படிப்புக் கட்டுரை 16
மீட்புவிலைக்கு எப்போதுமே நன்றியோடு இருங்கள்
‘மனிதகுமாரன் . . . பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுப்பதற்கு வந்தார்.’—மாற். 10:45.
பாட்டு 149 மீட்புவிலைக்காக நன்றி!
இந்தக் கட்டுரையில்... *
1-2. மீட்புவிலை என்றால் என்ன? அது ஏன் நமக்கு தேவைப்பட்டது?
பரிபூரண மனிதனாக இருந்த ஆதாம் பாவம் செய்தபோது என்றென்றைக்கும் வாழும் வாய்ப்பை இழந்துவிட்டான். அவனுடைய வம்சத்தில் வந்த எல்லாரும் அந்த வாய்ப்பை இழந்துவிட்டார்கள். அவன் செய்த பாவத்தை மன்னிக்கவே முடியாது. ஏனென்றால், அவன் வேண்டுமென்றே பாவம் செய்தான். அவன் செய்த தப்புக்கு அவன் செத்துதான் ஆக வேண்டும். ஆனால், அவன் செய்த பாவத்தில் அவனுடைய வம்சத்தில் வந்தவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லையே! (ரோ. 5:12, 14) அதனால், அவர்களைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்டு என்றென்றைக்கும் வாழ வைப்பதற்காக யெகோவா ஓர் ஏற்பாடு செய்தார். அந்த ஏற்பாட்டைப் பற்றிப் படிப்படியாகத் தெரியப்படுத்தினார். (ஆதி. 3:15) யெகோவா முடிவு செய்த நேரம் வந்ததும், “பலருடைய உயிருக்கு ஈடாக [இயேசுவின்] உயிரை மீட்புவிலையாகக் கொடுப்பதற்கு” பரலோகத்திலிருந்து அவரை பூமிக்கு அனுப்பி வைத்தார்.—மாற். 10:45; யோவா. 6:51.
2 மீட்புவிலை என்றால் என்ன? கிரேக்க வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிற மீட்புவிலை என்பது, ஆதாம் இழந்ததைத் திரும்ப மீட்பதற்காக இயேசு கொடுத்த விலை. (1 கொ. 15:22) அது ஏன் தேவைப்பட்டது? யெகோவாவின் நீதியான சட்டத்தின்படி அது அவசியமாக இருந்தது. யெகோவாவின் நீதியைப் பற்றி திருச்சட்டம் சொன்னது. உயிருக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டம். (யாத். 21:23, 24) ஆதாம் இழந்தது பரிபூரணமான உயிர். அதனால், யெகோவாவின் நீதியின்படி இயேசு தன்னுடைய பரிபூரண உயிரைக் கொடுத்தார். (ரோ. 5:17) இப்படி, மீட்புவிலையில் யாரெல்லாம் விசுவாசம் வைக்கிறார்களோ அவர்கள் எல்லாருக்கும் “என்றென்றுமுள்ள தகப்பன்” ஆனார்.—ஏசா. 9:6; ரோ. 3:23, 24.
3. யோவான் 14:31-ம் 15:13-ம் சொல்வதுபோல், தன்னுடைய உயிரைக் கொடுப்பதற்கு இயேசு ஏன் முன்வந்தார்?
3 தன்னுடைய அப்பாமீதும் நம்மீதும் இயேசு அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார். அதனால்தான், தன்னுடைய உயிரையே கொடுக்க முன்வந்தார். (யோவான் 14:31-யும், 15:13-யும் வாசியுங்கள்.) இந்தளவுக்கு அன்பு இருந்ததால், சாகும்வரை இயேசு உண்மையோடு இருந்தார். யெகோவாவுடைய விருப்பத்தின்படி செய்தார். இப்படி, மனிதர்களையும் பூமியையும் யெகோவா எதற்காகப் படைத்தாரோ அது நிறைவேறுவதற்கு வழி செய்தார். ஆனால், அவர் ஏன் அவ்வளவு சித்திரவதையை அனுபவிப்பதற்கு யெகோவா விட்டுவிட்டார்? அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அதோடு, மீட்புவிலைக்கு அப்போஸ்தலன் யோவான் எவ்வளவு நன்றியோடு இருந்தார் என்பதையும் பார்க்கலாம். கடைசியாக, மீட்புவிலைக்கு நாம் எப்படி நன்றியோடு இருக்கலாம் என்பதையும் அந்த நன்றியை இன்னும் எப்படி அதிகப்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம்.
இயேசு ஏன் சித்திரவதையை அனுபவிக்க வேண்டியிருந்தது?
4. இயேசு எப்படி இறந்தார்? விளக்கவும்.
4 இயேசுவின் கடைசி நாளில் நடந்த சம்பவத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அந்தச் சமயத்தில், அவர் நினைத்திருந்தால் 12 லேகியோனுக்கும் அதிகமான தேவதூதர்களை அனுப்பச் சொல்லி யெகோவாவிடம் கேட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. ரோம படைவீரர்கள் தன்னைக் கைது செய்து கூட்டிக்கொண்டு போகும்படி விட்டுவிட்டார். (மத். 26:52-54; யோவா. 18:3; 19:1) அவர்கள் இரக்கம் இல்லாமல் அவரை முள்சாட்டையால் அடிக்கிறார்கள். அவருடைய சதையை அது கிழிக்கிறது. அவருடைய முதுகில் இரத்தம் வடிகிறது. ஆனாலும், ரொம்ப பாரமான சித்திரவதைக் கம்பத்தை அவருடைய முதுகில் வைக்கிறார்கள். அவர் கஷ்டப்பட்டு அந்தக் கம்பத்தை இழுத்துக்கொண்டு போகிறார். ஆனால், போகிற வழியில் இன்னொருவரை கட்டாயப்படுத்தி அந்தக் கம்பத்தைச் சுமக்க வைக்கிறார்கள். (மத். 27:32) அவரைக் கொல்லப்போகிற இடத்துக்குப் போய் சேர்ந்தவுடனே அவரைச் சித்திரவதைக் கம்பத்தின் மேல் படுக்க வைத்து அவருடைய கையிலும், காலிலும் ஆணியடிக்கிறார்கள். இப்போது அந்தக் கம்பத்தை தூக்கி நிறுத்துகிறார்கள். அவருடைய உடல் எடையால், ஆணியடித்த இடத்தில் அவருடைய சதை கிழிகிறது. அவருடைய அம்மாவும் நண்பர்களும் கதறி அழுகிறார்கள். ஆனால், யூத அதிகாரிகள் கிண்டல் செய்கிறார்கள். (லூக். 23:32-38; யோவா. 19:25) நேரம் ஆக ஆக அவருடைய வலியும் வேதனையும் அதிகமாகிறது. துடிக்க முடியாமல் அவருடைய இதயம் தடுமாறுகிறது. செயல்பட முடியாமல் அவருடைய நுரையீரல் திணறுகிறது. அவர் ரொம்ப கஷ்டப்பட்டு மூச்சுவிடுகிறார். சாகும்வரைக்கும் யெகோவாவுக்கு உண்மையோடு இருந்த அந்தத் திருப்தியில் கடைசியாக ஜெபம் செய்கிறார். பிறகு, தலையைச் சாய்த்து உயிர்விடுகிறார். (மாற். 15:37; லூக். 23:46; யோவா. 10:17, 18; 19:30) இப்படி அணுஅணுவாக வேதனைப்பட்டு, அவமானப்பட்டு சாகிறார்.
5. எதை நினைத்து இயேசு ரொம்ப வேதனைப்பட்டார்?
5 அவ்வளவு சித்திரவதையை அனுபவித்து சாக வேண்டியிருந்தது இயேசுவுக்கு வேதனையாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அதைவிட எதிரிகள் சொன்ன பழி சொல்லைத்தான் அவரால் தாங்கவே முடியவில்லை. அவர் தெய்வநிந்தனை செய்தார் என்று அவர்கள் பழிபோட்டார்கள். அதாவது, கடவுளையும் கடவுளுடைய பெயரையும் அவமதித்தார் என்று பழிபோட்டார்கள். (மத். 26:64-66) அந்தப் பழிப்பேச்சு அவருடைய மனதை அவ்வளவு ரணமாக்கியதால் அந்தக் குற்றச்சாட்டோடு சாகாமல் இருப்பதற்கு யெகோவா எதையாவது செய்வார் என்று எதிர்பார்த்தார். (மத். 26:38, 39, 42) ஆனால், யெகோவா அப்படி எதுவும் செய்யவில்லை. ஏன்? அதற்கான மூன்று காரணங்களை இப்போது பார்க்கலாம்.
6. இயேசு ஏன் சித்திரவதைக் கம்பத்தில் தொங்க வேண்டியிருந்தது?
