வைரத்தைவிட விலைமதிப்புள்ளது
மக்கள் வைரக்கற்களை விலைமதிப்புள்ளதாக நினைக்கிறார்கள். சில வைரங்கள் லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ளது. ஆனால், கடவுளுடைய பார்வையில் வைரத்தைவிட மிகவும் மதிப்புள்ள ஒன்று இருக்கிறது. அது என்ன?
ஹைகனூஷும் அவருடைய கணவரும் ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக இருந்தார்கள். ஒருநாள் ஹைகனூஷ் தன்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பாஸ்போர்ட் இருந்ததை பார்த்தார். அதோடு நிறைய பணமும் சில டெபிட் கார்டுகளும் இருந்தது. அதைப் பற்றி அவருடைய கணவரிடம் சொன்னார்.
அந்த சமயத்தில் அவர்கள் ரொம்ப பணக் கஷ்டத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு நிறைய கடனும் இருந்தது. இருந்தாலும் அதை திருப்பி கொடுக்க நினைத்தார்கள். பாஸ்போர்ட்டில் இருந்த விலாசத்துக்கு சென்று அந்த பணத்தின் சொந்தக்காரரிடம் அதை கொடுத்தபோது அவரும் அவருடைய குடும்பத்தாரும் ரொம்ப ஆச்சரியப்பட்டார்கள். பைபிளை படிப்பதால்தான் தாங்கள் நேர்மையாக நடந்துகொண்டார்கள் என்று ஹைகனூஷும் அவருடைய கணவரும் அவர்களிடம் சொன்னார்கள். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அவர்களிடம் சொன்னதோடு சில பத்திரிகைகளையும் அவர்களுக்கு கொடுத்தார்கள்.
இவர்களுடைய நேர்மைக்கு பரிசாக அந்த குடும்பத்தில் இருந்தவர்கள் ஹைகனூஷுக்கு கொஞ்சம் பணம் கொடுக்க ஆசைப்பட்டார்கள். ஆனால், ஹைகனூஷ் அதை வாங்க மறுத்துவிட்டார். இருந்தாலும் அடுத்தநாள் அந்த பணக்காரருடைய மனைவி ஹைகனூஷின் வீட்டுக்கு சென்று ஒரு வைர மோதிரத்தை பரிசாக கொடுத்தார். அதை அவர் வாங்கியே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார்.
ஹைகனூஷும் அவருடைய கணவரும் நேர்மையாக நடந்ததை பார்த்து அந்த குடும்பத்தில் இருந்தவர்கள் மட்டுமல்ல இன்னும் நிறையப் பேர் கண்டிப்பாக ஆச்சரியப்பட்டிருப்பார்கள். ஆனால், யெகோவா ஆச்சரியப்பட்டிருப்பாரா? அவர்கள் நேர்மையாக நடந்துகொண்டதை பற்றி யெகோவா என்ன நினைத்தார்? நேர்மையாக இருந்ததால் அவர்களுக்கு ஏதாவது பிரயோஜனம் இருந்ததா?
விலைமதிக்க முடியாத குணங்கள்
இந்த கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிப்பது ஒன்றும் கஷ்டமில்லை. ஏன்? இன்று மனிதர்கள் தங்கம், வைரம் போன்ற விலைமதிப்புள்ள பொருள்களைத்தான் பொக்கிஷமாக நினைக்கிறார்கள். அதை ரொம்ப உயர்வாக மதிக்கிறார்கள். ஆனால், யெகோவா அப்படி நினைப்பதில்லை. நல்ல நல்ல குணங்களைத்தான் அவர் உயர்வாக மதிக்கிறார் என்று அவருடைய மக்களுக்கு நன்றாக தெரியும். (ஏசா. 55:8, 9) யெகோவாவுடைய குணங்களை வளர்ப்பதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் வீண் போகாது, அதற்கு அதிக மதிப்பு இருக்கிறது என்றும் நம்புகிறார்கள்.
இதை புரிந்துகொள்வதற்கு ஞானம், புத்தி, விவேகம் போன்ற குணங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று நாம் பார்க்கலாம். “ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. முத்துக்களைப் பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல” என்று நீதிமொழிகள் 3:13-15 சொல்கிறது. அப்படியென்றால், விலையுயர்ந்த எந்த பொக்கிஷத்தையும்விட இதுபோன்ற குணங்களைத்தான் யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது.
நேர்மையாக நடந்துகொள்வதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?
யெகோவா நேர்மையானவராகவே இருக்கிறார். அவரால் ‘பொய் சொல்ல முடியாது’ என்று பைபிள் சொல்கிறது. (தீத். 1:3) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கு இப்படி எழுதும்படி பவுலை யெகோவா தூண்டினார்: “எங்களுக்காக ஜெபம் செய்துகொண்டிருங்கள்; ஏனென்றால், எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்கவே நாங்கள் விரும்புகிறோம்; எங்களுக்குச் சுத்தமான மனசாட்சி இருக்கிறதென்று உறுதியாய் நம்புகிறோம்.”—எபி. 13:18.
