பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
பெண்களை மதிக்க... சுயமரியாதையை வளர்க்க... கற்றுக்கொண்டேன்
-
பிறந்த வருடம்: 1960
-
பிறந்த நாடு: பிரான்சு
-
என்னைப் பற்றி...: போதைப்பொருளுக்கு அடிமை, பெண்களை மதிக்கவில்லை
முன்பு:
பிரான்சில் வடக்கிழக்கு பகுதியில் இருக்கிற முல்ஹவுஸ் என்ற நகரத்தில், தொழிலாளர் வர்க்கத்தினர் குடியிருக்கும் பகுதியில் பிறந்தேன். நான் வாழ்ந்த இடம் வன்முறைக்கு பேர்போனது. எனக்கு சின்ன வயசாக இருந்தபோது, என்னுடைய ஏரியாவில் இருக்கிற குடும்பங்கள் பயங்கர சண்டை போட்டுக்கொள்வார்கள். இதுதான் இப்போதும் என் ஞாபகத்தில் இருக்கிறது. என் குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு கொடுக்க மாட்டார்கள், ஆண்கள் யாரும் பெண்களிடம் எந்த ஆலோசனையும் கேட்க மாட்டார்கள். பெண்கள் அடுப்படியில்தான் இருக்க வேண்டும், கணவரையும் பிள்ளைகுட்டிகளையும் கவனித்துக்கொள்வதுதான் அவர்களுடைய வேலை என்று எனக்கு சொல்லிக்கொடுத்தார்கள்.
என்னுடைய சின்ன வயசில் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். எனக்கு 10 வயசு இருந்தபோது, என் அப்பா குடித்து குடித்தே செத்துப்போய்விட்டார். ஐந்து வருஷத்துக்கு அப்புறம், என்னுடைய அண்ணன் ஒருத்தன் தற்கொலை செய்துகொண்டான். அதே வருஷத்தில், குடும்பத்துக்குள் சண்டை வந்து கொலையே விழுந்தது, அதைப் பார்த்து ரொம்ப அதிர்ச்சி அடைந்தேன். கத்தியையும் துப்பாக்கியையும் எப்படி பயன்படுத்துவது... சண்டைபோட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் எப்படி சண்டை போடுவது... என்றெல்லாம் என் குடும்பத்தில் இருக்கிறவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். மனசுக்குள் குழப்பங்கள் நிறைந்த ஒரு இளைஞனாக இருந்தபோது, என் உடம்பு முழுக்க பச்சைக்குத்திக் கொண்டேன், குடிக்கவும் ஆரம்பித்தேன்.
என்னுடைய 16 வயசில், தினமும் 10... 15... பாட்டில் பீர் குடிப்பேன். சீக்கிரத்தில், போதைப்பொருளுக்கும் அடிமை ஆகிவிட்டேன். என்னுடைய செலவுக்காக உடைந்துபோன பழைய சாமான்களை விற்றேன்... திருடவும் ஆரம்பித்தேன். 17 வயசுக்குள் ஜெயிலுக்கு போனேன். திருடியதற்காகவும் சண்டை போட்டதற்காகவும் 18 தடவை ஜெயில் தண்டனை அனுபவித்தேன்.
எனக்கு 20... 22... வயசானபோது என் நிலைமை ரொம்ப மோசமாக ஆனது. ஒரு நாளைக்கு 20 தடவைக்கு மேல் மாரிஹுவானா தொடர்ந்து எடுத்துக்கொண்டேன். ஹெராயினையும் சட்டவிரோதமான வேறுசில போதைப்பொருள்களையும் பயன்படுத்தினேன். ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை பயன்படுத்தியதால் பல தடவை சாகும் நிலைக்குப் போய்விட்டேன். பிறகு போதைப்பொருள்களை விற்கவும் ஆரம்பித்தேன். அதனால், எப்போதும் என்னிடம் நிறைய துப்பாக்கியும் கத்தியும் இருக்கும். ஒருசமயம், ஒருவனை துப்பாக்கியால் சுட்டேன். நல்லவேளையாக துப்பாக்கி குண்டு அவனுடைய பெல்ட் பக்கிலில் பட்டு தெறித்துவிட்டது! எனக்கு 24 வயசு இருந்தபோது என் அம்மா இறந்துவிட்டார். அப்போது, என் கோபம் இன்னும் அதிகமானது. ரோட்டில் நடந்துவருகிறவர்கள் நான் எதிரில் வருவதை பார்த்ததும் பயந்துபோய் ரோட்டை கடந்து அந்த பக்கம் போய்விடுவார்கள். நான் அடிக்கடி சண்டை போட்டதால் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் போலீஸ் ஸ்டேஷனில்தான் இருப்பேன், அல்லது அடிபட்ட காயங்களோடு ஆஸ்பத்திரியில்தான் கிடப்பேன்.
