படிப்புக் கட்டுரை 3
யெகோவா உங்களுக்கு வெற்றி தருகிறார்
‘யெகோவா யோசேப்போடு இருந்தார். . . , அவர் செய்கிற எல்லாவற்றிலும் அவருக்கு வெற்றி தந்தார்.’—ஆதி. 39:2, 3.
பாட்டு 30 என் தந்தை, என் தேவன், என் தோழன்!
இந்தக் கட்டுரையில்... a
1-2. (அ) பிரச்சினைகள் வரும்போது நாம் ஏன் ஆச்சரியப்படுவதில்லை? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
பிரச்சினைகள் வரும்போது யெகோவாவின் மக்களான நாம் ஆச்சரியப்படுவதில்லை. ஏனென்றால், “கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போவதற்கு நாம் பல உபத்திரவங்களைச் சந்தித்தே தீர வேண்டும்” என்று பைபிள் சொல்வது நமக்குத் தெரியும். (அப். 14:22) நமக்கு வரும் சில கஷ்டங்கள் பூஞ்சோலை பூமியில்தான் முழுமையாகத் தீரும் என்பதும் நமக்குத் தெரியும். அங்கேதான், “மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”—வெளி. 21:4.
2 நமக்கு வரும் பிரச்சினைகளை யெகோவா தடுப்பதில்லை. ஆனால், அதைச் சகித்துக்கொள்வதற்கு நமக்கு உதவி செய்கிறார். ரோமில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் என்ன சொன்னார் என்று பார்க்கலாம். முதலில் அவருக்கும் அவருடைய சகோதரர்களுக்கும் இருந்த பிரச்சினைகளைப் பற்றி ஒவ்வொன்றாகச் சொன்னார். அதற்குப் பிறகு, “நம்மேல் அன்பு காட்டியவரின் உதவியோடு இவை எல்லாவற்றிலும் நாம் முழு வெற்றி பெற்றுவருகிறோம்” என்று சொன்னார். (ரோ. 8:35-37) இதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? நாம் கஷ்டத்தில் இருக்கும்போதும்கூட யெகோவாவால் நமக்கு வெற்றி தர முடியும். யோசேப்புக்கு அவர் எப்படி வெற்றி கொடுத்தார் என்றும், உங்களுக்கு அவர் எப்படி வெற்றி கொடுப்பார் என்றும் நாம் பார்க்கலாம்.
நிலைமை திடீரென்று மாறும்போது
3. யோசேப்பின் வாழ்க்கை எப்படித் திடீரென்று மாறியது?
3 யாக்கோபு தன்னுடைய மகன் யோசேப்புமேல் உயிராக இருந்தார். இது யோசேப்பின் அண்ணன்களுக்கும் ரொம்பத் தெளிவாகத் தெரிந்தது. (ஆதி. 37:3, 4) அதனால், அவர்கள் யோசேப்பைப் பார்த்துப் பொறாமைப்பட்டார்கள். வாய்ப்புக் கிடைத்தபோது மீதியானிய வியாபாரிகளிடம் யோசேப்பை விற்றுவிட்டார்கள். அந்த வியாபாரிகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திலிருந்த எகிப்துக்கு அவரைக் கொண்டுபோனார்கள். அங்கே போன பிறகு, பார்வோனுடைய காவலர்களுக்குத் தலைவராக இருந்த போத்திபாரிடம் அவரை விற்றுவிட்டார்கள். யோசேப்பின் வாழ்க்கை எப்படிச் சட்டென்று மாறிவிட்டது, பார்த்தீர்களா! அப்பாவின் செல்லப்பிள்ளையாக இருந்தவர் இப்போது போத்திபாரிடம் ஓர் அடிமையாக ஆகிவிட்டார்!—ஆதி. 39:1.
4. நமக்கு என்னென்ன பிரச்சினைகள் வரலாம்?
