Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?

மாநாடு நிகழ்ச்சிகளில் நாம் ‘பார்க்கிற விஷயங்களும் கேட்கிற விஷயங்களும்’

மாநாடு நிகழ்ச்சிகளில் நாம் ‘பார்க்கிற விஷயங்களும் கேட்கிற விஷயங்களும்’

ஜூலை 1, 2024

 130 வருஷங்களுக்கும் மேலாக, யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொரு வருஷமும் மாநாட்டுக்காக ஒன்றுகூடி வருகிறார்கள். இப்போது அந்த நிகழ்ச்சிகளில் 40-க்கும் அதிகமான பேச்சுகள் கொடுக்கப்படுகின்றன. அதோடு, இசையும், பேட்டிகளும், வீடியோக்களும் இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறவர்கள் முழுமையாக பயனடையவும் உற்சாகம் பெறவும் வேண்டுமென்றால், அவர்கள் ‘பார்க்கிற விஷயங்களும் கேட்கிற விஷயங்களும்’ தெளிவாக இருக்க வேண்டும். (லூக்கா 2:20) மாநாட்டில் கலந்துகொள்கிறவர்கள் எங்கே வாழ்ந்தாலும் சரி, அந்த நிகழ்ச்சியை அவர்கள் நன்றாக அனுபவிப்பதற்கு உங்களுடைய நன்கொடைகள் எப்படி நன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன?

மாநாடு நடக்கும் ஒவ்வொரு இடத்துக்கும் பொருத்தமான ஆடியோ/வீடியோ கருவிகள்

 மேற்கத்திய நாடுகளில் இருக்கும் நிறைய ஸ்டேடியங்களிலும், அரங்குகளிலும் ஏற்கெனவே ஆடியோ/வீடியோ கருவிகள் இருக்கும். இருந்தாலும், மாநாட்டுக்காக நாம் வாடகைக்கு எடுக்கும் இடங்களில் நம்முடைய சொந்த கருவிகளையே பயன்படுத்துகிறோம். ஏன்? உலகத் தலைமை அலுவலகத்தில் இருக்கும் பிராட்காஸ்டிங் டிபார்ட்மண்ட்டில் வேலை செய்யும் டேவிட் அதற்கான காரணத்தைச் சொல்கிறார்: “மேடையிலிருந்து பேசுவதை 6 மணிநேரத்துக்கும் மேலாக கவனித்துக் கேட்கும் வசதிகள் நாம் வாடகைக்கு எடுக்கும் மன்றங்களில் வெறும் ஒருசிலவற்றில் மட்டும்தான் இருக்கின்றன. பெரும்பாலான இடங்களில், உதாரணத்துக்கு, விளையாட்டு அரங்குகளில் இருக்கும் கருவிகளை, சின்ன சின்ன அறிவிப்புகள் செய்வதற்கு அல்லது இசை, பாட்டு போன்றவற்றை போடுவதற்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். வீடியோ காட்டுவதற்காக பயன்படுத்துகிற கருவிகளை விளம்பரங்கள், போட்டியின் ஸ்கோர் அல்லது ரீ-பிளேகளை போடுவதற்குதான் பயன்படுத்துவார்கள். ஆனால், மாநாட்டு நிகழ்ச்சிகள் அப்படி கிடையாது. அதில் கலந்துகொள்கிறவர்கள் பெரிய பெரிய வீடியோக்களைப் பார்க்க வேண்டியிருக்கும், மேடையிலிருந்து சொல்லப்படுகிற ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாகக் கேட்டு புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.”