28 வயசில் எனக்கு கல்யாணம் ஆனது. நீங்கள் நினைக்கிற மாதிரியே, என் மனைவியை நான் மரியாதையோடு நடத்தவில்லை. அவளை அவமானப்படுத்தினேன்... அடித்து உதைத்தேன். ஒரு தம்பதியாக, எதையுமே நாங்கள் சேர்ந்து செய்ததில்லை. திருடிக்கொண்டு வந்த ஏகப்பட்ட நகைகளை மட்டும் அவளுக்கு கொடுத்தால் போதும் என்று நான் நினைத்தேன். ஆனால், எதிர்பாராத ஒன்று நடந்தது. என் மனைவி, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். முதல் படிப்புக்கு அப்புறம், என் மனைவி புகைப்பிடிப்பதை நிறுத்திவிட்டாள். திருடிக் கொண்டுவந்து கொடுத்த பணத்தை வாங்க மறுத்தாள்... நகைகளையும் திருப்பிக்
கொடுத்துவிட்டாள். எனக்கு பயங்கர கோபம் வந்தது. பைபிள் படிப்பை நிறுத்த சொன்னேன். அதுமட்டுமல்ல, அவளுடைய முகத்தில் சிகரெட் புகையை ஊதினேன். அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் எல்லார் முன்னாலும் அவளை கேலி செய்தேன்.ஒரு நாள் ராத்திரி நான் பயங்கர குடிபோதையில் இருந்தபோது, நான் குடியிருந்த அபார்ட்மெண்ட்டுக்கு தீ வைத்தேன். என் மனைவிதான் என்னையும், எங்களுடைய ஐந்து வயசு மகளையும் காப்பாற்றினாள். போதை தெளிந்த பிறகு, குற்றவுணர்வு என்னை வாட்டி எடுத்தது. கடவுள் என்னை மன்னிக்கவே மாட்டார் என்ற எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. கெட்டவர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள் என்று பாதிரியார் ஒருவர் சொன்னது என் ஞாபகத்திற்கு வந்தது. “அவ்ளோதான், யாராலயும் உன்ன காப்பாத்த முடியாது” என்று என்னுடைய மனநோய் மருத்துவரும் சொன்னார்.
பைபிள் என் வாழ்க்கையை மாற்றியது:
அந்த வீடு எரிந்து போனதுக்கு அப்புறம், என்னுடைய மாமனார் மாமியார் வீட்டுக்கு நாங்கள் போய்விட்டோம். என் மனைவியை பார்க்க யெகோவாவின் சாட்சிகள் வந்தபோது, அவர்களிடம் “என்னோட எல்லா பாவங்களையும் கடவுள் மன்னிப்பாரா?” என்று கேட்டேன். அப்போது, பைபிளிலிருந்து 1 கொரிந்தியர் 6:9-11-ஐ காட்டினார்கள். கடவுளுக்கு எது எல்லாம் பிடிக்காது என்று அந்த வசனங்களில் இருந்தது. அதோடு அந்த வசனத்தில்: “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்தீர்கள்” என்றும் இருந்தது. என்னுடைய வாழ்க்கையை மாற்ற முடியும் என்ற உறுதியை அந்த வார்த்தைகள் எனக்கு கொடுத்தது. பின்பு, அவர்கள் 1 யோவான் 4:8-ஐ எடுத்துக் காட்டி, கடவுள் என்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்ற நம்பிக்கையை எனக்கு கொடுத்தார்கள். அப்போது நான் உற்சாகமடைந்து, வாரத்தில் இரண்டு நாள் பைபிள் படிப்பு எடுக்கச் சொல்லி யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டேன். அதோடு, அவர்களுடைய கிறிஸ்தவ கூட்டங்களுக்கு போக ஆரம்பித்தேன். அடிக்கடி யெகோவாவிடம் ஜெபம் செய்தேன்.