4 “மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தீமை ஏற்படுகிறது” என்று பைபிள் சொல்கிறது. (பிர. 9:11, ஈஸி டு ரீட் வர்ஷன்) சில சமயங்களில் ‘மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற சோதனைகள்’ நமக்கு வரலாம். (1 கொ. 10:13) இல்லையென்றால், இயேசுவின் சீஷர்களாக இருக்கிறோம் என்ற ஒரே காரணத்துக்காக நமக்குச் சோதனைகள் வரலாம். உதாரணத்துக்கு, நம்முடைய நம்பிக்கையைக் காரணம்காட்டி மற்றவர்கள் நம்மைக் கேலிகிண்டல் பண்ணலாம், எதிர்க்கலாம், அல்லது துன்புறுத்தலாம். (2 தீ. 3:12) என்ன காரணத்துக்காக நீங்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தாலும் சரி, யெகோவாவால் உங்களுக்கு வெற்றி கொடுக்க முடியும். யோசேப்புக்கு அவர் எப்படி வெற்றி கொடுத்தார்?
5. யோசேப்பின் வெற்றியைப் பார்த்து போத்திபார் என்ன முடிவுக்கு வந்தார்? (ஆதியாகமம் 39:2-6)
5 ஆதியாகமம் 39:2-6-ஐ வாசியுங்கள். கடினமாக உழைக்கும் திறமைசாலியான ஒரு வாலிபராக யோசேப்பு இருந்ததை போத்திபார் கவனித்தார். யோசேப்பு அப்படி இருந்ததற்கான காரணமும் அவருக்குத் தெரியும். ‘யோசேப்பு செய்கிற எல்லாவற்றிலும் யெகோவா அவருக்கு வெற்றி தந்ததை’ போத்திபார் பார்த்தார். b கொஞ்ச காலத்தில் யோசேப்பைத் தன்னுடைய முக்கிய உதவியாளராகவும் நியமித்தார். அவருடைய மொத்த வீட்டையுமே யோசேப்பின் பொறுப்பில் விட்டுவிட்டார். அதனால் என்ன ஆனது? பேர்புகழும் செல்வச்செழிப்பும் போத்திபாரைத் தேடி வந்தன.
6. யோசேப்பு எதற்காக ஏங்கியிருப்பார்?
6 யோசேப்பின் இடத்திலிருந்து கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர் எதற்காக ஏங்கியிருப்பார்? போத்திபார் தன்னைக் கவனிக்க வேண்டும், தனக்குச் சலுகை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்திருப்பாரா? அநேகமாக, அங்கிருந்து விடுதலையாகி தன்னுடைய அப்பாவிடம் போனால் போதும் என்றுதான் யோசித்திருப்பார். போத்திபார் அவருக்கு நிறைய சலுகைகளைக் கொடுத்திருந்தாலும் யோசேப்பு அங்கே வெறும் ஒரு அடிமைதான், அதுவும் யெகோவாவை வணங்காத ஒருவருக்கு! அதோடு, யோசேப்பை விடுதலை செய்ய போத்திபாரை யெகோவா தூண்டவில்லை. சொல்லப்போனால், யோசேப்பின் நிலைமை அதற்குப் பிறகு இன்னும் மோசமாகத்தான் ஆனது.
