சாவின் பிடி
பிரபலமான ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிய வீடியோ படத்தைப் பார்க்கிறீர்கள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர் ஒருவேளை உங்களுக்குப் பிடித்த இசைக் கலைஞராக இருக்கலாம். சிறுவயதிலேயே அவர் இசையைக் கற்றுக்கொள்கிறார், நிறைய பயிற்சியும் செய்கிறார். இப்படித்தான் படம் ஆரம்பமாகிறது. பிறகு, நிறைய இசைக் கச்சேரிகளை நடத்துகிறார். அதற்காகப் பல நாடுகளுக்குப் போகிறார். உலகளவில் பிரபலமாகிறார். காலப்போக்கில் அவருக்கு முதுமை தட்டிவிடுகிறது. கடைசியில், இறந்துபோகிறார்.
இந்த உண்மைக் கதை, வாழ்க்கையைப் பற்றிய எதார்த்தத்தை எடுத்துக் காட்டுகிறது. இசைக் கலைஞர்கள் மட்டுமல்ல, விஞ்ஞானிகளும் சரி, விளையாட்டு வீரர்களும் சரி, மற்ற பிரபலங்களும் சரி, இதே முடிவைத்தான் சந்திக்கிறார்கள். வாழ்க்கையில் அவர்கள் நிறைய சாதித்திருக்கலாம். ஆனால், முதுமையும் சாவும் இல்லையென்றால் அவர்கள் இன்னும் என்னவெல்லாம் சாதித்திருப்பார்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
ஏற்றுக்கொள்வதற்குக் கஷ்டமாக இருந்தாலும், வாழ்க்கையின் எதார்த்தம் இதுதான். (பிரசங்கி 9:5) எவ்வளவுதான் முட்டி மோதினாலும், நம்மால் முதுமையிலிருந்தும் மரணத்திலிருந்தும் தப்பிக்க முடிவதில்லை. சில சமயங்களில், விபத்தினாலோ கொடிய நோயினாலோ நம் வாழ்க்கை திடீரென்று முடிவுக்கு வரலாம். பைபிள் சொல்வது போல, நம் வாழ்க்கை “கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு மறைந்துபோகிற மூடுபனியைப் போல்” இருக்கிறது.—யாக்கோபு 4:14.
வாழ்க்கை நிச்சயமற்றது என்பதால் சிலர் “சாப்பிடுவோம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்ற எண்ணத்தில் காலத்தை ஓட்டுகிறார்கள். (1 கொரிந்தியர் 15:32) ஆனால், இது எதைக் காட்டுகிறது? மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது என்ற கசப்பான உண்மையை இவர்கள் ஏற்றுக்கொள்வதைத்தானே காட்டுகிறது? நீங்கள்கூட ஏதோவொரு கட்டத்தில், அதுவும் பெரிய பிரச்சினையில் சிக்கித் தவிக்கும்போது, ‘வாழ்க்கைங்குறது இவ்வளவுதானா?’ என்று யோசிக்கலாம். இதற்கான பதில் எங்கே கிடைக்கும்?
அறிவியல் ஆராய்ச்சிகள் இதற்குப் பதில் சொல்லும் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். அறிவியலிலும் மருத்துவத்திலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதால் மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்க முடிந்திருக்கிறது. அதை இன்னும் அதிகரிப்பதற்குச் சில விஞ்ஞானிகள் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய முயற்சி கைகூடுகிறதோ இல்லையோ, நம் மனதில் வரும் இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேவைப்படுகிறது: நமக்கு ஏன் வயதாகிறது? நாம் ஏன் சாகிறோம்? சாவே இல்லாத வாழ்க்கை வருமா? அடுத்து வரப்போகும் கட்டுரைகள் இவற்றை விளக்கும். அதோடு, ‘வாழ்க்கைங்குறது இவ்வளவுதானா?’ என்ற கேள்விக்கும் பதில் தரும்.