அட்டைப்படக் கட்டுரை | பாசமுள்ளவரைப் பறிகொடுக்கும்போது...
துக்கப்படுவது தவறா?
நீங்கள் ஏதாவது வியாதியால் கஷ்டப்பட்டிருக்கிறீர்களா? ஒருவேளை அந்த வியாதியிலிருந்து சீக்கிரம் குணமாகியிருக்கலாம், இப்போது அந்த வியாதி வந்ததே உங்களுக்கு ஞாபகமில்லாமல் இருக்கலாம். ஆனால், அன்பானவர்களைப் பறிகொடுத்ததால் ஏற்படும் துக்கம் அந்த மாதிரி கிடையாது. “துக்கத்திலிருந்து ‘மீண்டுவருவதற்கு’ வாய்ப்பே இல்லை” என்று துணையை இழந்த துக்கத்தைச் சமாளித்தல் (ஆங்கிலம்) புத்தகத்தில் டாக்டர் ஆலன் உல்ஃபெல்ட் எழுதுகிறார். ஆனாலும், “காலங்கள் செல்லச் செல்ல... மற்றவர்களுடைய உதவியால்... துக்கத்தைக் குறைக்க முடியும்” என்றும் அவர் சொல்கிறார்.
உதாரணமாக, வம்சத் தலைவரான ஆபிரகாம் அவருடைய மனைவி இறந்தபோது எப்படி துக்கப்பட்டார் என்பதை கவனியுங்கள். ‘சாராளுக்காகப் புலம்பி அழ ஆரம்பித்தார்’ என்று பைபிள் சொல்கிறது. ‘ஆரம்பித்தார்’ என்ற வார்த்தை துக்கத்தை சமாளிக்க அவருக்கு கொஞ்ச காலம் எடுத்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. * மற்றொரு உதாரணம் யாக்கோபு. கொடிய மிருகம் அவருடைய மகன் யோசேப்பை அடித்துக் கொன்றுவிட்டது என்று அவர் நம்பிக்கொண்டிருந்தார். இதற்காக அவர் “அநேக நாள்” துக்கப்பட்டார், அவருடைய குடும்பத்தாரால்கூட அவரை ஆறுதல்படுத்த முடியவில்லை. பல வருஷங்களுக்குப் பிறகும், யோசேப்பை இழந்த துக்கம் அவருடைய மனதில் பாரமாக அழுத்திக்கொண்டுதான் இருந்தது.—ஆதியாகமம் 23:2, NW; ஆதியாகமம் 37:34, 35; 42:36; 45:28.
நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்கள் இறந்துபோகும்போது இன்றும் நிறைய பேர் இதேபோல்தான் துக்கப்படுகிறார்கள். பின்வரும் இரண்டு உதாரணங்களைக் கவனியுங்கள்.
-
“ஜூலை 9, 2008-ல, என்னோட கணவர் ராபர்ட் ஒரு விபத்துல இறந்துட்டார். அந்த கோர விபத்து நடந்த அன்னைக்கு காலையில எல்லா நாள் மாதிரிதான் அந்த நாளும் இருந்துச்சு. அவர் சாப்பிட்டதுக்கு அப்புறம், வேலைக்கு போறதுக்கு முன்னாடி எப்பவும் போல நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் கட்டியணைச்சு கிஸ் பண்ணிக்கிட்டோம். அன்பா ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கிட்டோம். ஆறு வருஷம் கழிச்சும் அவர இழந்த வலி என் இதயத்தில இன்னும் இருக்கு. அவர இழந்த துக்கத்தில இருந்து மீண்டுவருவேனானு எனக்கு தெரியல.”—கெயில், வயது 60.
-
“என் அன்பு மனைவி இறந்து 18 வருஷத்துக்கு மேல ஆகுது. இருந்தாலும் நான் அவள இன்னும் ‘மிஸ்’ பண்றேன். அவள நினைச்சு இன்னும் துக்கப்படுறேன். நான் அழகா ஏதாச்சும் பார்த்தேன்னா உடனே அவ ஞாபகம்தான் வரும். அத பார்த்து அவளும் எந்தளவு ரசிச்சிருப்பானு என்னால நினைக்காம இருக்க முடியாது.”—ஏட்டியன், வயது 84.
அப்படியென்றால், இறந்தவர்களை நினைத்து சதா வேதனைப்படுவது இயல்புதான். சோக சம்பவம் தாக்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் துக்கப்படலாம். ஒருவர் துக்கப்படும் விதத்தை வைத்து அவரை நியாயந்தீர்ப்பது சரியல்ல. அதே சமயத்தில், கவலையில் மூழ்கும்போது நம்மை நாமே நொந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அப்படியென்றால், துக்கத்திலிருந்து எப்படி மீண்டு வரலாம்? (w16-E No. 3)
^ பாரா. 4 ஆபிரகாமின் மகன் ஈசாக்கும்கூட தன் அம்மா இறந்ததை நினைத்து பல காலம் துக்கப்பட்டார். அவருடைய அம்மா சாராள் இறந்து மூன்று வருஷங்களுக்குப் பிறகும் அதை நினைத்து துக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.—ஆதியாகமம் 24:67.