நேர்மையாக இருப்பதில் இயேசு நமக்கு ஒரு நல்ல உதாரணம். தலைமை குருவான காய்பா இயேசுவிடம், “உயிருள்ள கடவுள்மீது ஆணையிட்டுச் சொல், நீதான் கடவுளின் மகனாகிய கிறிஸ்துவா?” என்று கேட்டார். உண்மையை சொன்னால் தெய்வநிந்தனை செய்தவன் என்று சொல்லி யூதர்களுடைய உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுவார்கள் என்று இயேசுவுக்கு தெரியும். அதற்காக அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என்றும் தெரியும். இருந்தாலும், அவர் உண்மையை சொன்னார். தான்தான் மேசியா என்பதை அவர்களிடம் நேர்மையாக சொன்னார்.—மத். 26:63-67.
நாமும் இயேசுவைப் போல் நேர்மையாக இருப்போமா? பணம் சம்பாதிப்பதற்காக நாம் ஏதாவது உண்மையை மறைக்கிறோமா அல்லது பாதி உண்மையை மட்டும் சொல்கிறோமா?
நேர்மையாக நடப்பது ஏன் கஷ்டம்?
இந்த கடைசி நாட்களில் நிறையப் பேர் “சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக” இருப்பதால் நேர்மையாக இருப்பது நமக்கு கஷ்டமாக இருக்கலாம். (2 தீ. 3:2) இன்று வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருப்பதாலும் பணக் கஷ்டம் ஏற்படுவதாலும் திருடுவது, ஏமாற்றுவது, பொய் சொல்லுவதெல்லாம் தவறில்லை என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். குறுக்கு வழியில் போனால்தான் பணம் சம்பாதிக்க முடியும் என்றும் நினைக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளில் சிலரும் நேர்மையாக நடக்காததால் சபையில் அவர்களுக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்துக்கொண்டார்கள்.—1 தீ. 3:8; தீத். 1:7.
இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகளில் நிறையப் பேர் இயேசுவைப் போல் நடக்கிறார்கள். பணம், பொருள் சம்பாதிப்பதைவிட யெகோவாவுக்கு பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்வதுதான் முக்கியம் என்று நினைக்கிறார்கள். இளம் பிள்ளைகள்கூட நல்ல மார்க் வாங்குவதற்காக காப்பி அடிப்பதில்லை. (நீதி. 20:23) நேர்மையாக இருந்தால் ஹைகனூஷுக்கு கிடைத்த மாதிரி நமக்கும் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும் நாம் நேர்மையாக நடக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். அப்படி நடந்தால் நமக்கு சுத்தமான மனசாட்சி கிடைக்கும். இதுதான் நமக்கு ரொம்ப முக்கியம்.
காகிக் என்ற சகோதரரின் அனுபவத்திலிருந்து இதை நாம் புரிந்துகொள்ளலாம். அவர் இப்படி சொல்கிறார்: “கிறிஸ்தவரா ஆகுறதுக்கு முன்னாடி நான் ஒரு பெரிய கம்பெனியில வேலை செஞ்சிட்டு இருந்தேன். அந்த கம்பெனியோட முதலாளி வரி கட்டாம இருக்குறதுக்காக லாபத்துல பொய் கணக்கு காட்டுவார். நான் அங்க மேனேஜிங் டைரக்டராக இருந்ததுனால, கம்பெனியோட தில்லுமுல்லு வேலைகள மறைக்குறதுக்காக அதிகாரிகள்கிட்ட லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. அதனால நான் ஒரு ஏமாத்து பேர்வழினு பேர் வாங்குனேன். ஆனா பைபிளை பத்தி கத்துக்கிட்டதுக்கு அப்புறம் அதெல்லாம் தப்புனு தெரிஞ்சுகிட்டேன். கைநிறைய சம்பளம் கிடைச்ச வேலையை விட்டுட்டு சொந்தமா ஒரு வியாபாரம் செய்ய ஆரம்பிச்சேன். அதை சட்டப்படி பதிவு செஞ்சேன், ஒழுங்கா வரியும் கட்டுறேன்.”—2 கொ. 8:21.
“முன்னாடி மாதிரி இப்போ எனக்கு நிறைய சம்பளம் கிடைக்குறது இல்ல. அதனால என் குடும்பத்த பார்த்துக்குறது கஷ்டமாதான் இருக்கு. இருந்தாலும் இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். யெகோவாவுக்கு முன்னாடி சுத்தமான மனசாட்சியோடு இருக்கேன். என்னோட ரெண்டு பசங்களுக்கும் நல்ல முன்மாதிரியா இருக்கேன். சபையிலயும் எனக்கு நிறைய பொறுப்பு கிடைச்சிருக்கு. இப்பெல்லாம் வரி வாங்குறவங்ககிட்டயும் என்னோட வியாபாரம் செய்றவங்ககிட்டயும் நான் ரொம்ப நேர்மையான ