படிப்புக் கட்டுரை 37
“எல்லா தேசங்களையும் நான் உலுக்குவேன்”
“எல்லா தேசங்களையும் நான் உலுக்குவேன். அப்போது, எல்லா தேசங்களின் செல்வங்களும் இந்த ஆலயத்துக்குள் வந்து சேரும்.”—ஆகா. 2:7.
பாட்டு 24 வாருங்கள் யெகோவாவின் மலைக்கு!
இந்தக் கட்டுரையில்... *
1-2. நம்முடைய நாட்களில் என்ன நடக்குமென்று ஆகாய் தீர்க்கதரிசி சொன்னார்?
“கண்ண மூடி கண்ண திறக்கறதுக்குள்ள கடைகளும் பழைய கட்டிடங்களும் தரைமட்டம் ஆயிடுச்சு. ஊரே பீதியில இருந்துச்சு. . . . ரெண்டே நிமிஷத்துல இதெல்லாம் நடந்து முடிஞ்சுருச்சுன்னு சிலர் சொன்னாங்க. ஆனா, எனக்கு என்னமோ ரொம்ப நேரம் ஆன மாதிரி இருந்துச்சு.” 2015-ம் வருஷம் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர் தப்பிய சிலர் சொன்ன வார்த்தைகள்தான் இவை. இதுபோன்ற ஒரு பயங்கரமான சம்பவம் உங்கள் கண்முன்னே நடந்தால் கண்டிப்பாக அவ்வளவு சீக்கிரம் அதை மறந்துவிட மாட்டீர்கள்.
2 இந்த நிலநடுக்கம் நேபாளத்தையே ஓர் உலுக்கு உலுக்கியது. ஆனால், இப்போது முழு உலகையே உலுக்கும் ஒரு வேலை நடந்துகொண்டிருக்கிறது. இந்த வேலை ரொம்ப வருஷங்களாக நடக்கிறது. இதைப் பற்றி ஆகாய் தீர்க்கதரிசி முன்பே சொல்லியிருக்கிறார். “‘சீக்கிரத்தில் நான் வானத்தையும் பூமியையும் கடலையும் நிலத்தையும் இன்னொரு தடவை உலுக்குவேன்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்” என்று அவர் எழுதினார்.—ஆகா. 2:6.
3. நிஜமான ஒரு நிலநடுக்கத்தைப் பற்றி ஆகாய் பேசவில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்?
3 பொதுவாக, நிலநடுக்கம் வந்து ஓர் இடத்தை உலுக்கும்போது அழிவுதான் மிஞ்சும். இப்படிப்பட்ட ஒரு நிலநடுக்கத்தைப் பற்றி ஆகாய் பேசவில்லை. ஏனென்றால், அவர் சொன்ன உலுக்கும் வேலையால் சில நன்மைகள் இருக்கின்றன. அதைப் பற்றி யெகோவாவே இப்படிச் சொல்லியிருக்கிறார்: “எல்லா தேசங்களையும் நான் உலுக்குவேன். அப்போது, எல்லா தேசங்களின் செல்வங்களும் இந்த ஆலயத்துக்குள் வந்து சேரும். இந்த ஆலயத்தை நான் மகிமையால் நிரப்புவேன்.” (ஆகா. 2:7) ஆகாய் காலத்தில் இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? நம்முடைய காலத்தில் இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறி வருகிறது? தேசங்களை உலுக்கும் இந்த வேலையில் நமக்கு என்ன பங்கு இருக்கிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இப்போது நாம் பதில்களைப் பார்க்கலாம்.
உற்சாகப்படுத்தும் ஒரு செய்தி—ஆகாயின் நாட்களில்
4. ஆகாய் தீர்க்கதரிசிக்கு யெகோவா என்ன வேலை கொடுத்தார்?
