வன்முறை இல்லாத உலகம் வருமா?
நீங்கள் எப்போதாவது வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? அல்லது உங்களுடைய குடும்பத்தில் யாராவது வன்முறைக்குப் பலியாகியிருக்கிறார்களா? நீங்கள் வன்முறைக்குப் பலியாவீர்கள் என்று பயப்படுவதற்குக் காரணம் இருக்கிறதா? வன்முறை “உலகம் முழுவதும் பரவிவரும் ஓர் உடல்நலப் பிரச்சினை” என அழைக்கப்படுகிறது. சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
வீடுகளில் வன்முறையும் பாலியல் கொடுமையும்: “வாழ்க்கையில் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில், மூன்றில் ஒரு பெண் நெருக்கமான ஒருவரால் தாக்கப்படுகிறாள் அல்லது பாலியல் கொடுமை செய்யப்படுகிறாள்” என ஐக்கிய நாட்டு சங்கம் அறிவிக்கிறது. “உலகம் முழுவதிலும் ஐந்து பெண்களில் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுவாள் அல்லது பலாத்காரம் செய்ய வந்தவனிடமிருந்து தப்பித்திருப்பாள் என கணக்கிடப்படுகிறது.”
வீதிகளில் குற்றச்செயல்கள்: ஐக்கிய மாகாணங்களில், 30,000-க்கும் அதிகமான வன்முறைக் கும்பல்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை செய்யப்படுகிறது. லத்தீன் அமெரிக்காவில், கிட்டத்தட்ட மூன்று பேரில் ஒருவர் குற்றச்செயலுக்குப் பலியாவதாகச் சொல்லப்படுகிறது.
படுகொலைகள்: ஏறக்குறைய ஐந்து லட்சம் பேர் சமீப வருடத்தில் கொலை செய்யப்பட்டதாகக் கணக்கிடப்படுகிறது. இந்த எண்ணிக்கை, போர்களில் கொல்லப்பட்டவர்களைவிட அதிகம். தென் ஆப்பிரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் கொலைகளின் சராசரி விகிதம் மிக அதிகமாக இருக்கிறது. இது, உலக முழுவதும் நடக்கும் கொலைகளின் சராசரியைவிட நான்கு மடங்கு அதிகமாகும். லத்தீன் அமெரிக்காவில் 1,00,000-க்கும் அதிகமானவர்களும், பிரேசிலில் மட்டும் சுமார் 50,000 பேரும் ஒரே ஆண்டில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், வன்முறைக்கு நிரந்தர தீர்வு காண முடியுமா?
வன்முறையை ஒழித்துக்கட்ட முடியுமா?
வன்முறை ஏன் இந்தளவு அதிகமாகி வருகிறது? அதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன, அவற்றில் சில: சமுதாய மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாக வரும் மன அழுத்தம், மற்றவர்களுடைய உயிரைத் துச்சமாக நினைப்பது, மதுபானத்தையும் போதைப்பொருளையும் தவறாகப் பயன்படுத்துவது, பெரியவர்களுடைய வன்முறைப் போக்கை பிள்ளைகள் தங்களுடைய கண்ணால் பார்ப்பது, குற்றவாளிகள் தண்டனை பெறாமல் தப்பித்துக்கொள்வது.
வன்முறையைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில், உலகில் சில பகுதிகளில் முன்னேற்றம் இருக்கிறது என்பது உண்மைதான். பிரேசில் நாட்டில் சாவோ போலோ என்ற ஜன நெருக்கமான நகரத்தில், கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே சுமார் 80 சதவீதம் கொலைகள் குறைந்திருக்கின்றன. இருந்தாலும், அந்த நகரத்தில் எல்லா வகையான குற்றச்செயல்களும் தீவிரமாகிக்கொண்டே போகின்றன. கொலைகளின் விகிதத்தைப் பொறுத்தவரை, 1,00,000 பேருக்குக் கிட்டத்தட்ட 10 பேர் என்ற விகிதத்திலேயே இன்னும் இருக்கிறது. அப்படியானால், வன்முறையை அடியோடு ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?
