Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை

இயேசு ஏன் அந்தளவு கஷ்டப்பட்டு இறந்தார்?

இயேசு ஏன் அந்தளவு கஷ்டப்பட்டு இறந்தார்?

“ஒரே மனிதனால் [ஆதாமால்] பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது; இவ்வாறு, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.” —ரோமர் 5:12.

யாராவது உங்களை பார்த்து, “நீங்க சாவே இல்லாம வாழ ஆசைப்படுறீங்களா?” என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? நிறைய பேர், “அப்படி நடந்தா நல்லாதான் இருக்கும். ஆனா, அதெல்லாம் நடக்குமா?” என்று யோசிக்கிறார்கள். “பிறப்புனு ஒண்ணு இருந்தா இறப்புனு ஒண்ணு இருக்கும்; அதுதான் வாழ்க்கை!” என்றுகூட சொல்கிறார்கள்.

ஒருவேளை, யாராவது உங்களை பார்த்து, “நீங்க சாக விரும்புவீங்களா?” என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? பொதுவாக, சாக வேண்டும் என்று யாருமே சொல்ல மாட்டார்கள். இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? என்னதான் பிரச்சினைகள், கஷ்டங்கள் வந்தாலும், மனிதர்களுக்கு வாழத்தான் ஆசை! அந்த ஆசையோடுதான் கடவுள் மனிதர்களை படைத்திருக்கிறார். அதனால்தான் பைபிள் இப்படி சொல்கிறது: “என்றென்றும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தையும் மனிதர்களுடைய மனதில் [கடவுள்] வைத்திருக்கிறார்.”—பிரசங்கி 3:11, NW.

ஆனால், இன்று யாராவது சாகாமல் வாழ்கிறார்களா? இல்லை! அப்படியென்றால், மனிதர்கள் ஏன் சாகிறார்கள்? இந்தப் பிரச்சினையை சரிசெய்ய கடவுள் ஏதாவது செய்திருக்கிறாரா? இந்த எல்லா கேள்விகளுக்கும் பைபிள் திருப்தியான பதில்களை கொடுக்கிறது. அதுமட்டுமல்ல, இயேசு ஏன் அந்தளவு கஷ்டப்பட்டு இறந்தார் என்பதை புரிந்துகொள்ளவும் அந்த பதில்கள் நமக்கு உதவி செய்யும்.

என்ன பிரச்சினை நடந்தது?

என்ன பிரச்சினை நடந்தது என்பதை பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமம் சொல்கிறது. ஆதாம், ஏவாள் என்னும் முதல் தம்பதியை கடவுள் படைத்தார். அவர்கள் சாகாமல் வாழ வேண்டும் என்றால் அவர் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால், கடவுள் சொன்னதை அவர்கள் கேட்கவில்லை. அதனால், சாகாமல் வாழும் வாய்ப்பை இழந்து போனார்கள். ஆதியாகமம் புத்தகத்தின் முதல் மூன்று அதிகாரங்களில் இந்த விஷயங்கள் எளிமையாக சொல்லப்பட்டிருக்கிறது. அது அவ்வளவு எளிமையாக இருப்பதால், சிலர் அதை வெறும் கதை என்றே நினைத்து விடுகிறார்கள். ஆனால், இயேசுவின் வாழ்க்கையை பற்றி சொல்லும் பைபிள் புத்தகங்கள் எந்தளவுக்கு உண்மையோ அந்தளவுக்கு ஆதியாகமம் புத்தகத்தில் இருக்கும் விஷயங்களும் உண்மையானது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

கடவுள் சொன்னதை ஆதாம் கேட்காமல் போனதால் என்ன ஆனது? பைபிள் இப்படி சொல்கிறது: “ஒரே மனிதனால் [ஆதாமால்] பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது; இவ்வாறு, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.” (ரோமர் 5:12) கடவுள் சொன்னதை கேட்காமல் போனதால், ஆதாம் பாவம் செய்தான், அதாவது, தவறு செய்தான். அதனால், சாகாமல் வாழும் வாய்ப்பை இழந்துபோனான்; கடைசியில், இறந்துபோனான். உதாரணத்துக்கு, அப்பாவுடைய குணம் பிள்ளைக்கு வரும் என்று சொல்வார்கள். அதேபோல, ஆதாமிடம் இருந்து நமக்கு பாவம் வந்தது என்று பைபிளும் சொல்கிறது. பாவத்தினால் நாமும் கஷ்டப்பட்டு, வயதாகி சாகிறோம். இந்த பிரச்சினையை சரிசெய்ய கடவுள் ஏதாவது செய்திருக்கிறாரா?