நிலைமை இன்னும் மோசமாகும்போது
7. எந்த விதத்தில் யோசேப்பின் நிலைமை இன்னும் மோசமானது? (ஆதியாகமம் 39:14, 15)
7 ஆதியாகமம் 39-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டிருப்பதுபோல் போத்திபாருடைய மனைவி யோசேப்பின் அழகில் மயங்கி அவரை தன்னுடைய வலையில் விழ வைக்கப் பார்த்தாள். அதற்காக நிறைய தடவை முயற்சி செய்தாள். ஆனால், ஒவ்வொரு முறையும் யோசேப்பு முடியாது என்று சொல்லிவிட்டார். அதனால், அவள் பயங்கர கடுப்பாகி, யோசேப்பு தன்னைக் கற்பழிக்க வந்ததாக அவர்மேல் பழிபோட்டாள். (ஆதியாகமம் 39:14, 15-ஐ வாசியுங்கள்.) இதெல்லாம் போத்திபாருடைய காதுக்கு வந்தபோது அவர் யோசேப்பைப் பிடித்து சிறையில் போட்டார். யோசேப்பு சில வருஷங்களுக்குச் சிறையில் இருந்தார். (ஆதி. 39:19, 20) அந்தச் சிறை எப்படி இருந்தது? யோசேப்பு பயன்படுத்திய “சிறைச்சாலை” என்ற வார்த்தைக்கான எபிரெய வார்த்தைக்கு “கிணறு,” அல்லது “குழி” என்ற அர்த்தமும் இருக்கலாம். (ஆதி. 40:15) அந்த இடம் இருட்டாக இருந்திருக்கும் என்றும், அங்கே அவர் நம்பிக்கை இழந்துபோயிருந்திருப்பார் என்றும் இதிலிருந்து தெரிகிறது. கொஞ்ச நாட்களுக்கு அவருடைய கால்களில் விலங்கு போடப்பட்டது, அவருடைய கழுத்தில் இரும்புச் சங்கிலி மாட்டப்பட்டது என்று பைபிள் சொல்கிறது. (சங். 105:17, 18) யோசேப்பின் வாழ்க்கை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டேதான் போனது. நம்பகமான அடிமை என்பது போய் இப்போது தரக்குறைவான கைதியாக ஆகிவிட்டார்.
8. உங்களுடைய சூழ்நிலைமை இன்னும் மோசமானாலும் எதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்?
8 ‘விழுந்து விழுந்து ஜெபம் பண்ணியும் நிலைமை இன்னும் மோசமாகிக்கொண்டே போகிறதே’ என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அந்த மாதிரி நிலைமை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், சாத்தான் ஆட்சி செய்கிற இந்த உலகத்தில் பிரச்சினைகளே வராதபடி யெகோவா நம்மைப் பாதுகாப்பதில்லை. (1 யோ. 5:19) ஆனால், ஒன்று மட்டும் உறுதி. நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை யெகோவா முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறார். அவர் உங்கள்மேல் ரொம்ப அக்கறையாக இருக்கிறார். (மத். 10:29-31; 1 பே. 5:6, 7) அதோடு, “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (எபி. 13:5) ‘இனி அவ்வளவுதான்!’ என்ற சூழ்நிலையில்கூட சகித்திருக்க யெகோவாவால் உங்களுக்கு உதவி செய்ய முடியும். யோசேப்புக்கு அவர் எப்படி உதவி செய்தார் என்று பார்க்கலாம்.
9. யோசேப்பு சிறையில் இருந்தபோதும் யெகோவா அவரோடு இருந்தார் என்று எப்படிச் சொல்லலாம்? (ஆதியாகமம் 39:21-23)
9 ஆதியாகமம் 39:21-23-ஐ வாசியுங்கள். சிறையில் இருந்த கஷ்டமான காலத்தில்கூட யெகோவா யோசேப்புக்கு வெற்றி கொடுத்தார். எப்படி? போத்திபாரின் நம்பிக்கையைச் சம்பாதித்த மாதிரியே சிறைச்சாலையில் முக்கிய அதிகாரியாக இருந்தவருடைய நம்பிக்கையையும் மரியாதையையும் சீக்கிரத்தில் யோசேப்பு சம்பாதித்தார். அதனால், அந்த அதிகாரி அங்கிருந்த எல்லா கைதிகளையும் யோசேப்பின் கண்காணிப்பில் விட்டுவிட்டார். சொல்லப்போனால், “யோசேப்பின் பொறுப்பில் விடப்பட்ட எதைப் பற்றியும் அந்த அதிகாரி கவலைப்படவில்லை” என்று பைபிள் சொல்கிறது. யோசேப்புக்கு செய்வதற்கென்று ஒரு வேலை கிடைத்துவிட்டது. பிரச்சினையைப் பற்றியே யோசிக்காமல் இருப்பதற்கு இது அவருக்கு உதவியிருக்கும். யாருமே எதிர்பார்க்காத மாற்றம் இல்லையா? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், அதிகாரியுடைய மனைவியைக் கற்பழிக்க முயற்சி பண்ணியதாகக் குற்றம்சாட்டப்பட்டு யோசேப்பு சிறைக்கு வந்திருந்தார். அப்படிப்பட்ட ஒருவருக்கு யாராவது இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுப்பார்களா? பிறகு எப்படி இது நடந்தது? அதற்கு ஒரே ஒரு விளக்கம்தான் இருக்கிறது. ஆதியாகமம் 39:23 சொல்கிறபடி, “யெகோவா யோசேப்புடனேயே இருந்தார். யோசேப்பு செய்த எல்லாவற்றிலும் யெகோவா அவருக்கு வெற்றி தந்தார்.”
