Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

1918—நூறு வருஷங்களுக்கு முன்பு

1918—நூறு வருஷங்களுக்கு முன்பு

“1918-ம் வருஷத்தில் நமக்கு என்ன காத்திருக்கிறது?” இந்த வார்த்தைகளோடுதான் ஜனவரி 1, 1918 காவற்கோபுரம் ஆரம்பித்தது. முதல் உலகப் போர் இன்னும் ஐரோப்பாவை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது. ஆனாலும், அந்த வருஷத்தின் ஆரம்பத்தில் நடந்த சில சம்பவங்கள், பைபிள் மாணாக்கர்களுக்கும் உலக மக்களுக்கும் நல்ல எதிர்காலம் காத்திருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது.

உலகெங்கும் சமாதானத்தைப் பற்றிய பேச்சு

ஜனவரி 18, 1918-ல், ஐ.மா. காங்கிரஸில் கொடுத்த தன்னுடைய பேச்சில், “நீதியையும் நிலையான சமாதானத்தையும்” நிலைநாட்டுவதற்குத் தேவையான விஷயங்களென்று தான் நினைத்த 14 குறிப்புகளை அதிபர் உட்ரோ வில்சன் முன்வைத்தார். தேசங்களுக்கு இடையில் வெளிப்படையான பேச்சுவார்த்தைகள் இருக்க வேண்டும்... ஆயுதக் குறைப்பு செய்யப்பட வேண்டும்... “பெரிய மற்றும் சிறிய மாகாணங்களுக்கு” பிரயோஜனம் தரும் விதத்தில் “தேசங்களுக்கான பொதுவான சங்கத்தை” ஏற்படுத்த வேண்டும்... போன்ற விஷயங்களை முன்வைத்தார். அவருடைய “பதினான்கு குறிப்புகள்,” பிற்பாடு சர்வதேச சங்கத்தை ஏற்படுத்துவதிலும், முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த வெர்செயில்ஸ் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதிலும் பயன்படுத்தப்படவிருந்தன.

எதிரிகளின் தோல்வி

முந்தைய வருஷம் * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) குழப்பங்கள் நிறைந்த வருஷமாக இருந்தபோதிலும், உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியின் வருடாந்தரக் கூட்டத்தில் நடந்த சம்பவங்களால், பைபிள் மாணாக்கர்களுக்கு சுமூகமான சூழல் நெருங்கிவருவதுபோல் தோன்றியது.

ஜனவரி 5, 1918-ல் நடந்த வருடாந்தரக் கூட்டத்தில், பெத்தேலிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த முக்கியப் பொறுப்புகளிலிருந்த சகோதரர்கள், அமைப்பைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள். பயணக் கண்காணியாக உண்மையோடு சேவை செய்த ரிச்சர்ட் எச். பார்பரின் ஜெபத்தோடு கூட்டம் ஆரம்பித்தது. கடந்த வருஷத்தின் அறிக்கை வாசிக்கப்பட்ட பிறகு, அமைப்பின் இயக்குநர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வருடாந்தர ஓட்டெடுப்பு நடந்தது. சகோதரர் ஜோஸஃப் ரதர்ஃபோர்டையும், மற்ற ஆறு சகோதரர்களையும் சகோதரர் பார்பர் முன்மொழிந்தார். பிறகு, எதிர் தரப்பை ஆதரித்த ஒரு வழக்கறிஞர், பெத்தேலிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த சகோதரர்கள் உட்பட ஏழு சகோதரர்களுடைய பெயரை முன்மொழிந்தார். ஆனால், அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். சங்கத்தின் பங்குதாரர்கள், அமோக ஆதரவோடு சகோதரர் ரதர்ஃபோர்டையும் மற்ற ஆறு சகோதரர்களையும் இயக்குநர்களாகத் தேர்ந்தெடுத்தார்கள்.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சகோதரர்கள் நிறைய பேர், “இதுவரை கலந்துகொண்டதிலேயே அதுதான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட மாநாடு” என்று சொன்னார்கள். ஆனால், அவர்களுடைய சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை.