ஒரே மாதத்துக்குள், போதைப் பழக்கத்தையும் குடிப் பழக்கத்தையும் விட்டுவிட ஆரம்பித்தேன். என் உடம்புக்குள் பெரிய போரே வெடித்தது போல் இருந்தது. தூங்கும்போது எனக்கு பயங்கரமான கனவெல்லாம் வரும், தலைவலி வரும், சிலசமயம் கையையும் காலையும் அசைக்கவே முடியாது. அதுபோக இன்னும் நிறைய பிரச்சினைகளும் வந்தது. அதே சமயத்தில், யெகோவாவே என் கையை பிடித்து, என்னை பலப்படுத்திய மாதிரி இருந்தது. பைபிள் எழுத்தாளர் பவுலை போல் நானும் உணர்ந்தேன். “என்னைப் பலப்படுத்துகிற கடவுள் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் உண்டு” என்று பவுல் எழுதினார். (பிலிப்பியர் 4:13) கொஞ்ச காலத்துக்குப் பிறகு, நான் புகைப்பிடிப்பதை விட்டுவிட்டேன்.—2 கொரிந்தியர் 7:1.
என்னுடைய வாழ்க்கையை சரியான விதத்தில் கொண்டு போவதற்கும் குடும்பத்தை நல்லபடியாக நடத்துவதற்கும் பைபிள் உதவியாக இருந்தது. என் மனைவியை பற்றிய தவறான எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். அவளை மரியாதையாக நடத்த ஆரம்பித்தேன், “ப்ளீஸ், தேங்க்யூ” சொல்ல கற்றுக்கொண்டேன். என் மகளுக்கும் ஒரு நல்ல அப்பாவாக இருக்க பழகிக்கொண்டேன். ஒரு வருஷம் பைபிளை படித்த பிறகு, என் மனைவியை போல் நானும் என் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்தேன்.
வாழ்வில் வசந்தம் வீசுகிறது:
பைபிள் தந்த ஆலோசனைகள் என் வாழ்க்கையை காப்பாற்றியது. நான் யெகோவாவின் சாட்சியாய் ஆகாதிருந்தால் இந்நேரம் போதைப்பொருளுக்கு அடிமையாகி செத்துப்போயிருப்பேன் அல்லது ஏதோவொரு சண்டையில் செத்துப்போயிருப்பேன். இது யெகோவாவின் சாட்சியாக இல்லாத என் குடும்பத்தாருக்கே நன்றாக தெரியும்.
ஒரு நல்ல கணவனாக... அப்பாவாக... நடந்துகொள்ள பைபிள் எனக்கு கற்றுக்கொடுத்தது. இப்போது என் குடும்ப வாழ்க்கை மாறிவிட்டது. (எபேசியர் 5:25; 6:4) எல்லாவற்றையும் நாங்கள் குடும்பமாக சேர்ந்தே செய்தோம். என் மனைவியை அடுப்படியே கதியென்று இருக்க விடாமல், கடவுளுடைய சேவையை அதிகமாக செய்ய அவளுக்கு சந்தோஷமாக உதவி செய்கிறேன். சபையில் ஒரு மூப்பராக என்னுடைய பொறுப்புகளை செய்ய என் மனைவியும் எனக்கு சந்தோஷமாக ஆதரவு கொடுக்கிறாள்.
யெகோவாவின் அன்பும் இரக்கமும் என் இதயத்தை தொட்டது. ‘நான் எங்க உருப்பட போறேன்’ என்று தங்களை பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கடவுளுடைய பண்புகளை பற்றி சொல்ல ஆசையாக இருக்கிறேன். ஏனென்றால், நானும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன். யாராக இருந்தாலும் சரி, சுத்தமான வாழ்க்கை வாழ... அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ... உதவி செய்யக்கூடிய சக்தி பைபிளுக்கு இருக்கிறது என்று எனக்கு தெரியும். மற்ற ஆண்களையும் பெண்களையும் மதிக்க, அன்பு காட்ட கற்றுக்கொண்டேன். என்மீது சுயமரியாதையையும் வளர்த்துக்கொண்டேன். அதற்கு பைபிள்தான் எனக்கு உதவி செய்தது. ▪ (w16-E No. 3)