10. எல்லாவற்றிலும் வெற்றி கிடைத்த மாதிரி யோசேப்புக்குத் தோன்றியிருக்காது என்று ஏன் சொல்லலாம்?
10 மறுபடியும் யோசேப்பின் இடத்திலிருந்து யோசித்துப் பாருங்கள். அவர் பொய்க் குற்றச்சாட்டால் சிறையில் இருந்தார். இப்படி ஒரு சூழ்நிலையில் யெகோவா அவருக்கு எல்லாவற்றிலும் வெற்றி கொடுத்தார் என்று அவர் யோசித்திருப்பாரா? அவர் முக்கியமாக எதற்காக ஏங்கியிருப்பார்? சிறை அதிகாரியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவா? அநேகமாக, சிறையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்பதற்காகத்தான் அவர் ஏங்கியிருப்பார். அதனால்தான், விடுதலையாகிப் போகப் போகிற ஒரு கைதியிடம் அவர் உதவி கேட்டார். தனக்காக பார்வோனிடம் போய் பேசும்படி கேட்டுக்கொண்டார். (ஆதி. 40:14) ஆனால், அந்தக் கைதி வெளியே போன பிறகு யோசேப்பைச் சுத்தமாக மறந்துவிட்டார். அதனால், இன்னும் இரண்டு வருஷம் யோசேப்பு சிறையிலேயே இருந்தார். (ஆதி. 40:23; 41:1, 14) ஆனாலும், யோசேப்பு செய்த எல்லாவற்றிலும் யெகோவா அவருக்கு வெற்றி கொடுத்தார். எப்படி?
11. என்ன விசேஷமான திறமையை யெகோவா யோசேப்புக்குக் கொடுத்தார், யெகோவாவின் நோக்கம் நிறைவேற அது எப்படி உதவி செய்தது?
11 யோசேப்பு சிறையில் இருந்தபோது எகிப்தின் ராஜா பார்வோனுக்கு இரண்டு கனவை யெகோவா வரவைத்தார். பார்வோன் ரொம்பக் குழம்பிப்போய், அந்தக் கனவுகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளத் துடித்தார். யோசேப்பினால் கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல முடியும் என்று பார்வோன் கேள்விப்பட்டபோது, உடனே அவரை வரவழைத்தார். யெகோவாவின் உதவியோடு யோசேப்பு அந்தக் கனவுகளுக்கு அர்த்தம் சொன்னார். அதோடு ஒரு ஆலோசனையும் சொன்னார். அது பார்வோனுக்கு ரொம்பப் பிடித்துப்போய்விட்டது. யோசேப்போடு யெகோவா இருந்ததை பார்வோன் புரிந்துகொண்டதால் முழு எகிப்து தேசத்துக்கே உணவு அதிகாரியாக யோசேப்பை அவர் நியமித்தார். (ஆதி. 41:38, 41-44) அதற்குப் பிறகு கடுமையான ஒரு பஞ்சம் வந்தது. எகிப்தை மட்டுமல்ல, யோசேப்பின் குடும்பம் இருந்த கானான் தேசத்தையும் அது ஆட்டிப்படைத்தது. ஆனால், யோசேப்பினால் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற முடிந்தது. இப்படி, மேசியா வரப்போகிற வம்சாவளியைப் பாதுகாக்க முடிந்தது.