கடவுள் என்ன செய்திருக்கிறார்?

பாவம் என்ற குழியிலிருந்து நம்மைக் காப்பாற்ற கடவுள் ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார். அதாவது, ஆதாம் இழந்துபோன சாவே இல்லாத வாழ்க்கையை நமக்கு கொடுக்கப் போகிறார். அதற்கு அவர் என்ன செய்திருக்கிறார் என்று இப்போது பார்க்கலாம்.

“பாவத்தின் சம்பளம் மரணம்” என்று ரோமர் 6:23 சொல்கிறது. அதாவது, ஒருவர் பாவம் செய்தால், அதன் சம்பளமாக அல்லது கூலியாக அவருக்கு மரணம் வரும். ஆதாம் பாவம் செய்ததால் இறந்துபோனான். நாம் எல்லாருமே ஆதாமின் பிள்ளைகளாக இருப்பதால், பிறக்கும்போதே பாவத்தின் பாதிப்போடு பிறக்கிறோம். அதனால், நாமும் சாகிறோம். இந்த பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவதற்காக கடவுள், அவருடைய ஒரே மகன் இயேசுவை இந்தப் பூமிக்கு அனுப்பினார். நமக்குப் பதிலாக, நம்முடைய பாவத்தின் சம்பளமான மரணத்தை இயேசு ஏற்றுக்கொண்டார். அது எப்படி?

இயேசு நமக்காக இறந்ததால் நாம் சாகாமல் சந்தோஷமாக வாழ முடியும்

ஆதாம் எந்தக் குறையும் இல்லாதவனாக படைக்கப்பட்டான். அவன் கடவுளுக்கு கீழ்ப்படியாமல் போனதால்தான் பாவியாகிவிட்டான், அதாவது குறையுள்ளவன் ஆகிவிட்டான். அதனால், அவன் செய்த பாவத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவதற்கும் எந்தக் குறையும் இல்லாத ஒருவர் தேவைப்படுகிறார். சாகும்வரை அவர் எந்தப் பாவமும் செய்யாதவராக இருக்க வேண்டும். அதைப்பற்றி பைபிள் இப்படி சொல்கிறது: “ஒரே மனிதனுடைய கீழ்ப்படியாமையினால் பலர் பாவிகளாக்கப்பட்டதுபோல், ஒரே மனிதனுடைய கீழ்ப்படிதலினால் பலர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.” (ரோமர் 5:19) அந்த “ஒரே மனிதன்” யார்? அவர்தான் இயேசு! அவர் பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்தார். எந்தக் குறையும் இல்லாதவராக, அதாவது பாவமே இல்லாதவராக பிறந்தார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) மனிதர்களுக்காக தன்னுடைய உயிரைக் கொடுத்தார். அவர் நமக்காக இறந்ததால், நாம் கடவுளுடைய நண்பராக ஆக முடியும், எதிர்காலத்தில் சாவே இல்லாத வாழ்க்கையையும் அனுபவிக்க முடியும்.

இயேசு ஏன் அந்தளவு கஷ்டப்பட்டு இறந்தார்?

மனிதர்கள் சாவே இல்லாமல் வாழ்வதற்காக இயேசு அந்தளவு கஷ்டப்பட்டு சாக வேண்டுமா? இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: ‘ஆதாமின் வாரிசுகள் யாரும் சாக வேண்டியதில்லை’ என்று எல்லா சக்தியும் படைத்த கடவுள் சொல்லியிருக்க முடியும். அப்படி சொல்ல அவருக்கு அதிகாரமும் இருக்கிறது. ஆனால், அவர் அப்படி செய்திருந்தால், பாவத்தின் சம்பளம் மரணம் என்ற அவருடைய சட்டத்தை அவரே மீறுவதாக இருந்திருக்கும். அந்த சட்டம் ஏதோ வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிற சட்டம் இல்லை. கடவுளுடைய நீதிக்கு அதுதான் அடிப்படையானது.—சங்கீதம் 37:28.

கடவுள் அவருடைய நீதியையும் நியாயத்தையும் இந்த விஷயத்தில் மட்டும் ஓரங்கட்டி வைத்திருக்கலாமே என்று நாம் யோசிக்கலாம். அப்படி செய்திருந்தால், மற்ற விஷயங்களை அவர் சரியாக செய்வாரா என்ற சந்தேகம் வந்துவிடும். உதாரணமாக, ‘சாவில்லாத வாழ்வை யாருக்கு கொடுப்பது என்று முடிவு செய்வதில் கடவுள் நியாயமாக நடந்துகொள்வாரா? சொன்ன வார்த்தையை காப்பாற்றுவாரா?’ என்றெல்லாம் சந்தேகம் வந்துவிடும். ஆரம்பத்தில் கடவுள் நியாயமாக நடந்துகொண்டதால்தான், அவர் செய்வது எல்லாமே சரி என்று நாம் இன்று நம்புகிறோம்.