4 பாபிலோனில் கைதிகளாக இருந்த யூதர்களில் சிலர், கி.மு. 537-ல் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள். ஆகாயும் அவர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டும். எருசலேமுக்கு வந்த கொஞ்ச நாட்களில், ஆலயத்துக்கு அஸ்திவாரம் போட்டு அதைக் கட்ட ஆரம்பித்தார்கள். (எஸ்றா 3:8, 10) ஆனால், பயங்கரமான எதிர்ப்பு வந்ததால் சோர்ந்துபோய் அந்த வேலையை அப்படியே நிறுத்திவிட்டார்கள். (எஸ்றா 4:4; ஆகா. 1:1, 2) அதனால், கி.மு. 520-ல் யெகோவா ஆகாய்க்கு ஒரு முக்கியமான வேலையைக் கொடுத்தார். அதாவது, அவர்களுடைய மனதில் அணைந்துபோயிருந்த ஆர்வத்தீயை மூட்டிவிடும்படி யெகோவா சொன்னார். *—எஸ்றா 6:14, 15.
5. ஆகாய் சொன்ன செய்தி யூதர்களுக்கு ஏன் உற்சாகத்தைக் கொடுத்திருக்கும்?
5 அன்றைக்கு இருந்த யூதர்கள் ரொம்பவே சோர்ந்துபோயிருந்தார்கள். அவர்கள் யெகோவாமேல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதனால்தான், ஆகாய் மூலம் கடவுள் இப்படிச் சொன்னார்: “‘தேசத்து ஜனங்களே, தைரியமாக வேலையில் இறங்குங்கள்’ என்று யெகோவா சொல்கிறார். ‘நான் உங்களோடு இருக்கிறேன்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.” (ஆகா. 2:4) “பரலோகப் படைகளின் யெகோவா” என்ற வார்த்தையைக் கேட்டதும் அன்றைக்கு இருந்த யூதர்களுக்குத் தைரியம் கிடைத்திருக்கும். கோடிக்கணக்கான தேவதூதர்கள் அடங்கிய பெரிய படையே யெகோவாவிடம் இருக்கிறது என்பது அவர்களுக்கு ஞாபகம் வந்திருக்கும். அதனால், யெகோவாவை நம்பினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கும்.
6. தேசங்களை உலுக்கியதால் ஆகாயின் காலத்தில் என்ன நடந்தது?
6 தேசங்களை உலுக்கப்போவதாக யெகோவா ஆகாய் மூலம் சொன்னார். அப்போது, பெர்சியாதான் உலக வல்லரசாக இருந்தது. நிறைய தேசங்களை அது தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதனால், தேசங்களை உலுக்கப்போவதாக சொன்னபோது பெர்சியாவை யெகோவா உலுக்கப்போகிறார் என்பது அன்றைக்கு இருந்தவர்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும். ஆலயத்தைக் கட்ட முடியாமல் சோர்ந்துபோயிருந்த யூதர்களுடைய மனதுக்கு இந்தச் செய்தி புத்துணர்ச்சியைக் கொடுத்தது. யெகோவா இப்படி உலுக்குவதால் என்ன பலன் கிடைக்கும்? முதலாவதாக, அவர்களால் ஆலயத்தைக் கட்டி முடிக்க முடியும். இரண்டாவதாக, யூதர்களாக இல்லாதவர்களும் யெகோவாவை வணங்குவதற்காக அந்த ஆலயத்துக்கு வர முடியும். யெகோவா சொன்ன இந்தச் செய்தி அவர்களுக்கு கண்டிப்பாக உற்சாகத்தைக் கொடுத்திருக்கும்!—சக. 8:9.
உலகத்தை உலுக்கும் ஒரு வேலை—இன்று
7. இன்றைக்கு உலகத்தில் என்ன உலுக்கும் வேலை நடந்துகொண்டிருக்கிறது, அதில் நாம் எப்படிக் கலந்துகொள்கிறோம்?
