படிப்புக் கட்டுரை 4
நினைவுநாள் நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொள்கிறோம்?
“என் நினைவாக இதைத் தொடர்ந்து செய்யுங்கள்.”—லூக். 22:19.
பாட்டு 20 அருமை மகனையே தந்தீர்கள்!
இந்தக் கட்டுரையில்... *
1-2. (அ) நமக்குப் பிடித்தவர்கள் யாராவது இறந்துபோனால் முக்கியமாக எந்தச் சமயத்தில் அவர்களை நினைத்துப் பார்ப்போம்? (ஆ) தான் இறப்பதற்கு முந்தின ராத்திரியில் இயேசு என்ன ஏற்பாடு செய்தார்?
உங்களுக்கு ரொம்ப பிடித்தவர்கள் யாராவது இறந்துபோயிருக்கிறார்களா? அப்படியென்றால், எத்தனை வருஷமானாலும் அவர்களை நீங்கள் நினைத்துப்பார்ப்பீர்கள். அவர்களோடு நீங்கள் இருந்த பசுமையான நினைவுகள் உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். முக்கியமாக, ஒவ்வொரு வருஷமும் அவர்களுடைய இறந்த நாள் வரும்போது, அந்த நினைவுகளெல்லாம் உங்கள் மனதுக்குள்ளே வந்து போகும்.
2 ஒவ்வொரு வருஷமும் உலகம் முழுவதும் இருக்கிற லட்சக்கணக்கானவர்கள் இயேசு கிறிஸ்துவின் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். அவர்மேல் ரொம்ப அன்பு வைத்திருப்பதால், நாமும் அதில் தவறாமல் கலந்துகொள்கிறோம். (1 பே. 1:8) அப்படிக் கலந்துகொள்ளும்போது, நம்மைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்வதற்காக இயேசு தன்னுடைய உயிரையே மீட்பு விலையாகக் கொடுத்தார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்கிறோம். (மத். 20:28) சொல்லப்போனால், சீஷர்கள் தன்னுடைய மரணத்தை நினைத்துப்பார்க்க வேண்டும் என்று இயேசு ஆசைப்பட்டார். தான் இறப்பதற்கு முந்தின ராத்திரியில், விசேஷமான ஓர் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்தபோது, “என் நினைவாக இதைத் தொடர்ந்து செய்யுங்கள்” என்று கட்டளை கொடுத்தார்.—லூக். 22:19.
3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?
3 நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறவர்களில் கொஞ்சம் பேர் பரலோக நம்பிக்கை உள்ளவர்கள். ஆனால், லட்சக்கணக்கானவர்கள் பூமியில் வாழ்கிற நம்பிக்கை உள்ளவர்கள். நமக்கு எந்த நம்பிக்கை இருந்தாலும் சரி, நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒவ்வொரு வருஷமும் நாம் ஏன் ஆர்வமாக இருக்கிறோம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இதில் கலந்துகொள்வதால் கிடைக்கிற நன்மைகளைப் பற்றியும் பார்ப்போம். முதலில், பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொள்கிறார்கள் என்பதற்கு சில காரணங்களைப் பார்க்கலாம்.
பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் நினைவுநாள் நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொள்கிறார்கள்?
4. பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் ஏன் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுகிறார்கள்?
4 நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் ஒவ்வொரு வருஷமும் ஆர்வமாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுவார்கள். ஆனால், அவர்கள் ஏன் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுகிறார்கள்? பதில் தெரிந்துகொள்ள, இயேசு பூமியில் வாழ்ந்த கடைசி ராத்திரியில் என்ன நடந்தது என்று கவனியுங்கள். பஸ்கா உணவு சாப்பிட்ட பின்பு, விசேஷமான ஒரு விருந்துக்கு இயேசு ஏற்பாடு செய்தார். அதைத்தான் எஜமானுடைய இரவு விருந்து என்று சொல்கிறோம். அந்தச் சமயத்தில் அவருக்கு உண்மையாக இருந்த 11 அப்போஸ்தலர்களிடம் ரொட்டியையும் திராட்சமதுவையும் கொடுத்து சாப்பிட சொன்னார். அதற்குப் பிறகு, புதிய ஒப்பந்தத்தைப் பற்றியும், அரசாங்கத்துக்கான ஒப்பந்தத்தைப் பற்றியும் அவர்களிடம் சொன்னார். * (லூக். 22:19, 20, 28-30) இந்த ஒப்பந்தத்துக்குள் வருகிற அப்போஸ்தலர்களுக்கும் இன்னும் கொஞ்சம் பேருக்கும் பரலோகத்தில் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவை செய்கிற வாய்ப்பு இருக்கிறது. (வெளி. 5:10; 14:1) இன்றைக்கும் பரலோக நம்பிக்கை உள்ளவர்களில் கொஞ்சம் பேர் பூமியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்த இரண்டு ஒப்பந்தங்களின் கீழ் வருவதால் நினைவுநாள் நிகழ்ச்சியில் அவர்கள் மட்டும்தான் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுகிறார்கள்.
5. பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் எதைப் பற்றி தெரிந்துவைத்திருக்கிறார்கள்?
5 பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் நினைவுநாள் நிகழ்ச்சியில் ஆர்வமாக கலந்துகொள்ள இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்தச் சமயத்தில் அவர்களுக்கு இருக்கிற நம்பிக்கையைப் பற்றி அவர்களால் ஆழமாக யோசித்துப்பார்க்க முடிகிறது. பரலோகத்தில் சாவே இல்லாமலும், அழிவே இல்லாமலும் வாழ்கிற வாய்ப்பை அவர்களுக்கு யெகோவா கொடுத்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவோடும் மற்ற சக ராஜாக்களோடும் சேர்ந்து யெகோவாவுக்கு சேவை செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. சொல்லப்போனால், யெகோவாவை அவர்கள் நேருக்குநேர் பார்ப்பார்கள். (1 கொ. 15:51-53; 1 யோ. 3:2) இந்த எல்லா பாக்கியத்தையும் அனுபவிப்பதற்காகவே யெகோவா தங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவற்றையெல்லாம் நினைத்து அவர்கள் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். (தீத். 2:13) ஆனால், அவர்கள் பரலோகத்துக்குப் போக வேண்டுமென்றால் சாகும்வரை உண்மையாக இருக்க வேண்டும். (2 தீ. 4:7, 8) சரி, ‘வேறே ஆடுகள்’ ஏன் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்? (யோவா. 10:16) அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
வேறே ஆடுகள் நினைவுநாள் நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொள்கிறார்கள்?
6. வேறே ஆடுகள் ஏன் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்?
6 வேறே ஆடுகள், அதாவது பூமியில் வாழ்கிற நம்பிக்கை உள்ளவர்கள் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடவில்லை என்றாலும் நினைவுநாள் நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகக் கலந்துகொள்கிறார்கள். 1938-ல்தான் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முதல் தடவையாக இவர்களுக்கு அழைப்பு கிடைத்தது. அதைப் பற்றி மார்ச் 1, 1938 காவற்கோபுரம் இப்படிச் சொல்கிறது: “இந்த நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொள்வது சரியானதுதான். அவர்களுக்கும் இது சந்தோஷமான ஒரு சமயமாக இருப்பதால், அதில் கலந்துகொண்டு அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்.” கல்யாணம் நடப்பது மணமகனுக்கும் மணமகளுக்கும்தான் என்றாலும் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகக் கலந்துகொள்கிறவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். அதேபோல், ரொட்டியையும் திராட்சமதுவையும் வேறே ஆடுகள் சாப்பிடாவிட்டாலும் நினைவுநாள் நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகக் கலந்துகொள்வதில் சந்தோஷப்படுகிறார்கள்.
7. நினைவுநாள் பேச்சைக் கேட்பதற்கு வேறே ஆடுகள் ஏன் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்?
7 வேறே ஆடுகளும் தங்களுக்கு இருக்கிற நம்பிக்கையைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்க்கிறார்கள். நினைவுநாள் பேச்சைக் கேட்பதற்கு ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், யெகோவாவுக்கு உண்மையாக நடந்துகொள்பவர்களுக்கு கிறிஸ்துவும் அவரோடு ஆட்சி செய்கிற 1,44,000 பேரும் ஆயிர வருஷ ஆட்சியில் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என்பதைப் பற்றி அந்தப் பேச்சில் கேட்பார்கள். இயேசு ராஜாவின் தலைமையில் 1,44,000 பேர் இந்தப் பூமி பூஞ்சோலையாக மாறவும், மனிதர்கள் பரிபூரணமானவர்களாக ஆகவும் உதவி செய்வார்கள். நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிற வேறே ஆடுகள், ஏசாயா 35:5, 6; 65:21-23; வெளிப்படுத்துதல் 21:3, 4 போன்ற வசனங்களில் சொல்லப்பட்ட விஷயங்கள் எதிர்காலத்தில் நிறைவேறுவதைக் கற்பனை செய்துபார்க்கும்போது புல்லரித்துப் போய்விடுகிறார்கள். புதிய உலகத்தில் குடும்பத்தோடும் நண்பர்களோடும் சேர்ந்து இருப்பதை மனக்கண்ணில் பார்க்கும்போது, அவர்களுடைய எதிர்கால நம்பிக்கை இன்னும் பலப்படுகிறது. அதோடு, யெகோவாவைவிட்டு விலகி விடக் கூடாது என்பதிலும் அவர்கள் உறுதியாக இருப்பார்கள்.—மத். 24:13; கலா. 6:9.
8. வேறே ஆடுகள் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு இன்னொரு காரணம் என்ன?
8 வேறே ஆடுகள் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இன்னொரு காரணமும் இருக்கிறது. பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்கு தங்களுடைய அன்பையும் ஆதரவையும் காட்ட வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். பரலோக நம்பிக்கை உள்ளவர்களும் பூமியில் வாழ்கிற நம்பிக்கை உள்ளவர்களும் தோளோடு தோள் சேர்ந்து வேலை செய்வார்கள் என்று பைபிள் சொல்கிறது. அதற்குச் சில ஆதாரங்களை இப்போது பார்க்கலாம்.
9. பரலோக நம்பிக்கை உள்ளவர்களைப் பற்றி வேறே ஆடுகள் என்ன நினைப்பதாக சகரியா 8:23 சொல்கிறது?
9 சகரியா 8:23-ஐ வாசியுங்கள். பரலோக நம்பிக்கையுள்ள சகோதர சகோதரிகளைப் பற்றி வேறே ஆடுகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இந்தத் தீர்க்கதரிசனம் ரொம்ப அழகாக வர்ணிக்கிறது. இந்த வசனத்தில், ‘யூதன்’ என்று ஒருமையிலும் “உங்களோடு” என்று பன்மையிலும் சொல்லப்பட்டிருப்பது, பரலோக நம்பிக்கை உள்ளவர்களில் மீதியாக இருப்பவர்களைத்தான். (ரோ. 2:28, 29) “மற்ற தேசங்களைச் சேர்ந்த எல்லா பாஷைக்காரர்களிலும் பத்துப் பேர்” என்று சொல்லப்பட்டிருப்பது, வேறே ஆடுகளைத்தான். இவர்கள் பரலோக நம்பிக்கை உள்ளவர்களை ‘இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறார்கள்.’ அதாவது, யெகோவாவை வணங்குவதில் அவர்களோடு சேர்ந்து நெருக்கமாக உழைக்கிறார்கள். அதனால்தான், நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்களுடன் நெருக்கமாக இருப்பதைக் காட்டுகிறார்கள்.
10. எசேக்கியேல் 37:15-19, 24, 25-ல் இருக்கிற தீர்க்கதரிசனத்தை யெகோவா எப்படி நிறைவேற்றியிருக்கிறார்?
10 எசேக்கியேல் 37:15-19, 24, 25-ஐ வாசியுங்கள். இந்தத் தீர்க்கதரிசனத்தை யெகோவா நிறைவேற்றியிருக்கிறார் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. பரலோக நம்பிக்கை உள்ளவர்களும் பூமியில் வாழ்கிற நம்பிக்கை உள்ளவர்களும் ஒன்றுசேர்ந்து நெருக்கமாக உழைக்கிறார்கள். இரண்டு கோல்களைப் பற்றி இந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிறது. பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் ‘யூதாவின்’ கோலைப் போல் இருக்கிறார்கள். (இந்தக் கோத்திரத்தில் இருந்துதான் இஸ்ரவேல் ராஜாக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.) பூமியில் வாழ்கிற நம்பிக்கை உள்ளவர்கள் “எப்பிராயீமின்” கோலைப் போல் இருக்கிறார்கள். * இந்த இரண்டு தொகுதிகளையும் யெகோவா ஒன்றாக இணைப்பதால் அவர்கள் ‘ஒரே கோல்’ ஆகிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்? இயேசு ராஜாவுடைய தலைமையில் இவர்கள் ஒன்றுசேர்ந்து உழைக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் ஒவ்வொரு வருஷமும் இரண்டு தனித்தனி தொகுதியாக நினைவுநாளுக்குக் கூடிவராமல், ‘ஒரே மேய்ப்பரின் கீழ் ஒரே மந்தையாக’ கூடிவருகிறார்கள்.—யோவா. 10:16.
11. மத்தேயு 25:31-36, 40-ல் சொல்லப்பட்டிருக்கிற செம்மறியாடுகள் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார்கள்?
11 மத்தேயு 25:31-36, 40-ஐ வாசியுங்கள். இந்தக் கடைசி காலத்தில் வாழ்கிற நல்ல ஜனங்களைத்தான் இந்த உவமையில் “செம்மறியாடுகள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவர்கள்தான் பூமியில் வாழ்கிற நம்பிக்கையுள்ள வேறே ஆடுகள். கிறிஸ்துவின் சகோதரர்களில் மீதியாக இருக்கிறவர்களுக்கு இவர்கள் முழு ஆதரவு கொடுக்கிறார்கள். முக்கியமாக, இந்த உலகம் முழுவதும் நடக்கிற பிரமாண்டமான பிரசங்க வேலையை சுறுசுறுப்பாகச் செய்வதன் மூலம் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.—மத். 24:14; 28:19, 20.
12-13. கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு வேறு என்னென்ன வழிகளில் வேறே ஆடுகள் ஆதரவாக இருக்கிறார்கள்?
12 ஒவ்வொரு வருஷமும் நினைவுநாளுக்கு முந்தைய வாரங்களில், உலகம் முழுவதும் நடக்கிற விசேஷ ஊழியத்தில் வேறே ஆடுகள் கலந்துகொள்கிறார்கள். அப்போது, முடிந்தளவுக்கு நிறைய பேரை அந்த நிகழ்ச்சிக்காக கூப்பிடுகிறார்கள். (“ நினைவுநாளுக்காக முன்கூட்டியே திட்டம் போடுகிறீர்களா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.) அதுமட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிற சபைகளில் நினைவுநாள் நிகழ்ச்சிக்காக நிறைய ஏற்பாடுகளும் செய்கிறார்கள். ஒருவேளை, அந்த சபைகளில் பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் யாருமே இல்லையென்றாலும் அந்த ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இப்படியெல்லாம் செய்து கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு ஆதரவு காட்டுவதை நினைத்து அவர்கள் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு செய்கிற எல்லா உதவியும் இயேசுவுக்கே செய்கிற உதவி என்பது வேறே ஆடுகளுக்கு ரொம்ப நன்றாகத் தெரியும்.—மத். 25:37-40.
13 நமக்குப் பரலோக நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, நாம் எல்லாரும் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
நாம் எல்லாரும் ஏன் கலந்துகொள்கிறோம்?
14. யெகோவாவும் இயேசுவும் நம்மேல் எந்த அளவுக்கு அன்பு காட்டியிருக்கிறார்கள்?
14 யெகோவாவும் இயேசுவும் காட்டிய அன்புக்கு நாம் நன்றியோடிருக்க ஆசைப்படுகிறோம். யெகோவா ஏராளமான வழிகளில் நமக்கு அன்பு காட்டியிருக்கிறார். ஆனால், நமக்காக அவருடைய அருமை மகனையே பலியாகக் கொடுத்ததுதான் அவர் காட்டிய அன்பிலேயே மிகப் பெரிய அன்பு. நமக்காக சித்திரவதைப்பட்டு உயிரைக் கொடுப்பதற்காக தன்னுடைய மகனையே அனுப்பி இவ்வளவு பெரிய அன்பைக் காட்டியிருக்கிறார். (யோவா. 3:16) இயேசுவும் நமக்காக மனதார உயிர் கொடுப்பதன் மூலமாக நம்மேல் வைத்திருக்கிற அன்பைக் காட்டினார். (யோவா. 15:13) அவர்கள் இருவரும் காட்டிய அன்புக்கு நாம் எந்தக் கைமாறும் செய்ய முடியாது. ஆனால், ஒவ்வொரு நாளும் அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதன் மூலம் நம்முடைய நன்றியைக் காட்ட முடியும். (கொலோ. 3:15) நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது அவர்கள் இருவரும் காட்டிய அன்பை நாம் நினைத்துப்பார்க்கிறோம். அவர்கள்மேல் நாம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பதையும் காட்டுகிறோம்.
15. பரலோக நம்பிக்கை உள்ளவர்களும் பூமியில் வாழ்கிற நம்பிக்கை உள்ளவர்களும் மீட்புவிலையை ஏன் உயர்வாக மதிக்கிறார்கள்?
15 மீட்புவிலையை நாம் உயர்வாக மதிக்கிறோம். (மத். 20:28) பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் மீட்புவிலையை பொக்கிஷமாக நினைக்கிறார்கள். ஏனென்றால், மீட்புவிலையால்தான் பரலோகத்துக்குப் போகிற வாய்ப்பே அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. மீட்புவிலையில் விசுவாசம் இருப்பதால்தான் அவர்களை நீதிமான்களாக யெகோவா அறிவித்திருக்கிறார், தன்னுடைய மகன்களாக தத்தெடுத்திருக்கிறார். (ரோ. 5:1; 8:15-17, 23) வேறே ஆடுகளும் மீட்புவிலைக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறார்கள். மீட்புவிலையில் அவர்களுக்கு விசுவாசம் இருப்பதால்தான் கடவுளுக்கு முன்னால் சுத்தமான மனசாட்சியோடு இருக்க முடிகிறது. அவருக்குப் பரிசுத்த சேவை செய்ய முடிகிறது. ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்போம்’ என்ற நம்பிக்கையும் கிடைத்திருக்கிறது. (வெளி. 7:13-15) ஒவ்வொரு வருஷமும் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலமாக பரலோக நம்பிக்கை உள்ளவர்களும், பூமியில் வாழ்கிற நம்பிக்கை உள்ளவர்களும் மீட்புவிலையை உயர்வாக மதிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறார்கள்.
16. வேறெந்த காரணத்துக்காகவும் நாம் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறோம்?
16 நினைவுநாள் நிகழ்ச்சியில் நாம் கலந்துகொள்வதற்கு இன்னொரு காரணம், நாம் இயேசுவுக்குக் கீழ்ப்படிய விரும்புகிறோம் என்பதுதான். “என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்று தான் இறப்பதற்கு முந்தின ராத்திரி இயேசு கொடுத்த கட்டளைக்கு நாம் கீழ்ப்படிய விரும்புகிறோம். (1 கொ. 11:23, 24) அதனால்தான், நமக்கு பரலோக நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, இயேசு அந்தக் கட்டளையை நமக்கே கொடுத்ததாக நினைக்கிறோம்.
நம் எல்லாருக்கும் என்ன நன்மை?
17. யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு நினைவுநாள் நிகழ்ச்சி எப்படி உதவுகிறது?
17 யெகோவாவிடம் நெருங்கிப் போவோம். (யாக். 4:8) இதுவரை பார்த்தபடி, யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற எதிர்கால நம்பிக்கையையும் அவர் நம்மேல் வைத்திருக்கிற அன்பையும் பற்றி ஆழமாக யோசித்துப்பார்ப்பதற்கு நினைவுநாள் நிகழ்ச்சி வாய்ப்பு கொடுக்கிறது. (எரே. 29:11; 1 யோ. 4:8-10) இப்படி ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது, அவர்மேல் இருக்கிற அன்பு அதிகமாகிறது. அவருக்கும் நமக்கும் இடையில் பிரிக்க முடியாத நட்பு உருவாகிறது.—ரோ. 8:38, 39.
