இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் | சாராள்
“நீ பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறாய்!”
மத்திய கிழக்கு பகுதியைச் சேர்ந்த இந்தப் பெண்ணை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இவள் பெயர் சாராள். வீட்டில், ஒரு அறையின் நடுவில் நின்றுகொண்டு சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் அவள் பார்க்கிறாள். அவளுடைய கண்கள் பார்ப்பதற்கே ரொம்ப அழகாக இருக்கின்றன. ஆனால், அந்த அழகான கண்களில் ஏதோ சோகம் தெரிகிறது. அந்தச் சோகத்துக்கான காரணத்தை நீங்களே புரிந்துகொள்வீர்கள். அவளுடைய வீட்டைப் பற்றிய நிறைய நினைவுகள் அவள் மனதில் இருக்கின்றன. அவளும் அவளுடைய அன்பு கணவன் ஆபிரகாமும் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்த வீடு அது. * அன்பு குடியிருக்கும் இல்லமாக அது இருந்தது.
ஊர் என்ற நகரத்தில் இவர்கள் வாழ்ந்தார்கள். அது செல்வ செழிப்பான நகரம். நிறைய கைவினை கலைஞர்களும் வியாபாரிகளும் வந்துபோகிற நகரம். நிச்சயம் சாராள் தன் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி வைத்திருப்பாள். இதனால் மட்டுமே அந்த வீட்டை சாராள் ரொம்ப முக்கியமாக நினைத்திருப்பாளா? நிச்சயம் இல்லை. கணவனோடு சேர்ந்து சந்தோஷம், துக்கம் போன்றவற்றை அவள் பகிர்ந்துகொண்ட வீடு அது. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து கடவுளிடம் ஜெபம் செய்த வீடு அது. சாராள் நிச்சயம் இந்த வீட்டை ரொம்பவே நேசித்திருப்பாள்.
ஆனால், தனக்கு பழக்கமான எல்லாவற்றையும் விட்டு முன்பின் தெரியாத இடத்துக்கு போக சாராள் தயாராக இருக்கிறாள். அதுவும் 60 வயதில்! வாழ்க்கை பயணத்தில் இனி வரவிருக்கும் கஷ்டநஷ்டங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அவளுடைய சொந்த ஊருக்குத் திரும்பி வர முடியாது என்றும் அவளுக்கு நன்றாக தெரியும்! இவ்வளவு பெரிய முடிவை சாராள் எடுப்பதற்கு என்ன காரணம்? அவளுடைய விசுவாசத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
‘உன் தேசத்தை விட்டு போ’
ஊர் நகரத்தில்தான் சாராள் வளர்ந்தாள். இன்று இந்த தேசம் பாழடைந்து கிடக்கிறது. ஆனால், சாராள் வாழ்ந்த காலத்தில் அது செல்வ செழிப்பான நகரமாக இருந்தது. யூப்ரடிஸ் ஆறு வழியாக வியாபாரிகள் நிறைய தேசங்களிலிருந்து உயர்தரமான பொருள்களை அங்கு இறக்குமதி செய்தார்கள். நிறைய கப்பல்கள் அங்கு வந்துபோனது. அங்குள்ள சந்தையில் பொருள்கள் குவிந்து கிடந்தன. அப்படிப்பட்ட நகரத்தில் வாழ்ந்த சாராளுக்கு நிச்சயம் சுற்றியிருந்த நிறைய பேரை நன்றாக தெரிந்திருக்கும். அவர்களுக்கும் சாராளை நன்றாக தெரிந்திருக்கும். ஏனென்றால், அவள் மிகவும் அழகாக இருந்தாள். அதுமட்டுமல்ல, அவளுடைய குடும்பம் ரொம்ப பெரியதாக இருந்தது.