12. என்னென்ன விதங்களில் யெகோவா யோசேப்புக்கு வெற்றி கொடுத்தார்?
12 யோசேப்பின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஒரு அடிமையாக இருந்த யோசேப்பின் பக்கம் போத்திபாரின் கவனத்தைத் திருப்பியது யார்? ஒரு சாதாரண கைதியாக இருந்த யோசேப்பை மதித்து அவருக்குப் பொறுப்பு கொடுப்பதற்கு சிறை அதிகாரியைத் தூண்டியது யார்? கனவுகளை வரவைத்து பார்வோனைக் குழப்பியது யார்? கனவுகளுக்கு அர்த்தம் சொல்ல யோசேப்புக்கு உதவி செய்தது யார்? யோசேப்பை எகிப்தின் உணவு அதிகாரியாக நியமிப்பதற்கு பார்வோனைத் தூண்டியது யார்? (ஆதி. 45:5) இந்த அதிசயங்களைச் செய்தது யெகோவாதான் என்பதில் சந்தேகமே இல்லை. யோசேப்பின் அண்ணன்கள் அவரைத் தீர்த்துக்கட்ட நினைத்திருந்தாலும், யெகோவா அந்த நிலைமையைத் தலைகீழாக மாற்றி தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றினார்.
யெகோவா உங்களுக்கு எப்படி வெற்றி கொடுக்கிறார்?
13. நம்முடைய வாழ்க்கையில் வருகிற எல்லா சூழ்நிலைகளிலும் யெகோவா தலையிடுகிறாரா? விளக்குங்கள்.
13 யோசேப்புடைய வாழ்க்கையைப் பற்றிப் படித்த பிறகு நாம் என்ன முடிவுக்கு வரலாம்? நம்முடைய வாழ்க்கையில் வருகிற எல்லா சூழ்நிலைகளிலும் யெகோவா தலையிடுகிறாரா? நம்முடைய வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு கெட்ட விஷயத்தையும் நல்ல விஷயமாக மாற்றுகிறாரா? அப்படியெல்லாம் அவர் செய்வதாக பைபிள் சொல்வதில்லை. (பிர. 8:9; 9:11) ஆனால், இந்த விஷயங்களில் நாம் உறுதியாக இருக்கலாம்: நமக்கு என்ன கஷ்டம் வந்தாலும் அது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். உதவிக்காக நாம் கதறும்போது அவர் காது கொடுத்துக் கேட்கிறார். (சங். 34:15; 55:22; ஏசா. 59:1) எல்லாவற்றுக்கும் மேலாக, கஷ்டங்களைச் சகித்துக்கொள்வதற்கு அவர் நமக்கு உதவி செய்கிறார். எப்படி?
14. கஷ்டங்கள் வரும்போது யெகோவா நமக்கு எப்படி உதவி செய்கிறார்?
14 யெகோவா நமக்கு உதவி செய்கிற ஒரு வழி என்னவென்றால், அவர் நமக்குச் சரியான சமயத்தில் ஆறுதலையும் உற்சாகத்தையும் தருகிறார். (2 கொ. 1:3, 4) துர்க்மேனிஸ்தானில் இருக்கிற ஏஸிஸ் என்ற சகோதரருடைய அனுபவத்தில் இதுதான் நடந்தது. யெகோவாவின் சாட்சியாக இருந்ததால் அவருக்கு இரண்டு வருஷம் ஜெயில் தண்டனை கிடைத்தது. அதைப் பற்றி அவர் சொல்கிறபோது, “விசாரணை நடந்த அன்றைக்கு காலையில் ஒரு சகோதரர் என்னிடம் ஏசாயா 30:15–ஐக் காட்டினார். ‘நீங்கள் பதட்டம் அடையாமல் என்மேல் நம்பிக்கை வைத்தால் பலமாக இருப்பீர்கள்’ என்று அந்த வசனம் சொல்கிறது. பதட்டப்படாமல் இருப்பதற்கும் எல்லா விஷயத்திலும் யெகோவாவையே நம்பியிருப்பதற்கும் இந்த வசனம் எனக்கு எப்போதுமே உதவி செய்திருக்கிறது. அந்த வசனத்தைப் பற்றி நான் அடிக்கடி யோசித்துப் பார்த்தேன். ஜெயிலில் வாழ்க்கையை ஓட்டுவதற்கு அது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது” என்று சொன்னார். உங்களுக்கு ரொம்ப தேவைப்பட்ட சமயத்தில் ஆறுதலையும் உற்சாகத்தையும் யெகோவா கொடுத்தது உங்கள் ஞாபகத்துக்கு வருகிறதா?
15-16. டோரியின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
15 பொதுவாக, ஒரு சோதனையைத் தாண்டி வந்த பிறகுதான் அதைத் தாங்கிக்கொள்வதற்கு யெகோவா நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்று நம்மால் புரிந்துகொள்ள முடியும். டோரி என்ற சகோதரியின் அனுபவமும் இதைத்தான் காட்டுகிறது. அவருடைய மகன் மேசன் ஆறு வருஷம் கேன்சரோடு போராடிக்கொண்டிருந்தான், கடைசியில் இறந்துவிட்டான். டோரி அப்படியே இடிந்துபோய்விட்டார். அவர் சொல்லும்போது, “என் மகன் என் கண் முன்னாலேயே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஒரு அம்மாவாக இதைவிட பெரிய வலி எனக்கு இருந்திருக்கவே முடியாது. நமக்கு ஏதாவது என்றால்கூட பரவாயில்லை, ஆனால் பிள்ளைகளுக்கு ஏதாவது என்றால் அதை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. இதை எல்லா அம்மா அப்பாவும் ஒத்துக்கொள்வார்கள்” என்று சொல்கிறார்.
16 தன் கண் முன்னாலேயே மகன் கஷ்டப்பட்டதைப் பார்த்தது டோரிக்கு வலித்தாலும், அதைத் தாங்கிக்கொள்வதற்கு யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்தார் என்று அதற்குப் பிறகு அவர் யோசித்துப் பார்த்தார். அதைப் பற்றி அவர் சொல்லும்போது, “என் மகன் உடம்பு முடியாமல் இருந்த ஆறு வருஷமும் யெகோவா எனக்கு எப்படியெல்லாம் உதவி செய்தார் என்பதை நான் அப்புறம்தான் யோசித்துப் பார்த்தேன். உதாரணத்துக்கு, யாரையும் பார்த்துப் பேசுகிற நிலைமையில் மேசன் இல்லாதபோதுகூட சகோதர சகோதரிகள் ஹாஸ்பிட்டலுக்கு வருவார்கள். இத்தனைக்கும், ஹாஸ்பிட்டலுக்கு வர அவர்களுக்கு இரண்டு மணிநேரம் ஆகும். என்ன உதவி தேவைப்பட்டாலும் அதை உடனே செய்வதற்காக எப்போதுமே வெய்டிங் ரூமில் யாராவது ஒருவர் இருந்துகொண்டே இருப்பார்கள். அதுமட்டுமல்ல, எங்களுக்கு வேண்டிய பணம் பொருளெல்லாம் கொடுத்து உதவி செய்தார்கள். நாங்கள் ரொம்ப கஷ்டத்தில் இருந்த சமயத்தில்கூட எங்களுக்குத் தேவையான எதுவுமே கிடைக்காமல் போகவில்லை” என்று சொல்கிறார். டோரிக்கும் சரி, மேசனுக்கும் சரி, சகித்திருப்பதற்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்து யெகோவா உதவி செய்தார்.—“ எங்களுக்கு என்ன தேவைப்பட்டதோ அதை யெகோவா கொடுத்தார்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
யெகோவா கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களை மறந்துவிடாதீர்கள்
17-18. சோதனைகள் வரும்போது யெகோவா நமக்கு உதவி செய்வதைப் புரிந்துகொள்வதற்கும் அதற்கு நன்றியோடு இருப்பதற்கும் என்ன செய்ய வேண்டும்? (சங்கீதம் 40:5)
17 சங்கீதம் 40:5-ஐ வாசியுங்கள். மலை ஏறுகிற ஒருவருக்கு அதன் உச்சியைப் போய் எட்ட வேண்டும் என்பதுதான் குறிக்கோள். ஆனாலும், அவர் அவ்வப்போது நின்று சுற்றி இருப்பதையெல்லாம் ரசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்வார். அதே மாதிரி, ஒரு கஷ்டத்தோடு நீங்கள் போராடிக்கொண்டிருக்கும்போது சகித்திருக்க யெகோவா உங்களுக்கு எப்படி உதவி செய்கிறார், உங்களுக்கு எப்படி வெற்றி கொடுக்கிறார் என்று அவ்வப்போது நேரம் எடுத்து யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு நாள் முடியும்போதும், ‘இன்றைக்கு யெகோவா என்னை எப்படி ஆசீர்வதித்திருக்கிறார்? பிரச்சினை இன்னும் தீரவில்லை என்றாலும் சகித்திருப்பதற்கு அவர் எனக்கு எப்படி உதவி செய்திருக்கிறார்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். யெகோவா நிச்சயம் உங்களுக்கு உதவி செய்திருப்பார். அதில் ஒன்றையாவது கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
18 ஒரு பிரச்சினை இருக்கும்போது அது தீர வேண்டும் என்று நாம் ஜெபம் பண்ணுவது இயல்புதான், அதில் எந்தத் தப்பும் இல்லை. (பிலி. 4:6) ஆனால், அந்தப் பிரச்சினை இருக்கும்போதே நமக்கு என்னவெல்லாம் ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கின்றன என்றும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நமக்குத் தேவையான பலத்தைக் கொடுப்பதாக... இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சகித்திருப்பதற்குத் தேவையான உதவியை செய்வதாக... யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். யெகோவா எப்போதுமே உங்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். அதற்காக எப்போதுமே நன்றியோடு இருங்கள். அப்படிச் செய்தால், சோதனைகள் இருக்கும்போதும் யோசேப்புக்கு அவர் எப்படி வெற்றி கொடுத்தாரோ அதே மாதிரி உங்களுக்கும் வெற்றி கொடுப்பதை நீங்களே கண்ணாரப் பார்ப்பீர்கள்.—ஆதி. 41:51, 52.
பாட்டு 32 என்றும் நாம் யெகோவாவின் பக்கம்
a நாம் ஒரு பிரச்சினையையோ சோதனையையோ அனுபவிக்கும்போது யெகோவா நமக்கு ‘வெற்றி தருகிறார்’ என்று யோசிக்க மாட்டோம். நம்மைப் பொறுத்தவரை பிரச்சினையெல்லாம் தீர்ந்தால்தான் அது வெற்றி. ஆனால், யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து நம்மால் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். நாம் பிரச்சினையில் இருக்கும்போதே யெகோவா நமக்கு வெற்றி தருகிறார். எப்படி என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
b யோசேப்பு அடிமையான சமயத்திலிருந்து நடந்த இந்தச் சம்பவங்களை பைபிள் ஒருசில வசனங்களிலேயே சொல்லிவிட்டது. ஆனால், இந்தச் சம்பவங்கள் பல வருஷங்களாக நடந்திருக்கலாம்.