7 ஆகாய் சொன்ன தீர்க்கதரிசனம் இன்றைக்கு எப்படி நிறைவேறிவருகிறது? இன்றைக்கு இருக்கிற தேசங்களையும் யெகோவா உலுக்கிக் கொண்டிருக்கிறார். இதில் நமக்கும் ஒரு பங்கு இருக்கிறது. 1914-ல் பரலோக அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு கிறிஸ்துவை யெகோவா நியமித்தார். (சங். 2:6) பரலோகத்தில் ஓர் அரசாங்கத்தை கடவுள் ஏற்படுத்தியிருக்கிறார் என்ற செய்தி உலகத் தலைவர்களுக்கு கெட்ட செய்தியாகத்தான் இருந்தது. ஏனென்றால், “மற்ற தேசத்தாருக்கு குறிக்கப்பட்ட காலங்கள்” அப்போது முடிவுக்கு வந்தது. அதாவது, யெகோவாவால் நேரடியாக நியமிக்கப்படாத ராஜாக்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம் முடிவுக்கு வந்தது. (லூக். 21:24) இந்த உண்மையை புரிந்துகொண்ட யெகோவாவின் மக்கள், கடவுளுடைய அரசாங்கம் மட்டும்தான் மனிதர்களுக்கு விடிவு காலத்தைக் கொண்டு வரும் என்ற செய்தியைப் பிரசங்கித்து வருகிறார்கள். முக்கியமாக, 1919-லிருந்து இந்த வேலையை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி” உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கிறது.—மத். 24:14.
8. சங்கீதம் 2:1-3 சொல்கிறபடி, பெரும்பாலான மக்கள் என்ன செய்கிறார்கள்?
8 நாம் சொல்லும் செய்தியை மக்கள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்களா? நிறைய பேர் ஏற்றுக்கொள்வதில்லை. (சங்கீதம் 2:1-3-ஐ வாசியுங்கள்.) சொல்லப்போனால், தேசங்கள் கொந்தளிக்கின்றன. யெகோவாவால் நியமிக்கப்பட்ட ராஜாவை அவர்கள் ஏற்றுக்கொள்வதும் இல்லை. நாம் சொல்லும் செய்தியை ‘நல்ல செய்தியாக’ பார்ப்பதும் இல்லை. சில அரசாங்கங்கள் ஊழிய வேலையைத் தடை செய்திருக்கின்றன. இன்றைக்கு உலகத் தலைவர்கள் நிறைய பேர் கடவுளை வணங்குவதாக சொல்லிக்கொண்டாலும், தங்களுடைய அதிகாரத்தை விட்டுக்கொடுக்க அவர்களுக்கு மனமில்லை. இயேசுவின் காலத்திலிருந்த ராஜாக்களைப் போலத்தான் இந்த உலகத் தலைவர்களும் இருக்கிறார்கள். இயேசுவின் சீஷர்களை எதிர்ப்பதன் மூலம் இயேசுவையே இவர்கள் எதிர்க்கிறார்கள்.—அப். 4:25-28.
9. யெகோவா தேசங்களுக்கு என்ன வாய்ப்பு கொடுக்கிறார்?
9 தேசங்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்வதால் யெகோவா என்ன சொல்கிறார்? “அதனால் ராஜாக்களே, இப்போதே விவேகமாக நடந்துகொள்ளுங்கள். பூமியிலுள்ள நீதிபதிகளே, பாடம் கற்றுக்கொள்ளுங்கள். பயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள். பயபக்தியோடு அவர்முன் சந்தோஷப்படுங்கள். அவருடைய மகனுக்கு மதிப்பு கொடுங்கள். இல்லையென்றால், கடவுளுக்கு பயங்கர கோபம் வரும். அவருடைய கோபம் சட்டென்று பற்றியெரியும். நீங்கள் அழிந்துபோவீர்கள். அவரிடம் தஞ்சம் அடைகிற எல்லாரும் சந்தோஷமானவர்கள்” என்று சொல்கிறார். (சங். 2:10-12) உலகத் தலைவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொள்ளவும், யெகோவாவின் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளவும் யெகோவா அவர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். ஆனால், நாம் “கடைசி நாட்களில்” வாழ்வதால், இந்த வாய்ப்பு ரொம்ப நாட்களுக்கு இருக்காது. (2 தீ. 3:1; ஏசா. 61:2) வாய்ப்பு என்ற கதவை யெகோவா அடைப்பதற்கு முன்பே மக்கள் அவரைப் பற்றித் தெரிந்துகொண்டு சீக்கிரமாக ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
உலுக்கும் வேலை—நல்ல பலன்கள்
10. இந்த உலுக்கும் வேலையால் என்ன நல்ல பலன்கள் கிடைக்கும் என்று ஆகாய் 2:7-9 சொல்கிறது?