ஊர் நகரத்து மக்கள் சந்திர கடவுளை வணங்கினார்கள். அந்தக் கடவுளுக்காக மிக உயரமான ஒரு கோபுரம் அந்த நகரத்தில் இருந்தது. ஆனால் சாராள், உண்மைக் கடவுளான யெகோவாவை வணங்கினாள். அவள் விசுவாசத்துக்குப் பேர்போனவளாக இருந்தாள் என்று பைபிள் சொல்கிறது. இப்படிப்பட்ட விசுவாசத்தை அவள் எப்படி வளர்த்துக்கொண்டாள் என்று பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. ஏனென்றால், அவளுடைய அப்பாவே கொஞ்சக் காலத்துக்கு சிலைகளைத்தான் வணங்கிவந்தார். அவள் பிற்பாடு ஆபிரகாமை திருமணம் செய்துகொண்டாள். அவர் அவளைவிட பத்து வயது மூத்தவர். * (ஆதியாகமம் 17:17) கடவுள்மீது விசுவாசம் வைக்கிற எல்லாருக்கும் “தகப்பன்” என்று அவர் பிற்பாடு அழைக்கப்பட்டார். (ரோமர் 4:11) அவர்கள் இரண்டு பேரும் நல்ல கணவன் மனைவியாக இருந்தார்கள். ஒருவருக்கொருவர் மரியாதையையும் அன்பையும் காட்டினார்கள். அவர்களுக்கிடையே நல்ல பேச்சு தொடர்பு இருந்தது. கஷ்டங்களை அவர்கள் சேர்ந்தே சமாளித்தார்கள். கடவுள்மேல் அவர்களுக்கு இருந்த அன்பு அவர்களுடைய மணவாழ்வில் பளிச்சென்று தெரிந்தது.
சாராள் தன் கணவன்மீது உயிரையே வைத்திருந்தாள். சொந்தபந்தங்களோடு அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்துவந்தார்கள். ஆனால், அவர்களுக்கு ஒரேவொரு குறைதான். சாராளுக்கு “குழந்தை பாக்கியம்” இல்லை என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 11:30) அவர்கள் வாழ்ந்த காலத்தில், இப்படிப்பட்ட சூழ்நிலையைச் சமாளிப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும், சாராள் அவளுடைய கடவுளுக்கும் கணவனுக்கும் உண்மையாக இருந்தாள். ஆபிரகாமுடைய அண்ணன் மகன் லோத்து அவர்களுக்கு மகன்போல் இருந்தான். ஏனென்றால், லோத்துவின் அப்பா இறந்துவிட்டார். இப்படி அவர்கள் எல்லாரும் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்துவந்தார்கள். திடீரென்று ஒருநாள் ஆச்சரியமான ஒரு விஷயம் நடந்தது.
அவர்கள் வணங்கிய கடவுள், ஒரு தேவதூதர் மூலமாக ஆபிரகாமுக்கு காட்சியளித்தார்... அவரிடம் பேசினார். நடந்த சம்பவத்தை ஆபிரகாமால் நம்பவே முடியவில்லை. இந்த ஆச்சரியமான விஷயத்தை சாராளிடம் சொல்ல அவர் ஓடி வருகிறார். கடவுள் தனக்கு காட்சியளித்தார் என்று ஆபிரகாம் சொன்னவுடன் ஆச்சரியத்தில் சாராள், “கடவுள் என்ன சொன்னாரு, சொல்லுங்க?” என்று கேட்டிருக்கலாம். யெகோவா என்னவெல்லாம் சொன்னார் என்று யோசித்துப் பார்த்து, ஒன்றுவிடாமல் சாராளிடம் அவர் சொல்லியிருப்பார். “நீ உன் தேசத்தையும் உன் சொந்தக்காரர்களையும்விட்டு நான் காட்டப்போகிற தேசத்துக்கு வா” என்று யெகோவா சொன்னதை சாராளிடம் சொன்னார். (அப்போஸ்தலர் 7:2, 3) ஆச்சரியம் ஒருபக்கம் இருந்தாலும், யெகோவா கொடுத்த அந்த புதிய நியமிப்பைப் பற்றி அவர்கள் யோசித்திருப்பார்கள். அவர்களுக்கு இருந்த சொகுசான... நிலையான... வாழ்க்கையைவிட்டு இப்போது அவர்கள் நாடோடிகளைப் போல வாழ போகிறார்கள்! இதைப் பற்றி சாராள் என்ன நினைக்கிறாள்? அவள் என்ன சொல்லப்போகிறாள்? இதைத் தெரிந்துகொள்ள சாராளின் முகத்தை ஆபிரகாம் உற்றுப் பார்க்கிறார். யெகோவா சொன்னதைச் செய்ய ஆபிரகாமுக்கு சாராள் பக்கபலமாக இருப்பாளா?
அவர்களிடம் சொன்னதுபோல் கடவுள் நம்மிடமோ நம் துணையிடமோ எதுவும் சொன்னது கிடையாது. அதனால், சாராளுடைய சூழ்நிலையை நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால், அவர்களைப் போல் சில முக்கியமான தீர்மானங்களை நாமும் எடுக்க வேண்டியிருக்கிறது. பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிற உலகத்தில் நாம் வாழ்கிறோம். அதனால், சொத்துசுகம்... சொகுசான வாழ்க்கை... இதற்கு பின்னால் ஓடும்படி இந்த உலகம் சொல்கிறது. ஆனால், வேறொரு விஷயத்துக்கு முதலிடம் கொடுக்கும்படி பைபிள் சொல்கிறது. நம் ஆசைகளுக்கு முதலிடம் கொடுக்காமல் கடவுள் எதிர்பார்க்கும் காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கும்படி சொல்கிறது. (மத்தேயு 6:33) சாராள் எடுத்த தீர்மானத்தை நன்றாக யோசித்துப் பார்த்த பிறகு நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: “என் வாழ்க்கையில நான் எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போறேன்?”
அந்தத் தேசத்தைவிட்டு போனார்கள்
கொண்டுபோவதற்கு தேவையான பொருள்களை சாராள் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறாள். எதையெல்லாம் எடுத்துக்கொண்டு போவது என்று அவளுக்குள் ஒரே குழப்பம். ஒட்டகத்திலும் கழுதை வண்டியிலும் எடுத்துக்கொண்டு போக முடியாத பெரிய பெரிய பொருள்களையும்... நாடோடி வாழ்க்கைக்குத் தேவையில்லாத பொருள்களையும்... சாராள் நிச்சயம் எடுத்து வைத்திருக்க மாட்டாள். அவர்களிடமிருந்த நிறைய சொத்துபத்துகளை அவர்கள் விற்றிருக்கலாம், அல்லது மற்றவர்களுக்கு தானமாக கொடுத்திருக்கலாம். நகரத்தில் வாழ்ந்த சொகுசான வாழ்க்கையையும் அவர்கள் இனி மறந்துவிட வேண்டியதுதான்! நினைத்த நேரத்திலெல்லாம் அவர்களால் இனிமேல் கடை தெருவுக்கு போய் தானியங்கள், இறைச்சி, பழங்கள், துணிமணிகள் என தேவையான எதையுமே வாங்க முடியாது.
வீட்டைவிட்டு வருவது சாராளுக்குத்தான் இன்னும் கஷ்டமாக இருந்திருக்கும். ஊர் நகரத்திலிருந்த வீடுகள் ரொம்ப சொகுசானதாக இருந்தன என்று தொல்பொருள் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. சில வீடுகளில் 12-க்கும் அதிகமான அறைகள் இருந்தன, அதுவும் தண்ணீர் வசதியுடன். அங்கிருந்த சாதாரணமான வீடுகளில்கூட தளம் போடப்பட்டிருந்தது. உறுதியான சுவர்களும் தாழ்ப்பாள்களுடைய கதவுகளும் இருந்தன. அதனால் திருடர்களின் பயம் இருந்திருக்காது. இப்படிப்பட்ட வீட்டில் கிடைக்கும் பாதுகாப்பு ஒரு கூடாரத்தில் கிடைக்குமா? பைபிள் காலங்களில் சகஜமாக காணப்பட்ட சிங்கம், சிறுத்தை, கரடி, ஓநாய் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்குமா?
