பூஞ்சோலைப் பூமி அருகில்!
நல்ல மக்கள் என்றென்றும் வாழ வேண்டும் என்பதற்காகவே இந்தப் பூமியைக் கடவுள் படைத்தார். (சங்கீதம் 37:29) முதல் மனித ஜோடியான ஆதாம்-ஏவாளை அழகான ஏதேன் தோட்டத்தில் அவர் குடிவைத்தார். பூமியைப் பண்படுத்தி, பராமரிக்கிற பொறுப்பை அவர்களுக்கும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் அவர் கொடுத்தார்.—ஆதியாகமம் 1:28; 2:15.
ஆனால், கடவுள் நினைத்தபடி இன்றைக்கு இந்தப் பூமி இல்லை. அதற்காக, கடவுள் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ளவில்லை. இந்தப் பூமியைத் திரும்பவும் எப்படி ஒரு பூஞ்சோலையாக அவர் மாற்றுவார்? முந்தின கட்டுரைகளில் பார்த்தபடி, இந்தப் பூமியைக் கடவுள் அழிக்க மாட்டார். அதற்குப் பதிலாக, நல்ல மக்களை அதில் வாழவைப்பார். தன்னுடைய வாக்குறுதிகளைக் கடவுள் நிறைவேற்றும்போது பூமியில் நிலைமைகள் எப்படி இருக்கும்?
முழு பூமிக்கும் ஒரே அரசாங்கம்
சீக்கிரத்தில், கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்திலிருந்து மனிதர்களை ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்போது, பூமியில் சந்தோஷம் களைகட்டும். மனிதர்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருப்பார்கள். எல்லாருக்கும் நல்ல திருப்தியான வேலை இருக்கும். பூமியை ஆட்சி செய்வதற்கான பொறுப்பை இயேசு கிறிஸ்துவுக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார். இன்று இருக்கிற ஆட்சியாளர்களைப் போல் இல்லாமல், மக்களுக்கு எது நல்லதோ அதைத்தான் இயேசு செய்வார். அவர் அன்பாக ஆட்சி செய்வார். கனிவாக, கரிசனையாக, நியாயமாக நடந்துகொள்வார்.—ஏசாயா 11:4.
மக்களுக்கு இடையே ஒற்றுமை
புதிய பூமியில் மக்களுக்கு இடையே தேசம், இனம் என்ற எந்தப் பிரிவினையும் இல்லாமல், எல்லாரும் ஒற்றுமையாக வாழ்வார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 10) கடவுள்மீதும், மற்றவர்கள்மீதும் அன்பு காட்டுவார்கள். பூமியைப் பூஞ்சோலையாக மாற்ற வேண்டும் என்ற கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்ற அவர்கள் ஒன்றுசேர்ந்து உழைப்பார்கள்.—சங்கீதம் 115:16.
இதமான இயற்கை சூழல்
கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை ஆட்சி செய்யும்போது வெயில், மழை, குளிர், காற்று என எல்லாவற்றையும் கடவுள் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். (சங்கீதம் 24:1, 2) அதனால், இதமான சீதோஷ்ண நிலை (climate) இருக்கும். இயேசு பூமியில் இருந்தபோது, பயங்கரமான புயல் காற்றை வெறுமனே “உஷ்! அமைதியாக இரு!” என்று சொல்லி அடக்கினார். (மாற்கு 4:39, 41) இப்படி, தனக்குக் கடவுள் கொடுத்த சக்தி மூலமாக என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை இயேசு காட்டினார். பூமியை அவர் ஆட்சி செய்யும்போது இயற்கை பேரழிவுகளை நினைத்து யாருமே பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அதுமட்டுமல்ல, கடவுளுடைய அரசாங்கத்தில் மிருகங்களால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் வராது. அதேபோல மனிதர்களால் மிருகங்களுக்கும் சரி, சுற்றுச்சூழலுக்கும் சரி, எந்த ஆபத்தும் வராது.—ஓசியா 2:18.
