படிப்புக் கட்டுரை 39
‘திரள் கூட்டமான மக்கள்!’
‘எந்த மனிதனாலும் எண்ண முடியாதளவுக்குத் திரள் கூட்டமான மக்கள் சிம்மாசனத்துக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்னால் நின்றார்கள்.’—வெளி. 7:9.
பாட்டு 144 உயிர் காக்கும் நற்செய்தி
இந்தக் கட்டுரையில்... *
1. கிட்டத்தட்ட கி.பி. 95-ல் அப்போஸ்தலன் யோவான் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தார்?
கிட்டத்தட்ட கி.பி. 95-ம் வருஷம்! இக்கட்டான ஒரு சூழ்நிலையில் அப்போஸ்தலன் யோவான் இருக்கிறார். அவருக்கு ரொம்பவே வயதாகிவிட்டது. பத்மு என்ற தீவில் அடைபட்டுக் கிடக்கிறார். உயிரோடு இருந்த கடைசி அப்போஸ்தலன் இவராகத்தான் இருந்திருக்க வேண்டும். (வெளி. 1:9) விசுவாச துரோகிகள் சபைகளைத் தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும் பிரிவினைகளை ஏற்படுத்துகிறார்கள் என்றும் அவர் கேள்விப்படுகிறார். கிறிஸ்தவம் என்ற சுடர் சீக்கிரத்தில் அணைந்துவிடும்போல் தெரிகிறது.—யூ. 4; வெளி. 2:15, 20; 3:1, 17.
2. வெளிப்படுத்துதல் 7:9-14 சொல்கிறபடி, யோவான் என்ன தரிசனத்தைப் பார்க்கிறார்? (அட்டைப் படம்)
2 இந்த சூழ்நிலையில், எதிர்காலத்தைப் பற்றிச் சொல்கிற மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு தரிசனம் யோவானுக்குக் கிடைக்கிறது. அதில், கடவுளுடைய ஊழியர்கள் அடங்கிய ஒரு தொகுதிக்குக் கடைசி முத்திரை கிடைக்கும்வரை பூமியின் நான்கு காற்றுகளைப் பிடித்துக் கொண்டிருக்கும்படி தேவதூதர்களிடம் சொல்லப்படுகிறது. அந்தக் காற்றுகள் அவிழ்த்துவிடப்படும்போது மிகுந்த உபத்திரவம் ஆரம்பமாகும். (வெளி. 7:1-3) கடவுளுடைய ஊழியர்கள் அடங்கிய அந்தத் தொகுதி, பரலோகத்தில் இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்யும் 1,44,000 பேரைக் குறிக்கிறது. (லூக். 12:32; வெளி. 7:4) இன்னொரு தொகுதியையும் யோவான் பார்க்கிறார். இந்தத் தொகுதி மிகவும் பெரிதாக இருக்கிறது. “எந்த மனிதனாலும் எண்ண முடியாதளவுக்குத் திரள் கூட்டமான மக்கள் சிம்மாசனத்துக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்னால் நிற்பதைப் பார்த்தேன்” என்று அவர் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 7:9-14-ஐ வாசியுங்கள்.) எதிர்காலத்தில் லட்சக்கணக்கான ஆட்கள் யெகோவாவை வணங்குவார்கள் என்று தெரிந்துகொண்டபோது யோவான் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்!
3. (அ) யோவான் பார்த்த தரிசனம் நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும் என்று ஏன் சொல்லலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
3 இந்தத் தரிசனம் கண்டிப்பாக யோவானின் விசுவாசத்தைப் பலப்படுத்தியிருக்கும்.