நிறைவேறித்தீர்ந்த இரகசியத்துக்கு வந்த பிரதிபலிப்பு

நிறைவேறித்தீர்ந்த இரகசியம் என்ற புத்தகத்தை பல மாதங்களாக பைபிள் மாணாக்கர்கள் வினியோகம் செய்துவந்தார்கள். நேர்மையுள்ளம் படைத்தவர்கள், அதிலிருந்த பைபிள் சத்தியங்களை மனதார ஏற்றுக்கொண்டார்கள்.

நிறைவேறித்தீர்ந்த இரகசியம் என்ற புத்தகத்தைப் படித்து வெறும் ஐந்து வாரங்களிலேயே சத்தியத்தை ஏற்றுக்கொண்ட ஒரு தம்பதியைப் பற்றி, கனடாவில் பயணக் கண்காணியாக இருந்த இ. எஃப். க்றிஸ்ட் இப்படிச் சொன்னார்: “கணவன் மனைவி ரெண்டு பேரும் கடவுளுக்கு தங்கள முழுசா அர்ப்பணிச்சு, அருமையா முன்னேற்றம் செஞ்சிட்டு வர்றாங்க.”

அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட இன்னொரு நபர், அதிலிருந்து தெரிந்துகொண்ட விஷயங்களை உடனடியாக தன்னுடைய நண்பர்களிடம் சொன்னார். அதனுடைய செய்தியால் அவர் “தாக்கப்பட்டார்.” அதைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் மூணாவது தெருவுல நடந்துபோயிட்டிருந்தேன். ஏதோ ஒண்ணு என்னோட தோள தாக்குச்சு. செங்கல்லுன்னு நான் நினைச்சேன். ஆனா, அது ‘நிறைவேறித்தீர்ந்த இரகசியம்’ புத்தகம்! அத வீட்டுக்கு கொண்டு வந்து ஒரு வரி விடாம படிச்சேன். . . . அந்த புத்தகத்தை ஜன்னல் வழியா எறிஞ்சது ஒரு மதப்போதகர்னு அப்புறமா தெரிஞ்சுக்கிட்டேன் . . . அவர் இதுவரைக்கும் செஞ்ச காரியத்தவிட இப்ப செஞ்ச இந்த ஒரு காரியத்தால, நிறைய பேர வாழ்வின் பாதையில கொண்டுவந்திருக்காருனு உறுதியா நம்புறேன். . . . அந்த போதகரோட கோபத்தால, நாங்க இப்ப கடவுள புகழ்றோம்.”

அந்த மதப்போதகருடைய செயல் ஒன்றும் புதிதல்ல! அரசாங்கத்துக்கு எதிராக மக்களைத் தூண்டுகிற தகவல்களும், போரில் ஈடுபடுவதைத் தடுக்கிற தகவல்களும் அந்தப் புத்தகத்தில் இருப்பதாகச் சொல்லி, பிப்ரவரி 12, 1918-ல் கனடா நாட்டு அதிகாரிகள் அதைத் தடை செய்தார்கள். வெகுசீக்கிரத்திலேயே, அமெரிக்க நாட்டு அதிகாரிகளும் அதேபோல் செய்தார்கள். அமைப்பை முன்நின்று வழிநடத்திய சகோதரர்களைச் சிக்க வைப்பதற்கான ஆதாரங்கள் ஏதாவது கிடைக்குமா என்று பார்ப்பதற்காக பெத்தேலிலும், நியு யார்க், பென்ஸில்வேனியா மற்றும் கலிபோர்னியாவிலிருந்த நம்முடைய அலுவலகங்களிலும் அரசாங்கத்தின் ‘ஏஜண்ட்டுகள்’ சோதனை செய்தார்கள். நிறைவேறித்தீர்ந்த இரகசியம் புத்தகம் போர் முயற்சிகளைத் தடுக்கிறது என்றும், இப்படிச் செய்வது உளவு சட்டத்துக்கு எதிரானது என்றும் சொல்லி, மார்ச் 14, 1918-ல், அந்தப் புத்தகத்தையும் அதன் வினியோகத்தையும் அமெரிக்க நீதித்துறை தடை செய்தது.

