கடவுள் எல்லா வேதனைகளுக்கும் சீக்கிரத்தில் முடிவு கட்டுவார்
“யெகோவாவே, நான் எவ்வளவு காலத்துக்குத்தான் உதவிக்காகக் கதறுவேன், நீங்கள் ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்? வன்முறையிலிருந்து காப்பாற்றும்படி எவ்வளவு காலத்துக்குத்தான் கேட்பேன், ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள்?” (ஆபகூக் 1:2, 3) கடவுளுடைய தயவைப் பெற்றிருந்த ஒரு நல்ல மனிதரான ஆபகூக் இந்தக் கேள்விகளைக் கேட்டார். இவர் இப்படியெல்லாம் கேட்டதால், இவருக்கு விசுவாசமே கிடையாது என்று அர்த்தமா? இல்லவே இல்லை! வேதனைகளுக்கு முடிவு கட்ட ஒரு காலத்தைக் குறித்து வைத்திருப்பதாகக் கடவுள் ஆபகூக்குக்கு உறுதியளித்தார்.—ஆபகூக் 2:2, 3.
நீங்களோ உங்களுக்கு நெருக்கமான ஒருவரோ வேதனைகளை அனுபவிக்கும்போது, ‘கடவுள் ஏன் காலம் தாழ்த்துகிறார், இதற்குள் அவர் ஏதாவது செய்திருக்க வேண்டுமே’ என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால், பைபிள் நமக்கு இப்படி நம்பிக்கையளிக்கிறது: “யெகோவா தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றத் தாமதிப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அவர் தாமதிப்பதில்லை. ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனால்தான் உங்கள்மேல் பொறுமையாக இருக்கிறார்.”—2 பேதுரு 3:9.
கடவுள் எப்போது வேதனைகளுக்கு முடிவு கட்டுவார்?
ரொம்பச் சீக்கிரத்தில்! இந்த “சகாப்தத்தின்” கடைசி நாட்களைக் குறிக்கிற ஒரு கூட்டு அடையாளத்தைப் பற்றி, அதாவது ஒரே சமயத்தில் நடக்கும் சம்பவங்களைப் பற்றி, இயேசு சொன்னார். குறிப்பிட்ட ஒரு தலைமுறையினர் அவற்றைப் பார்ப்பார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். (மத்தேயு 24:3-42) அவர் சொன்ன அந்தத் தீர்க்கதரிசனம் நம் காலத்தில் நிறைவேறி வருவதால், கடவுள் ரொம்பச் சீக்கிரத்தில் மனிதர்களுடைய விஷயத்தில் தலையிடப்போகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. a
ஆனால், கடவுள் எப்படி எல்லா வேதனைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவார்? இயேசு பூமியில் இருந்தபோது நிறைய அற்புதங்களைச் செய்தார்; இதன் மூலம், மனிதர்களுடைய வேதனைகளை நீக்கக் கடவுளுக்குச் சக்தி இருக்கிறது என்பதைக் காட்டினார். இதற்குச் சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
இயற்கைப் பேரழிவு: இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் கலிலேயா கடலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, படகு மூழ்கும் அளவுக்குப் பயங்கரமான புயல்காற்று வீசியது. அப்போது, தன்னாலும் தன் பரலோகத் தகப்பனாலும் இயற்கைச் சக்திகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை இயேசு காட்டினார். (கொலோசெயர் 1:15, 16) அவர் வெறுமனே, “உஷ்! அமைதியாக இரு!” என்று சொன்னார். உடனே “காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டானது.”—மாற்கு 4:35-39.
நோய்: பார்வை இல்லாதவர்களையும், நடக்க முடியாதவர்களையும், காக்காய்வலிப்பு, தொழுநோய் போன்ற பலவிதமான நோய்களால் அவதிப்பட்டவர்களையும் குணப்படுத்துகிற திறன் இயேசுவுக்கு இருந்தது. “எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார்” என்று பைபிள் சொல்கிறது.—மத்தேயு 4:23, 24; 8:16; 11:2-5.
பஞ்சம்: இயேசு தன்னுடைய பரலோகத் தகப்பன் கொடுத்த சக்தியைப் பயன்படுத்தி, கொஞ்சமாக இருந்த உணவை அதிகமாக்கினார். தன்னுடைய ஊழியக் காலத்தின்போது அவர் இப்படி இரண்டு முறை ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவளித்தார் என்பதை பைபிள் பதிவுகள் காட்டுகின்றன.—மத்தேயு 14:14-21; 15:32-38.
மரணம்: இறந்துபோயிருந்த மூன்று பேரை இயேசு உயிர்த்தெழுப்பியது பற்றிய பைபிள் பதிவுகள், மரணத்தை ஒழிக்க யெகோவாவுக்குச் சக்தி இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. இயேசு உயிர்த்தெழுப்பியவர்களில் ஒருவர், இறந்துபோய் நான்கு நாட்களாகியிருந்தன.—மாற்கு 5:35-42; லூக்கா 7:11-16; யோவான் 11:3-44.
a கடைசி நாட்களைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள, இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில் பாடம் 32-ஐ பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம். www.dan124.com வெப்சைட்டிலிருந்து இதை இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.