குடும்ப வன்முறையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவி
“பெண்களுக்கு எதிரான வன்முறை உலகம் முழுதும் நடக்கிறது. அது ஒரு கொள்ளைநோய் மாதிரி எல்லா இடத்திலும் பரவியிருக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த ஏதாவது செய்தே ஆக வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. கிட்டத்தட்ட 30% பெண்கள் அவர்களுடைய காதலனிடமிருந்தோ கணவனிடமிருந்தோ அடி உதையை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது பாலியல் தொல்லைகளை அனுபவிக்கிறார்கள் என்றும் அந்த அமைப்பு சொன்னது. ஐ.நா. வெளியிட்ட இன்னொரு அறிக்கையில், சமீப காலத்தில் ஒரு வருஷத்தில் மட்டும் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 137 பெண்கள் அவர்களுடைய துணையாலோ அல்லது குடும்பத்தில் உள்ள மற்றவர்களாலோ கொல்லப்படுகிறார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. a
இந்த மாதிரி அறிக்கைகளிலிருந்து குடும்ப வன்முறை எவ்வளவு பெரிய பிரச்சினை என்று தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் உடலளவிலும் மனதளவிலும் எவ்வளவு வலி வேதனையை அனுபவிக்கிறார்கள் என்று யாருக்கும் தெரிவதில்லை.
குடும்ப வன்முறையால் நீங்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்களா? அல்லது அப்படிக் கஷ்டப்படுகிற யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? அப்படியென்றால், பைபிளிலிருந்து சொல்லப்பட்டுள்ள இந்தக் குறிப்புகள் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்யும்.
இது உங்கள் தவறல்ல
பைபிள் என்ன சொல்கிறது: “நாம் ஒவ்வொருவரும் நம்முடைய செயல்களுக்காகக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்.”—ரோமர் 14:12.
ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: செய்கிற தவறுக்கு அவரவர்தான் பொறுப்பு.
மனைவிமீது அன்பு காட்ட வேண்டியது கணவருடைய பொறுப்பு, மனைவியை அவர் கொடுமைப்படுத்தக் கூடாது. (கொலோசெயர் 3:19) அதனால், ‘நான் உன்னை கொடுமைப்படுத்துவதற்கு நீதான் காரணம்’ என்று உங்கள் துணை உங்களிடம் சொன்னால் தப்பு அவர்மேல்தான்.
சிலசமயம், துணையைக் கொடுமைப்படுத்தும் ஒருவர் ஏதாவது மனநோயினால் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கலாம். அல்லது குடும்பத்தில் இந்த மாதிரி கொடுமைகளைப் பார்த்து வளர்ந்தவராக இருக்கலாம். அல்லது அளவுக்கு அதிகமாகக் குடிப்பவராக இருக்கலாம். எப்படியிருந்தாலும் சரி, அவர் உங்களைக் கொடுமைப்படுத்துவதற்கு நிச்சயம் கடவுளிடம் கணக்குக் கொடுக்க வேண்டும். அவரைத் திருத்திக்கொள்ள வேண்டியது அவருடைய பொறுப்பு.
உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது: “ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்.”—நீதிமொழிகள் 15:22.
ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: ஆபத்து வருவதுபோல் தெரிந்தால் அல்லது என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தால் மற்றவர்களிடம் உதவி கேளுங்கள்.
ஏன் மற்றவர்களுடைய உதவி உங்களுக்குத் தேவை? குடும்ப வன்முறை சிக்கலான ஒரு பிரச்சினை. சில விஷயங்களைப் பொறுத்தவரையில் என்ன செய்தால் சரியாக இருக்கும் என்று முடிவெடுப்பது ஒருவேளை உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். உதாரணத்துக்கு,
உங்களுடைய பாதுகாப்பு
பிள்ளைகளுடைய வாழ்க்கை
உங்களுடைய பண தேவைகள்
உங்கள் துணையை நீங்கள் இன்னமும் நேசிப்பது
ஒருவேளை உங்கள் துணை திருந்தி வந்தால் என்ன செய்வது
இந்த மாதிரி விஷயங்களில் முடிவெடுப்பது உங்களுக்கு ஒருவேளை குழப்பமாக இருக்கலாம். அப்போது நீங்கள் யாரிடம் உதவி கேட்பீர்கள்?