சிறையில் தள்ளப்படுகிறார்கள்!

மே 7, 1918-ல், ஜோவான்னி டேச்சிகா, ஜார்ஜ் ஃபிஷர், அலெக்ஸாண்டர் மேக்மில்லன், ராபர்ட் மார்ட்டின், ஃப்ரெட்ரிக் ராபிசன், ஜோஸஃப் ரதர்ஃபோர்ட், வில்லியம் வான் ஆம்பர்க், க்லேட்டன் உட்வர்த் ஆகிய சகோதரர்களுக்கு எதிராக நீதித்துறை பிடிவாரண்ட்டை வாங்கியது. “சட்டவிரோதமாக மற்றும் வேண்டுமென்றே கீழ்ப்படிய மறுப்பதாகவும், அரசாங்கத்துக்கு உண்மையில்லாமல் நடப்பதாகவும், அமெரிக்க நாட்டின் ராணுவ சேவை மற்றும் கப்பற்படை சேவையைச் செய்ய மறுப்பதாகவும்,” அவர்கள்மீது குற்றம்சாட்டப்பட்டது. ஜூன் 5, 1918-ல், விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. அவர்களுக்குக் கண்டிப்பாகத் தண்டனை கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. எப்படி?

அவர்கள் எந்தச் சட்டத்தை மீறியதாகச் சொல்லி குற்றம்சாட்டப்பட்டார்களோ, அந்தச் சட்டத்தைப் பற்றி, அதாவது உளவு சட்டத்தைப் பற்றி, அமெரிக்க அரசின் அட்டார்னி ஜெனரல் இப்படிச் சொன்னார்: நாட்டுக்கு எதிரான “பிரச்சாரத்தைத் தடுக்கும் வலிமையான சட்டம்தான் இது!” மே 16, 1918-ல், இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை காங்கிரஸ் நிராகரித்துவிட்டது. இல்லையென்றால், “உண்மையானதையும், நல்ல நோக்கத்தோடும், நீதியை மனதில் வைத்தும்” பிரசுரங்களை வெளியிடுகிற ஆட்களை இந்தச் சட்டம் பாதுகாத்திருக்கும். நிறைவேறித்தீர்ந்த இரகசியம் புத்தகம் அவர்களுடைய விவாதத்தில் மிக முக்கிய இடத்தில் இருந்தது. இது சம்பந்தமாக ஐ.மா. காங்கிரஸின் அரசு ஆவணம் இப்படிச் சொல்கிறது: “இந்த மாதிரியான பிரச்சாரத்துக்கு படுமோசமான உதாரணங்களில் ஒன்றுதான் ‘நிறைவேறித்தீர்ந்த இரகசியம்’ என்ற புத்தகம் . . . நம்முடைய கொள்கைகள்மீது ராணுவ வீரர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடும்படி அது செய்கிறது, கட்டாய ராணுவ சேவைக்கு எதிரான ஓர் எண்ணத்தை வளர்த்துக்கொள்ளும்படி . . . தூண்டுகிறது; இதுதான் அதன் ஒரே பலன்.”

ஜூன் 20, 1918-ல், எட்டு சகோதரர்களின் மீது சுமத்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளும் உண்மை என்று ஜூரி முடிவெடுத்தது. அடுத்த நாள், நீதிபதி தன்னுடைய தீர்ப்பைச் சொன்னார். “பிரதிவாதிகளால் மும்முரமாக ஆதரிக்கப்பட்ட, பரப்பப்பட்ட இந்த மதப் பிரச்சாரம் . . . ஜெர்மனியின் ராணுவப் படைப் பிரிவைவிட மிகவும் ஆபத்தானது . . . இதற்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.” இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அந்த எட்டுச் சகோதரர்களும் ஜார்ஜியாவைச் சேர்ந்த அட்லாண்டாவில் இருந்த சிறையில் தள்ளப்பட்டார்கள். அவர்களுக்கு 10-லிருந்து 20 வருட சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது.