வன்முறைக்கு நிரந்தர தீர்வு மக்களிடம்தான் இருக்கிறது. ஆம், அவர்களுடைய மனநிலையும் நடத்தையும் மாறுவதில்தான் இருக்கிறது. வன்முறையில் ஊறிப்போனவர்கள் மாற வேண்டுமென்றால்... பெருமை, பேராசை, சுயநலம் போன்ற குணங்களை விட்டுவிட்டு அன்பு, மரியாதை, மற்றவர்கள்மீது அக்கறை போன்ற குணங்களைக் காட்ட வேண்டும்.
இப்படிப்பட்ட மாபெரும் மாற்றங்களைச் செய்வதற்கு எது ஒருவரைத் தூண்டும்? பைபிள் என்ன கற்றுக்கொடுக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்:
-
“நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே அவர்மீது அன்பு காட்டுவதாகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல.”—1 யோவான் 5:3.
-
‘தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்.’ *—நீதிமொழிகள் 8:13.
கடவுள்மீது அன்பு... அவருக்குப் பிடிக்காததை செய்யக் கூடாது என்ற பயம்... இவைதான் வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் தங்களுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள உதவி செய்யும் சக்தி வாய்ந்த பண்புகள். மேலோட்டமாக அல்ல, ஒருவருடைய முழு சுபாவத்தையும் அடியோடு மாற்றும் வலிமை இவற்றுக்கு இருக்கிறது. இது உண்மையா?
* என்பவரைச் சிந்தித்துப் பாருங்கள். யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படித்த பிறகு, 2000-ஆம் ஆண்டில் ஒரு சாட்சியாக மாறினார். அவர் தன்னுடைய மூர்க்க குணத்தை உண்மையிலேயே மாற்றிக்கொண்டாரா? ஆம், மாற்றிக்கொண்டார். தான் செய்த மோசமான எல்லா செயல்களுக்காகவும் அலெக்ஸ் மிகவும் வருத்தப்படுகிறார். “கடவுள் என்னை மன்னிச்சிட்டார். அதை தெரிஞ்சுக்கிட்டப்போ அவர நேசிக்க ஆரம்பிச்சேன். யெகோவாமேல எனக்கு இருக்கிற நன்றியும் அன்பும்தான் என்னோட வாழ்க்கைய மாத்திக்க எனக்கு உதவி செஞ்சிருக்கு” என்று சொல்கிறார்.
பல தடவை அடிதடிகளில் இறங்கி பிரேசில் நாட்டின் ஜெயிலில் 19 வருஷங்களைக் கழித்த அலெக்ஸ்பிரேசிலைச் சேர்ந்த சாஷார் என்பவர் வீடு புகுந்து திருடுவதிலும் வழிப்பறிக் கொள்ளையிலும் ஈடுபட்டு வந்தார். கிட்டத்தட்ட 15 வருஷங்களாக அவருடைய வாழ்க்கை இப்படித்தான் போய்க்கொண்டிருந்தது. எது அவரை மாற்றியது? சிறையில் இருந்தபோது, யெகோவாவின் சாட்சிகள் அவரைச் சந்தித்தார்கள், அவரும் பைபிளைப் படித்தார். அவர் சொல்கிறார்: “முதல் தடவையா, வாழ்க்கையின் நோக்கத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். கடவுளை நேசிக்க கத்துக்கிட்டேன். அவருக்குப் பயந்து நடக்க கத்துக்கிட்டேன், அதாவது மறுபடியும் மோசமான பழக்கத்தில் ஈடுபட்டு யெகோவாவை வருத்தப்படுத்திவிடக் கூடாது என்ற பயத்தை வளர்த்துக்கிட்டேன். அவர் காட்டின அன்புக்கு நன்றிகெட்டவனாக மாறிட விரும்பல. கடவுள்மேல வைச்சிருந்த அப்படிப்பட்ட அன்பும் பயமும்தான் என்னை நல்லவனா மாத்திச்சு.”
