அட்டைப்படக் கட்டுரை | பாசமுள்ளவரைப் பறிகொடுக்கும்போது...
துக்கத்தைச் சமாளிப்பது எப்படி?
இந்த விஷயத்தைக் குறித்து பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்கிறார்கள். இருந்தாலும், எல்லா ஆலோசனைகளும் பிரயோஜனமாக இருக்காது. உதாரணத்துக்கு, அழக் கூடாது... உன் துக்கத்தை வெளியில் காட்டக் கூடாது... என்றெல்லாம் சிலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். வேறு சிலரோ, உன் துக்கத்தை அடக்கக் கூடாது... கொட்டி தீர்த்துவிடு... என்று சொல்லலாம். ஆனால், பைபிள் சமநிலையான ஆலோசனையை தருகிறது. அதை ஆராய்ச்சியாளர்களே ஒத்துக்கொள்கிறார்கள்.
ஆண்கள் அழுவதை கோழைத்தனம் என்று சில கலாச்சாரங்கள் சொல்கின்றன. ஆனால், கண்ணீர்விட்டு அழுவதை, அதுவும் எல்லாருக்கும் முன்பாக அழுவதை, கேவலமாக நினைக்க வேண்டுமா? துக்கப்படும்போது கண்ணீர்விடுவது இயல்புதான் என்பதை மனநல வல்லுநர்களே ஒத்துக்கொள்கிறார்கள். உங்களுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், துக்கத்தை வெளிப்படுத்தும்போது காலப்போக்கில் உங்கள் வாழ்க்கை சகஜமாகப் போகும். ஆனால், துக்கத்தை அடக்கி வைக்கும்போது, உங்களுக்கு நன்மை அல்ல அதிக தீமைதான் உண்டாகும். கண்ணீர்விட்டு அழுவது தவறு... அது ஆண்மைக்கு அழகில்லை... என்ற கருத்தை பைபிள் ஒத்துக்கொள்வதில்லை. உதாரணமாக, தன்னுடைய உயிர் நண்பர் லாசரு இறந்தபோது இயேசு எப்படி துக்கப்பட்டார் என்று யோசித்துப் பாருங்கள். அவர் எல்லாருக்கும் முன்பாக கண்ணீர்விட்டு அழுதார். லாசருவைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவரும் சக்தி இயேசுவுக்கு இருந்தபோதிலும் அவர் கண்ணீர்விட்டு அழுதார்.—யோவான் 11:33-35.
துக்கப்படும்போது கோபம் வருவது சகஜம்தான், முக்கியமாக, திடீரென அன்பானவர் இறந்துபோகும்போது அப்படி கோபம் வருவது இயல்புதான். மதிப்பும் மரியாதையும் உள்ள ஒருவர் யோசிக்காமல் அல்லது காரணம் இல்லாமல் ஏதாவது பேசிவிடும்போது, அன்பானவர்களை இழந்து தவிப்பவருக்கு ஏன் கோபம் வருகிறது என்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. “என் அப்பா சாகும்போது எனக்கு 14 வயசுதான் இருக்கும். நல்லவங்கள கடவுள் சீக்கிரமா எடுத்துக்கிறார்னு * சவ அடக்கத்தில ஆங்கிலிக்கன் சர்ச் ஊழியர் சொன்னார். அதை கேட்டவுடனே எனக்கு கோவம் கோவமா வந்துச்சு. ஏன்னா, எங்க அப்பாதான் எங்களுக்கு எல்லாமே. இப்போ 63 வருஷம் ஆயிடுச்சு. இருந்தாலும், அவர் சொன்னது என் மனசுல இன்னும் ரணமாதான் இருக்கு” என்று தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மைக் சொல்கிறார்.
அடுத்ததாக, குற்ற உணர்ச்சி ஏன் வருகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம். எதிர்பாராமல் மரணம் ஏற்படும்போது, ‘நான் இப்படி செஞ்சிருந்தா... இது நடந்திருக்காது’ என்று பாசமுள்ளவர்களைப் பறிகொடுத்தவர் அடிக்கடி யோசிக்கலாம். அல்லது இறந்துபோனவரிடம் கடைசியாக ஏதாவது வாக்குவாதம் செய்திருந்தால், அடிக்கடி அதைப் பற்றி யோசிக்கலாம். இப்படியெல்லாம் நினைப்பது உங்களுடைய குற்ற உணர்ச்சியை அதிகமாக்கலாம்.
