உலக முடிவு எப்போது? இயேசு என்ன சொன்னார்?
உலக முடிவைப் பற்றி பைபிள் சொல்வது, இந்தப் பூமிக்கோ மனித இனத்துக்கோ வரும் முடிவைக் குறிப்பதில்லை என்பதை முந்தின கட்டுரையில் பார்த்தோம். ஊழல் நிறைந்த மனித அமைப்புகளுக்கும் அதை ஆதரிக்கிறவர்களுக்கும் வரும் முடிவைத்தான் அது குறிக்கிறது. ஆனால், அது எப்போது நடக்கும் என்று பைபிள் சொல்கிறதா?
முடிவைப் பற்றி இயேசு சொன்ன இரண்டு விஷயங்களைக் கவனியுங்கள்:
“விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது.”—மத்தேயு 25:13.
“இதெல்லாம் எப்போது நடக்குமென்று உங்களுக்குத் தெரியாததால் எச்சரிக்கையாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்.”—மாற்கு 13:33.
இந்த மோசமான உலக நிலைமைக்கு எப்போது முடிவு வரும் என்று இந்தப் பூமியில் இருக்கிற யாருக்குமே தெரியாது. ஆனால், அது ‘எப்போது நடக்கும்’ என்று கடவுளுக்குத் தெரியும். ‘அந்த நாளையும்’ ‘அந்த நேரத்தையும்’ அவர் குறித்துவிட்டார். (மத்தேயு 24:36) அப்படியென்றால், முடிவு எப்போது வரும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வழியே இல்லையா? அப்படியில்லை. முடிவு நெருங்கிவிட்டது என்பதைச் சில சம்பவங்களை வைத்து கண்டுபிடிக்கலாம் என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார்.
உலக முடிவுக்கு அடையாளம்
இந்தச் சம்பவங்கள், உலக முடிவுக்கு அடையாளமாக இருக்கும் என்று இயேசு சொன்னார். “ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும், அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்களும் நிலநடுக்கங்களும் ஏற்படும்” என்று சொன்னார். (மத்தேயு 24:3, 7) பெரிய அளவில் பரவுகிற கொள்ளைநோய்களும் வரும் என்று சொன்னார். (லூக்கா 21:11) இயேசு முன்கூட்டியே சொன்ன இந்தச் சம்பவங்கள் எல்லாம் நடந்துகொண்டிருப்பதை உங்களால் பார்க்க முடிகிறதா?
இன்று மக்கள் போர்களால், பஞ்சத்தால், நிலநடுக்கங்களால், அடுத்தடுத்து வரும் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். உதாரணத்துக்கு, 2004-ல் இந்தியப் பெருங்கடலில் பயங்கரமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டபோது வந்த சுனாமியால் கிட்டத்தட்ட 2,25,000 பேர் இறந்துபோனார்கள். மூன்று வருஷங்களில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 69 லட்சம் பேர் இறந்துபோயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள், இந்த உலகத்தின் முடிவு நெருங்கிவிட்டது என்பதற்கான அடையாளம் என்று இயேசு சொன்னார்.
‘கடைசி நாட்கள்’
முடிவு வருவதற்கு முன் இருக்கும் காலப்பகுதியைத்தான் ‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (2 பேதுரு 3:3, 4) கடைசி நாட்களில், மக்களுடைய சுபாவம் படுமோசமாக இருக்கும் என்று 2 தீமோத்தேயு 3:1-5 சொல்கிறது. (“ உலக முடிவுக்கு முன்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) இன்றைக்கு மக்கள் சுயநலம் பிடித்தவர்களாக, பேராசை பிடித்தவர்களாக, கொடூரமானவர்களாக, ஒருவருக்கொருவர் அன்பு காட்டாதவர்களாக இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதுவும்கூட இந்த உலகத்தின் முடிவு ரொம்பச் சீக்கிரத்தில் வரப்போகிறது என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது.
இந்தக் கடைசி நாட்கள் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்? “கொஞ்சக் காலம்தான்” நீடிக்கும் என்று பைபிள் சொல்கிறது. அதன் பிறகு, “பூமியை நாசமாக்குகிறவர்களை” கடவுள் அழிப்பார்.—வெளிப்படுத்துதல் 11:15-18, அடிக்குறிப்பு; 12:12.
பூஞ்சோலைப் பூமி பக்கத்தில்!
இந்த மோசமான உலகத்துக்கு முடிவு கொண்டுவருவதற்கான நாளையும் நேரத்தையும் கடவுள் ஏற்கெனவே குறித்துவிட்டார். (மத்தேயு 24:36) ஆனாலும், ‘ஒருவரும் அழிந்துபோவதை’ கடவுள் விரும்புவதில்லை. (2 பேதுரு 3:9) அதனால், தன்னுடைய விருப்பம் என்ன என்று தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி வாழ்வதற்கான வாய்ப்பை மனிதர்களுக்குக் கடவுள் கொடுக்கிறார். ஏனென்றால், நாம் இந்த உலகத்தின் முடிவிலிருந்து தப்பித்து, புதிய உலகத்தில், அதாவது பூஞ்சோலைப் பூமியில், வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார்.
புதிய உலகத்தில் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுப்பதற்காக உலகம் முழுவதும் கடவுள் ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார். அதைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி, “உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும்” பிரசங்கிக்கப்படும். (மத்தேயு 24:14) எதிர்காலத்தைப் பற்றி பைபிள் சொல்கிற விஷயங்களை மக்களுக்குச் சொல்வதற்கும், கற்றுக்கொடுப்பதற்கும் உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் கோடிக்கணக்கான மணிநேரங்களைச் செலவிட்டிருக்கிறார்கள். முடிவு வருவதற்கு முன் இந்தப் பிரசங்க வேலை பூமி முழுவதும் நடக்கும் என்று இயேசு சொன்னார்.
மனித ஆட்சிக்கான நேரம் ஏறக்குறைய முடிந்துவிட்டது! ஆனால் சந்தோஷமான செய்தி என்னவென்றால், இந்த உலக முடிவிலிருந்து தப்பித்து, கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிற பூஞ்சோலைப் பூமியில் உங்களால் வாழ முடியும். அந்தப் புதிய உலகத்தில் வாழ நீங்கள் என்ன செய்யலாம் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
‘கடைசி நாட்களை’ பற்றி இயேசு முன்கூட்டியே சொன்னது நமக்கு எதிர்கால நம்பிக்கையைத் தருகிறது