 மாநாடு நடக்கிற ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதனால், ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற மாதிரி ஆடியோ/வீடியோ கருவிகளைப் பொருத்த வேண்டியிருக்கும். எந்தெந்த இடங்களில் மாநாடு நடக்கும் என்று முடிவான உடனே, மாநாட்டுக்கு வருகிறவர்களை எங்கெல்லாம் உட்கார வைக்கலாம் என்று எங்களுடைய கிளை அலுவலகங்களில் இருக்கும் பிராட்காஸ்டிங் டிபார்ட்மண்ட் முடிவு செய்யும். அதற்காக, அந்த மாநாட்டுக்கு எத்தனை பேர் வருவார்கள், அந்த மன்றத்தில் எத்தனை பேர் உட்கார முடியும் என்பதையெல்லாம் அவர்கள் யோசித்துப் பார்ப்பார்கள். அதன்பிறகு, ஸ்பீகர்களையும், வீடியோ ஸ்கிரீன்களையும் எங்கெல்லாம் வைக்கலாம், எப்படி அவை எல்லாவற்றையும் இணைக்கலாம், மாநாட்டுக்கு வருகிற எல்லாரும் நிகழ்ச்சியைத் தெளிவாகப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் என்னென்ன கருவிகள் தேவைப்படும் என்றெல்லாம் சகோதரர்கள் கணக்குப் போடுவார்கள்.

லோக்கல் பிராட்காஸ்டிங் டிபார்ட்மெண்டில் (LBD) இருக்கும் சகோதரர்கள் கவனமாக தயாரிக்கப்பட்ட ஒரு திட்டத்தை பின்பற்றி வேலை செய்கிறார்கள்

 ஒரு மாநாட்டு நிகழ்ச்சி ஒரே சமயத்தில் நிறைய மொழிகளில் கொடுக்கப்பட்டால், அதில் பயன்படுத்தப்படும் ஆடியோ/வீடியோ கருவிகள் இன்னும் சிக்கலாக இருக்கும். ஒரு நிகழ்ச்சியை இன்னொரு மொழியில் மொழிபெயர்ப்பதற்கு, முதலில் அதன் ஆடியோவையும் வீடியோவையும் மொழிபெயர்ப்பு செய்பவர் பார்க்க வேண்டும். அவர் மொழிபெயர்த்து சொல்வதை அந்த மொழி பேசுபவர்களுக்கு ஒரு தனி ரேடியோ சேனல் மூலமாக அனுப்ப வேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு ஒரு விசேஷ சாஃப்ட்வேரை நாங்கள் பயன்படுத்துகிறோம். இதன் மூலமாக வந்திருக்கும் எல்லாராலும் ஒரே சமயத்தில் தங்களுடைய மொழிகளில் இருக்கும் ஆடியோவையும் வீடியோவையும் பார்க்க முடியும். இப்படி ஒரே சமயத்தில் 8 வித்தியாசமான மொழிகளில் செய்ய முடியும். “இந்த கருவிகள் எல்லாம் ரொம்ப சிக்கலானது, இதைப் பயன்படுத்துவதற்கு வாலண்டியர்களுக்கு நிறைய பயிற்சி தேவைப்படுகிறது” என்று டேவிட் சொல்கிறார்.

 பெரும்பாலான கிளை அலுவலகங்களில், ஒவ்வொரு வருஷமும் மாநாட்டில் பயன்படுத்துவதற்கு தேவையான ஆடியோ/வீடியோ கருவிகள் இருக்கின்றன. அந்தமாதிரி இடங்களில், ஒவ்வொரு கருவியையும் மாநாடு நடக்கும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டுபோவதற்கு சகோதரர்கள் ஏற்பாடு செய்வார்கள். அமெரிக்க கிளை அலுவலகம், மாநாடு நடக்கும் இடங்களுக்கு இந்த மாதிரி கருவிகளைக் கொண்டுபோவதற்காக மட்டும் ஒவ்வொரு வருஷமும் 2 லட்சம் டாலர்களை a செலவு செய்கிறது. புது கருவிகளை வாங்கி அதைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவுகளோடு ஒப்பிடும்போது இது குறைவுதான். கனடாவில் நடந்த ஒரு மாநாட்டில் ஆடியோ/வீடியோ டிபார்ட்மண்ட்டை மேற்பார்வை செய்த ஸ்டீவன் இப்படிச் சொல்கிறார்: “எங்களுடைய ஆடியோ/வீடியோ டீம்-ல் இருந்தவர்கள், ஒவ்வொரு நட், போல்ட், வயர் என எல்லாவற்றையும் சரியாக கணக்குப் பார்த்து வைத்தார்கள், அதையெல்லாம் பத்திரமாக பயன்படுத்தினார்கள், பாதுகாப்பாக எடுத்து வைத்தார்கள், அடுத்த இடத்துக்கு போவதற்கு தயாராக வைத்தார்கள். இதையெல்லாம் செய்ய தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தார்கள்.”

