விழிப்புடன் இருங்கள்!
செயற்கை அறிவு—வரமா சாபமா?—பைபிள் என்ன சொல்கிறது?
கொஞ்ச நாட்களாகவே, உலகத் தலைவர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் எல்லாரும் செயற்கை அறிவைப் (Artificial intelligence) பற்றி ரொம்ப பெருமையாக பேசுகிறார்கள். அது ரொம்ப அற்புதமானது என்று பாராட்டுகிறார்கள். அதேநேரம், அதை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக கவலைப்படுகிறார்கள்.
“இன்றிருக்கும் கண்டுபிடிப்புகளிலேயே ரொம்ப அற்புதமானது இந்த செயற்கை அறிவுதான். அதற்கு மக்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும் சக்தி இருக்கிறது. . . . அதேநேரம் நம் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் சக்தியும் அதற்கு இருக்கிறது. அதனால் மனிதர்களுடைய அடிப்படை உரிமைகளிலும் தனிப்பட்ட விஷயங்களிலும் மூக்கை நுழைத்து மக்களாட்சி மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும் உடைத்துப்போட முடியும்.“—கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி, மே 4, 2023.
“செயற்கை அறிவை வைத்து மருத்துவ துறையில் நிறைய சாதிக்க முடியும் என்பது உண்மைதான். அதேநேரம், இதனால் மனிதர்களுடைய உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் பாதிப்பு வரும்” என்று டாக்டர் ஃப்ரெட்ரிக் ஃபெடெர்ஸ்பெலின் தலைமையில் சர்வதேச மருத்துவர்கள் குழுவும் உடல்நல நிபுணர்கள் குழுவும் எழுதியிருக்கிறார்கள். மே 9, 2023-ல் BMJ Global Health-ல் வந்த ஒரு கட்டுரையில் இது வெளிவந்தது. a
“செயற்கை அறிவை வைத்து ஏற்கெனவே தப்பான தகவல்களை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். செயற்கை அறிவால் சீக்கிரத்தில் நிறையப்பேருக்கு வேலையும் போய்விடும். இதனால் எதிர்காலத்தில் மக்களுக்குள் மனிதாபிமானமே இல்லாமல் போய்விடும் என்று தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் நிறையப்பேர் கவலைப்படுகிறார்கள்.”—தி நியூ யார்க் டைம்ஸ், மே 1, 2023.
செயற்கை அறிவு வரமா சாபமா என்று காலம்தான் பதில் சொல்லும். ஆனால், பைபிள் என்ன சொல்கிறது?
மனிதர்களின் கண்டுபிடிப்பை ஏன் நம்பமுடிவதில்லை?
தொழில்நுட்பத்தில் மனிதர்களுடைய கண்டுபிடிப்புகள் எல்லாம் எப்போதுமே வரமாகத்தான் இருக்கும் என்று ஏன் சொல்ல முடிவதில்லை? அதற்கான காரணத்தை பைபிள் சொல்கிறது.
1. ஒரு விஷயத்தை மனிதர்கள் நல்ல எண்ணத்தோடு செய்தாலும், அதனால் மோசமான விளைவுகளும் வரும் என்று அவர்கள் முன்பே யோசிப்பதில்லை.
“மனுஷனுக்குச் சரியென்று தோன்றுகிற வழி உண்டு. ஆனால், அது கடைசியில் மரணத்தில்தான் கொண்டுபோய்விடும்.”—நீதிமொழிகள் 14:12.
2. ஒருவருடைய கண்டுபிடிப்பை மற்றவர்கள் சரியாக பயன்படுத்துவதையோ தவறாக பயன்படுத்துவதையோ அவரால் கட்டுப்படுத்த முடியாது.
“எனக்குப் பின்னால் வருகிறவனுக்குத்தானே அதையெல்லாம் (நான் செய்ததையெல்லாம்) விட்டுவிட்டுப் போக வேண்டும்! அவன் ஞானமுள்ளவனாக இருப்பானா முட்டாளாக இருப்பானா என்று யாருக்குத் தெரியும்? எப்படியிருந்தாலும், சூரியனுக்குக் கீழே நான் ஞானத்தோடு பாடுபட்டுச் சம்பாதித்த எல்லாவற்றையும் அவன்தான் ஆண்டு அனுபவிப்பான்.”—பிரசங்கி 2:18, 19.
இப்படி, எதுவுமே நிரந்தரமல்ல. அதனால்தான் நம்மை படைத்தவருடைய உதவி நமக்குத் தேவை.
எதைத்தான் நம்புவது
மனிதர்களாலோ மனிதர்களுடைய கண்டுபிடிப்புகளாலோ, இந்த பூமியையும் மக்களையும் ஒட்டுமொத்தமாக அழித்துவிட முடியாது. அப்படி அழிக்க விடமாட்டேன் என்று நம்மை படைத்தவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்.
“பூமி என்றென்றும் நிலைத்திருக்கிறது.”—பிரசங்கி 1:4.
“நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”—சங்கீதம் 37:29.
நமக்கு சந்தோஷமான பாதுகாப்பான எதிர்காலத்தை கொடுக்க, நம்மை படைத்தவர் பைபிள் மூலமாக நமக்கு வழிகாட்டுகிறார். இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று இன்னும் தெரிந்துகொள்ள, “நிறைவான வாழ்க்கைக்கு ஒரு நல்ல வழிகாட்டி இருக்கிறதா?”, “சந்தோஷப் பாதையில் செல்ல—நம்பிக்கை” என்ற கட்டுரைகளைப் பாருங்கள்.
a ஃப்ரெட்ரிக் ஃபெடெர்ஸ்பெல், ரூத் மிச்சல், ஆஷா அசோகன், கார்லஸ் உமானா மற்றும் டேவிட் மெக்காய் எழுதின “செயற்கை அறிவு மனிதர்களுடைய உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து” என்ற கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது.