பூமியில் ஒரு பூஞ்சோலை-கற்பனையா அல்லது உண்மையா?
பூக்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலை... பசுமையான புல்வெளி... இதுபோன்ற காட்சிகளை டிவியில் அல்லது புத்தகங்களில் பார்க்கும்போது நம் மனதுக்கு இதமாக இருக்கிறது. இதுபோன்ற இடங்களுக்குப் போகும்போது, கவலைகளை மறந்து நாம் சந்தோஷமாக இருக்கிறோம். ஆனால், வீடு திரும்பும்போது சோகங்களும் கஷ்டங்களும் நம்மை வரவேற்கும்.
இருந்தாலும், பூமி முழுவதும் ஒரு பூஞ்சோலையாக மாற வேண்டும் என்பது பலருடைய ஆசை. இந்த ஆசை என்றைக்காவது நிறைவேறுமா? அல்லது, வெறும் கனவுதானா?
பூமியில் ஒரு பூஞ்சோலை –உண்மையிலேயே இருந்ததா?
இந்தக் கேள்வி மக்களின் மனதில் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்தது. அதுவும், பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு தோட்டத்தைப் பற்றி படிக்கும்போது அவர்களின் ஆர்வம் இன்னும் அதிகமாகிறது. “கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம்” இருந்தது என்று பைபிள் சொல்கிறது. “கடவுளாகிய யெகோவா” அந்தத் தோட்டத்தில், “ருசியான பழங்களைத் தரும் அழகான மரங்களை . . . வளர வைத்தார்.” அந்தத் தோட்டம் ரம்மியமாகவும் அழகாகவும் இருந்தது. எல்லாவற்றையும்விட விசேஷமான ஒன்று அந்தத் தோட்டத்தில் இருந்தது. அதுதான் தோட்டத்தின் நடுவில் இருந்த ‘வாழ்வுக்கான மரம்.’—ஆதியாகமம் 2:8, 9.
அந்தத் தோட்டத்தில் நான்கு ஆறுகள் ஓடியதாக ஆதியாகமம் புத்தகம் சொல்கிறது. அதில் இரண்டு ஆறுகள் இன்றுவரை பிரபலமாக இருக்கின்றன. ஒன்று டைகிரீஸ் (அல்லது இதெக்கேல்), மற்றொன்று யூப்ரடிஸ். (ஆதியாகமம் 2:10-14; அடிக்குறிப்பு) இந்த இரண்டு ஆறுகளும் ஈராக் வழியாக பாய்ந்து பாரசீக வளைகுடாவில் போய் சேர்கின்றன. இன்றிருக்கும் ஈராக், பண்டைய காலத்து பெர்சிய சாம்ராஜ்யத்தின் பாகமாக இருந்தது.
பூமியில் ஒருகாலத்தில் இருந்த பூஞ்சோலை, அதாவது ஏதேன் தோட்டம், பெர்சிய பாரம்பரியத்தின் பாகமாக இருக்கிறது. 16-வது நூற்றாண்டில் செய்யப்பட்ட ஒரு பெர்சிய தரைவிரிப்பு (Persian carpet) இதற்கு ஒரு அத்தாட்சி. அமெரிக்காவிலுள்ள பிலடெல்ஃபியா கலை அருங்காட்சியகத்தில் அந்தத் தரைவிரிப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அதில், அழகான பூக்களும் மரங்களும் இருக்கும் தோட்டத்தின் படம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தைச் சுற்றி, சுவர் கட்டப்பட்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது, பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் அழகான ஏதேன் தோட்டத்தை நம் கண் முன்னால் கொண்டுவருகிறது. அதுமட்டுமல்ல, ‘சுற்றி சுவர் இருக்கும் தோட்டம்’ என்ற பெர்சிய வார்த்தைக்கு, ‘பூஞ்சோலை’ என்ற அர்த்தமும் இருக்கிறது.
உலகத்தில் இருக்கும் பல கலாச்சாரங்களிலும் பல மொழிகளிலும் பூஞ்சோலைப் பற்றி, அதாவது ஏதேன் தோட்டத்தைப் பற்றி, வித்தியாசமான கதைகள் சொல்லப்படுகின்றன. பூமி முழுவதும் மக்கள் சிதறிப்போகும்போது இந்தத் தோட்டத்தைப் பற்றிய நினைவுகளை அவர்களோடு எடுத்து சென்றார்கள். காலம் போகப்போக கட்டுக்கதைகளும் மத நம்பிக்கைகளும் அந்தத் தோட்டத்தைப் பற்றிய உண்மைகளோடு கலந்துவிட்டன. இன்றும்கூட பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இடங்களை, ஏதேன் தோட்டம் போல் இருக்கிறது என்று மக்கள் வர்ணிக்கிறார்கள்.