18. இயேசுவைப் பற்றி யோசித்துப்பார்க்கும்போது நமக்குள் என்ன தூண்டுதல் வருகிறது?
18 இயேசுவைப் போலவே நடந்துகொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் நமக்கு வருகிறது. (1 பே. 2:21) இயேசு இந்தப் பூமியில் இருந்த கடைசி வாரத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், அவருடைய மரணத்தைப் பற்றியும், அவர் உயிர்த்தெழுந்த விஷயத்தைப் பற்றியும் நினைவுநாளுக்கு முன்பே நாம் படிக்கிறோம். நினைவுநாள் பேச்சைக் கேட்கும்போது, அவர் நம்மேல் காட்டிய அன்பை ஞாபகப்படுத்திக்கொள்கிறோம். (எபே. 5:2; 1 யோ. 3:16) தன்னையே தியாகம் செய்து அவர் வாழ்ந்த அந்த வாழ்க்கையைப் பற்றி ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது, ‘அவர் நடந்தபடியே [நாமும்] தொடர்ந்து நடக்க’ வேண்டும் என்ற தூண்டுதல் வருகிறது.—1 யோ. 2:6.
19. கடவுளுடைய அன்பில் நாம் எப்படி நிலைத்திருக்கலாம்?
19 எப்போதும் கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம். (யூ. 20, 21) அவருக்குக் கீழ்ப்படியவும் அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தவும் அவருடைய மனதை சந்தோஷப்படுத்தவும் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது அவருடைய அன்பில் நிலைத்திருக்க முடியும். (நீதி. 27:11; மத். 6:9; 1 யோ. 5:3) யெகோவா அப்பா நம்மேல் அன்பு காட்டும் விதத்தில் ஒவ்வொரு நாளும் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான் நம்முடைய ஆசை. நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது அப்படி வாழ்வதற்கான தூண்டுதல் நமக்குக் கிடைக்கும்.
20. நாம் ஏன் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறோம்?
20 நமக்குப் பரலோகத்தில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, பூஞ்சோலை பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, நினைவுநாள் நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என்று இதுவரைப் பார்த்தோம். ஒவ்வொரு வருஷமும் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது, நாம் ரொம்ப நேசிக்கிற இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைத்துப்பார்க்கிறோம். எல்லாவற்றுக்கும் மேல் தன்னுடைய அருமை மகனையே மீட்புவிலையாக நமக்குக் கொடுத்த யெகோவா அப்பாவின் அன்பை நினைத்துப்பார்க்கிறோம். இந்த வருஷம், ஏப்ரல் 15, வெள்ளிக்கிழமை அன்று நினைவுநாள் நிகழ்ச்சி நடக்கும். யெகோவா அப்பாவையும் அவருடைய மகன் இயேசுவையும் நாம் ரொம்ப நேசிக்கிறோம். அதனால் அந்த நாளில் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதைவிட வேறு எதுவும் நமக்கு முக்கியம் இல்லை.
பாட்டு 16 புதிய ராஜாவுக்காக யெகோவாவை போற்றுங்கள்!
^ நமக்குப் பரலோகத்தில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, பூஞ்சோலை பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, ஒவ்வொரு வருஷமும் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த நிகழ்ச்சியில் நாம் ஏன் கலந்துகொள்கிறோம்? இதில் கலந்துகொள்வதால் நமக்கு என்ன நன்மை? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
^ புதிய ஒப்பந்தத்தையும், அரசாங்கத்துக்கான ஒப்பந்தத்தையும் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள அக்டோபர் 15, 2014 காவற்கோபுரத்தில் பக்கங்கள் 15-17-ல் “‘ராஜாக்களாகவும் குருமார்களாகவும்’ இருப்பீர்கள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
^ எசேக்கியேல் 37-ஆம் அதிகாரத்தில் இருக்கிற இரண்டு கோல்களைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூடுதலாக புரிந்துகொள்ள, தூய வணக்கம்—பூமியெங்கும்! புத்தகத்தில் பக்கங்கள் 130-135, பாராக்கள் 3-17-ஐப் பாருங்கள்.