அப்படியென்றால், இந்தத் தரிசனம் நிறைவேறிவருகிற காலத்தில் வாழ்கிற நம் விசுவாசத்தை இது எந்தளவு பலப்படுத்தும்! மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பித்து இந்தப் பூமியில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்போடு இருக்கிற லட்சக்கணக்கான ஆட்கள் இன்று ஒன்றுகூடி வருகிறார்கள். கிட்டத்தட்ட 80 வருஷங்களுக்கு முன்பாகவே இந்தத் திரள் கூட்டத்தை அடையாளம் கண்டுகொள்ள யெகோவா தன்னுடைய மக்களுக்கு உதவியிருக்கிறார். இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். பிறகு, திரள் கூட்டத்தின் இரண்டு அம்சங்களைப் பற்றியும் பார்ப்போம். (1) அது எவ்வளவு பெரியது? (2) யாரெல்லாம் அதன் பாகமாக ஆவார்கள்? இந்த அம்சங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும்போது, திரள் கூட்டத்தின் பாகமாக இருக்கிற எல்லாருடைய விசுவாசமும் நிச்சயம் பலப்படும்.திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே வாழ்வார்கள்?
4. பைபிள் சொல்லும் எந்த உண்மையை சர்ச்சுகள் சொல்லித்தருவது கிடையாது, ஆனால் இந்த விஷயத்தில் பைபிள் மாணாக்கர்கள் எப்படி வித்தியாசமாக இருந்தார்கள்?
4 கடவுளுக்குக் கீழ்ப்படிகிற மக்கள் இந்தப் பூமியில் என்றென்றும் வாழ்வார்கள் என்று பைபிள் சொல்கிறது. ஆனால், இந்த உண்மையை சர்ச்சுகள் சொல்லித்தருவதே இல்லை. (2 கொ. 4:3, 4) இறந்துபோகிற எல்லா நல்ல ஜனங்களும் பரலோகத்துக்குப் போவதாக சர்ச் அமைப்புகளைச் சேர்ந்த நிறைய மதங்கள் இன்று போதிக்கின்றன. ஆனால், 1879-லிருந்து காவற்கோபுர பத்திரிகையை வெளியிட்டு வந்த பைபிள் மாணாக்கர்கள் அப்படிப் போதிக்கவில்லை. ஏனென்றால், இந்தப் பூமியை ஒரு பூஞ்சோலையாக கடவுள் மாற்றுவார் என்று அவர்கள் புரிந்துகொண்டார்கள். அதோடு, கடவுளுக்குக் கீழ்ப்படிகிற லட்சக்கணக்கான மக்கள் இந்தப் பூமியில்தான் வாழ்வார்களே தவிர, பரலோகத்தில் அல்ல என்பதைப் புரிந்துவைத்திருந்தார்கள். இருந்தாலும், அந்தக் கீழ்ப்படிகிற மக்கள் யார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள, அவர்களுக்குக் கொஞ்சக் காலம் எடுத்தது.—மத். 6:10.
5. பரலோகத்துக்குப் போகும் 1,44,000 பேரைப் பற்றி பைபிள் மாணாக்கர்கள் என்ன புரிந்துவைத்திருந்தார்கள்?
5 இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்வதற்காக சிலர் ‘பூமியிலிருந்து விலைகொடுத்து வாங்கப்படுவார்கள்’ என்று பைபிள் மாணாக்கர்கள் புரிந்துவைத்திருந்தார்கள். (வெளி. 14:3) பூமியில் இருந்தபோதே கடவுளுக்கு உண்மையோடு சேவை செய்த 1,44,000 பேர் அடங்கிய தொகுதிதான் அது! அப்படியென்றால், திரள் கூட்டத்தைப் பற்றி அவர்கள் என்ன நம்பினார்கள்?
6. திரள் கூட்டத்தைப் பற்றி பைபிள் மாணாக்கர்கள் என்ன நம்பினார்கள்?