சாராள் யாரையெல்லாம் பிரிந்து போகப்போகிறாள்? “உன் தேசத்தையும் உன் சொந்தக்காரர்களையும்விட்டு . . . வா” என்று யெகோவா சொல்லியிருந்தார். இது நிச்சயம் அவளுக்குக் கஷ்டமாக இருந்திருக்கும். ஏனென்றால் சாராளுக்கு கூடப்பிறந்தவர்கள், கூடப்பிறந்தவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள், அத்தை-மாமா என ஏகப்பட்ட சொந்தக்காரர்கள் இருந்திருப்பார்கள். ஒரு கனிவான பெண்ணாக, அவள் எல்லாரோடும் பாசமாக பழகியிருப்பாள். அவர்களையெல்லாம் இனிமேல் அவளால் பார்க்கவே முடியாது. இருந்தாலும் சாராள் அந்த ஊரைவிட்டு போகத் தயாராக இருந்தாள். அதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு நாளும் செய்துகொண்டே இருந்தாள்.
அந்த ஊரைவிட்டு கிளம்பும் நாள் வந்தது. எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அங்கிருந்து கிளம்ப சாராள் தயாராக இருந்தாள். குடும்பத் தலைவரான தேராகு ஆபிரகாமோடும் சாராளோடும் போனார். அப்போது தேராகுவுக்கு கிட்டத்தட்ட 200 வயது. (ஆதியாகமம் 11:31) இந்த வயதான அப்பாவைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் சாராளுக்கு இருந்தது. யெகோவாவுக்கு கீழ்ப்படிந்து இவர்கள் எல்லாருமே “கல்தேயருடைய தேசத்தைவிட்டு” புறப்பட்டுப் போனார்கள். லோத்துவும் இவர்களோடு போனார்.—அப்போஸ்தலர் 7:4.
அவர்கள் யூப்ரடிஸ் ஆறு போகும் திசையில், அதாவது வடமேற்கு திசையில், 960 கி.மீ. (600 மைல்) தூரத்திலிருந்த ஆரானுக்குப் போகிறார்கள். இங்கு அவர்கள் கொஞ்சக் காலம் தங்கினார்கள். ஒருவேளை தொடர்ந்து பயணம் செய்ய முடியாத அளவுக்கு தேராகுவின் உடல்நிலை மோசமாகி இருக்கலாம். கடைசியில், அவர் 205 வயதில் இறந்துபோனார். அதுவரை அவர்கள் அந்த ஊரில் இருந்தார்கள். அவர்கள் அடுத்த பயணத்தைத் தொடர்வதற்கு முன்னால் யெகோவா ஆபிரகாமிடம் திரும்பவும் பேசினார். அந்தத் தேசத்தைவிட்டு அவர் காட்டும் தேசத்துக்குப் போகும்படி மறுபடியும் சொன்னார். ஆனால் இப்போது, “நான் உன்னை மாபெரும் தேசமாக்குவேன்” என்ற வாக்குறுதியையும் கொடுக்கிறார். (ஆதியாகமம் 12:2-4) ஆனால், ஆரானைவிட்டு கிளம்பும்போது அவர்களுக்கு பிள்ளையே இல்லை. அதுவும் ஆபிரகாமுக்கு 75 வயது, சாராளுக்கோ 65 வயது! அப்படியிருக்கும்போது ஆபிரகாமை கடவுள் எப்படி ஒரு தேசமாக ஆக்குவார்? ஒருவேளை ஆபிரகாம் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்வாரோ? அந்தக் காலத்தில் பலரைத் திருமணம் செய்துகொள்வது சகஜமாக இருந்தது. ஒருவேளை சாராளுடைய மனதில் இந்த விஷயங்களெல்லாம் ஓடியிருக்கும்.