இப்படிப்பட்ட குற்ற உணர்ச்சிகளோ கோபமோ உங்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தால் அதை அடக்கி வைக்கக் கூடாது. நீங்கள் சொல்வதை காதுகொடுத்து கேட்கிற நண்பரிடம் பேசுங்கள். அன்பானவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு இப்படிப்பட்ட உணர்ச்சிகள் வருவது சகஜம்தான் என்பதை புரிந்துகொள்ளும் நண்பரிடம் பேசுங்கள். பைபிள் இதை நினைப்பூட்டுகிறது: “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.
துயரப்படுகிற நபருக்கு மிகச் சிறந்த நண்பர் நம் படைப்பாளரான யெகோவா தேவன். “அவர் உங்கள்மீது அக்கறையாக இருப்பதால்,” உங்கள் மனதில் உள்ள எல்லாவற்றையும் அவரிடம் ஜெபத்தில் கொட்டிவிடுங்கள். (1 பேதுரு 5:7) அப்படி செய்பவர்களுக்கு, ‘எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானத்தை’ கொடுப்பதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். அது உங்களுடைய மனதிற்கு ஆறுதலாக இருக்கும். (பிலிப்பியர் 4:6, 7) அதோடு, ஆறுதல் தருகிற அவருடைய வார்த்தையாகிய பைபிளின் மூலம் அவர் உங்களுக்கு உதவி செய்கிறார். உங்களுக்கு ஆறுதல் தரும் வசனங்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். (முன்பக்கத்தில் உள்ள பெட்டியைப் பாருங்கள்.) சில வசனங்களை மனப்பாடம்கூட செய்துகொள்ளலாம். ராத்திரியில் நீங்கள் தனியாக இருக்கும்போது... தூக்கம் வராமல் கஷ்டப்படும்போது... இவற்றை ஆழமாக யோசித்துப் பாருங்கள்.—ஏசாயா 57:15.
40 வயதாகும் ஜாக் என்பவரின் அன்பு மனைவி புற்றுநோயால் சமீபத்தில் இறந்துவிட்டார். சில சமயங்களில் தனிமை அவரை மிகவும் வாட்டுவதாக சொல்கிறார். கடவுளிடம் ஜெபம் செய்தது அவருக்கு ரொம்ப உதவியாக இருந்தது. “யெகோவாகிட்ட ஜெபம் செய்றப்போ நான் தனிமையில வாடுறதே கிடையாது. அடிக்கடி ராத்திரியில திடீர்னு முழிப்பு வந்திடும், மறுபடியும் தூக்கமே வராது. அப்போ நான் பைபிள்ல இருக்கிற ஆறுதலான வசனங்கள வாசிப்பேன், அதை பத்தி ஆழமா யோசிச்சு பார்ப்பேன், என் மனசுல இருக்கிறதெல்லாம் யெகோவாகிட்ட கொட்டுவேன். அப்போ எனக்கு மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். அதுக்கு அப்புறம் எனக்கு நல்லா தூக்கம் வரும்.”
வனிசா என்ற இளம் பெண்ணின் அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அந்தச் சமயத்தில், ஜெபத்துக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை அவரும் அனுபவத்தில் தெரிந்துகொண்டார். “ரொம்ப வேதனையா இருக்குற சமயத்துல, வெறுமனே கடவுளோட பெயரைச் சொல்லி கண்ணீர்விட்டு அழுவேன். யெகோவா என்னோட ஜெபத்த கேட்டு எல்லா சமயத்திலயும் தேவையான பலத்த கொடுத்தார்.”
துக்கத்தில் தவிப்பவர்கள் மற்றவர்களுக்கு ஏதாவது உதவியோ சமூக சேவையோ செய்யச் சொல்லி ஆலோசகர்கள் சிலர் சொல்கிறார்கள். அப்படி செய்வது ஒருவருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும், அவருடைய வேதனையைக் குறைக்கும். (அப்போஸ்தலர் 20:35) மற்றவர்களுக்கு உதவும் வேலையில் ஈடுபடும்போது அதிக ஆறுதல் கிடைத்ததாக துக்கத்தில் இருக்கும் நிறைய கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள்.—2 கொரிந்தியர் 1:3, 4. (w16-E No. 3)
^ பாரா. 5 ஆனால் பைபிள் இப்படி சொல்வதில்லை. ஏன் மரணம் வருகிறது என்பதற்கு மூன்று காரணங்களை பைபிள் சொல்கிறது.—பிரசங்கி 9:11; யோவான் 8:44; ரோமர் 5:12.