10 இந்த உலுக்கும் வேலையால் சில நல்ல பலன்கள் கிடைக்கும் என்று ஆகாய் அன்றைக்கே சொன்னார். எப்படி? “எல்லா தேசங்களின் செல்வங்களும் . . . வந்து சேரும்” என்று அவர் சொன்னார். அதாவது, நல்ல ஜனங்கள் யெகோவாவிடம் வருவார்கள் என்று சொன்னார். * (ஆகாய் 2:7-9-ஐ வாசியுங்கள்.) “கடைசி நாட்களில்” இப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் நடக்கும் என்று ஏசாயாவும் மீகாவும்கூட முன்பே சொல்லியிருக்கிறார்கள்.—ஏசா. 2:2-4; மீ. 4:1, 2.
11. நல்ல செய்தியைக் கேட்டவுடனே ஒரு சகோதரர் என்ன முடிவெடுத்தார்?
11 உலகத்தை உலுக்கும் இந்தச் செய்தியை முதன்முதலில் கேட்டபோது ஒருவருக்கு எப்படி இருந்தது என்பதைப் பற்றி இந்த பாராவில் பார்க்கலாம். அவருடைய பெயர் கென். அவர் இப்போது உலகத் தலைமை அலுவலகத்தில் சேவை செய்கிறார். கிட்டத்தட்ட 40 வருஷங்களுக்கு முன்பு, அவர் நல்ல செய்தியைக் கேள்விப்பட்டார். “நாம கடைசி நாள்லதான் வாழ்றோங்கறத பைபிள்ல இருந்து எடுத்துக்காட்டுனாங்க. அப்ப, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. கடவுளோட பிரியத்த சம்பாதிக்கறதுக்கும், முடிவில்லாத வாழ்கைய வாழ்றதுக்கும், மாறிகிட்டே இருக்கற இந்த உலகத்தோட பக்கம் நிக்காம யெகோவா பக்கம் உறுதியா நிக்கணும்னு புரிஞ்சுகிட்டேன். இத பத்தி நான் நிறைய ஜெபம் செஞ்சேன்,
உடனடியா முடிவெடுத்தேன். உலகத்துக்கு ஆதரவு கொடுக்கறத நிறுத்திட்டு, யாராலயும் உலுக்கவே முடியாத கடவுளோட அரசாங்கம் பக்கம் வந்துட்டேன்” என்று கென் சொல்கிறார்.12. இந்தக் கடைசி நாட்களில் யெகோவாவின் ஆன்மீக ஆலயம் எப்படி மகிமையால் நிறைந்திருக்கிறது?
12 தன்னுடைய மக்கள் செய்கிற வேலையை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். இந்தக் கடைசி நாட்களில் நிறைய பேர் அவரை வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். 1914-ல் 5,000-க்கும் கொஞ்சம் அதிகமானவர்கள்தான் யெகோவாவை வணங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது 80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அவரை வணங்குகிறார்கள். இவர்களும் லட்சக்கணக்கான மற்றவர்களும் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு வருஷமும் கூடிவருகிறார்கள். இப்படி, ஆன்மீக ஆலயத்தின் (அதாவது, தூய வணக்கத்துக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டின்) பூமிக்குரிய பிரகாரங்களில், “எல்லா தேசங்களின் செல்வங்களும்” வந்துசேர்ந்திருக்கின்றன. இந்தச் செல்வங்களெல்லாம், அதாவது நல்ல ஜனங்களெல்லாம், புதிய சுபாவத்தை அணிந்துகொண்டு யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறார்கள்.—எபே. 4:22-24.