முழு ஆரோக்கியம், ஏராளமான உணவு
எல்லாரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். யாருமே நோயால் கஷ்டப்பட மாட்டார்கள், வயதாகி சாகவும் மாட்டார்கள். (ஏசாயா 35:5, 6) ஏதேன் தோட்டத்தில் முதல் மனித ஜோடி அனுபவித்தது போன்ற அழகான, சுத்தமான சுற்றுச்சூழலை மக்கள் அனுபவிப்பார்கள். ஏதேன் தோட்டத்தில் விளைந்தது போல, புதிய உலகத்திலும் விளைச்சல் ஏராளமாக இருக்கும். அதனால், எல்லாருக்கும் தாராளமாக உணவு கிடைக்கும். (ஆதியாகமம் 2:9) கடவுளுடைய மக்களாக இருந்த பூர்வகால இஸ்ரவேலர்களைப் போல, பூஞ்சோலைப் பூமியில் வாழும் எல்லாரும் ‘திருப்தியாகச் சாப்பிடுவார்கள்.’—லேவியராகமம் 26:4, 5.
உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்
கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்யும்போது எல்லாரும் சமாதானமாக இருப்பார்கள். ஒருவரை ஒருவர் அன்பாக, நியாயமாக நடத்துவார்கள். அங்கே போர் இருக்காது. யாருமே அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த மாட்டார்கள். அன்றாடத் தேவைகளுக்கு யாரும் திண்டாட மாட்டார்கள். “ஒவ்வொருவரும் தங்கள் திராட்சைக் கொடியின் கீழும் அத்தி மரத்தின் கீழும் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களைப் பயமுறுத்த யாரும் இருக்க மாட்டார்கள்” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது.—மீகா 4:3, 4.
சொந்த வீடும், திருப்தியான வேலையும்
எல்லாருக்கும் சொந்தமாக வீடு இருக்கும். வீடு பறிபோய்விடுமோ என்ற பயம் யாருக்குமே இருக்காது. நாம் செய்கிற வேலைக்கு முழு பலன் கிடைக்கும். புதிய பூமியில் வாழ்கிறவர்களுடைய “கடின உழைப்பு வீண்போகாது” என்று பைபிள் சொல்கிறது.—ஏசாயா 65:21-23.
மிகச் சிறந்த கல்வி
“பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது. (ஏசாயா 11:9) புதிய உலகத்தில் வாழ்கிறவர்கள் நம் படைப்பாளரான யெகோவாவின் எல்லையில்லாத ஞானத்திலிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வார்கள். அவருடைய அற்புதமான படைப்புகளைப் பற்றியும் தெரிந்துகொள்வார்கள். ஆயுதங்களைச் செய்வதற்கோ மற்றவர்களுக்குக் கெடுதல் செய்வதற்கோ தங்களுடைய அறிவைப் பயன்படுத்த மாட்டார்கள். (ஏசாயா 2:4) அதற்குப் பதிலாக, மற்றவர்களோடு எப்படி சமாதானமாக வாழ்வது... பூமியை எப்படிப் பராமரிப்பது... என்பதையெல்லாம் கற்றுக்கொள்வதற்குத் தங்களுடைய அறிவைப் பயன்படுத்துவார்கள்.—சங்கீதம் 37:11.
முடிவில்லாத வாழ்க்கை
ஒவ்வொரு நாளும் நம்முடைய வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கடவுள் இந்தப் பூமியைப் பார்த்துப் பார்த்து உருவாக்கியிருக்கிறார். மனிதன் என்றென்றும் இந்தப் பூமியில் வாழ வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். (சங்கீதம் 37:29; ஏசாயா 45:18) அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக “மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார்.” (ஏசாயா 25:8) அப்போது, “மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:4) இந்த மோசமான உலகத்தின் அழிவிலிருந்து கடவுள் காப்பாற்றப்போகிற மக்களுக்கும், புதிய உலகத்தில் அவர் உயிரோடு எழுப்பப்போகிற கோடிக்கணக்கான மக்களுக்கும், சாவே இல்லாமல் வாழும் அந்த வாய்ப்பு கிடைக்கும்.—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15.
இந்த உலகத்தின் முடிவிலிருந்து தப்பிக்கவும், சீக்கிரத்தில் வரப்போகிற புத்தம்புது பூமியில் வாழவும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள். இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தைப் பயன்படுத்தி யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரோடு சேர்ந்து இலவசமாக பைபிளைப் படியுங்கள்.