அட்டைப்படக் கட்டுரை | கடவுள் தந்த மிகச்சிறந்த பரிசு உங்களுக்காக!
விலைமதிக்க முடியாத ஒரு பரிசு!
ஜார்டன் தன் கையில் வாங்கும் இந்த கப்பல் பொம்மை பார்க்கவே எவ்வளவு அழகாக இருக்கிறது. அது ஒரு பென்சில் சீவும் கருவி (sharpener). இந்தப் பரிசை ஜார்டன் ஒரு பொக்கிஷமாக நினைக்கிறார். அவர் சொல்கிறார்: “நான் சின்ன வயசுல இருந்தப்போ எங்க குடும்பத்துக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் எனக்கு இந்த ஷாப்னரை பரிசா கொடுத்தாரு. அவரோட பேர் ரஸல்.” அவர் இறந்த பிறகு ஜார்டன் அவரைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டார். ஜார்டனுடைய தாத்தாவுக்கும் அப்பா-அம்மாவுக்கும் ரஸல் பல உதவிகளைச் செய்திருக்கிறார். கஷ்டமான சமயங்களில் அவர்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். “ரஸலை பத்தி நிறைய தெரிஞ்சிக்கிட்டதுக்கு அப்புறம் அவர் கொடுத்த இந்த சின்ன பரிசு என் கண்ணுக்கு ரொம்ப பெருசா தெரியுது” என்று ஜார்டன் சொல்கிறார்.
சிலருடைய பார்வையில் இப்படிப்பட்ட பரிசு ஒரு சாதாரண பொருளாக தெரியலாம். அதை அவர்கள் அவ்வளவு முக்கியமாக நினைக்காமல் இருக்கலாம். ஆனால், ஜார்டனைப் போல் நன்றியுள்ள நபர்கள் அப்படிப்பட்ட பரிசை விலைமதிப்பில்லாத பொக்கிஷமாக நினைப்பார்கள். பைபிள்கூட விலைமதிக்க முடியாத ஒரு முக்கியமான பரிசைப் பற்றி பேசுகிறது. பைபிள் சொல்கிறது, “கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்.”—யோவான் 3:16.
கடவுள் தந்த இந்த பரிசு மனிதர்களுக்கு என்றென்றும் வாழும் வாழ்க்கையைத் தரப்போகிறது! இதைவிட மதிப்புள்ள பரிசு வேறு ஏதாவது இருக்க முடியுமா? கடவுள் கொடுத்த இந்த அருமையான பரிசின் மதிப்பை சிலர் புரிந்துகொள்வதில்லை. ஆனால், உண்மை கிறிஸ்தவர்கள் இந்த பரிசை ‘ரொம்ப பெரிதாக’ நினைக்கிறார்கள். (சங்கீதம் 49:8; 1 பேதுரு 1:18, 19) தன்னுடைய மகனுடைய உயிரை கடவுள் ஏன் நமக்கு பரிசாக கொடுத்தார்?
அதற்கான காரணத்தை இயேசுவின் சீஷரான பவுல் இப்படி விளக்கினார்: “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி . . . மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.” (ரோமர் 5:12) முதல் மனிதன் ஆதாம், வேண்டுமென்றே கடவுளுடைய பேச்சை மீறியதால் அவனுக்கு மரண தண்டனை கிடைத்தது. அவன் செய்த பாவத்தால் அவனுடைய சந்ததியில் வந்த எல்லா மனிதர்களுக்கும் மரணம் வந்தது.
“பாவத்தின் சம்பளம் மரணம்; நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் தரும் அன்பளிப்போ முடிவில்லாத வாழ்வு” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 6:23) மரணம் என்ற சிறையில் இருந்து மனிதர்களை விடுதலை செய்வதற்காக கடவுள் அவருடைய மகனை இந்த பூமிக்கு அனுப்பினார். பாவமே இல்லாத இயேசுவின் உயிரை பலியாக கொடுத்தார். இயேசுவின் பலி நமக்கு ‘மீட்புவிலையாக’ இருக்கிறது. அதன் மூலமாகத்தான் நமக்கு முடிவில்லா வாழ்வை கடவுள் கொடுக்கப்போகிறார். அதனால் இயேசுவின் பலியில் நாம் விசுவாசம் வைப்பது ரொம்ப முக்கியம்.—ரோமர் 3:24.
தன்னை உண்மையோடு வணங்கும் மக்களுக்கு இயேசு மூலமாக கடவுள் ஏராளமான ஆசீர்வாதங்களை, அதாவது அன்பளிப்புகளைக் கொடுக்கப்போகிறார். அதைப் பற்றி பவுல் இப்படி சொன்னார்: “வார்த்தைகளால் விவரிக்க முடியாத இலவச அன்பளிப்பைக் கொடுக்கிற கடவுளுக்கு நன்றி.” (2 கொரிந்தியர் 9:15) இயேசுவின் பலி நிஜமாகவே கடவுள் தந்த ஒரு அருமையான அன்பளிப்பு. அதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. மனிதர்களுக்கு கடவுள் கொடுத்த பரிசுகளிலேயே இதுதான் மிகச்சிறந்த பரிசு என்று ஏன் சொல்லலாம்? கடவுள் கொடுத்த மற்ற பரிசுகளில் இருந்து இது எப்படி வித்தியாசமாக இருக்கிறது? * இந்தப் பரிசுக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம்? இந்தக் கேள்விகளுக்கு பைபிள் சொல்லும் பதிலை அடுத்த இரண்டு கட்டுரையில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
^ பாரா. 8 இயேசுவே விருப்பப்பட்டு ‘தன்னுடைய உயிரை நமக்காக கொடுத்தார்.’ (1 யோவான் 3:16) இருந்தாலும், அவர் அப்படி செய்தது கடவுளுடைய நோக்கமாக இருந்தது. மீட்புவிலையை கொடுக்க கடவுள் என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.