கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?
கடவுள் யார் என்ற கேள்விக்கு நாம் இதுவரை படிப்படியாகப் பதிலைத் தெரிந்துகொண்டோம். அவருடைய பெயர் யெகோவா என்று பைபிள் சொல்வதைத் தெரிந்துகொண்டோம். அவர் காட்டும் முக்கியமான குணம் அன்பு என்பதைப் பார்த்தோம். அதோடு, மனிதர்களுக்காக அவர் என்ன செய்திருக்கிறார், என்ன செய்யப்போகிறார் என்றெல்லாம் பார்த்தோம். கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை என்று யோசிக்கிறீர்களா?
நீங்கள் அவரைத் தேடினால், அவரைக் கண்டடைய அவர் உதவி செய்வார்.’ இந்த வாக்குறுதியை யெகோவாவே கொடுத்திருக்கிறார். (1 நாளாகமம் 28:9) நீங்கள் அவரைத் தேடினால்... அவரைப் பற்றித் தெரிந்துகொண்டால்... ஒரு அருமையான பரிசு உங்களுக்குக் காத்திருக்கிறது! ‘யெகோவா உங்களுடைய நெருங்கிய நண்பராக’ இருப்பார்! (சங்கீதம் 25:14) அவர் உங்கள் நண்பராக இருப்பதால் உங்களுக்கு என்ன நன்மை?
உண்மையான சந்தோஷம். யெகோவா “சந்தோஷமுள்ள கடவுள்” என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 1:11) நாம் அவருடைய நண்பராக இருந்தால்... அவரைப் போலவே நடந்துகொண்டால்... உண்மையான சந்தோஷம் கிடைப்பது உறுதி! அப்படிப்பட்ட சந்தோஷத்தினால் உங்கள் உள்ளம் எப்போதும் மலர்ச்சியாக இருக்கும், உங்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்! (சங்கீதம் 33:12) அதோடு, மோசமான வாழ்க்கைப்பாணியை நீங்கள் தவிர்க்க முடியும், நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ள முடியும், மற்றவர்களோடு இனிமையாகப் பேசிப் பழக முடியும். இதெல்லாம் சந்தோஷத்துக்குச் சந்தோஷம் சேர்க்கும்! அப்புறம் என்ன, “கடவுளிடம் நெருங்கிப் போவதுதான் எனக்கு நல்லது” என்று நீங்களே சொல்வீர்கள்!—சங்கீதம் 73:28.
விசேஷக் கவனிப்பு. “உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு அறிவுரை சொல்வேன்” என்று யெகோவா தன் மக்களுக்கு வாக்குக் கொடுக்கிறார். (சங்கீதம் 32:8) அப்படியென்றால், யெகோவா தன் மக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கவனிக்கிறார்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன தேவையோ அதைப் பார்த்துப் பார்த்துச் செய்கிறார். (சங்கீதம் 139:1, 2) நீங்கள் யெகோவாவிடம் நெருங்கிவரும்போது, அவர் எப்போதும் உங்களுக்குத் துணையாக இருப்பதை நீங்களே உணருவீர்கள்.
அருமையான எதிர்காலம். யெகோவா இப்போதே உங்களைச் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ வைப்பார் என்பது உண்மைதான்; ஆனால் அதைவிட முக்கியமாக, எதிர்காலத்தில் அருமையான வாழ்க்கையைத் தரப்போவதாகவும் சொல்கிறார். (ஏசாயா 48:17, 18) “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 17:3) நாம் வாழ்கிற இந்தக் கொடிய காலத்தில், கடவுள் தரும் நம்பிக்கை ‘உறுதியான, நம்பகமான’ நங்கூரம்போல் இருக்கிறது.—எபிரெயர் 6:19.
கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரிடம் நெருக்கமாவதற்கு இன்னும் எத்தனையோ முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டுப் பாருங்கள் அல்லது jw.org வெப்சைட்டைப் பாருங்கள்.