13. இந்தக் கடைசி காலத்தில் வேறு என்ன தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கின்றன? (அட்டைப் படம்)
13 இந்த முன்னேற்றங்களை எல்லாம் பார்க்கும்போது வேறு சில தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணத்துக்கு, “கொஞ்சம் பேர் ஆயிரம் பேராகவும், சாதாரண ஜனங்கள் சக்திபடைத்த தேசமாகவும் ஆவார்கள். யெகோவாவாகிய நானே சரியான நேரத்தில் இது வேகமாக நடக்கும்படி செய்வேன்” என்று ஏசாயா 60:22 சொல்கிறது. யெகோவாவை வணங்க ஆரம்பித்திருக்கும் இந்தச் ‘செல்வங்களிடம்’ நிறைய திறமைகளும் இருக்கின்றன. ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை’ பிரசங்கிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது. “தேசங்களிடமிருந்து . . . தேவையானதையெல்லாம் பெற்றுக்கொள்வாய்” என்று ஏசாயா சொல்கிறபடி, இந்தச் செல்வங்களுடைய திறமைகளெல்லாம், யெகோவாவின் வேலையைச் செய்ய ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது. (ஏசா. 60:5, 16) இந்தச் ‘செல்வங்களால்’தான், 240 நாடுகளில் நம்முடைய பிரசங்க வேலை நடக்கிறது. 1000-க்கும் அதிகமான மொழிகளில் நம்முடைய பிரசுரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
முடிவெடுக்க வேண்டிய நேரம்
14. மக்கள் இப்போதே என்ன முடிவெடுக்க வேண்டியிருக்கிறது?
14 நாம் பிரசங்கிக்கும் செய்தி தேசங்களை உலுக்கிக்கொண்டிருக்கிற இந்தக் கடைசி நாட்களில், மக்கள் ஒரு முடிவை எடுத்தே ஆக வேண்டும். கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரிப்பதா அல்லது உலக அரசாங்கங்களை ஆதரிப்பதா? இதுதான் அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு. இது ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு முடிவு. இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. யெகோவாவின் மக்கள் அரசாங்கம் போடும் சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள். ஆனால், அரசியலில் தலையிடாமல், நடுநிலையோடு இருக்கிறார்கள். (ரோ. 13:1-7) கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டும்தான் மனிதர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். அந்த அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல.—யோவா. 18:36, 37.
15. நமக்கு எப்படிப்பட்ட சோதனை வரும் என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது?
15 கடைசி நாட்களில் யெகோவாவின் மக்கள் எந்தளவுக்கு அவருக்கு உண்மையாக இருக்கிறார்கள் என்பதைச் சோதிக்கும் சூழ்நிலைகள் வரும் என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. நாட்கள் போகப் போக அந்தச் சோதனை அதிகமாகிக்கொண்டே போகும். அந்தச் சமயத்தில், கடவுளுக்குக் கொடுக்க வேண்டியதைத் தங்களுக்குக் கொடுக்கும்படி அரசாங்கங்கள் நம்மை கட்டாயப்படுத்தும். அப்படிச் செய்யாதபோது நம்மைத் துன்புறுத்தும். (வெளி. 13:12, 15) “சிறியவர்கள், பெரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், அடிமைகள், சுதந்திர மக்கள் என எல்லாரும் தங்கள் வலது கையிலாவது நெற்றியிலாவது ஓர் அடையாளக் குறியைப் பெற்றுக்கொள்ளும்படி” அரசாங்கங்கள் கட்டாயப்படுத்தும். (வெளி. 13:16) அடையாளக் குறிபோடும் பழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது. அடிமைகள் யாருக்குச் சொந்தம் என்று தெரிவதற்காக இப்படி அடையாளங்களைப் போட்டார்கள். நம்முடைய காலத்திலும் எல்லாரும் தங்களுடைய கையிலும் நெற்றிகளிலும் அடையாளக் குறியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசியல் அமைப்புகள் எதிர்பார்க்கும். ஆனால், இது நிஜமான அடையாளக் குறியா? இல்லை! அப்படியென்றால், இதன் அர்த்தம் என்ன? எல்லாரும் தங்களுடைய யோசனைகள் மூலமும் செயல்கள் மூலமும் அரசியல் அமைப்புகளை ஆதரிக்க வேண்டும் என்றும் அவற்றோடு சேர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அவை எதிர்பார்க்கும். இதுதான் அதன் அர்த்தம்.
16. யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் ஏன் இப்போதே செய்ய வேண்டும்?
