Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இந்த உலகத்துக்கு முடிவு வரப்போகிறதா?

இந்த உலகத்துக்கு முடிவு வரப்போகிறதா?

உலக முடிவைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருப்பது ஒருவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். (1 யோவான் 2:17) மனித இனத்துக்கு வரப்போகிற முடிவைப் பற்றித்தான் அது சொல்கிறதா? இந்தப் பூமி உயிர்களே இல்லாத ஒரு இடமாக ஆகிவிடுமா அல்லது முழுமையாக அழிக்கப்படுமா?

இல்லை என்பதுதான் பைபிள் தரும் பதில்!

எது முடிவுக்கு வராது?

மனித இனம்

பைபிள் என்ன சொல்கிறது? கடவுள் “[பூமியை] காரணம் இல்லாமல் படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார்.”​—ஏசாயா 45:18.

பூமி

பைபிள் என்ன சொல்கிறது? “ஒரு தலைமுறை போகிறது, இன்னொரு தலைமுறை வருகிறது. ஆனால், பூமி என்றென்றும் நிலைத்திருக்கிறது.”​—பிரசங்கி 1:4.

இதன் அர்த்தம் என்ன? இந்தப் பூமி ஒருபோதும் அழியாது... அதில் மக்கள் எப்போதுமே குடியிருப்பார்கள்... என்று பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், உலக முடிவு எதைக் குறிக்கிறது?

யோசித்துப் பாருங்கள்: இந்த உலகத்துக்கு வரப்போகிற முடிவை, நோவா காலத்தில் நடந்த சம்பவத்தோடு பைபிள் ஒப்பிடுகிறது. அந்தச் சமயத்தில், “பூமியில் எங்கு பார்த்தாலும் மனுஷர்கள் வன்முறையில்” ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். (ஆதியாகமம் 6:13) ஆனால், நோவா நல்லவராக இருந்தார். அதனால், அவரையும் அவருடைய குடும்பத்தையும் கடவுள் பாதுகாத்தார். கெட்ட மக்களைப் பெரிய வெள்ளத்தால் அழித்தார். “அப்போது இருந்த உலகம் பெரிய வெள்ளத்தால் அழிந்தது” என்று பைபிள் சொல்கிறது. (2 பேதுரு 3:6) அது உலகத்துக்கு வந்த ஒரு முடிவாக இருந்தது. ஆனால், எது அழிந்தது? இந்தப் பூமி அல்ல, பூமியில் இருந்த கெட்ட மக்கள்தான்! அப்படியென்றால், இந்த உலகத்தின் முடிவைப் பற்றி பைபிள் சொல்லும்போது, இந்தப் பூமியின் அழிவை அது குறிப்பதில்லை. பூமியில் இருக்கிற கெட்ட மக்களுக்கும் அவர்கள் ஏற்படுத்திய அமைப்புகளுக்கும் வரும் முடிவைத்தான் அது குறிக்கிறது.

எது முடிவுக்கு வரும்?

பிரச்சினைகளும் அக்கிரமங்களும்

பைபிள் என்ன சொல்கிறது? “இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது. ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”​—சங்கீதம் 37:10, 11.

இதன் அர்த்தம் என்ன? நோவாவின் காலத்தில் வந்த வெள்ளம், அக்கிரமத்தை அடியோடு ஒழித்துக்கட்டவில்லை. கெட்ட மக்களால் திரும்பவும் எல்லாருடைய வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. ஆனால், சீக்கிரத்தில் அதற்குக் கடவுள் முடிவுகட்டுவார். பைபிளில் ஏற்கெனவே பார்த்தபடி, அப்போது “பொல்லாதவர்கள் [அதாவது, அக்கிரமம் செய்கிறவர்கள்] யாருமே இருக்க மாட்டார்கள்.” கடவுள் தன்னுடைய அரசாங்கத்தின் மூலம் அவர்களுக்கு முடிவுகட்டுவார். இந்த அரசாங்கம், பரலோகத்திலிருந்து முழு பூமியையும் ஆட்சி செய்யும்போது, கடவுளுக்குக் கீழ்ப்படிகிற மக்கள் மட்டுமே பூமியில் இருப்பார்கள்.

யோசித்துப் பாருங்கள்: இன்று பூமியை ஆட்சி செய்கிறவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்வார்களா? இல்லை, அதை முட்டாள்தனமாக எதிர்ப்பார்கள் என்றுதான் பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 2:2) அதனால் என்ன நடக்கும்? கடவுளுடைய அரசாங்கம் மனித அரசாங்கங்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு, “அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்.” (தானியேல் 2:44) ஆனால், மனித ஆட்சிக்கு ஏன் முடிவு தேவைப்படுகிறது?

மனித ஆட்சிக்கு முடிவு தேவை

பைபிள் என்ன சொல்கிறது? “தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் [மனிதனுக்கு] இல்லை.”​—எரேமியா 10:23.

இதன் அர்த்தம் என்ன? தங்களையே ஆட்சி செய்துகொள்ளும் விதத்தில் மனிதர்கள் படைக்கப்படவில்லை. மக்களை ஆட்சி செய்யும் விஷயத்திலும், அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் விஷயத்திலும் தங்களுடைய பொறுப்பை மனிதர்களால் முழுமையாகச் செய்ய முடிவதில்லை.

யோசித்துப் பாருங்கள்: எந்தவொரு அரசாங்கத்தாலும் “வறுமை, பசி பட்டினி, நோய், இயற்கைப் பேரழிவு, போர், அல்லது வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை” என்று பிரிட்டானிக்கா அக்கடெமிக் என்ற ஒரு ஆராய்ச்சிப் புத்தகம் சொல்கிறது. “சிலர் . . . இந்த முழு உலகத்தையும் ஒரே அரசாங்கம் ஆட்சி செய்தால் அந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கொண்டுவர முடியுமென்று நம்புகிறார்கள்” என்றும் அது சொல்கிறது. எல்லா அரசாங்கங்களும் ஒன்றுசேர்ந்தால்கூட அவற்றால் அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. ஏனென்றால், ஆட்சி செய்கிறவர்களும் எல்லாரையும் போல தவறு செய்யும் இயல்புள்ளவர்கள்தான். கடவுளுடைய அரசாங்கத்துக்கு மட்டுமே இந்த உலகத்திலுள்ள எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான சக்தி இருக்கிறது.

அதனால், இந்த உலகத்தின் முடிவைப் பற்றி, அதாவது இந்த மோசமான உலகத்தின் முடிவைப் பற்றி, பைபிள் சொல்வதை நினைத்து நல்ல மக்கள் பயப்பட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, அந்த முடிவை எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கலாம். ஏனென்றால், மனிதர்களால் நாசமாக்கப்பட்ட இந்தப் பூமியைப் புத்தம்புது பூமியாகக் கடவுள் மாற்றப்போகிறார்!

இதெல்லாம் எப்போது நடக்கும்? இதற்கு பைபிள் தரும் பதிலை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.