6 முதல் காரணம், ஒரு சாபத்திலிருந்து யூதர்களை விடுதலை செய்வதற்காக இயேசு மரக் கம்பத்தில் தொங்க வேண்டியிருந்தது. (கலா. 3:10, 13) அது என்ன சாபம்? திருச்சட்டத்துக்குக் கீழ்ப்படிவதாகச் சொல்லிவிட்டு, அதன்படி அவர்கள் செய்யாமல் போய்விட்டார்கள். அதனால், ஆதாமிடமிருந்து வந்த பாவம் மட்டுமல்லாமல் திருச்சட்டத்தை மீறிய சாபமும் அவர்கள்மீது வந்தது. (ரோ. 5:12) மரண தண்டனை கிடைக்கிற அளவுக்கு பெரிய பாவத்தைச் செய்தவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்று திருச்சட்டம் சொன்னது. இப்படிக் கொலை செய்யப்பட்டவர்களுடைய உடல், சில சமயங்களில் மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டது. * அதோடு, மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டவன் சபிக்கப்பட்டவன் என்றும் திருச்சட்டம் சொன்னது. (உபா. 21:22, 23; 27:26) இயேசு மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டபோது, யூதர்களுடைய சாபத்தை அவர் ஏற்றுக்கொண்டார். இப்படி, யூதர்கள் அவரை ஒதுக்கித்தள்ளினாலும் சாபத்திலிருந்து அவர்களை விடுதலையாக்கினார்.
7. இயேசு சித்திரவதையை அனுபவித்து சாவதற்கு யெகோவா ஏன் விட்டுவிட்டார் என்பதற்கு இரண்டாவது காரணத்தைச் சொல்லுங்கள்.
7 இரண்டாவது காரணம், தலைமைக் குருவாக ஆகப்போகிற இயேசுவுக்கு யெகோவா பயிற்சி கொடுக்க எபி. 2:17, 18; 4:14-16; 5:7-10.
வேண்டியிருந்தது. பயங்கரமான சோதனைகள் வரும்போது, யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு கஷ்டம் என்பதை இயேசு தெரிந்துகொண்டார். “கண்ணீர்விட்டுக் கதறி” ஜெபம் செய்கிற அளவுக்கு அவர் கஷ்டத்தை அனுபவித்தார். அவர் அந்தளவுக்கு மனவேதனையை அனுபவித்ததால் அவரால் நம்மை புரிந்துகொள்ள முடியும். நாம் ‘சோதிக்கப்படும்போது’ “அவரால் [நமக்கு] உதவி செய்ய முடியும்.” “நம் பலவீனங்களைக் குறித்து அனுதாபப்பட” முடிந்த ஒரு தலைமைக் குருவைக் கொடுத்ததற்காக நாம் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்!—8. இயேசு சித்திரவதையை அனுபவித்து சாவதற்கு யெகோவா ஏன் விட்டுவிட்டார் என்பதற்கு மூன்றாவது காரணத்தைச் சொல்லுங்கள்.
8 மூன்றாவது காரணம், முக்கியமான ஒரு கேள்விக்குப் பதில் கொடுப்பதற்காக இயேசு கஷ்டப்பட வேண்டியிருந்தது. பயங்கரமான சோதனை வரும்போது, மனிதர்கள் கடவுளுக்கு உண்மையாக இருப்பார்களா என்பதுதான் அந்தக் கேள்வி. ‘இல்லை’ என்று சாத்தான் சொல்கிறான். எல்லா மனிதர்களும் சுயநலத்துக்காகத்தான் கடவுளை வணங்குகிறார்கள் என்றும் சொல்கிறான். அதோடு, எல்லாருமே ஆதாம் மாதிரிதான் இருப்பார்கள் என்றும் நினைக்கிறான். அதாவது, யாருமே யெகோவாவுக்கு முழு பக்தி காட்ட மாட்டார்கள் என்று சொல்கிறான். (யோபு 1:9-11; 2:4, 5) இது எல்லாமே பொய் என்பதை இயேசுவால் நிரூபிக்க முடியும் என்று யெகோவா முழுமையாக நம்பினார். அதனால், ஒரு மனிதனால் எந்தளவுக்குக் கஷ்டத்தை தாங்க முடியுமோ அந்தளவுக்குக் கஷ்டத்தை அனுபவிப்பதற்கு இயேசுவை விட்டுவிட்டார். இயேசுவும் கடைசிவரைக்கும் உண்மையோடிருந்து சாத்தான் சொல்வதெல்லாம் பொய் என்பதை நிரூபித்துக் காட்டினார்.
மீட்புவிலைக்கு நன்றியோடிருந்த யோவான்
9. அப்போஸ்தலன் யோவானிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
9 மீட்புவிலையில் நம்பிக்கை வைத்ததால் நிறைய கிறிஸ்தவர்களால் கடைசிவரைக்கும் உண்மையாக இருக்க முடிந்திருக்கிறது. எத்தனையோ எதிர்ப்புகள் வந்தபோதும் விடாமல் ஊழியம் செய்ய முடிந்திருக்கிறது. வயதான காலத்தில் அவர்களுக்கு வந்த சோதனைகளைக்கூட சகித்து நிற்க முடிந்திருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் அப்போஸ்தலன் யோவான். சுமார் 60 வருஷத்துக்கும் மேல் கிறிஸ்துவைப் பற்றியும், மீட்புவிலையைப் பற்றியும் அவர் பிரசங்கித்து வந்தார். கிட்டத்தட்ட அவருக்கு நூறு வயதிருந்தபோது ரோமப் பேரரசுக்கு அவரால் ஆபத்து என்று சொல்லி பத்மு தீவுக்கு நாடு கடத்தினார்கள். ஏன், அவர் ஏதாவது தப்பு செய்தாரா? இல்லை. ‘கடவுளைப் பற்றித்தான் பேசினார், இயேசுவைப் பற்றி சாட்சி கொடுத்தார்.’ (வெளி. 1:9) விசுவாசத்தையும் சகிப்புத்தன்மையையும் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம், இல்லையா?
10. மீட்புவிலைக்கு யோவான் ரொம்ப நன்றியோடு இருந்தார் என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்கிறோம்?
10 யோவான் எழுதிய புத்தகங்களிலிருந்து இயேசுமேல் அவர் எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதையும் மீட்புவிலைக்கு அவர் எவ்வளவு நன்றி காட்டினார் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். மீட்புவிலையைப் பற்றி அல்லது அதனால் கிடைக்கிற நன்மைகளைப் பற்றி, 100 தடவைக்கும் மேல் அவர் எழுதியிருக்கிறார். உதாரணத்துக்கு, “நம்மில் யாராவது ஏதாவது பாவம் செய்துவிட்டால், பரலோகத் தகப்பனோடு இருக்கிற நீதியுள்ளவரான இயேசு கிறிஸ்து நமக்குத் துணையாக இருப்பார்” என்று எழுதியிருக்கிறார். (1 யோ. 2:1, 2) “இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுப்பது” எவ்வளவு முக்கியம் என்பதையும் எழுதியிருக்கிறார். (வெளி. 19:10) மீட்புவிலைக்கு அவர் ரொம்ப நன்றியோடு இருந்தார் என்பது நன்றாகவே தெரிகிறது. அதே மாதிரி நாமும் எப்படி நன்றியோடு இருக்கலாம்?
மீட்புவிலைக்கு எப்படி நன்றி காட்டலாம்?
11. தப்பு செய்யாமல் இருப்பதற்கு நமக்கு எது உதவும்?
11 தவறு செய்வதற்கான ஆசையைக் கட்டுப்படுத்துங்கள். மீட்புவிலைக்கு நாம் உண்மையிலேயே நன்றியோடு இருந்தால், தப்பு செய்வதற்கான ஆசை வரும்போது, ‘ஆசைய ஏன் அடக்கணும்? நாம நினைக்கிறத செய்யலாம். அதுக்கு அப்புறம் மன்னிப்பு கேட்டுக்கலாம்’ என்று யோசிக்க மாட்டோம். அதற்குப் பதிலாக, ‘யெகோவாவும் இயேசுவும் எனக்கு இவ்வளவு செஞ்சிருக்கிறப்ப நான் எப்படி இந்த தப்ப பண்ணுவேன்? இல்ல, நான் கண்டிப்பா இத செய்ய மாட்டேன்’ என்று யோசிப்போம். அதுமட்டுமல்ல, ‘சோதனைக்கு இணங்கிடாம இருக்க எனக்கு உதவி செய்யுங்க யெகோவாவே’ என்று கெஞ்சிக் கேட்போம்.—மத். 6:13.
12. ஒன்று யோவான் 3:16-18-ல் இருக்கிற அறிவுரையின்படி நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?