கருவிகளை வாங்குவதும் அதைப் பராமரிப்பதும்

 ஆடியோ/வீடியோ கருவிகளை வாடகைக்கு எடுப்பதற்கு நிறைய செலவாகும். அவை தரமாகவும் இருக்காது, சரியாக பராமரித்திருக்கவும் மாட்டார்கள். அதனால், பெரும்பாலும் நம்முடைய கருவிகளை நமக்கென சொந்தமாக வாங்கிக்கொள்கிறோம். அரங்குகளில் வீடியோவைக் காட்டுவதற்கு பயன்படுத்துகிற ஐந்துக்கு மூன்று மீட்டர் (16-க்கு 10 அடி) அளவில் இருக்கும் ஒரு LED வீடியோ திரையின் விலை, இன்றைய நிலவரப்படி 24,000 டாலர்கள். 15 மீட்டர் (50 அடி) அளவுக்கு இருக்கிற வெறும் ஒரு மைக் கேபிளின் விலை, 20 டாலர்கள். அதனால் பிராட்காஸ்டிங் டிபார்ட்மண்ட், பர்சேஸிங் டிபார்ட்மண்ட்டோடு சேர்ந்து வேலை செய்து, ஒரு கருவியை வாங்குவதற்கு முன்பு “செலவைக் கணக்கு” பார்க்கிறார்கள். (லூக்கா 14:28) உதாரணத்துக்கு, இந்த கருவி எத்தனை பேருக்கு பிரயோஜனமாக இருக்கும்? தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு புது கருவியை வாங்குவதுதான் சரியாக இருக்குமா? அதை வைப்பதற்கு போதுமான இடம் இருக்கிறதா? அதைப் பராமரிப்பதற்கு தேவையான கருவிகளும், பயிற்சி பெற்ற வாலண்டியர்களும் இருக்கிறார்களா? என்றெல்லாம் யோசித்துப் பார்க்கிறார்கள்.

 ஆடியோ/வீடியோ கருவிகளை ரொம்ப நாட்களுக்கு பயன்படுத்தவும், நன்கொடை பணத்தை மிச்சப்படுத்தவும், அந்த கருவிகளெல்லாம் நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை அடிக்கடி சரிபார்த்து வைத்துக்கொள்வோம். இந்த கருவிகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டுபோவதற்கு, உறுதியாக இருக்கிற பெரிய பெரிய பெட்டிகளைப் பயன்படுத்துகிறோம். இந்தப் பெட்டிகளையும் அவ்வப்போது சரிபார்த்து வைத்துக்கொள்வோம்.

ஆடியோ/வீடியோ கருவிகளைப் பராமரித்து, பழுதுபார்த்து வைப்பதால் அவற்றை ரொம்ப நாட்களுக்குப் பயன்படுத்த முடிகிறது