16 அரசாங்கங்கள் போடும் அடையாளக் குறியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வாழ்க்கையை ஓட்டுவதே கஷ்டமாக இருக்கலாம். ஏன், ஆபத்தாகக்கூட இருக்கலாம். ‘அடையாளக் குறியைப் பெற்றவர்களைத் தவிர வேறு யாராலும் எதையும் வாங்கவோ விற்கவோ முடியாது’ என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. (வெளி. 13:17) ஆனால், அந்த அடையாளத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு கடவுள் என்ன செய்யப்போகிறார் என்று வெளிப்படுத்துதல் 14:9, 10 சொல்கிறது. அதனால், அரசாங்கங்கள் கொடுக்கிற அடையாளக் குறியை நாம் பெற்றுக்கொள்ள மாட்டோம். அதற்குப் பதிலாக, “நான் யெகோவாவுக்குச் சொந்தமானவன்” என்று கையில் எழுதிக்கொண்டதைப் போல் வாழ்வோம். (ஏசா. 44:5) அதோடு, யெகோவாவுக்கு உண்மையாக இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் இப்போதே செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், ‘நீ எனக்கு சொந்தமானவன்’ என்று யெகோவா சந்தோஷமாகச் சொல்வார்!
கடைசியாக யெகோவா உலுக்கப்போகிறார்
17. யெகோவா பொறுமையாகவே இருப்பாரா?
17 ஒருவர்கூட அழிந்துபோகக் கூடாது என்று யெகோவா ஆசைப்படுகிறார். அதனால்தான், இந்தக் கடைசி நாட்களில் அவர் ரொம்ப பொறுமையாக இருக்கிறார். (2 பே. 3:9) எல்லாரும் மனம் திருந்தி ஒரு நல்ல முடிவெடுப்பதற்கு அவர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஆனால், அவருடைய பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கிறது. யெகோவா கொடுத்திருக்கும் இந்த வாய்ப்பைத் தட்டிக்கழிப்பவர்களுக்கு பார்வோனுக்கு வந்த நிலைமைதான் வரும். “நான் உன்னையும் உன் ஜனங்களையும் கொடிய கொள்ளைநோயால் எப்போதோ தாக்கியிருப்பேன். நீயும் இந்தப் பூமியிலிருந்தே ஒழிந்துபோயிருப்பாய். ஆனால், என் வல்லமையைக் காட்டுவதற்கும் பூமியெங்கும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்குமே நான் உன்னை விட்டுவைத்திருக்கிறேன்” என்று யெகோவா பார்வோனிடம் சொன்னார். (யாத். 9:15, 16) யெகோவாதான் ஒரே உண்மைக் கடவுள் என்பதை எல்லா தேசங்களும் சீக்கிரத்தில் தெரிந்துகொள்ளும்.—எசே. 38:23.
18. (அ) எந்த உலுக்குதலைப் பற்றி ஆகாய் 2:6, 20-22 சொல்கிறது? (ஆ) ஆகாய் சொன்னது எதிர்காலத்தில் நடக்கும் என்று நமக்கு எப்படித் தெரியும்?
18 ஆகாய் 2:6, 20-22 சொல்கிற விஷயம் எதிர்காலத்தில் நிறைவேறும் என்று பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (வாசியுங்கள்.) “‘நான் இன்னொரு தடவை இந்தப் பூமியை மட்டுமல்ல, வானத்தையும் உலுக்குவேன்’ என்று அவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ‘இன்னொரு தடவை’ என்று அவர் குறிப்பிட்டிருப்பது உலுக்கப்படுகிறவை, அதாவது உண்டாக்கப்பட்டவை, அழிக்கப்படும் என்பதை அர்த்தப்படுத்துகிறது; உலுக்கப்படாதவை நிலைத்திருப்பதற்காக அவை அழிக்கப்படும்” என்று அவர் எழுதினார். (எபி. 12:26, 27) ஆகாய் 2:7-ல் ‘நான் உலுக்குவேன் என்று யெகோவா சொல்லியிருக்கிறார்’ என்று முன்பு பார்த்தோம். இந்த உலுக்குதலின் அர்த்தம் வேறு, எபிரெயர் புத்தகத்தில் பவுல் எழுதிய உலுக்குதலின் அர்த்தம் வேறு. ஏனென்றால், பவுல் எழுதிய உலுக்குதல் அழிவில் போய் முடிகிறது. யெகோவாவுக்குத்தான் ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது என்று ஏற்றுக்கொள்ளாத எல்லாரும் பார்வோனைப் போல் நிரந்தரமாக அழிந்துபோவார்கள்.