எது எப்படியிருந்தாலும் சரி, இப்போது அவர்கள் ஆரானைவிட்டு கிளம்பி பயணத்தைத் தொடர்கிறார்கள். இந்தத் தடவை யாரெல்லாம் அவர்களோடு பயணம் செய்கிறார்கள் தெரியுமா? “ஆரானிலே அவர்கள் சேர்த்துவைத்த எல்லா பொருள்களோடும், சம்பாதித்த வேலைக்காரர்களோடும்” கிளம்பினார்கள் என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 12:5) ஆரானில் ஆபிரகாமும் சாராளும் நிச்சயம் கடவுளைப் பற்றி நிறைய பேரிடம் பேசியிருப்பார்கள். இவர்களோடு சேர்ந்துகொண்ட ஆட்கள் தங்கள் மதத்தை விட்டு ஆபிரகாமின் கடவுளை வணங்க ஆரம்பித்திருக்கலாம் என்று பழங்காலத்து யூத விளக்கவுரைகள் சொல்கின்றன. யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசியதால் சாராளுடைய விசுவாசம் இன்னும் பலமாகியிருக்கும். சாராளிடமிருந்து நமக்கு என்ன பாடம்? நாம் வாழ்கிற இந்தக் காலத்தில் மக்களுக்கு கடவுள் நம்பிக்கை குறைவாகவே இருக்கிறது. சாராளைப்போல நாமும் பைபிளிலிருக்கும் நல்ல செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லலாம், இல்லையா?
எகிப்தை நோக்கி...
கி.மு. 1943, நிசான் 14 அன்று அவர்கள் யூப்ரடிஸ் ஆற்றைக் கடந்திருக்கலாம். யெகோவா வாக்குக் கொடுத்த தேசத்தை நோக்கி தென் திசையில் அவர்கள் பயணம் செய்கிறார்கள். (யாத்திராகமம் 12:40, 41) சாராள் அந்தத் தேசத்தின் அழகை ரசிக்கிறாள்... இங்கும் அங்கும் சுற்றிப் பார்க்கிறாள். அங்கிருக்கும் அருமையான சீதோஷ்ண நிலை அவளுக்கு இதமாக இருந்திருக்கும். சீகேம் நகரத்தில் பெரிய மரங்கள் இருந்த மோரே என்ற இடத்தில் யெகோவா திரும்பவும் ஆபிரகாமுக்கு காட்சியளிக்கிறார். “உன்னுடைய சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்” என்று ஆபிரகாமிடம் சொல்கிறார். “சந்ததி” என்ற வார்த்தையைக் கேட்டவுடன், ஒரு சந்ததி சாத்தானை அழிக்கும் என்று ஏதேன் தோட்டத்தில் யெகோவா சொன்னது ஆபிரகாமுக்கு ஞாபகம் வந்திருக்கும். ஆபிரகாம் மூலமாக ஒரு தேசம் உருவாகும் என்றும் அதன் மூலம் பூமியிலிருக்கும் எல்லா மக்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்றும் யெகோவா ஆபிரகாமிடம் முன்பே சொல்லியிருந்தார்.—ஆதியாகமம் 3:15; 12:2, 3, 6, 7.
இருந்தாலும், பிரச்சினைகளுக்கு இவர்கள் விதிவிலக்கல்ல. கானான் தேசத்தில் பயங்கரமான பஞ்சம் வந்தது. அதனால் ஆபிரகாம் குடும்பத்தோடு எகிப்தை நோக்கி தெற்கே பயணம் செய்ய தீர்மானித்தார். ஆனால், எகிப்தில் ஒரு ஆபத்து வர வாய்ப்பிருந்ததை ஆபிரகாம் உணர்ந்தார். அதனால், அவர் சாராளிடம், “தயவுசெய்து நான் சொல்வதைக் கேள்! நீ பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறாய். அதனால் எகிப்தியர்கள் உன்னைப் பார்க்கும்போது, ‘இவள் இவனுடைய மனைவி’ என்று சொல்லி, உன்னை அடைவதற்காக என்னைக் கொன்றுவிடுவார்கள். அவர்களிடம் நீ என் தங்கை என்று தயவுசெய்து சொல்லிவிடு. அப்போதுதான், அவர்கள் என்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள். உன்னால் நான் உயிர் பிழைப்பேன்” என்று சொன்னார். (ஆதியாகமம் 12:10-13) ஆபிரகாம் ஏன் இப்படியொரு வினோதமான விஷயத்தைச் சொல்ல சொன்னார்?
