“எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்”
“எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகப் பாதுகாக்கும்.”—பிலி. 4:7.
பாடல்கள்: 76, 141
1, 2. பிலிப்பியில் பவுலுக்கும் சீலாவுக்கும் என்ன நடந்தது? (ஆரம்பப் படம்)
இந்தக் காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கிட்டத்தட்ட நடுராத்திரி. மிஷனரிகளான பவுலும் சீலாவும் பிலிப்பி நகரத்தில் இருக்கிற ஒரு கும்மிருட்டான உட்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய கால்கள் தொழுமரத்தில் மாட்டப்பட்டிருக்கின்றன. பயங்கரமாக அடி வாங்கியதால் அவர்களுடைய முதுகு விண்விண்ணென்று வலிக்கிறது. (அப். 16:23, 24) அன்று காலையில்தான், ஒரு கும்பல் திடீரென்று பவுலையும் சீலாவையும் சந்தைக்கு இழுத்துக்கொண்டு போயிருந்தார்கள். அங்கே அவசர அவசரமாக அவர்களை விசாரணை செய்து, அவர்களுடைய உடைகளைக் கிழித்து, அவர்களைப் பிரம்புகளால் பயங்கரமாக அடித்திருந்தார்கள். (அப். 16:16-22) அது எப்பேர்ப்பட்ட அநியாயம்! பவுல் ஒரு ரோமக் குடிமகனாக இருந்ததால் அவரை முறைப்படிதான் விசாரித்திருக்க வேண்டும். *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.
2 சிறையில் அடைக்கப்பட்டிருந்த பவுல், அன்று நடந்ததைப் பற்றியும் பிலிப்பியில் வாழ்ந்த மக்களைப் பற்றியும் யோசித்திருக்கலாம். பவுல் போயிருந்த மற்ற நகரங்களில் ஜெபக்கூடங்கள் இருந்தன; ஆனால், பிலிப்பியில் ஒரு ஜெபக்கூடம்கூட இல்லை. அதனால், யூதர்கள் அந்த நகரத்தின் வாசலுக்கு வெளியே இருந்த ஒரு ஆற்றங்கரையில் கூடிவந்து கடவுளை வணங்க வேண்டியிருந்தது. (அப். 16:13, 14) பொதுவாக, ஒரு ஜெபக்கூடத்தை அமைக்க யூத ஆண்கள் பத்துப் பேராவது தேவைப்பட்டார்கள்; ஒருவேளை, பிலிப்பியில் அந்தப் பத்துப் பேர்கூட இல்லையோ என்னவோ! பிலிப்பி மக்கள் தங்களுக்கு இருந்த ரோமக் குடியுரிமையை நினைத்து ரொம்பவே பெருமைப்பட்டார்கள். (அப். 16:21) அதனால்தான், யூதர்களான பவுலும் சீலாவும் ரோமக் குடிமக்களாக இருப்பார்கள் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லையோ? இதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் இரண்டு பேரும் சிறையில் தள்ளப்பட்டது அநியாயம் என்பதை மட்டும் நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.
3. சிறையில் தள்ளப்பட்டதை நினைத்து பவுல் ஏன் குழம்பிப்போயிருக்கலாம், ஆனாலும் அவர் எப்படிப்பட்ட மனப்பான்மையைக் காட்டினார்?
3 பவுல், தான் எப்படி பிலிப்பிக்கு வந்துசேர்ந்தார் என்பதையும் யோசித்திருக்கலாம். சில மாதங்களுக்கு முன்பு, ஆசியா மைனரிலிருந்த ஏஜியன் கடலின் அக்கரையில் பவுல் இருந்தார். அங்கிருந்த சில பகுதிகளில் ஊழியம் செய்யாதபடி கடவுளுடைய சக்தி அவரைத் திரும்பத் திரும்பத் தடுத்தது. வேறு இடத்துக்குப் போகும்படி கடவுளுடைய சக்தி அவரைத் தூண்டியதுபோல் தெரிந்தது. (அப். 16:6, 7) ஆனால், எங்கே போவது? பவுல் துரோவாவில் இருந்தபோது, ‘மக்கெதோனியாவுக்கு வாருங்கள்’ என்று ஒரு தரிசனத்தில் அவருக்குச் சொல்லப்பட்டது. அப்போது, யெகோவாவின் விருப்பம் எதுவென்று தெளிவாகத் தெரிந்தது! அதனால், பவுல் உடனடியாக மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப் போனார். (அப்போஸ்தலர் 16:8-10-ஐ வாசியுங்கள்.) ஆனால், அவர் அங்கு போன கொஞ்ச நாட்களிலேயே சிறையில் தள்ளப்பட்டார்! யெகோவா ஏன் இதை அனுமதித்தார்? பவுல் எவ்வளவு காலம் சிறையில் இருக்க வேண்டியிருக்கும்? இதைப் பற்றியெல்லாம் பவுல் யோசித்திருக்கலாம். ஆனாலும், அவருடைய விசுவாசம் பலமாகவே இருந்தது, அவருடைய சந்தோஷமும் குறையவே இல்லை. பவுலும் சீலாவும் “ஜெபம் செய்துகொண்டும் கடவுளைப் புகழ்ந்து பாடிக்கொண்டும் இருந்தார்கள்.” (அப். 16:25) தேவசமாதானம் அவர்களுடைய இதயத்தையும் மனதையும் ஆறுதல்படுத்தியது.
4, 5. (அ) நம் நிலைமை எப்படி பவுலின் நிலைமையைப் போலவே இருக்கலாம்? (ஆ) பவுலின் நிலைமை எப்படி எதிர்பாராத விதமாக மாறியது?
4 நீங்கள் எப்போதாவது பவுலைப் போல் உணர்ந்திருக்கிறீர்களா? ஒருவேளை, கடவுளுடைய சக்தி வழிநடத்துகிறபடி நீங்கள் நடப்பதாக நினைத்திருக்கலாம். ஆனால் பிற்பாடு, உங்களுக்கு நிறைய சவால்கள் வந்திருக்கலாம் அல்லது வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கலாம். (பிர. 9:11) அதனால், சில விஷயங்களை யெகோவா ஏன் அனுமதித்தார் என்று இப்போது நீங்கள் யோசிக்கலாம். அப்படியென்றால், யெகோவாமேல் முழு நம்பிக்கை வைக்கவும் தொடர்ந்து சகித்திருக்கவும் எது உங்களுக்கு உதவும்? இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள, பவுலுக்கும் சீலாவுக்கும் அடுத்து என்ன நடந்ததென்று கவனியுங்கள்.
5 பவுலும் சீலாவும் பாடிக்கொண்டு இருந்தபோது, அவர்கள் எதிர்பார்க்காத நிறைய சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன. முதலில், பயங்கரமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின், சிறைச்சாலையின் கதவுகள் சட்டென்று திறந்தன. கைதிகள் எல்லாருடைய விலங்குகளும் கழன்றன. அப்போது, சிறைக்காவலன் தற்கொலை செய்ய முயற்சி செய்தான். ஆனால், பவுல் அதைத் தடுத்தார். பிறகு, அந்தச் சிறைக்காவலனும் அவனுடைய முழு குடும்பமும் ஞானஸ்நானம் எடுத்தார்கள். அடுத்த நாள் அதிகாலையில், பவுலையும் சீலாவையும் சிறையிலிருந்து கூட்டிக்கொண்டுவர சில காவலர்களை நடுவர்கள் அனுப்பினார்கள்; அமைதியாக நகரத்தைவிட்டுப் போகும்படி பவுலையும் சீலாவையும் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். பவுலும் சீலாவும் ரோமக் குடிமக்கள் என்பதை அந்த நடுவர்கள் தெரிந்துகொண்டபோது, தாங்கள் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதைப் புரிந்துகொண்டார்கள். அதனால், அந்த இரண்டு பேரையும் வெளியே கூட்டிக்கொண்டு போவதற்காக அவர்களே வந்தார்கள். ஆனால், நகரத்தைவிட்டுப் புறப்படுவதற்கு முன்பு, புதிதாக ஞானஸ்நானம் எடுத்திருந்த லீதியாளைப் பார்க்க வேண்டுமென்று பவுலும் சீலாவும் கேட்டுக்கொண்டார்கள். பிலிப்பியில் இருந்த சகோதரர்களை உற்சாகப்படுத்துவதற்கு அவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார்கள். (அப். 16:26-40) நிலைமை எவ்வளவு சீக்கிரமாக மாறிவிட்டது!
‘எல்லா சிந்தனைக்கும் மேலானது’
6. இப்போது நாம் எதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்?
6 பவுலுக்கும் சீலாவுக்கும் நடந்த சம்பவங்களிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம்? பிரச்சினைகள் வரும்போது நாம் கவலைப்பட வேண்டியதில்லை; ஏனென்றால், நாம் பிலிப்பியர் 4:6, 7-ல் (வாசியுங்கள்) உள்ள அவருடைய வார்த்தைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். பின்பு, யாருமே எதிர்பார்க்காத சில விஷயங்களை யெகோவா எப்படிச் செய்தார் என்பதற்கு சில உதாரணங்களை பைபிளிலிருந்து பார்ப்போம். கடைசியில், யெகோவாமேல் முழு நம்பிக்கை வைத்து பிரச்சினைகளைச் சகித்துக்கொள்வதற்கு “தேவசமாதானம்” நமக்கு எப்படி உதவும் என்றும் பார்ப்போம்.
எதிர்பார்க்காத விதத்தில் நமக்கு உதவி செய்ய யெகோவாவினால் முடியும். இந்தப் பாடம் பவுலின் மனதில் ஆழமாகப் பதிந்தது. இதை எப்படிச் சொல்லலாம்? கவலைப்படுவதைப் பற்றியும் தேவசமாதானத்தைப் பற்றியும் பிலிப்பியில் இருந்த சகோதரர்களுக்கு அவர் பிற்பாடு எழுதியதை வைத்துச் சொல்லலாம்.7. பிலிப்பியில் இருந்த சகோதரர்களுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் என்ன பாடத்தைக் கற்றுக்கொடுத்தார், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
7 பவுலின் கடிதத்தை வாசித்தபோது பிலிப்பியில் இருந்த சகோதரர்களுக்கு எந்த விஷயம் ஞாபகம் வந்திருக்கும்? ஒருவேளை, பவுலுக்கும் சீலாவுக்கும் என்ன நடந்தது என்பதும், எதிர்பார்க்காத விதத்தில் யெகோவா எப்படி உதவி செய்தார் என்பதும் அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கும். அந்தக் கடிதத்தில் பவுல் அவர்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தார்? ‘கவலைப்படாதீர்கள். ஜெபம் செய்யுங்கள். அப்போது, “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்” உங்களுக்குக் கிடைக்கும்’ என்ற பாடத்தைக் கற்றுக்கொடுத்தார். அவர் எதை அர்த்தப்படுத்தினார்? சில பைபிள்கள் இந்த வார்த்தைகளை, “நம் கற்பனைகளையெல்லாம் மிஞ்சிவிடும்” அல்லது “மனிதர்களுடைய திட்டங்களையெல்லாம் மிஞ்சிவிடும்” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. அப்படியென்றால், தேவசமாதானம் நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அற்புதமானது என்று பவுல் அர்த்தப்படுத்தினார். சிலசமயங்களில், பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பதென்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் யெகோவாவுக்குத் தெரியும். நாம் எதிர்பார்க்காத விதத்தில் யெகோவாவினால் நமக்கு உதவி செய்ய முடியும்.—2 பேதுரு 2:9-ஐ வாசியுங்கள்.
8, 9. (அ) பிலிப்பியில் பவுல் அநியாயமாக நடத்தப்பட்டபோதும், அந்தச் சம்பவங்களால் கிடைத்த பலன்கள் என்ன? (ஆ) பிலிப்பியில் இருந்த சகோதரர்களால் பவுலின் வார்த்தைகளை ஏன் முழுமையாக நம்ப முடிந்தது?
8 பவுலின் கடிதம் பிலிப்பியில் இருந்த சகோதரர்களைப் பலப்படுத்தியிருக்கும். கடந்த பத்து வருஷங்களாக யெகோவா தங்களுக்குச் செய்ததையெல்லாம் அவர்கள் நினைத்துப் பார்த்திருப்பார்கள். பவுலும் சீலாவும் அநியாயமாக நடத்தப்படுவதற்கு யெகோவா அனுமதித்தது உண்மைதான்; ஆனால், அந்தச் சம்பவங்கள், “நல்ல செய்திக்காக வழக்காடி, அதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பெற” உதவியாக இருந்தன. (பிலி. 1:7) அதன்பின், பிலிப்பியில் இருந்த நடுவர்கள் புதிதாக உருவாகியிருந்த கிறிஸ்தவச் சபையைத் துன்புறுத்தத் துணியவில்லை. பவுல் தன்னுடைய ரோமக் குடியுரிமையைப் பற்றிச் சொன்னதாலோ என்னவோ, அவரும் சீலாவும் பிலிப்பியிலிருந்து போன பிறகுகூட லூக்காவால் அங்கே தங்க முடிந்தது; புதிய கிறிஸ்தவர்களுக்கு இன்னுமதிகமாக உதவி செய்யவும் முடிந்தது.