ஏதேன் தோட்டத்தைத் தேடி...
ஏதேன் தோட்டத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்லிக்கொண்டார்கள். முதலில், பிரிட்டிஷ் ராணுவ தளபதியான சார்ல்ஸ் கார்டன் என்ன சொன்னார் என்று பாருங்கள். அவர், 1881-ல் ஸேசேல்ஸ் என்ற இடத்தைப் பார்க்க போனார். அப்போது, அங்கிருந்த வேலி டி மா * என்ற இடம் அவர் கண்ணில்பட்டது. அந்த இடத்தின் அழகைப் பார்த்து அவர் அப்படியே அசந்துபோய்விட்டார். அதுதான் ஏதேன் தோட்டமாக இருக்க வேண்டும் என்று சொன்னார். அடுத்து, இத்தாலியைச் சேர்ந்த கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் என்ன சொன்னார் என்று கவனியுங்கள். 15-ஆம் நூற்றாண்டில் அவர் ஹீஸ்பானியோலா தீவுக்குப் போனபோது ஏதேன் தோட்டத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்தார். இன்றிருக்கும் டொமினிகன் குடியரசு மற்றும் ஹெய்டிதான் அந்த ஹீஸ்பானியோலா தீவு.
நவீனகால சரித்திர புத்தகமான மேப்பிங் பாரடைஸில் 190-க்கும் அதிகமான பழங்காலத்து வரைபடங்களைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் பலவற்றில் ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் இருப்பதுபோல் காட்டப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு வரைபடம் வித்தியாசமாக இருக்கிறது. இந்த வரைபடம், 13-வது நூற்றாண்டைச் சேர்ந்த பாவுடஸ் ஆப் லிபானே என்ற கையெழுத்துப் பிரதியின் நகலிலிருந்து எடுக்கப்பட்டது. அந்த வரைபடத்தின் தொடக்கத்தில் ஒரு நீளமான சதுரமும், அதன் நடுவில் ஏதேன் தோட்டமும் இருக்கிறது. அதன் நான்கு ஓரங்களிலிருந்து நான்கு ஆறுகள் பாய்வதுபோல் காட்டப்பட்டிருக்கின்றன. “டைகிரீஸ்,” “யூப்ரடிஸ்,” “பைசோன்,” “கீயோன்” என்ற பெயர்கள் அந்த ஆறுகளின் மேல் எழுதப்பட்டிருந்தன. உலகின் நான்கு திசைகளிலும் கிறிஸ்தவ மதம் பரவும் என்பதை அது குறிப்பதாகத் தெரிகிறது. இந்த விவரிப்புகள் எல்லாம் எதைக் காட்டுகின்றன? ஆரம்பத்திலிருந்த ஏதேன் தோட்டம் எங்கே இருந்தது என்பதை மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் அதைப் பற்றிய நினைவுகள் மக்களின் மனதில் நீங்காமல் இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.
17-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன், பாரடைஸ் லாஸ்ட் என்ற பிரபல காவியத்தை எழுதினார்.
ஆதியாகமம் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், அதாவது ஆதாம் பாவம் செய்து ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட தகவலின் அடிப்படையில், அவர் அந்தக் காவியத்தை எழுதினார். பூமியில் மக்களுக்கு என்றென்றும் வாழும் வாழ்க்கை திரும்பவும் கிடைக்கும் என்பதைச் சிறப்பித்து காட்ட, “பூமி மீண்டும் ஒரு பூஞ்சோலையாக மாறும்” என்ற வார்த்தைகளை எழுதினார். பிறகு, பாரடைஸ் ரீகெய்ன்ட் என்ற காவியத்தையும் அவர் எழுதினார்.மக்களுடைய மனப்பான்மையில் மாற்றம்
ஆதாம்-ஏவாள் இழந்த ஏதேன் தோட்டம் மக்களின் மனதில் நீங்காமல் இருந்தது என்று சரித்திரம் காட்டுகிறது. ஆனால், இப்போது ஏன் மக்கள் அதைப் பற்றி யோசிப்பதே இல்லை? மேப்பிங் பாரடைஸ் என்ற புத்தகம் சொல்வதுபோல் ‘ஏதேன் தோட்டத்தைத் தேடுவதில் இறையியலாளர்கள் எந்த ஆர்வமும் காட்டுவதில்லை. இந்த விஷயத்தில் தலையிட அவர்கள் மறுக்கிறார்கள்.’
மக்கள் பூமியில் வாழப்போவது கிடையாது, பரலோகத்துக்குப் போகப்போகிறார்கள் என்று சர்ச்சுகளில் கற்றுக்கொடுக்கிறார்கள். ஆனால், சங்கீதம் 37:29-ல் “நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பூமி இன்று ஒரு அழகான பூஞ்சோலையாக இல்லை. அப்படியிருக்கும்போது பூஞ்சோலை பூமியில் மக்கள் வாழ்வார்கள் என்ற வாக்குறுதியை நம்மால் எப்படி நம்ப முடியும்? *
பூஞ்சோலை பூமி–கனவல்ல நிஜம்!
ஆரம்பத்தில் மனிதர்கள் இழந்த பூஞ்சோலை பூமியைத் திரும்ப கொடுப்பதாக யெகோவா தேவன் வாக்குக்கொடுத்திருக்கிறார். ஏனென்றால், அந்தப் பூஞ்சோலை பூமியைப் படைத்ததே அவர்தான். ஆனால், அவர் அதை எப்படிச் செய்யப்போகிறார்? இயேசு நமக்கு சொல்லிக்கொடுத்த ஜெபத்தில் என்ன சொன்னார் என்று கவனியுங்கள். “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்” என்று சொன்னார். (மத்தேயு 6:10) இங்கு சொல்லப்பட்டிருக்கும் அரசாங்கம் இயேசுவின் கட்டுப்பாட்டில் இருக்கும். அது முழு உலகத்தையும் ஆட்சி செய்யும். பூமியில் இருக்கும் எல்லா மனித அரசாங்கங்களையும் கடவுளுடைய அரசாங்கம் நீக்கிவிடும். (தானியேல் 2:44) கடவுளின் விருப்பப்படி இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக அந்த அரசாங்கம் மாற்றும்.
எதிர்காலத்தில் வரப்போகும் பூஞ்சோலை பூமி எப்படியிருக்கும் என்பதை பல காலத்துக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதினார். இன்று நமக்கு இருக்கும் பிரச்சினைகள், சண்டை சச்சரவுகளால் வரும் மனச்சோர்வு என எதுவுமே அந்தப் பூஞ்சோலை பூமியில் இருக்காது. (ஏசாயா 11:6-9; 35:5-7; 65:21-23) இந்த வசனங்களை உங்களுடைய பைபிளிலிருந்து படித்துப் பாருங்கள். அப்போது, கடவுளுக்குக் கீழ்ப்படியும் மக்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கையை அவர் தரப்போகிறார் என்று நீங்களே தெரிந்துகொள்வீர்கள். கடவுள் கொடுத்த வாக்குறுதிகளை உறுதியாக நம்பவும் இது உங்களுக்கு உதவும். ஆதாம் இழந்த பூஞ்சோலை பூமியையும் கடவுளுடைய ஆசீர்வாதத்தையும் நாம் சீக்கிரத்தில் அனுபவிக்க போகிறோம்.—வெளிப்படுத்துதல் 21:3.
பூஞ்சோலை பூமி வெறும் கனவல்ல, நிஜமான ஒன்று என்பதை நாம் எப்படி நம்பலாம்? “வானம் யெகோவாவுக்குச் சொந்தம். ஆனால், இந்தப் பூமியை மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. “பொய் சொல்ல முடியாத கடவுள் பல காலத்துக்கு முன்பே” பூமி ஒரு பூஞ்சோலையாக மாறும் என்று ‘வாக்குறுதி தந்திருக்கிறார்.’ (சங்கீதம் 115:16; தீத்து 1:3) என்றுமே அழியாத பூஞ்சோலை பூமி எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!
^ பாரா. 10 இப்போது இந்த இடம் உலக பாரம்பரிய களமாக இருக்கிறது.
^ பாரா. 15 குர்ஆனிலும் இப்படிப்பட்ட ஒரு கருத்து சொல்லப்பட்டிருக்கிறது. அல் அன்பியா [தீர்க்கதிரிசிகள்] அத்தியாயம் 21, வசனம் 105 இப்படிச் சொல்கிறது: “நம்முடைய நல்லடியார்களே இப் பூமிக்கு வாரிசுகள் ஆவார்கள்.”