ஊழியம் தொடர்கிறது

இந்தக் காலகட்டத்தில், பைபிள் மாணாக்கர்கள் கடுமையான துன்புறுத்தலை அனுபவித்தார்கள். அமெரிக்க புலனாய்வுத் துறை (FBI) அவர்களுடைய நடவடிக்கைகளைப் பற்றி புலன் விசாரணை செய்து ஆயிரக்கணக்கான ஆவணங்களைத் தயாரித்தது. தொடர்ந்து பிரசங்கிப்பதில் நம் சகோதரர்கள் உறுதியாக இருந்ததை இந்த ஆவணங்கள் காட்டுகின்றன.

ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஆர்லன்டோவின் போஸ்ட்மாஸ்டர், FBI-க்கு எழுதிய கடிதத்தில் இப்படிச் சொன்னார்: “[பைபிள் மாணாக்கர்கள்] இந்த ஊரிலிருக்கிற ஒவ்வொரு வீட்டுக்கும் போய் மக்களின் மனதை மாற்றுகிறார்கள். அதுவும், ராத்திரிகளில்தான் பெரும்பாலும் இதைச் செய்கிறார்கள் . . .  மக்களைத் தொல்லைப்படுத்திக்கொண்டே இருப்பதன் மூலம் தங்களுடைய வேலை தொடர வேண்டும் என்று அவர்கள் நினைப்பதுபோல் தோன்றுகிறது.”

பிற்பாடு ஆளும் குழுவில் சேவை செய்த சகோதரர் ஃப்ரெட்ரிக் டபுள்யூ. ஃப்ரான்ஸின் நடவடிக்கைகளைப் பற்றி, போர்த் துறையின் படைத் தலைவர் FBI-க்கு இப்படி எழுதினார்: “எஃப். டபுள்யூ. ஃப்ரான்ஸ் . . . ‘நிறைவேறித்தீர்ந்த இரகசியம்’ புத்தகத்தின் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாவதற்கு முழுவீச்சோடு உதவியிருக்கிறார்.”

பிற்பாடு ஆளும் குழுவில் சேவை செய்த சார்ல்ஸ் ஃபெக்கல் என்ற சகோதரரும் கடுமையான துன்புறுத்தலை அனுபவித்தார். நிறைவேறித்தீர்ந்த இரகசியம் புத்தகத்தை வினியோகம் செய்ததற்காக அதிகாரிகள் அவரைக் கைது செய்தார்கள்; அவருக்கு வருகிற கடிதங்கள் எல்லாவற்றையும் கண்காணித்தார்கள். “ஆஸ்திரியாவைச் சேர்ந்த எதிரி” என்று முத்திரை குத்தப்பட்டு, மேரிலாந்தைச் சேர்ந்த பால்ட்டிமோரில் இருக்கிற சிறையில் ஒரு மாதத்துக்கு அவர் அடைக்கப்பட்டார். தன்னை விசாரித்த அதிகாரிகளிடம் தைரியமாகச் சாட்சி கொடுத்தார். அப்போது, “நல்ல செய்தியை நான் அறிவிக்காவிட்டால் எனக்குக் கேடுதான்!” என்று 1 கொரிந்தியர் 9:16-ல் இருக்கிற பவுலுடைய வார்த்தைகளை அவர் ஞாபகப்படுத்திப் பார்த்தார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

பைபிள் மாணாக்கர்கள் வைராக்கியமாக ஊழியம் செய்ததோடு மட்டுமல்லாமல், அட்லாண்டாவில் அடைக்கப்பட்டிருந்த சகோதரர்களை விடுதலை செய்யும்படி கேட்டு எழுதப்பட்ட மனுவில் ஏராளமானவர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள். ஆனா கே. காட்னர் அதைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “நாங்க எப்பவுமே எதையாவது செஞ்சிட்டே இருந்தோம். சகோதரர்கள் சிறையில இருந்தப்போ, மக்கள்கிட்ட கையெழுத்து வாங்குறதுக்கான ஏற்பாடுகள செஞ்சோம். நாங்க வீடு வீடா போனோம். ஆயிரக்கணக்கான கையெழுத்து வாங்குனோம்! இவங்கெல்லாம் [சிறையில் தள்ளப்பட சகோதரர்கள்] உண்மை கிறிஸ்தவங்கனும், அநியாயமா இவங்கள சிறையில தள்ளியிருக்காங்கனும் மக்கள்கிட்ட சொன்னோம்.”

