைகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. வாசிப்பவர்களை யோசிக்க வைக்கும் விதத்தில் அவை சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தின் நிறைய பகுதிகளை சாலொமோன் ராஜா எழுதினார். அவருடைய எழுத்து நடை எபிரெய கவிதை நடையைப் போல இருக்கிறது. பொதுவாக எபிரெய கவிதை நடையில், கடைசி வரிகள் எதுகை மோனையில் இருக்காது. ஒரே கருத்துள்ள கவிதையாக அல்லது எதிரெதிர் கருத்துள்ள கவிதையாக இருக்கும். ஒரே கருத்துள்ள கவிதையில், முதல் வரியில் இருக்கிற கருத்தை இரண்டாவது வரி வலியுறுத்திக் காட்டும். எதிரெதிர் கருத்துள்ள கவிதையில், முதல் வரியில் இருக்கிற கருத்துக்கு எதிரான கருத்து இரண்டாவது வரியில் இருக்கும். ஒரே கருத்துள்ள கவிதைக்கு ஒரு உதாரணம், நீதிமொழிகள் 17:17. எதிரெதிர் கருத்துள்ள கவிதைக்கு ஒரு உதாரணம், நீதிமொழிகள் 18:24. அது இப்படிச் சொல்கிறது: “கூட இருந்தே குழிபறிக்க நினைக்கிற நண்பர்கள் உண்டு. ஆனால், கூடப்பிறந்தவனைவிட பாசமாக ஒட்டிக்கொள்ளும் நண்பனும் உண்டு.”

 நீதிமொழிகள் 17:17-ஐ எழுதியபோது, தன்னுடைய அப்பா தாவீதுக்கும் சவுல் ராஜாவின் மகன் யோனத்தானுக்கும் இடையே இருந்த நெருக்கமான நட்பு சாலொமோனுடைய மனதுக்கு வந்திருக்கும். (1 சாமுவேல் 13:16; 18:1; 19:1-3; 20:30-34, 41, 42; 23:16-18) தாவீதும் யோனத்தானும் கூடப் பிறந்த சகோதரர்களாக இல்லையென்றாலும், அதைவிட நெருக்கமானவர்களாக இருந்தார்கள். தன்னைவிட வயதில் சின்னவராக இருந்த தன் நண்பன் தாவீதுக்காக உயிரைக் கொடுக்கக்கூட யோனத்தான் தயாராக இருந்தார். a

 நீதிமொழிகள் புத்தகத்தைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.