1922—நூறு வருஷங்களுக்கு முன்பு
‘இயேசு கிறிஸ்துவின் மூலம் [கடவுள்] நமக்கு வெற்றி தருகிறார்.’ (1 கொ. 15:57) இதுதான் 1922-க்கான வருடாந்தர வசனம். யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால் கண்டிப்பாக ஆசீர்வாதம் கிடைக்கும் என்ற உறுதியை பைபிள் மாணாக்கர்களுக்கு இந்த வசனம் கொடுத்தது. இந்த வசனம் சொல்கிற மாதிரி, அந்த வருஷம் சுறுசுறுப்பாக ஊழியம் செய்த அவர்களை யெகோவா ஆசீர்வதித்தார். அந்த வருஷத்தில்தான் அவர்களாகவே புத்தகங்களை அச்சடித்து பைன்டிங் செய்ய ஆரம்பித்தார்கள். நல்ல செய்தியை ரேடியோவில் ஒலிபரப்பவும் ஆரம்பித்தார்கள். யெகோவா அவர்களை ஆசீர்வதிக்கிறார் என்பது அதே வருஷத்தின் கடைசியில் மறுபடியும் தெளிவாகத் தெரிந்தது. அமெரிக்காவில், ஒஹாயோவில் இருக்கிற சீடர் பாயிண்ட்டில் பைபிள் மாணாக்கர்கள் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். அந்த மாநாடு யெகோவாவுடைய அமைப்பில் நடக்கிற வேலையில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருந்தது.
“செம்ம ஐடியா”
பிரசங்க வேலை சூடுபிடிக்க ஆரம்பித்தவுடன் நிறைய பிரசுரங்கள் தேவைப்பட்டன. புருக்லினில் இருக்கும் சகோதரர்கள் பத்திரிகைகளை அவர்களே பிரிண்ட் செய்தார்கள். ஆனால், புத்தகங்களை பிரிண்ட் செய்ய மற்ற கம்பனிகளைத்தான் நம்பியிருந்தார்கள். பிறகு ஒரு கட்டத்தில், ஊழியத்துக்குத் தேவையான அளவுக்குப் புத்தகங்களை பிரிண்ட் செய்ய அந்த கம்பனிகளால் முடியவில்லை. இப்படியே பல மாதங்கள் போனதால், ஃபேக்ட்ரி மேனேஜராக இருந்த சகோதரர் ராபர்ட் மார்டினிடம் சகோதரர் ரதர்ஃபோர்ட், ‘நம்மளே புத்தகங்கள பிரிண்ட் செஞ்சா என்ன?’ என்று கேட்டார்.
“அது செம்ம ஐடியாவா இருந்துச்சு. புத்தகங்கள தயாரிக்க ஒரு புது ஃபேக்ட்ரியையே திறக்க வேண்டியிருந்துச்சு” என்று சகோதரர் மார்டின் பிற்பாடு சொன்னார். அதற்காகவே புருக்லினில் எண் 18, கன்கார்ட் தெருவில் ஒரு இடத்தைச் சகோதரர்கள் லீசுக்கு எடுத்தார்கள். தேவையான மெஷின்களையும் வாங்கிப்போட்டார்கள்.
ஆனால், இதைப் பார்த்து எல்லாருமே சந்தோஷப்படவில்லை. நமக்குப் புத்தகங்களை பிரிண்ட் செய்து கொடுத்த ஒரு கம்பனியின் தலைவர், நம் புது ஃபேக்ட்ரியை வந்து பார்த்தார். பிறகு அவர், “பயங்கரமான மெஷினெல்லாம் வாங்கிப்போட்டிருக்கீங்க. ஆனா இங்க இருக்குற ஒருத்தருக்குக்கூட அத எப்படி பயன்படுத்தணும்னு தெரியாது. இன்னும் ஆறே மாசத்துல இதெல்லாம் குப்பைக்குத்தான் போகப்போகுது பாருங்க” என்று சொன்னார்.
“அவர் சொன்னது நியாயமாதான் தெரிஞ்சுது. ஆனா யெகோவா எப்பவுமே எங்ககூட இருந்திருக்காரு, அது அவருக்கு தெரியல” என்று சகோதரர் மார்டின் சொன்னார். சகோதரர் மார்டின் சொன்ன மாதிரி யெகோவா அவர்கள் கூடவே இருந்திருக்கிறார். சீக்கிரத்திலேயே புது ஃபேக்ட்ரியில் ஒரு நாளைக்கு 2000 புத்தகங்கள் தயாரிக்கப்பட்டன.
ரேடியோ மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு சாட்சி
சொந்தமாகப் புத்தகங்களை பிரிண்ட் செய்தது மட்டுமில்லாமல், நல்ல செய்தியைச் சொல்வதற்கு யெகோவாவுடைய மக்கள் இன்னொரு புது முறையையும் பயன்படுத்தினார்கள். அதுதான் ரேடியோ ஒலிபரப்பு. 1922, பிப்ரவரி 26, ஞாயிற்றுக்கிழமை மதியம், சகோதரர் ரதர்ஃபோர்ட் முதல் முறையாக ரேடியோவில் பேசினார். அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருக்கிற லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள KOG ரேடியோ ஸ்டேஷனில், “இப்போது வாழும் லட்சக்கணக்கானோர் இனி மரிப்பதில்லை” என்ற பேச்சை அவர் கொடுத்தார்.
ஏறக்குறைய 25,000 பேர் இந்தப் பேச்சைக் கேட்டார்கள். இந்த ரேடியோ ஒலிபரப்புக்காக நன்றி சொல்லி சிலர் கடிதங்களையும் எழுதியிருந்தார்கள். அதில் ஒருவர்தான் வில்லேர்ட் ஆஷ்ஃபோர்ட். இவர் கலிபோர்னியாவிலுள்ள சாண்டா அனாவில் குடியிருந்தார். “அருமையாக... சுவாரஸ்யமாக...” பேச்சு கொடுத்ததுக்காக சகோதரர் ரதர்ஃபோர்டைப் பாராட்டி அவர் கடிதம் எழுதியிருந்தார். அதோடு, “இந்த ரேடியோ ஒலிபரப்பு மட்டும் இல்லன்னா நீங்க பக்கத்து தெருவுல வந்து பேச்சு கொடுத்திருந்தாகூட எங்களால கேட்டிருக்க முடியாது. ஏன்னா எங்க வீட்டுல மூணு பேரு உடம்பு முடியாம இருக்காங்க” என்று அவர் எழுதியிருந்தார்.
அதற்குப் பிறகு இன்னும் நிறைய பேச்சுகளும் ரேடியோவில் ஒலிபரப்பாயின. அந்த வருஷத்தின் முடிவில் “குறைந்தது 3,00,000 பேராவது நல்ல செய்தியை ரேடியோ வழியாகக் கேட்டிருப்பார்கள்” என்று காவற்கோபுரம் சொன்னது.
ரேடியோ ஒலிபரப்புக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததால் புருக்லினுக்குப் பக்கத்தில் இருந்த ஸ்டேட்டன் தீவில் ஒரு ரேடியோ ஸ்டேஷனைக் கட்ட பைபிள் மாணாக்கர்கள் முடிவு செய்தார்கள். அடுத்த சில வருஷங்களுக்கு அந்த ஸ்டேஷனைப் பயன்படுத்திதான் நல்ல செய்தியை எல்லா இடங்களுக்கும் பரப்ப வேண்டும் என்று பைபிள் மாணாக்கர்கள் நினைத்தார்கள். அந்த ரேடியோ ஸ்டேஷனுக்குப் பெயர் WBBR.
“ADV”
ஜூன் 15 1922, காவற்கோபுரத்தில் ஒரு அறிவிப்பு வந்தது. செப்டம்பர் 5-13-ல், ஒஹாயோவிலுள்ள சீடர் பாயிண்ட்டில் ஒரு மாநாடு நடக்கப்போவதாக அதில் சொல்லப்பட்டிருந்தது. பைபிள் மாணாக்கர்கள் எல்லாரும் பயங்கர ஆர்வத்தோடும் பரபரப்போடும் சீடர் பாயிண்ட்டுக்கு வந்து குவிந்தார்கள்.
முதல் பேச்சை சகோதரர் ரதர்ஃபோர்ட் கொடுத்தார். “யெகோவா . . . இந்த மாநாட்ட ஆசீர்வதிப்பார் அப்படீங்கறதுல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. இந்த உலகம் முழுக்க இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு சாட்சி கொடுக்க அவர் கண்டிப்பா உதவி செய்வாரு” என்று அதில் சொன்னார். அந்த மாநாட்டில் பேச்சு கொடுத்த எல்லா சகோதரர்களும் பிரசங்க வேலையைச் செய்ய சொல்லித்தான் திரும்பத் திரும்ப உற்சாகப்படுத்தினார்கள்.