6 திரள் கூட்டமான மக்கள் “சிம்மாசனத்துக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்னால் நிற்பதை” யோவான் தன்னுடைய தரிசனத்தில் பார்த்தார். (வெளி. 7:9) இதை வைத்து, 1,44,000 பேரைப் போலவே திரள் கூட்டமான மக்களும் பரலோகத்தில் வாழ்வார்கள் என்ற முடிவுக்கு பைபிள் மாணாக்கர்கள் வந்தார்கள். இந்த இரண்டு தொகுதியைச் சேர்ந்தவர்களுமே பரலோகத்தில் வாழ்வார்கள் என்றால், இவர்களுக்கு இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று அவர்கள் யோசித்தார்கள். அதனால், பூமியில் வாழ்ந்த சமயத்தில் கடவுளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியாதவர்கள்தான் இந்தத் திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் பைபிளின் ஒழுக்கத் தராதரங்களின்படி வாழ்ந்துவந்தாலும், சர்ச் அமைப்புகளைவிட்டு வெளியே வராதவர்களாக இருக்கலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். இப்படிப்பட்டவர்களுக்குக் கடவுள்மீது ஓரளவு அன்பு இருந்தது என்றும், ஆனால் இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்யும் அளவுக்கு அந்த அன்பு முழுமையானதாக இல்லை என்றும் அவர்கள் நினைத்தார்கள். கடவுள்மீது முழுமையான அன்பு வைக்காததால், பரலோகத்தில் சிம்மாசனத்துக்கு முன்பு நிற்பதற்கு மட்டுமே இவர்களுக்குத் தகுதி இருப்பதாகவும், சிம்மாசனங்களில் உட்காருவதற்கு தகுதி இல்லை என்பதாகவும் அவர்கள் நம்பினார்கள்.
7. (அ) ஆயிர வருஷ ஆட்சியில் இந்தப் பூமியில் யார் வாழ்வார்கள் என்று பைபிள் மாணாக்கர்கள் நம்பினார்கள்? (ஆ) கிறிஸ்துவுக்கு முன் இறந்துபோன உண்மையுள்ள மனிதர்களுக்கு என்ன நடக்கும் என்று அவர்கள் நம்பினார்கள்?
7 அப்படியென்றால், யார் இந்தப் பூமியில் வாழ்வார்கள்? 1,44,000 பேரும் திரள் கூட்டத்தாரும் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, மிச்சம் இருக்கிற லட்சக்கணக்கான மக்கள் பூமியில் வாழ அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சியில் கிடைக்கும் ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள் என்றும் பைபிள் மாணாக்கர்கள் நம்பினார்கள். மிச்சம் இருக்கிற லட்சக்கணக்கான மக்கள், கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சி ஆரம்பமாவதற்கு முன்பே யெகோவாவுக்குச் சேவை செய்வார்கள் என்றல்ல, அந்த ஆயிர வருஷ ஆட்சியின்போதுதான் அவர்களுக்கு யெகோவாவைப் பற்றிச் சொல்லித்தரப்படும் என்று நம்பினார்கள். அப்படிச் சொல்லித்தரப்பட்ட பிறகு யாரெல்லாம் யெகோவாவின் நெறிமுறைகளின்படி வாழ்கிறார்களோ, அவர்களுக்கு இந்தப் பூமியில் முடிவில்லாத வாழ்வு கிடைக்கும் என்றும், அவற்றை ஒதுக்கித்தள்ளுகிறவர்கள் அழிக்கப்படுவார்கள் என்றும் நம்பினார்கள். ஆயிர வருஷ ஆட்சியில் சங். 45:16.
“அதிபதிகளாக” சேவை செய்பவர்களில் சிலர், அந்த ஆட்சியின் முடிவில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் நம்பினார்கள். அப்படிப் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் அதிபதிகளில், கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்த விசுவாசமுள்ள ஊழியர்கள் சிலரும் இருப்பார்கள் என்று நினைத்தார்கள்.—8. எந்த மூன்று தொகுதிகள் இருப்பதாக பைபிள் மாணாக்கர்கள் நம்பினார்கள்?
8 இப்படி, மூன்று தொகுதிகள் இருப்பதாக பைபிள் மாணாக்கர்கள் நம்பினார்கள். (1) பரலோகத்தில் இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்யப்போகிற 1,44,000 பேர். (2) பரலோகத்தில் சிம்மாசனத்துக்கு முன்பாகவும் இயேசுவுக்கு முன்பாகவும் நிற்கப்போகிற, முழுமையாகக் கீழ்ப்படியாத திரள் கூட்டம். (3) கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சியில் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளப்போகிற லட்சக்கணக்கான ஜனங்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஆனால், தனக்குரிய நேரத்தில் பைபிள் மாணாக்கர்கள்மீது யெகோவா சத்திய ஒளியைப் பிரகாசிக்கச் செய்தார்.—நீதி. 4:18.