இந்த அனுபவங்களிலிருந்து எதை தெரிந்துகொள்ளலாம்? ஆட்களுடைய வாழ்க்கையையே மாற்றுகிற சக்தி... அதாவது அவர்கள் யோசிக்கிற விதத்தையே மாற்றுகிற சக்தி... பைபிளுக்கு இருக்கிறது. (எபேசியர் 4:23) முன்பு குறிப்பிடப்பட்ட அலெக்ஸ் மேலும் இப்படிச் சொல்கிறார்: “பைபிள்ல இருந்து நான் நிறைய விஷயங்கள கத்துக்கிட்டேன்... அது எப்படி இருந்துச்சுன்னா சுத்தமான தண்ணிய என்மேல ஊத்துன மாதிரி இருந்துச்சு. மனசுல இருந்த கெட்ட எண்ணங்களையெல்லாம் கழுவி, என்னை கொஞ்சம் கொஞ்சமா சுத்தமாக்கிடுச்சு. கெட்ட எண்ணங்களையெல்லாம் ஒழிச்சுக்கட்ட முடியும்னு நான் கற்பனைகூட செஞ்சு பார்க்கல.” பைபிள் சொல்லும் சுத்தமான செய்தியை நம் மனதில் நிரப்பும்போது கெட்ட எண்ணங்கள் நம் மனதிலிருந்து போய்விடும் அல்லது நம் மனம் சுத்தமாகிவிடும். நம்மைச் சுத்தமாக்கும் வல்லமை கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கிறது. (எபேசியர் 5:26) அதனால், கொடூரமான, சுயநலமிக்க ஆட்கள் தங்களுடைய வழிகளை மாற்றிக்கொண்டு, அன்பானவர்களாக... சமாதானமுள்ளவர்களாக... மாற முடியும். (ரோமர் 12:18) பைபிள் தருகிற ஆலோசனைகளை அவர்கள் கடைப்பிடிக்கும்போது வாழ்க்கையில் சமாதானத்தை அனுபவிக்கிறார்கள்.—ஏசாயா 48:18.
240 நாடுகளில் இருக்கிற 80 லட்சத்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் வன்முறையை ஒழித்துக் கட்டும் வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள். இவர்கள் வித்தியாசமான இனத்தை, சமூக அந்தஸ்தை, பின்னணியை சேர்ந்தவர்கள். இவர்கள் கடவுளுக்கு பயந்து நடக்கவும் அவர்மீது அன்பு காட்டவும் மற்றவர்களை நேசிக்கவும் கற்றிருக்கிறார்கள். உலகம் முழுவதும் வாழ்ந்தாலும் ஒரே குடும்பமாக சமாதானத்தோடு வாழ்கிறார்கள். (1 பேதுரு 4:8) வன்முறை இல்லாத உலகம் வரும் என்பதற்கு இவர்கள் உயிருள்ள சாட்சிகளாக இருக்கிறார்கள்.
வன்முறை இல்லாத உலகம்—விரைவில்!
வன்முறையை கடவுள் சீக்கிரத்தில் நீக்குவார் என்று பைபிள் வாக்குறுதி கொடுக்கிறது. ‘தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்படும் நாளில்,’ வன்முறையில் ஈடுபடுகிறவர்களைக் கடவுள் அழிப்பார். (1 பேதுரு 3:5-7) அப்படிப்பட்ட ஆட்கள் இனிமேல் மற்றவர்களுக்குக் கஷ்டம் கொடுக்க முடியாது. கடவுள் குறுக்கிட்டு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்பதை நாம் எப்படி உறுதியாக நம்பலாம்?
“வன்முறையை விரும்புகிற எவனையும் அவர் வெறுக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 11:5, NW) சமாதானத்தையும் நீதியையும் படைப்பாளர் விரும்புகிறார். (சங்கீதம் 33:5; 37:28) அதனால்தான், மூர்க்கத்தனமான ஆட்களை அவர் எப்போதும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்.
ஆம், சமாதானம் தவழும் புதிய பூமி வரப்போகிறது. (சங்கீதம் 37:11; 72:14) வன்முறை இல்லாத அந்தப் பூமியில் வாழ ஆசைப்படுகிறீர்களா? அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். ▪ (w16-E No. 4)
^ பாரா. 14 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.