19. எது அசைக்கப்படாது, அது நமக்கு எப்படித் தெரியும்?
19 உலுக்கப்படாத ஒன்றைப் பற்றி பவுல் சொன்னதைக் கவனித்தீர்களா? அது என்ன? “உலுக்கி அசைக்க முடியாத அரசாங்கம் நமக்குக் கிடைக்கப்போவதால் தொடர்ந்து அளவற்ற கருணையைப் பெற்று, பயத்தோடும் பக்தியோடும் கடவுளுக்குப் பிரியமாகப் பரிசுத்த சேவை செய்வோமாக” என்று அவர் சொன்னார். (எபி. 12:28) யெகோவா கடைசியாக எல்லாவற்றையும் உலுக்கியதற்குப் பின்பு அவருடைய அரசாங்கம் மட்டும்தான் நிலைத்திருக்கும். அது ஒருபோதும் அசைக்கப்படாது!—சங். 110:5, 6; தானி. 2:44.
20. மக்கள் என்ன முடிவெடுத்தாக வேண்டும், நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்?
20 காலத்தை வீணாக்க இது நேரமல்ல! மக்கள் ஒரு முடிவை எடுத்தே ஆக வேண்டும். அழிவுக்குப் போகிற பாதையிலேயே தொடர்ந்து இருப்பதா அல்லது யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ்ந்து முடிவில்லாத வாழ்க்கைக்குப் போகிற பாதையில் இருப்பதா? இதுதான் அவர்கள் எடுக்க வேண்டிய முடிவு. (எபி. 12:25) பிரசங்கிப்பதன் மூலம் இந்த முக்கியமான முடிவெடுப்பதற்கு நாம் அவர்களுக்கு உதவ முடியும். கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு இன்னும் நிறைய செல்வங்களுக்கு, அதாவது நல்ல மக்களுக்கு, நாம் உதவி செய்யலாம். அதுமட்டுமல்ல, நம்முடைய எஜமான் சொன்னதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம். “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்று அவர் சொன்னார்.—மத். 24:14.
பாட்டு 40 நாம் யாருக்கு சொந்தம்?
^ பாரா. 5 ஆகாய் 2:7-ஐ இவ்வளவு நாட்கள் நாம் புரிந்துகொண்ட விதத்தில் இப்போது ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். அதோடு, தேசங்களை உலுக்கும் வேலையில் நமக்கு இருக்கும் பங்கைப் பற்றியும் பார்க்கப்போகிறோம். இந்த வேலைக்கு வரவேற்பும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது.
^ பாரா. 4 ஆகாய் செய்த வேலைக்கு நல்ல பலன் கிடைத்தது என்று சொல்லலாம். ஏனென்றால், கி.மு. 515-ல் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.
^ பாரா. 10 தேசங்களை யெகோவா உலுக்குவதால் மக்கள் அவரிடம் வருவதில்லை என்று முன்பு நாம் சொன்னோம். மே 15, 2006 காவற்கோபுரத்தில் வெளிவந்த “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியைப் பாருங்கள். ஆனால், இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதைப் பற்றித்தான் இந்த பாரா சொல்கிறது.
^ பாரா. 63 படங்களின் விளக்கம்: யெகோவாவின் ஆலயத்தைக் கட்டும் வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடும்படி ஆகாய் மக்களை உற்சாகப்படுத்துகிறார். யெகோவாவின் செய்தியை அவருடைய மக்கள் இன்றைக்குச் சுறுசுறுப்பாகப் பிரசங்கிக்கிறார்கள். யெகோவா இந்த உலகத்தை கடைசியாக உலுக்கப்போகிறார் என்ற செய்தியை ஒரு தம்பதி பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள்.