9 பிலிப்பியில் இருந்த சகோதரர்கள் பவுலின் கடிதத்தை வாசித்தபோது, அவர் வெறுமனே தன்னுடைய மனதில் பட்டதை எழுதவில்லை என்பதைப் புரிந்துகொண்டார்கள். பவுல் பயங்கரமான பிரச்சினைகளை அனுபவித்திருந்தார். பிலிப்பியில் இருந்த சகோதரர்களுக்குக் கடிதம் எழுதியபோதுகூட, அவர் ரோமில் வீட்டுக்காவலில்தான் இருந்தார். ஆனாலும், தான் ‘தேவசமாதானத்தை’ அனுபவிப்பதை அவர் காட்டினார்.—பிலி. 1:12-14; 4:7, 11, 22.
“நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்”
10, 11. ஒரு பிரச்சினையை நினைத்துக் கவலைப்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும், நாம் எதை எதிர்பார்க்கலாம்?
10 ‘எதைப் பற்றியும் கவலைப்படாமல்’ இருக்கவும், ‘தேவசமாதானத்தை’ அனுபவிக்கவும் எது நமக்கு உதவும்? ஜெபம் செய்வதுதான் நம் கவலையைத் தீர்ப்பதற்கான வழி என்பதை பிலிப்பியர்களுக்கு பவுல் எழுதிய வார்த்தைகள் காட்டுகின்றன. அதனால், நம் மனதிலுள்ள கவலைகளையெல்லாம் ஜெபத்தில் யெகோவாவிடம் சொல்லிவிட வேண்டும். (1 பேதுரு 5:6, 7-ஐ வாசியுங்கள்.) நீங்கள் ஜெபம் செய்யும்போது, அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார் என்பதை முழுமையாக நம்புங்கள். அவர் கொடுக்கிற ஒவ்வொரு ஆசீர்வாதத்துக்காகவும் எப்போதுமே நன்றி சொல்லுங்கள். யெகோவா, ‘நாம் கேட்பதையும் நினைப்பதையும்விட மிக அதிகமாக, பல மடங்கு அதிகமாக எல்லாவற்றையும் செய்ய வல்லவர்’ என்பதை மறந்துவிடாதீர்கள்.—எபே. 3:20.
11 யெகோவா நமக்கு எப்படி உதவி செய்கிறார் 1 கொ. 10:13) அதற்காக, அவரே பிரச்சினையைத் தீர்த்துவிடுவார் என்றோ நிலைமையைச் சரிசெய்துவிடுவார் என்றோ நினைத்துக்கொண்டு நாம் சும்மா உட்கார்ந்திருக்கக் கூடாது. ஜெபம் செய்வதற்கு ஏற்றபடி நாம் நடக்கவும் வேண்டும். (ரோ. 12:11) அப்படி நடந்தால், உண்மை மனதோடுதான் நாம் ஜெபம் செய்தோம் என்பதைக் காட்டுவோம், யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் பெறுவோம். நாம் கேட்பதையும் எதிர்பார்ப்பதையும்விட பல மடங்கு அதிகமாக யெகோவா உதவி செய்வார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சிலசமயங்களில், யாருமே எதிர்பார்க்காத விஷயங்களைச் செய்து அவர் நம்மை ஆச்சரியப்பட வைப்பார். அவரால் அப்படிச் செய்ய முடியும் என்பதற்கு இப்போது சில உதாரணங்களைப் பார்க்கலாம்; அது நம் நம்பிக்கையைப் பலப்படுத்தும்.
என்பதைப் பார்க்கும்போது, பவுலையும் சீலாவையும் போலவே நாமும் ஆச்சரியப்படலாம். அவர் அற்புதமான விதத்தில் நமக்கு உதவி செய்வார் என்று சொல்ல முடியாது, ஆனால் நமக்குத் தேவையான உதவியைக் கண்டிப்பாகச் செய்வார். (யாருமே எதிர்பார்க்காததை யெகோவா செய்ததற்கான உதாரணங்கள்
12. (அ) சனகெரிப் ராஜாவால் ஆபத்து வருமென்று தெரிந்தபோது எசேக்கியா என்ன செய்தார்? (ஆ) யெகோவா அந்தப் பிரச்சினையைத் தீர்த்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
12 யாருமே எதிர்பார்க்காததை யெகோவா செய்ததற்கான நிறைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. இப்போது, எசேக்கியா ராஜாவின் உதாரணத்தைப் பார்க்கலாம். அவர் யூதாவை ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், அசீரிய ராஜாவான சனகெரிப் யூதாவுக்கு எதிராகப் படையெடுத்து வந்து, எருசலேமைத் தவிர மற்ற எல்லா நகரங்களையும் கைப்பற்றினான். (2 ரா. 18:1-3, 13) அதன்பின், எருசலேமைத் தாக்குவதற்காக வந்தான். அப்போது எசேக்கியா ராஜா என்ன செய்தார்? முதலில், உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார். பிறகு, யெகோவாவின் தீர்க்கதரிசியான ஏசாயாவிடம் ஆலோசனை கேட்டார். (2 ரா. 19:5, 15-20) அதுமட்டுமல்ல, சனகெரிப் கேட்ட அபராதத்தைக் கட்டுவதன் மூலம் எசேக்கியா நியாயமாக நடந்துகொண்டார். (2 ரா. 18:14, 15) அதோடு, நீண்ட கால முற்றுகையைத் தாக்குப்பிடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். (2 நா. 32:2-4) கடைசியில் என்ன நடந்தது? யெகோவா ஒரு தேவதூதரை அனுப்பி, சனகெரிப்பின் படையைச் சேர்ந்த 1,85,000 வீரர்களை ஒரே ராத்திரியில் கொன்றுபோட்டார். எசேக்கியாகூட இதை எதிர்பார்க்கவில்லை!—2 ரா. 19:35.
13. (அ) யோசேப்புக்கு நடந்த சம்பவங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) எதிர்பார்க்காத என்ன விஷயம் சாராளுக்கு நடந்தது?
13 வாலிப வயதில் யோசேப்புக்கு என்ன நடந்ததென்று கவனியுங்கள். அவர் எகிப்திலிருந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ராஜாவுக்கு அடுத்து மிகப் பெரிய அதிகாரியாக ஆவார் என்பதை அப்போது அவர் கற்பனைகூட செய்திருக்க மாட்டார். பஞ்ச காலத்தில் தன் மூலமாகத் தன் குடும்பத்தை யெகோவா காப்பாற்றுவார் என்றும் அவர் நினைத்தே பார்த்திருக்க மாட்டார். (ஆதி. 40:15; 41:39-43; 50:20) யோசேப்பு கொஞ்சம்கூட எதிர்பார்க்காத விஷயங்களை யெகோவா செய்தார் என்பதில் சந்தேகமே இல்லை. யோசேப்பின் கொள்ளுப் பாட்டியான சாராளைப் பற்றியும் யோசித்துப் பாருங்கள். வேலைக்காரியின் மூலமாக தனக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்திருந்தாலும், தனக்கே ஒரு குழந்தையை யெகோவா தருவார் என்று அவள் எதிர்பார்த்திருப்பாளா? அதுவும் வயதான காலத்தில் தனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று நினைத்துப் பார்த்திருப்பாளா? அவள் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத அதிசயம் நடந்தது! அவள் ஈசாக்கைப் பெற்றெடுத்தாள்!—ஆதி. 21:1-3, 6, 7.
14. யெகோவா என்ன செய்வார் என்று நாம் நம்பிக்கையாக இருக்கலாம்?
14 புதிய உலகம் வருவதற்கு முன்பே யெகோவா நம்முடைய எல்லா பிரச்சினைகளையும் அற்புதமாக நீக்கிவிடுவார் என்று நாம் எதிர்பார்ப்பதில்லை. அவர் நம் வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்ய வேண்டுமென்றும் நாம் கேட்பதில்லை. ஆனால், கடந்த காலங்களில் அவர் அதிசயமான விதங்களில் தன்னுடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு உதவி செய்தார் என்று நமக்குத் தெரியும். அவர் இன்றும் மாறவில்லை. (ஏசாயா 43:10-13-ஐ வாசியுங்கள்.) அதனால், நாம் அவர்மேல் நம்பிக்கையாக இருக்கலாம். அவருடைய விருப்பத்தைச் செய்வதற்கான பலத்தை அவர் நமக்குக் கொடுப்பார் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம். (2 கொ. 4:7-9) எசேக்கியா, யோசேப்பு, சாராள் ஆகியவர்களின் உதாரணங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளில்கூட நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால், அவர் நமக்கு உதவி செய்வார் என்பதைக் கற்றுக்கொள்கிறோம்.
மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளில்கூட நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால், அவர் நமக்கு உதவி செய்வார்
15. பிரச்சினைகள் வந்தாலும் நாம் எப்படி ‘தேவசமாதானத்தை’ அனுபவிக்கலாம்? விளக்குங்கள்.
15 யெகோவாவோடு இருக்கும் நம் பந்தத்தைப் பலமாக வைத்துக்கொள்வதன் மூலம், பிரச்சினைகள் வந்தாலும் நம்மால் ‘தேவசமாதானத்தை’ அனுபவிக்க முடியும். இயேசு கிறிஸ்து கொடுத்த மீட்புவிலையின் அடிப்படையில் மட்டும்தான் அப்படிப்பட்ட ஒரு பலமான பந்தத்தை வைத்துக்கொள்ள முடியும். மீட்புவிலை என்பது யெகோவா செய்திருக்கும் அற்புதமான ஏற்பாடுகளில் ஒன்று. அதன் அடிப்படையில்தான் அவர் நம் பாவங்களை மன்னிக்கிறார். அதன் அடிப்படையில்தான் நமக்குச் சுத்தமான மனசாட்சி கிடைக்கிறது, அவரோடு நல்ல பந்தத்தையும் அனுபவிக்க முடிகிறது.—யோவா. 14:6; யாக். 4:8; 1 பே. 3:21.
அது நம் இதயத்தையும் மனதையும் பாதுகாக்கும்
16. “தேவசமாதானம்” என்ன செய்யும்? உதாரணம் கொடுங்கள்.
16 “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்” நம் இதயத்தையும் மனதையும் “பாதுகாக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (பிலி. 4:7) “பாதுகாக்கும்” என்பதற்கான கிரேக்க வார்த்தை, ஒரு நகரத்தைப் பாதுகாப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த படைவீரர்களைக் குறித்தது. பிலிப்பி நகரமும் படைவீரர்களால் பாதுகாக்கப்பட்டது. அதனால்தான், அந்த நகரத்தில் வாழ்ந்த மக்களால் ராத்திரியில் நிம்மதியாகத் தூங்க முடிந்தது. அதேபோல், நமக்கு “தேவசமாதானம்” இருக்கும்போது, நம்மாலும் நிம்மதியாக இருக்க முடியும். நம் இதயத்தையும் மனதையும் கவலை வாட்டாது. யெகோவா நம்மேல் அக்கறையாக இருக்கிறார் என்றும், நாம் சந்தோஷமாக வாழ வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்றும் நமக்குத் தெரியும். (1 பே. 5:10) அதைத் தெரிந்திருப்பது, கவலையிலோ மனச்சோர்விலோ மூழ்கிவிடாதபடி நம்மைப் பாதுகாக்கிறது.
17. மிகுந்த உபத்திரவத்தின்போது யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்க எது நமக்கு உதவும்?
17 சீக்கிரத்தில், மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்துவிடும். (மத். 24:21, 22) அப்போது நமக்கு என்ன நடக்குமென்று நமக்குத் தெரியாது. ஆனாலும், அதை நினைத்து நாம் அநாவசியமாகக் கவலைப்பட வேண்டியதில்லை. யெகோவா என்ன செய்வார் என்று நமக்குத் தெரியவில்லை என்றாலும், அவர் எப்படிப்பட்ட கடவுள் என்று நமக்குத் தெரியும். அவருடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு அவர் செய்ததையெல்லாம் யோசித்துப் பார்க்கும்போது, நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்கிறோம். அதாவது, என்ன நடந்தாலும் சரி, தான் நினைத்ததை யெகோவா கண்டிப்பாகச் செய்து முடிப்பார்! அதுவும், யாருமே எதிர்பார்க்காத விதத்தில் அதைச் செய்து முடிப்பார்! நம்முடைய வாழ்க்கையில் யெகோவா ஒவ்வொரு தடவையும் அப்படிச் செய்யும்போது, ‘எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானத்தை’ நாம் புது விதத்தில் அனுபவிப்போம்.
^ பாரா. 1 சீலாவும் ஒரு ரோமக் குடிமகனாக இருந்ததாகத் தெரிகிறது.—அப். 16:37.