சத்திய ஒளி அதிகமதிகமாகப் பிரகாசிக்கிறது
9. (அ) பூமியில் இருக்கும் திரள் கூட்டத்தார் எந்த அர்த்தத்தில் ‘சிம்மாசனத்துக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்னால் நிற்பார்கள்’? (ஆ) வெளிப்படுத்துதல் 7:9-ல் சொல்லப்பட்டிருப்பதை நாம் சரியாகத்தான் புரிந்திருக்கிறோம் என்று எப்படிச் சொல்லலாம்?
9 யோவானின் தரிசனத்தில் சொல்லப்பட்ட திரள் கூட்டம் யார் என்பது 1935-ல் தெளிவானது. திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ‘சிம்மாசனத்துக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்னால் நிற்பதற்கு,’ பரலோகத்துக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை என்பதை யெகோவாவின் சாட்சிகள் புரிந்துகொண்டார்கள். அந்த விஷயம், அடையாள அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. திரள் கூட்டமான மக்கள் பூமியில் வாழ்ந்தாலும் ‘சிம்மாசனத்துக்கு முன்னால் [அவர்களால்] நிற்க’ முடியும். எப்படி? யெகோவாதான் உன்னதப் பேரரசர் என்பதை ஏற்றுக்கொள்வதன் மூலமும் அவருடைய அதிகாரத்துக்குக் கீழ்ப்படிவதன் மூலமும் அவர்களால் அப்படி நிற்க முடியும். (ஏசா. 66:1) இயேசுவின் மீட்புப் பலியில் விசுவாசம் வைப்பதன் மூலமும் அவர்கள் ‘ஆட்டுக்குட்டியானவருக்கு முன்னால் நிற்பார்கள்!’ வெளிப்படுத்துதல் 7:9-ல் சொல்லப்பட்டிருப்பது அடையாள அர்த்தத்தில்தான் என்பதைப் புரிந்துகொள்ள மத்தேயு 25:31, 32 வசனங்களும் உதவுகின்றன. “எல்லா தேசத்தாரும்” (பொல்லாதவர்கள் உட்பட) இயேசுவின் மகிமையான சிம்மாசனத்துக்கு “முன்னால் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள்” என்று அந்த வசனங்கள் சொல்கின்றன. எல்லா தேசத்தாரும் பரலோகத்திலா இருப்பார்கள், பூமியில்தானே இருப்பார்கள்! அப்படியென்றால், 1935-ல் நாம் புரிந்துகொண்ட விஷயம் நியாயமானதாக இருக்கிறது. திரள் கூட்டமான மக்கள் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று பைபிள் எதுவும் சொல்வதில்லை. அது ஏன் என்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது, இல்லையா? பரலோகத்தில் என்றென்றும் வாழும் நம்பிக்கை ஒரு தொகுதிக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுவோடு சேர்ந்து ‘ராஜாக்களாகப் பூமியின் மீது ஆட்சி செய்யப்போகும்’ 1,44,000 பேரைக் கொண்ட தொகுதிதான் அது!—வெளி. 5:10.
10. திரள் கூட்டத்தார், ஆயிர வருஷ ஆட்சிக்கு முன்பே யெகோவாவின் வழிகளைப் பற்றி ஏன் தெரிந்துவைத்திருக்க வேண்டும்?
10 இந்தப் பூமியில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்போடு இருக்கிற உண்மையுள்ள கிறிஸ்தவர்களின் தொகுதிதான் திரள் கூட்டம் என்பதை 1935-லிருந்தே யெகோவாவின் சாட்சிகள் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், ஆயிர வருஷ ஆட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே யெகோவாவின் வழிகளைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை வணங்க ஆரம்பித்திருக்க வேண்டும். ‘நடக்கப்போகிற இவை எல்லாவற்றிலிருந்தும் தப்பிப்பதற்கு,’ ஆயிர வருஷ ஆட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே இவர்களுக்குப் பலமான விசுவாசம் தேவை.—லூக். 21:34-36.
11. ஆயிர வருஷ முடிவில் சிலர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று பைபிள் மாணாக்கர்கள் சிலர் ஏன் நினைத்திருக்கலாம்?
11 ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் பூமியில் வாழும் உண்மையுள்ள சிலர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று பைபிள் மாணாக்கர்கள் நம்பிவந்ததைப் பற்றி என்ன சொல்லலாம்? ‘கடவுளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியாத கிறிஸ்தவர்களுக்கே பரலோகத்தில் வாழும் வாய்ப்பு இருக்கிறது என்றால், பழங்காலத்தில் வாழ்ந்த கடவுளுடைய உண்மை ஊழியர்களுக்கு ஏன் பூமிக்குரிய வாழ்க்கை மட்டுமே கிடைக்க வேண்டும்?’ என்று அவர்கள் யோசித்தார்கள். அதனால், ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் பூமியில் வாழும் உண்மையுள்ள சிலர் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பிப்ரவரி 15, 1913-ல் வெளிவந்த காவற்கோபுரத்தில் சொல்லப்பட்டிருந்தது. அப்படிச் சொல்லப்பட்டதற்கு, அன்றிருந்த இரண்டு தவறான நம்பிக்கைகள்தான் காரணம். அதாவது, (1) திரள் கூட்டத்தாரும் பரலோகத்தில் வாழ்வார்கள் என்றும் (2) முழுமையான
கீழ்ப்படிதலைக் காட்டாதவர்களே அந்தத் திரள் கூட்டத்தார் என்றும் பைபிள் மாணாக்கர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள்.12-13. பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் எதைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள்?
12 நாம் இதுவரை பார்த்ததுபோல், அர்மகெதோனில் தப்பிப்பவர்கள்தான் திரள் கூட்டமான மக்கள் என்பதை 1935-லிருந்து யெகோவாவின் சாட்சிகள் புரிந்துகொண்டார்கள். இவர்கள் ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பித்து’ இந்தப் பூமியில் வாழ்வார்கள். “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற எங்கள் கடவுளாலும் ஆட்டுக்குட்டியானவராலும்தான் எங்களுக்கு மீட்பு கிடைக்கும்” என்று “உரத்த குரலில்” சொல்வார்கள். (வெளி. 7:10, 14) அதோடு, பரலோக வாழ்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறவர்களுக்கு, பூர்வ காலத்தில் வாழ்ந்த உண்மையுள்ள மனிதர்களுக்கு இருந்த நம்பிக்கையைவிட “மேலான” நம்பிக்கை இருக்கும் என்றும் பைபிள் சொல்கிறது. (எபி. 11:40) திரள் கூட்டத்தைப் பற்றிச் சகோதரர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டதால், இன்னும் நிறைய பேர் யெகோவாவை வணங்க வாய்ப்பு இருக்கிறது என்பதை மனதில் வைத்து ஊழியத்தை அதிக ஆர்வத்தோடு செய்தார்கள்.
13 தங்களுடைய நம்பிக்கையை நினைத்து திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். தன்னுடைய உண்மை ஊழியர்கள் பரலோகத்தில் சேவை செய்ய வேண்டுமா, பூமியில் சேவை செய்ய வேண்டுமா என்பது யெகோவாவின் கையில்தான் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். இயேசுவின் மீட்புப் பலியின் மூலம் யெகோவா காட்டியிருக்கும் அளவற்ற கருணையால்தான் தங்களுக்கு இந்த நம்பிக்கை கிடைத்திருக்கிறது என்பதை பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.—ரோ. 3:24.
திரளான ஒரு மக்கள் தொகுதி!
14. திரள் கூட்டத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறப்போகிறது என்பதைப் பற்றி நிறைய பேர் யோசித்ததற்கு என்ன காரணம்?
14 பூமியில் வாழும் நம்பிக்கையுடையவர்கள் எப்படித் திரளான மக்களாவார்கள் என்று 1935-க்குப் பிறகு நிறைய பேர் யோசிக்க ஆரம்பித்தார்கள். இதைப் பற்றி ரொனால்ட் பார்க்கின் என்ற சகோதரர் சொல்வதைப் பாருங்கள். திரள் கூட்டத்தைப் பற்றிய சத்தியம் தெளிவான சமயத்தில் அவருக்கு 12 வயது. “அந்த சமயத்துல, உலகம் முழுசுமே 56,000 பிரஸ்தாபிகள்தான் இருந்தாங்க. அதுலயும் நிறைய பேர், சொல்லப்போனா பெரும்பாலானவங்க, பரலோக நம்பிக்கையுள்ளவங்க. அதனால, திரள் கூட்டத்தோட எண்ணிக்கை அவ்வளவு திரளா இருந்த மாதிரி தெரியல” என்கிறார் அவர்.
15. திரள் கூட்டத்தின் எண்ணிக்கை எப்படி பெருகிக்கொண்டே போகிறது?
15 அடுத்தடுத்த வருஷங்களில், நிறைய நாடுகளுக்கு மிஷனரிகள் அனுப்பப்பட்டார்கள். யெகோவாவின் சாட்சிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. 1968-ல், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தைப் பயன்படுத்தி பைபிள் படிப்புத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் புத்தகத்தில் பைபிள் சத்தியங்கள் எளிமையாக விளக்கப்பட்டிருந்ததால், தாழ்மையுள்ள நிறைய மக்களைச் சத்தியத்திடம் அது சுண்டியிழுத்தது. நான்கே வருஷங்களுக்குள் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள். லத்தீன் அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் இருந்த கத்தோலிக்க சர்ச்சின் பிடி தளர்ந்ததாலும், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் நம்முடைய வேலைக்குப் போடப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதாலும் லட்சக்கணக்கான பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். (ஏசா. 60:22) சமீப வருஷங்களில், பைபிள் உண்மைகளை மக்கள் தெரிந்துகொள்வதற்காக நம்முடைய அமைப்பு அருமையான கருவிகளைத் தயாரித்து கொடுத்திருக்கிறது. உண்மையிலேயே திரளான மக்கள் இப்போது கூட்டிச் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுடைய எண்ணிக்கை 80 லட்சத்தையும் தாண்டிவிட்டது!
மூலை முடுக்கிலிருந்தெல்லாம் வருகிற திரளான கூட்டம்
16. திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தெல்லாம் வருவார்கள்?
16 திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், ‘எல்லா தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்களாக’ இருப்பார்கள் என்று யோவான் தன்னுடைய தரிசனத்தில் சொன்னார். இதேபோன்ற ஒரு விஷயத்தைத்தான் சகரியா தீர்க்கதரிசியும் சொன்னார். “அந்த நாட்களில், மற்ற தேசங்களைச் சேர்ந்த எல்லா பாஷைக்காரர்களிலும் பத்துப் பேர் ஒரு யூதனுடைய உடையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, ‘கடவுள் உங்களோடு இருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதனால், நாங்களும் உங்களோடு வருகிறோம்’ என்று சொல்வார்கள்” என்று எழுதினார்.—சக. 8:23.
17. எல்லா தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்களுக்கு உதவ நாம் என்ன செய்கிறோம்?
17 எல்லா மொழிகளையும் சேர்ந்தவர்கள் கூட்டிச் சேர்க்கப்பட வேண்டுமென்றால், நிறைய மொழிகளில் நல்ல செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பதை யெகோவாவின் சாட்சிகள் புரிந்துகொண்டார்கள். பைபிள் படிப்புக்காகப் பயன்படுத்தப்படும் பிரசுரங்களைக் கிட்டத்தட்ட 130 வருஷங்களுக்கும் மேல் நாம் மொழிபெயர்த்து வருகிறோம். இப்போது, சரித்திரத்தில் இதுவரை இல்லாதளவு நூற்றுக்கணக்கான மொழிகளில் மொழிபெயர்ப்பு வேலை நடக்கிறது. எல்லா தேசத்தையும் சேர்ந்த திரள் கூட்டத்தை யெகோவா கூட்டிச் சேர்க்கிறார். இது அவர் செய்கிற ஓர் அற்புதம்! உலகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் திரள் மத். 24:14; யோவா. 13:35.
கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்தாலும் யெகோவாவை ஒற்றுமையாக வணங்குகிறார்கள். பைபிளும் பைபிள் பிரசுரங்களும் நிறைய மொழிகளில் கிடைப்பதுதான் அதற்குக் காரணம். சுறுசுறுப்பாகப் பிரசங்கிப்பதற்கும் உண்மையான அன்பைக் காட்டுவதற்கும் யெகோவாவின் சாட்சிகள் பேர்போனவர்களாக இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது நம் விசுவாசம் பலப்படுகிறது, இல்லையா?—இந்தத் தரிசனம் என்ன செய்ய நம்மைத் தூண்டுகிறது?
18. (அ) ஏசாயா 46:10, 11 சொல்கிறபடி, திரள் கூட்டத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை யெகோவா நிறைவேற்றியிருப்பதில் ஏன் எந்த ஆச்சரியமும் இல்லை? (ஆ) பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள், தாங்கள் எதையோ இழந்துவிட்டதாக நினைக்கிறார்களா? விளக்குங்கள்.
18 திரள் கூட்டத்தைப் பற்றிய தீர்க்கதரிசனம் நமக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. இந்தத் தீர்க்கதரிசனத்தை யெகோவா அற்புதமான விதத்தில் நிறைவேற்றியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. (ஏசாயா 46:10, 11-ஐ வாசியுங்கள்.) யெகோவா தங்களுக்குக் கொடுத்திருக்கும் நம்பிக்கைக்காக திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நன்றி சொல்கிறார்கள். கடவுளுடைய சக்தியால் இவர்கள் அபிஷேகம் செய்யப்படவில்லை என்பதும், பரலோகத்தில் இயேசுவோடு சேவை செய்யும் பாக்கியம் இவர்களுக்கு இல்லை என்பதும் உண்மைதான். அதற்காக தாங்கள் எதையோ இழந்துவிட்டதாக இவர்கள் நினைப்பதில்லை. கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்ட நிறைய ஆண்களைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. ஆனால், அவர்களில் நிறைய பேர் 1,44,000 பேரில் ஒருவராக இல்லை. உதாரணத்துக்கு, யோவான் ஸ்நானகரைப் பற்றிச் சொல்லலாம். (மத். 11:11) இன்னொரு உதாரணம் தாவீது! (அப். 2:34) இவர்களும் இன்னும் நிறைய பேரும் பூஞ்சோலையில் உயிரோடு எழுப்பப்படுவார்கள். திரள் கூட்டமான மக்களோடு சேர்ந்து யெகோவாவையும் அவருடைய ஆட்சியையும் உண்மையோடு ஆதரிப்பார்கள்.
19. நாம் வாழும் காலத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, இப்போது நிறைவேறிவருகிற யோவானின் தரிசனம் எப்படி உதவுகிறது?
19 இதுவரை இல்லாதளவுக்கு எல்லா தேசத்தையும் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை யெகோவா ஒன்றுகூட்டியிருக்கிறார். நமக்கு பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த திரள் கூட்டத்தின் பாகமாக ஆவதற்கு மற்றவர்களுக்கு உதவ வேண்டும். (யோவா. 10:16) மனிதர்களைப் பாடாய்ப்படுத்திய அரசாங்கங்களையும் மதங்களையும் மிகுந்த உபத்திரவத்தில் யெகோவா அழித்துவிடுவார். திரள் கூட்டத்தைச் சேர்ந்த எல்லாரும் பூமியிலிருந்துகொண்டு யெகோவாவுக்கு என்றென்றுமாக சேவை செய்வார்கள். இது எவ்வளவு பெரிய பாக்கியம்!—வெளி. 7:14.
பாட்டு 134 புதிய பூமியில் வாழ்க்கை
^ பாரா. 5 “திரள் கூட்டமான மக்கள்” ஒன்றுகூட்டிச் சேர்க்கப்படுவதை யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்தார். அதைப் பற்றி இந்தக் கட்டுரை விளக்கும். அந்தத் திரள் கூட்டத்தின் பாகமாக இருக்கிற எல்லாருடைய விசுவாசத்தையும் இது பலப்படுத்தும்.