விழிப்புடன் இருங்கள்!
போர்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?—பைபிள் என்ன சொல்கிறது?
”பதட்டத்தையும் ஆபத்தையும் குறைக்க வேண்டிய காலம் இது. நம்மைநாமே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய சமயம் இது“ என்று இஸ்ரேல் மீதான ஈரானின் நேரடித் தாக்குதலைக் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ-குட்டரெஸ் ஏப்ரல் 13, 2024-ல் சொன்னார்.
போர்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன, மத்தியக் கிழக்கில் மட்டுமல்ல, உலகம் முழுவதும்!
”இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு, வன்முறை தாக்குதல்கள் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன, 200 கோடி மக்கள், அதாவது நான்கில் ஒருவர், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.“—ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில், ஜனவரி 26, 2023.
இஸ்ரேல், காசா, சீரியா, அஜர்பைஜான், உக்ரைன், சூடான், எத்தியோப்பியா, நைஜர், மியான்மர், ஹெய்டி ஆகிய இடங்களில் வன்முறை தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. a
இந்தப் போர்கள் எப்போது முடிவுக்கு வரும்? உலகத் தலைவர்களால் சமாதானத்தை கொண்டுவர முடியுமா? பைபிள் என்ன சொல்கிறது?
உலகெங்கும் போர்
இன்று உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிற போர்கள், சீக்கிரத்தில் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதற்கு ஒரு அடையாளம். இந்தப் போர்கள் நம்முடைய காலப்பகுதியைப் பற்றி பைபிள் சொன்ன தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகின்றன. நம்முடைய காலப்பகுதியை ‘இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்’ என்று பைபிள் சொல்கிறது.—மத்தேயு 24:3.
”போர் முழக்கங்களையும் போர்ச் செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள்; . . . . ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும்.”—மத்தேயு 24:6, 7.
இன்று நடக்கும் போர்கள் எப்படி பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள ”கடைசி நாட்களின் அடையாளம் என்ன?“ என்ற ஆங்கில கட்டுரையை வாசியுங்கள்.
போர்களுக்கு எல்லாம் முடிவுகட்டும் போர்
வன்முறை தாக்குதல்களுக்கு முடிவு வரும் என்று பைபிள் முன்னறிவிக்கிறது. அது எப்படி நடக்கும்? மனிதர்கள் எடுக்கிற முயற்சிகளால் கிடையாது. அதற்குப் பதிலாக “சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும்” அர்மகெதோன் போர் இன்று நடக்கும் போர்களுக்கு முடிவுகட்டும். (வெளிப்படுத்துதல் 16:14, 16) இந்தப் போருக்குப் பின்பு, மனிதர்கள் எப்போதும் சமாதானமாக வாழ்வார்கள் என்ற கடவுளுடைய வாக்குறுதி நிறைவேறும்.—சங்கீதம் 37:10, 11, 29.
போர்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க கடவுள் கொண்டு வரப்போகிற போரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ”அர்மகெதோன் போர் என்றால் என்ன?“ என்ற கட்டுரையை வாசியுங்கள்.
a ACLED மோதல் குறியீடு, “உலகம் முழுவதும் வன்முறை தாக்குதல்களை வரிசைப்படுத்துதல்,” ஜனவரி 2024