மாநாடுகள்

அந்தக் கஷ்டமான காலகட்டத்தில், சகோதரர்களை ஆன்மீக ரீதியில் பலப்படுத்துவதற்கு அடிக்கடி மாநாடுகள் நடத்தப்பட்டன. காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “இந்த வருஷத்தில் . . . 40-க்கும் அதிகமான மாநாடுகள் நடத்தப்பட்டன . . . இந்த மாநாடுகள் எல்லாவற்றிலிருந்தும் சிலிர்ப்பூட்டுகிற அனுபவங்கள் கிடைத்தன. இதற்கு முன்பு, வருஷத்தின் சில மாதங்களில் மட்டும்தான் மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த வருஷத்தில் ஒவ்வொரு மாதமும் மாநாடுகள் நடத்தப்பட்டன.”

நேர்மையுள்ளம் படைத்த மக்கள், நல்ல செய்தியை இன்னும் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். ஒஹாயோவில் இருக்கிற கிளீவ்லாண்டில் நடந்த ஒரு மாநாட்டில் 1,200 பேர் கலந்துகொண்டார்கள். ஒரு சின்னப் பையன் உட்பட, மொத்தம் 42 பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். “பெரியவர்கள் பார்த்து வெட்கப்படுகிற அளவுக்கு [அந்தச் சின்னப் பையனுக்கு] கடவுள் மீது நன்றி இருந்தது, கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்ததை அவன் உயர்வாக மதித்தான்.”

அடுத்து என்ன?

1918-ம் வருஷம் முடியும் சமயத்தில், பைபிள் மாணாக்கர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. புருக்லினில் இருக்கிற சொத்துகளில் சில விற்கப்பட்டன. பென்ஸில்வேனியாவின் பிட்ஸ்பர்க்குக்கு தலைமை அலுவலகம் மாற்றப்பட்டது. முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள் இன்னும் சிறையில்தான் இருந்தார்கள். ஆனாலும், ஜனவரி 4, 1919-ல் இன்னொரு வருடாந்தர கூட்டத்துக்கு சங்கத்தின் பங்குதாரர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

நம்முடைய சகோதரர்கள் தொடர்ந்து தங்களுடைய வேலையைச் செய்தார்கள். அது நல்ல பலன்களைத் தரும் என்பதில் அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தார்கள். அதனால், “உன்னைத் தாக்குவதற்காக உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் ஒன்றுமில்லாமல் போகும்” என்ற வசனத்தை 1919-ன் வருடாந்தர வசனமாகத் தேர்ந்தெடுத்தார்கள். (ஏசா. 54:17) நிலைமைகள் தலைகீழாக மாறவிருந்தது. அது அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தவிருந்தது, தங்களுக்கு முன்னாலிருந்த மாபெரும் வேலையைச் செய்து முடிப்பதற்கான பலத்தைத் தரவிருந்தது.

^ பாரா. 6 2017 யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக், (ஆங்கிலம்) பக்கங்கள் 172-176-ல் இருக்கிற “நூறு வருஷங்களுக்கு முன்பு—1917” என்ற குறிப்பைப் பாருங்கள்.

^ பாரா. 22 மார்ச் 1, 1969 காவற்கோபுரத்தில் (ஆங்கிலம்) இருக்கிற “நல்ல வேலையைத் தொடர்ந்து செய்ததில் கிடைத்த சந்தோஷங்கள்” என்ற தலைப்பில் வந்த சார்ல்ஸ் ஃபெக்கலின் வாழ்க்கை சரிதையைப் பாருங்கள்.