நீங்கள் நம்பும் ஒரு நண்பரிடமிருந்து அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரிடமிருந்து உங்களுக்குத் தேவையான உதவி கிடைக்கும். உங்கள்மேல் உண்மையாகவே அக்கறையாக இருக்கும் ஒருவரிடம் பேசும்போது இதை சமாளிக்க உங்களுக்குத் தெம்பு கிடைக்கும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிற சேவை அமைப்புகளிடமிருந்தும் உங்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கலாம். இந்த மாதிரி சேவை அமைப்புகளில் வேலை செய்கிறவர்கள், உங்களைப் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டுமென்று சொல்லிக்கொடுப்பார்கள். ஒருவேளை உங்கள் துணை அவருடைய தவறைப் புரிந்துகொண்டு, திருந்த நினைத்தால், அவர் என்ன செய்ய வேண்டுமென்று அவருக்கும் இந்தச் சேவை அமைப்பில் இருப்பவர்கள் சொல்லிக்கொடுப்பார்கள்.
மற்ற அவசரகால உதவிகளும் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால் இவர்கள் உடனே உதவி செய்வார்கள். இவர்கள் ஒருவேளை டாக்டராகவோ, நர்ஸாகவோ அல்லது இந்த மாதிரியான துறைகளில் பயிற்சிப் பெற்ற ஒருவராகவோ இருக்கலாம்.
நீங்கள் தனியாகப் போராட வேண்டியதில்லை
பைபிள் என்ன சொல்கிறது: “உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா b இருக்கிறார். மனம் நொந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்.”—சங்கீதம் 34:18.
ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: உங்களுக்கு உதவி செய்ய கடவுள் இருக்கிறார்.
யெகோவா உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். (1 பேதுரு 5:7) நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள், உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதையெல்லாம் அவர் புரிந்துகொள்கிறார். அவருடைய வார்த்தையாகிய பைபிளைப் பயன்படுத்தி அவரால் உங்களுக்கு ஆறுதல் கொடுக்க முடியும். அவரிடம் ஜெபம் செய்ய சொல்லி அவரே உங்களைக் கூப்பிடுகிறார். அப்படி ஜெபம் செய்யும்போது, உங்கள் சூழ்நிலையைச் சமாளிக்க தேவையான ஞானத்தையும் பலத்தையும் நீங்கள் அவரிடம் கேட்கலாம்.—ஏசாயா 41:10.
குடும்ப வன்முறைக்கு முடிவு
பைபிள் என்ன சொல்கிறது: “ஒவ்வொருவரும் தங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் குடியிருப்பார்கள். அவர்களைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்.”—மீகா 4:4, அடிக்குறிப்பு.
ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: ரொம்ப சீக்கிரத்தில் எந்த வீட்டிலும் சண்டை சச்சரவு இருக்காது, எல்லாரும் சமாதானமாக வாழ்வார்கள் என்று பைபிள் சொல்கிறது.
நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் யெகோவா தேவனால் மட்டும்தான் முழுமையான, நிரந்தரமான தீர்வைக் கொண்டுவர முடியும். “[மக்களுடைய] கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது” என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 21:4) அதோடு அந்தச் சமயத்தில், முன்பு நாம் பட்ட கஷ்டங்கள் நம் ஞாபகத்துக்குக்கூட வராது. ஏனென்றால் நம் மனதில் நல்ல நினைவுகள் மட்டும்தான் இருக்கும். (ஏசாயா 65:17) இப்படிப்பட்ட சமாதானமான ஒரு எதிர்காலத்தைப் பற்றித்தான் பைபிள் சொல்கிறது.