சில விமர்சகர்கள் சொல்வதுபோல் ஆபிரகாம் பொய் சொன்னாரா? அவர் ஒரு கோழையா? இல்லவே இல்லை. உண்மையிலேயே
சாராள் ஆபிரகாமுக்கு ஒன்றுவிட்ட சகோதரிதான். அதோடு, அவர் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்தது நியாயமானதும்கூட. ஏனென்றால், ஆபிரகாமை ஒரு தேசமாக்குவேன் என்றும் அவர் மூலமாக ஒரு விசேஷ சந்ததி வரும் என்றும் யெகோவா சொல்லியிருந்தார். கடவுளுடைய விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால் ஆபிரகாமின் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது. பொதுவாக, எகிப்திலிருந்த அதிகாரிகள் ஒரு பெண்ணை அடைய நினைத்தால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அந்தப் பெண்ணின் கணவனை கொலையும் செய்வார்கள் என்று தொல்பொருள் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அதனால்தான் ஆபிரகாம் ஞானமாக நடந்துகொண்டார். சாராளும் அவருக்கு ஒத்துழைத்தாள்.சாராள் ரொம்ப அழகாக இருந்தாள். வயதுக்கு மிஞ்சிய அழகு அது! அதனால், ஆபிரகாம் பயந்தது போலவே நடந்தது. அழகான சாராள் பார்வோனின் அதிகாரிகளுடைய கண்ணில்பட்டாள். அந்த அதிகாரிகள் பார்வோனிடம் அவளைப் பற்றி சொன்னார்கள். அதனால், சாராளைக் கூட்டிக்கொண்டு வரும்படி பார்வோன் கட்டளை கொடுத்தான். ஆபிரகாமுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்! சாராளுக்கு எவ்வளவு பயமாக இருந்திருக்கும்! பார்வோனுடைய அரண்மனையில் அவளை பணயக்கைதிபோல் நடத்தாமல் ஒரு விசேஷ விருந்தாளியைப் போல் நடத்தியிருப்பார்கள். பார்வோனுடைய திட்டமே, தன்னிடம் இருக்கும் சொத்துசுகங்களைக் காட்டி, சாராளை மயக்கி, அவள் “அண்ணனுடைய” சம்பந்தத்தோடு அவளைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்பதுதான்.—ஆதியாகமம் 12:14-16.
பார்வோனுடைய அரண்மனை மேல்மாடத்தில் நின்று சாராள் எகிப்து தேசத்தைப் பார்க்கிறாள். அந்த அரண்மனையில் இருந்தபோது அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? வாழ்க்கையில் திடீரென்று ஒரு மாற்றம். பாதுகாப்பான சுவர்கள் இருக்கும் அறையில் மீண்டும் ஒரு வாழ்க்கை. தளம் போட்ட வீடு... வகை வகையான உணவு... என எல்லாமே திரும்பவும் அவளுக்குக் கிடைத்தது. ஊர் நகரத்தில் இருந்ததைவிட இன்னும் சொகுசான வாழ்க்கை! இதைப் பார்த்து சாராள் மயங்கிவிட்டாளா? ஆபிரகாமுக்கு துரோகம் செய்துவிட்டு பார்வோனை கல்யாணம் செய்திருந்தால் சாத்தானுக்கு எவ்வளவு கொண்டாட்டமாக இருந்திருக்கும்! ஆனால் சாராள் அப்படி எதையும் செய்யவில்லை. ஆபிரகாமுக்கும் யெகோவாவுக்கும் உண்மையாக இருந்தாள். திருமண பந்தத்தை உயர்வாக மதித்தாள். ஒழுக்கங்கெட்ட இந்த உலகத்தில் வாழும் திருமணமானவர்கள் சாராளைப் போல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! சாராளைப் போலவே நீங்களும் நண்பர்களிடமும் அன்பானவர்களிடமும் உண்மையாக இருப்பீர்களா?