பிறகு செப்டம்பர் 8, வெள்ளிக்கிழமை அன்று கிட்டத்தட்ட 8000 பேர் அந்த மன்றத்துக்கு வந்து குவிந்தார்கள். சகோதரர் ரதர்ஃபோர்டின் பேச்சைக் கேட்க எல்லாரும் ஆசையாக இருந்தார்கள். மாநாட்டு அழைப்பிதழில் இருந்த “ADV” என்ற எழுத்துகளுக்கு என்ன அர்த்தம் சொல்லப்போகிறார் என்பதைக் கேட்க ஆர்வமாகக் காத்திருந்தார்கள். மேடைக்கு மேல் ஒரு பெரிய பேனர் சுருட்டி, ஆணிகளில் கட்டி வைக்கப்பட்டிருந்ததை அங்கிருந்த நிறைய பேர் பார்த்தார்கள். அமெரிக்காவில் ஓக்லகாமாவில் இருக்கிற
டல்சாவிலிருந்து சகோதரர் ஆர்த்தர் க்ளாஸ் அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார். அந்த மன்றத்திலேயே பேச்சு எங்கே நன்றாகக் கேட்கும் என்று பார்த்து அங்கே போய் அவர் உட்கார்ந்தார். மைக்கும் ஸ்பீக்கரும் இல்லாத அந்தக் காலத்தில் அந்த மாதிரி ஒரு சீட் அவருக்குக் கிடைத்தது ஒரு பெரிய விஷயம்.“நாங்க ஒரு வார்த்த விடாம ரொம்ப கவனமா கேட்டுட்டு இருந்தோம்”
சகோதரர் ரதர்ஃபோர்ட் பேச்சு கொடுக்கும்போது எந்தத் தொந்தரவும் இருக்க கூடாது என்பதற்காக, லேட்டாக வருகிறவர்களுக்கு மன்றத்துக்குள் அனுமதி இல்லை என்று சேர்மென் அறிவிப்பு செய்தார். காலை 9.30-க்கு சகோதரர் ரதர்ஃபோர்ட் பேச்சைக் கொடுக்க ஆரம்பித்தார். எடுத்த உடனேயே, “பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்று மத்தேயு 4:17-ல் இயேசு சொன்ன வார்த்தைகளைச் சொன்னார். இந்த அரசாங்கத்தைப் பற்றி மனிதர்கள் எல்லாரும் எப்படித் தெரிந்துகொள்வார்கள் என்று பேசிக்கொண்டிருந்தபோது, “இயேசுவே அவரோட பிரசன்னத்தப்போ மக்கள் மத்தியில ஒரு அறுவடை செய்ய போறதாவும், கடவுளுக்கு உண்மையாவும் உத்தமமாவும் இருக்குறவங்கள கூட்டிச்சேர்க்க போறதாவும் சொல்லியிருக்காரு” என்று அவர் சொன்னார்.
“நாங்க ஒரு வார்த்த விடாம ரொம்ப கவனமா கேட்டுட்டு இருந்தோம்” என்று சகோதரர் க்ளாஸ் சொன்னார். ஆனால், திடீரென்று உடம்புக்கு ஏதோ பண்ணுவதுபோல் இருந்ததால் அவர் மன்றத்தைவிட்டு வெளியே போக வேண்டியிருந்தது. போனால் திரும்ப வர முடியாதே என்று யோசித்துக்கொண்டே அவர் தயங்கித் தயங்கி வெளியே போனார்.
சில நிமிஷங்களிலேயே உடம்பு சரியாகிவிட்டதுபோல் அவருக்குத் தோன்றியது. திரும்பவும் மன்றத்துக்குப் பக்கத்தில் அவர் வந்தபோது எல்லாரும் பலமாகக் கைதட்டும் சத்தம் அவருக்குக் கேட்டது. உடனே அவர் பரபரப்பாகிவிட்டார். அதனால், கூரைமேல் ஏறியாவது மீதி பேச்சைக் கேட்டுவிட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். அப்போது அவருக்கு 23 வயதுதான். அதனால், நினைத்த மாதிரியே அவர் கூரைமேல் ஏறிவிட்டார். கூரையை ஒட்டியிருந்த ஜன்னல்கள் திறந்திருந்தன. அதனால், அந்த ஜன்னல்களுக்குப் பக்கத்தில் போனபோது “பேச்ச நல்லா கேக்க முடிஞ்சுது” என்று அவர் சொன்னார்.
கூரை மேலே சகோதரர் க்ளாஸின் நண்பர்களும் இருந்தார்கள். அதில் ஒருவர்தான் ஃபிரேங் ஜான்சன். அவர் க்ளாஸிடம் ஓடிவந்து, “கூர்மையான கத்தி ஏதாவது வெச்சிருக்கியா?” என்று கேட்டார்.
“ம்ம்.. வெச்சிருக்கேன்” என்று க்ளாஸ் சொன்னார்.