12 சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்டுங்கள். அவர்கள்மேல் அன்பு காட்டும்போது மீட்புவிலைக்கு நீங்கள் நன்றியோடு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 1 யோவான் 3:16-18-ஐ வாசியுங்கள்.) சகோதர சகோதரிகளை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதைப் பொறுத்துதான் நாம் அவர்கள்மேல் அன்பு காட்டுகிறோமா இல்லையா என்பது தெரியும். (எபே. 4:29, 31–5:2) உதாரணத்துக்கு, அவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றாலோ, இயற்கைப் பேரழிவு அல்லது வேறு ஏதாவது சோதனைகளால் அவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலோ, நாம் ஓடோடிப்போய் உதவுகிறோம். ஆனால், புண்படுத்துவதுபோல் அவர்கள் ஏதாவது சொல்லிவிட்டாலோ செய்துவிட்டாலோ நாம் எப்படி நடந்துகொள்கிறோம்?
எப்படி? நமக்காக மட்டுமல்ல, அவர்களுக்காகவும் இயேசு தன்னுடைய உயிரைக் கொடுத்திருக்கிறார். அவர்களுக்காக உயிரையே கொடுக்கத் தயாராக இருந்திருக்கிறார் என்றால், அவர்களை எந்தளவுக்கு அவர் மதிக்கிறார் என்பது தெரிகிறது. (13. மற்றவர்களை நாம் ஏன் மன்னிக்க வேண்டும்?
13 உங்களுடைய மனதைக் காயப்படுத்தியவர்களை மன்னிக்கவே முடியாது என்று நினைக்கிறீர்களா? (லேவி. 19:18) அப்படியென்றால், இந்த அறிவுரையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: “ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், தொடர்ந்து ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னித்துக்கொண்டே இருங்கள். யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.” (கொலோ. 3:13) சகோதர சகோதரிகளை நாம் மன்னிக்கிற ஒவ்வொரு தடவையும், மீட்புவிலைக்கு உண்மையிலேயே நாம் நன்றியோடு இருக்கிறோம் என்பதை யெகோவாவுக்குக் காட்டுகிறோம். இந்த நன்றியை நாம் எப்படி இன்னும் அதிகமாக்கலாம் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
மீட்புவிலைமீது இருக்கிற நன்றியை எப்படி அதிகமாக்கலாம்?
14. மீட்புவிலைமீது இருக்கிற நன்றியை அதிகமாக்கிக்கொள்ள ஒரு வழி என்ன?
14 மீட்புவிலைக்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள். “மீட்புவிலைய கொடுத்ததுக்காக யெகோவாவுக்கு ஒவ்வொரு நாளும் நன்றி சொல்றது முக்கியம்னு நான் நினைக்கிறேன்” என்று இந்தியாவில் வாழ்கிற 83 வயதான சகோதரி ஜோயன்னா சொல்கிறார். ஒவ்வொரு நாளும் ஜெபம் செய்யும்போது, அந்த நாளில் நீங்கள் செய்த எல்லா தவறுகளையும் சொல்லி யெகோவாவிடம் மன்னிப்பு கேளுங்கள். ஒருவேளை நீங்கள் மோசமான பாவம் செய்துவிட்டால், யெகோவாவிடம் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் மூப்பர்களிடமும் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்வதையெல்லாம் அவர்கள் கவனமாகக் கேட்பார்கள். பைபிளிலிருந்து உங்களுக்கு ஆலோசனை கொடுப்பார்கள். உங்களுடன் சேர்ந்து ஜெபம் செய்வார்கள். மீட்புவிலையின் அடிப்படையில் உங்கள் பாவங்களை மன்னிக்கச் சொல்லி யெகோவாவிடம் கேட்பார்கள். அப்போது நீங்கள் “குணமாவீர்கள்.” அதாவது, யெகோவாவுக்கும் உங்களுக்கும் இருக்கிற பந்தத்தில் ஏற்பட்ட விரிசல் சரியாகும்.—யாக். 5:14-16.
15. மீட்புவிலையைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்ப்பதற்கு நாம் ஏன் நேரம் ஒதுக்க வேண்டும்?
15 மீட்புவிலையைப் பற்றி ஆழமாக யோசித்துப் பாருங்கள். “இயேசு அனுபவிச்ச சித்திரவதைய பத்தி யோசிக்கிறப்ப என் கண்ணெல்லாம் கலங்கிடும்” என்று 73 வயதான சகோதரி ராஜாமணி சொல்கிறார். அதைப் பற்றி நினைக்கும்போது, உங்களுடைய மனதும் வலிக்கிறதா?
நிச்சயம் வலிக்கும்! ஆனால், யெகோவாமீதும் இயேசுமீதும் இருக்கிற அன்பு இன்னும் அதிகமாக வேண்டும் என்றால், இயேசுவின் மீட்புவிலையைப் பற்றி அடிக்கடி யோசித்துப் பாருங்கள். அதுவும் ஆழமாக யோசித்துப் பாருங்கள். அப்படி யோசிப்பதற்கு, மீட்புவிலையைப் பற்றி இன்னும் நன்றாக ஆராய்ச்சி செய்து படிக்கலாம், இல்லையா?16. மீட்புவிலையைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதால் நமக்கு என்ன நன்மை? (அட்டைப் படம்)
16 மீட்புவிலையைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். அப்படிச் சொல்லிக் கொடுக்கிற ஒவ்வொரு தடவையும் அதன்மீது இருக்கிற நன்றி உங்களுக்கு அதிகமாகும். இயேசு ஏன் இறக்க வேண்டியிருந்தது என்பதைப் பற்றி விளக்குகிற பிரசுரங்களும் வீடியோக்களும் நம்மிடம் நிறைய இருக்கின்றன. உதாரணத்துக்கு, கடவுள் சொல்லும் சந்தோஷமான செய்தி! என்ற சிற்றேட்டில் இருக்கிற 4-வது பாடத்தைப் பயன்படுத்தி கற்றுக்கொடுக்கலாம். அந்தப் பாடத்தின் தலைப்பு, “இயேசு கிறிஸ்து யார்?” அல்லது, பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது? என்ற புத்தகத்தில் இருக்கிற 5-வது பாடத்தைப் பயன்படுத்தலாம். அதன் தலைப்பு, “மீட்புவிலை—கடவுள் தந்திருக்கும் மிகச் சிறந்த பரிசு.” நினைவுநாள் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வருஷமும் கலந்துகொள்ளும்போதும், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு மற்றவர்களை அழைக்கும்போதும் மீட்புவிலைமீது இருக்கிற நன்றி நமக்கு அதிகமாகும். இயேசுவைப் பற்றி நாம் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதன் மூலம் யெகோவா நம்மை கௌரவப்படுத்தி இருக்கிறார்.
17. மீட்புவிலை என்பது கடவுள் கொடுத்த ஓர் அருமையான பரிசு என்று ஏன் சொல்லலாம்?
17 மீட்புவிலையால்தான், நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும் யெகோவாவிடம் நெருக்கமான நட்பை வைத்துக்கொள்ள முடிகிறது. மீட்புவிலையால்தான், பிசாசின் செயல்கள் முழுவதுமாக ஒழியப்போகின்றன. (1 யோ. 3:8) மீட்புவிலையால்தான், இந்தப் பூமியை யெகோவா படைத்ததற்கான நோக்கம் நிறைவேறும். அதாவது, இந்த முழு பூமியும் பூஞ்சோலையாக மாறும். அங்கே நீங்கள் பார்க்கிற ஒவ்வொருவரும் யெகோவாமேல் அன்பு காட்டுவார்கள், அவருக்குச் சேவை செய்வார்கள். அதனால், யெகோவா கொடுத்திருக்கிற இந்த அருமையான பரிசுக்கு எப்படி நன்றி காட்டலாம் என்பதைப் பற்றி ஒவ்வொரு நாளும் யோசியுங்கள்.
பாட்டு 148 ஒரே மகனையே தந்தீர்கள்
^ பாரா. 5 இயேசு ஏன் அவ்வளவு சித்திரவதைகளை அனுபவித்து சாக வேண்டியிருந்தது? இதற்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அவர் கொடுத்த மீட்புவிலைக்கு நாம் எப்படி நன்றி காட்டலாம் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.
^ பாரா. 6 குற்றவாளிகள் உயிரோடு இருக்கும்போதே அவர்களை மரக் கம்பத்தில் கட்டி வைப்பது அல்லது ஆணியடிப்பது ரோமர்களின் வழக்கமாக இருந்தது. இயேசுவும் இந்த மாதிரி சாவதற்கு யெகோவா அனுமதித்தார்.
^ பாரா. 55 படங்களின் விளக்கம்: அசிங்கமான படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை, சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற ஆசையை, லஞ்சம் வாங்க வேண்டும் என்ற ஆசையை, சகோதரர்கள் கட்டுப்படுத்துகிறார்கள்.