இந்த அழகான பெண்ணைக் காப்பாற்ற யெகோவாவே தலையிட்டார். பார்வோனையும் அவன் வீட்டில் இருந்தவர்களையும் கொடிய நோயால் தண்டித்தார். சாராள் ஆபிரகாமுடைய மனைவி என்று தெரிந்தவுடன் பார்வோன் அவளை ஆபிரகாமிடமே அனுப்பிவிட்டான். மொத்த குடும்பத்தையும் எகிப்தைவிட்டே போகும்படி சொன்னான். (ஆதியாகமம் 12:17-20) நெஞ்சார நேசித்த மனைவி திரும்ப கிடைத்தவுடன் ஆபிரகாம் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்! ஏற்கெனவே சாராளை, “நீ பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறாய்!” என்று வர்ணித்திருக்கிறார். அவளுடைய அழகை ஆபிரகாம் ரசித்தாலும் அவளுடைய தங்கமான குணத்தை உயர்வாக மதித்தார். இதுதான் உண்மையான அழகு. இதைத்தான் யெகோவாவும் உயர்வாக மதிக்கிறார். (1 பேதுரு 3:1-5) இப்படிப்பட்ட அழகை, அதாவது அருமையான குணத்தை, நம் எல்லாராலும் வளர்த்துக்கொள்ள முடியும். சொத்துபத்துகளைச் சேர்க்க வேண்டும் என்று நினைக்காமல் யெகோவாவுக்கு முதலிடம் கொடுத்தால்... கடவுளைப் பற்றி எல்லாரிடமும் சொன்னால்... ஒழுக்க விஷயத்தில் சோதனைகள் வரும்போது யெகோவாவின் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்தால்... நாமும் சாராளைப் போல விசுவாசத்தைக் காட்டுகிறோம் என்று சொல்லலாம்.
^ பாரா. 3 ஆரம்பத்தில் இவர்கள் ஆபிராம், சாராய் என்று அழைக்கப்பட்டார்கள். ஆனால், யெகோவா இவர்களுக்கு வைத்த பெயர்தான் நிறைய பேருக்குத் தெரியும்.—ஆதியாகமம் 17:5, 15.
^ பாரா. 8 சாராள் ஆபிரகாமுடைய ஒன்றுவிட்ட சகோதரி. தேராகுதான் இவர்கள் இரண்டு பேருக்கும் அப்பா. ஆனால், அம்மாதான் வேறு வேறு. (ஆதியாகமம் 20:12) இன்று இப்படிப்பட்ட உறவு முறையில் யாரும் திருமணம் செய்வதில்லை. ஆபிரகாம்-சாராளின் காலத்தில் வாழ்ந்தவர்கள் நம்மைவிட பலமடங்கு ஆரோக்கியமாக இருந்தார்கள். காரணம் என்னவென்றால், பரிபூரண ஆரோக்கியத்தோடு படைக்கப்பட்ட ஆதாம்-ஏவாள் இறந்து கொஞ்சக் காலத்திலேயே இவர்கள் வாழ்ந்தார்கள். ஆதாம்-ஏவாளுடைய வம்சத்தில் வந்த இவர்களுக்கும், நல்ல ஆரோக்கியம் இருந்தது. அதனால், நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்துகொள்வதால் வரும் உடல்நல பிரச்சினைகள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு வரவில்லை. ஆனால், 400 வருஷங்களுக்கு பிறகு வாழ்ந்த மக்களுக்கு அப்படிப்பட்ட ஆரோக்கியம் இருக்கவில்லை. அவர்களுடைய வாழ்நாள் குறைந்துவிட்டது. அதனால்தான் “இரத்த சொந்தங்களோடு உடலுறவுகொள்ளக் கூடாது” என்று மோசேயின் திருச்சட்டம் சொன்னது.—லேவியராகமம் 18:6.