“இதுக்காகத்தான் ஜெபம் செஞ்சிட்டே இருந்தோம்” என்று ஃபிரேங் சொன்னார். பிறகு, “அங்க பெருசா ஒண்ணு தெரியுதுல, a பேசுறத நல்லா கவனி. அவர் எப்போ ‘விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்’னு சொல்றாரோ அப்போ அந்த நாலு கயிறையும் அறுத்துவிடணும்” என்று சொன்னார்.
அது ஒரு பேனர். அத ஆணியில கட்டி வெச்சிருக்கோம். நீதிபதிசகோதரர் க்ளாஸ், கையில் கத்தியோடு ரெடியாக இருந்தார். சகோதரர் ரதர்ஃபோர்ட் எப்போது அந்த வார்த்தைகளைச் சொல்வார் என்று அவரும் அவருடைய நண்பர்களும் காத்துக்கொண்டிருந்தார்கள். சகோதரர் ரதர்ஃபோர்ட் அவருடைய பேச்சை முடிக்கும் நேரம் வந்தது. அவர் ஆர்வத்துடிப்போடு, மன்றமே அதிரும் அளவுக்கு சத்தமாக இப்படிச் சொன்னார்: “எஜமானுக்கு உண்மையான சாட்சிகளா, விசுவாசமான சாட்சிகளா இருங்க. பாபிலோன் சுவடு தெரியாம அழியற வரைக்கும் உங்களோட போராட்டத்த விடாதீங்க. மூலமுடுக்கெல்லாம் போய் நல்ல செய்திய பரப்புங்க. யெகோவாதான் கடவுள்... இயேசு கிறிஸ்துதான் ராஜாக்களுக்கெல்லாம் ராஜா... எஜமான்களுக்கெல்லாம் எஜமான்... இத இந்த உலகம் தெரிஞ்சுக்கணும். இது சரித்திரத்திலயே முக்கியமான ஒரு காலம். இதோ, ராஜா ஆட்சி செய்றாரு! நீங்கதான் அவரோட பிரதிநிதிகள். அதனால, ராஜாவையும் அவரோட ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்க, விளம்பரப்படுத்துங்க, விளம்பரப்படுத்துங்க.”
க்ளாஸும் அவருடைய நண்பர்களும் எல்லா கயிறையும் அறுத்துவிட்ட உடனேயே, சுருண்டு இருந்த பேனர் அழகாக விரிந்து அப்படியே தொங்கியது. “ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள்” என்று அதில் எழுதியிருந்தது. விளம்பரப்படுத்துங்கள் என்ற ஆங்கில வார்த்தைக்கான சுருக்கம்தான் “ADV.”
ஒரு முக்கியமான வேலை
சீடர் பாயிண்ட்டில் நடந்த மாநாடு, பிரசங்க வேலையை ஒரு முக்கியமான வேலையாகப் பார்க்க சகோதரர்களுக்கு உதவி செய்தது. அவர்கள் எல்லாரும் மனப்பூர்வமாகவும் சந்தோஷமாகவும் இந்த வேலையைச் செய்தார்கள். அமெரிக்காவில் ஓக்லகாமாவிலிருந்த ஒரு கால்பார்ட்டர், அதாவது ஒரு பயனியர், இப்படி எழுதினார்: “நாங்க ஊழியம் செஞ்ச பகுதியில நிலக்கரி சுரங்கத்துல வேல பார்த்தவங்கதான் நிறைய பேர் இருந்தாங்க. அவங்க எல்லாரும் ரொம்ப ஏழைகளா இருந்தாங்க. கோல்டன் ஏஜ் பத்திரிகையில இருக்குற செய்திய அவங்க கேட்டப்போ எல்லாம் அவங்கள்ல நிறைய பேர் கண்ணீர்விட்டு அழுதுட்டாங்க. அவங்களுக்கு ஆறுதல் சொல்றது உண்மைலயே பெரிய பாக்கியம்.”
“அறுவடை அதிகமாக இருக்கிறது, ஆனால் வேலையாட்கள் குறைவாக இருக்கிறார்கள்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளை பைபிள் மாணாக்கர்கள் எப்போதுமே மனதில் வைத்திருந்தார்கள். (லூக். 10:2) அதனால் அவசர உணர்வோடு ஊழியம் செய்தார்கள். 1922 முடிவுக்கு வந்தது, ஆனால் நல்ல செய்தியை மூலைமுடுக்கெல்லாம் அறிவிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஆசை பல மடங்கு அதிகமாகிவிட்டது.
a சகோதரர் ரதர்ஃபோர்டைச் சிலசமயம் “நீதிபதி” என்றும் கூப்பிட்டார்கள். ஏனென்றால், அமெரிக்காவிலுள்ள மிஸ்சௌரியில் அவ்வப்போது அவர் நீதிபதியாக இருந்திருக்கிறார்.