சீக்கிரத்தில், இந்தப் பூமியை ஒரு அழகிய தோட்டமாக மாற்றி, சாவே இல்லாத வாழ்க்கையை கடவுள் நமக்கு கொடுக்கப்போகிறார். இயேசுவின் தியாக மரணத்தால்தான், அந்த வாழ்க்கை நமக்கு கிடைக்கப்போகிறது. யோவான் 3:16-ல் இயேசு இப்படி சொல்கிறார்: “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார்.” இயேசுவின் மரணம், வெறுமனே கடவுளின் நீதியை மட்டுமல்ல, மனிதர்கள் மேல் கடவுளுக்கு எந்தளவு அன்பு இருக்கிறது என்பதையும் காட்டுகிறது.

பைபிளில் சொல்லியிருப்பது போல, இயேசு அந்தளவு கஷ்டப்பட்டு ஏன் சாக வேண்டும்? கடவுளுடைய எதிரியான சாத்தான், கஷ்டங்கள் வரும்போது மனிதர்கள் கடவுளுக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள் என்று சவால் விட்டான். (யோபு 2:4, 5) முதல் மனிதனான ஆதாமுக்கு ஒரு பிரச்சினை வந்தபோது அவன் கடவுளுக்கு உண்மையாக நடக்கவில்லை. அதனால், ‘சாத்தான் சொன்னது சரிதான்’ என்று நாம் நினைக்கலாம். அப்படி நினைத்தால் அது தவறு. ஏனென்றால், ஆதாமைப் போலவே எந்த பாவமும் இல்லாமல் பிறந்தவர்தான் இயேசு. சாத்தான் மூலம் வந்த எல்லா கஷ்டங்களையும் அவர் சகித்தார். மரணம் வரை கடவுளுக்கு உண்மையாக இருந்தார். இதனால், மனிதர்களைப் பற்றி சாத்தான் சொன்னது சுத்தப் பொய் என்று நிரூபித்தார். (1 கொரிந்தியர் 15:45) அதோடு, ஆதாமும் அவரைப் போலவே கடவுளுக்கு உண்மையாக இருந்திருக்க முடியும் என்றும் நிரூபித்தார். நமக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். (1 பேதுரு 2:21) இயேசு சாகும்வரை உண்மையாக இருந்ததால், பரலோகத்தில் சாகாமல் வாழும் வாய்ப்பை கடவுள் அவருக்கு பரிசாக கொடுத்தார்.

உங்களுக்கு கிடைக்கப்போகும் வாழ்க்கை

இயேசு இறந்தது உண்மைதான். எதிர்காலத்தில் இந்தப் பூமி ஒரு அழகிய தோட்டமாக மாறத்தான் போகிறது. ஆனால், அதில் வாழ்வதற்கு நீங்கள் தயாரா? அதில் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார்: “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும் நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்.”—யோவான் 17:3.

நம்மைப் படைத்த கடவுளான யெகோவாவையும் அவருடைய மகன் இயேசுவையும் பற்றி நீங்கள் அதிகமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உங்கள் ஊரில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள். மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள www.dan124.com என்ற வெப்சைட்டை பாருங்கள். ▪ (w16-E No.2)

^ பாரா. 8 மேலும் தெரிந்துகொள்ள உட்பார்வை (Insight on the Scriptures) என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கம் 922-ல் உள்ள “தி ஹிஸ்டாரிக்கல் கேரக்டர் ஆஃப் ஜெனிசஸ்” என்ற தலைப்பை பார்க்கவும். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம். www.dan124.com என்ற வெப்சைட்டில், PUBLICATIONS > ONLINE LIBRARY என்ற பகுதியைப் பாருங்கள்.

^ பாரா. 13 கடவுள் தன்னுடைய மகனின் உயிரை மரியாளின் கருப்பைக்கு மாற்றினார். மரியாளின் எந்த பாவக் கறையும் இயேசுவுக்கு ஒட்டிக்கொள்ளாதபடி கடவுளுடைய சக்தி அவரைப் பாதுகாத்தது.—லூக்கா 1:31, 35.