தெளிவான நிகழ்ச்சியால் கொடுக்கப்பட்ட சிறந்த சாட்சி

 நம்முடைய மாநாட்டு நிகழ்ச்சிகளின் தரத்தைப் பார்த்து யெகோவாவின் சாட்சிகளாக இல்லாதவர்கள் அசந்து போயிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, இந்த உலகத்தின் சிறந்த பிராட்காஸ்டிங் கம்பெனிகள் ஒன்றில் வேலை செய்யும் ஒருவர் நம்முடைய மாநாட்டுக்கு வந்திருந்தார். நம்முடைய நிகழ்ச்சிகளையும் அதன் தரத்தையும் பார்த்து அவர் ஆச்சரியப்பட்டார். அந்த நபர் சொன்ன விஷயங்களைப் பற்றி, அந்த மாநாட்டு நிகழ்ச்சியில் ஆடியோ/வீடியோ கருவிகளைப் பொருத்துவதற்கும் அதை இயக்குவதற்கும் உதவி செய்த சகோதரர் ஜோனத்தான் இப்படிச் சொன்னார்: “இதில் வேலை செய்கிற யாருமே இந்தத் துறையில் பயிற்சிப் பெற்றவர்கள் கிடையாது, வாலண்டியர்கள்தான் என்று தெரிந்துகொண்டபோது அவர் ரொம்ப அசந்துபோய்விட்டார். இந்த கருவிகளையெல்லாம் பொருத்துவதற்கு அவருடைய கம்பனியில் வேலை செய்பவர்களுக்கு குறைந்தது 5 நாட்களாவது ஆகுமாம். ஆனால், நாம் அவற்றை ஒன்றரை நாளில் முடித்துவிட்டோம்.” இன்னொரு இடத்தில் நடந்த மாநாட்டில், அந்த மன்றத்தின் மேனேஜர் இப்படிச் சொன்னார்: “இதுவரைக்கும் ஆடியோ/வீடியோ துறையில் பயிற்சி பெற்ற நிறைய பேர் இங்கே வேலை செய்திருக்கிறார்கள். ஆனால், யாருமே இந்தளவுக்கு திறமையாக வேலை செய்து நான் பார்த்ததில்லை!”

சகோதர சகோதரிகள் சந்தோஷமாக ஒரு மாநாட்டு நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள்

 மாநாட்டில் பயன்படுத்தப்படும் ஆடியோ/வீடியோ கருவிகள் உங்களுக்கு எப்படி பிரயோஜனமாக இருந்திருக்கிறது? இங்கிலாந்தில் வாழும் டேவிட் சொல்வதுபோல் நீங்கள் ஒருவேளை உணரலாம். “எனக்கு இப்போது 88 வயதாகிறது. என் வாழ்க்கையில் இதுவரை நிறைய மாநாடுகளில் நான் கலந்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் மாநாடுகளில் சொல்லப்படும் விஷயங்களை கவனச்சிதறல் இல்லாமல் நன்றாக கவனிக்க முடிகிறது. அங்கே காட்டப்படும் அழகான வீடியோக்களுக்காக ரொம்ப நன்றி. மொத்த நிகழ்ச்சியும் இப்போது ரொம்ப சீக்கிரமாக முடிந்துவிடுகிறது. அங்கே சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் ஒரே மாதிரி தெளிவாக இருக்கிறது” என்று டேவிட் சொன்னார். நைஜீரியாவில் வாழும் மைக்கேல் இப்படிச் சொல்கிறார்: “மாநாட்டில் சொல்லப்படும் விஷயங்களைக் கேட்பதற்கும் வீடியோக்களைப் பார்ப்பதற்கும் நம்முடைய சகோதரர்கள் இப்போதெல்லாம் கஷ்டப்பட வேண்டியதில்லை. நிகழ்ச்சிகளை அவர்களால் நன்றாக கவனிக்க முடிகிறது. அவர்களுடைய ஆர்வமும் குறையாமல் இருக்கிறது.”

 இந்த வருஷம் நடக்கிற ‘நல்ல செய்தியை அறிவியுங்கள்!’ என்ற மண்டல மாநாட்டிலும் விசேஷ மாநாட்டிலும் கலந்துகொள்ளும்போது, அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் எவ்வளவு முயற்சி எடுத்திருப்பார்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். donate.dan124.com மூலமாகவும் மற்ற வழிகளிலும் நீங்கள் தாராளமாக கொடுக்கிற நன்கொடைகளுக்கு நாங்கள் ரொம்ப நன்றி சொல்கிறோம். அதனால்தான் இதெல்லாம் நடக்கிறது. ரொம்ப ரொம்ப நன்றி!

a இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா தொகையும் அமெரிக்க டாலர் மதிப்பில் உள்ளது.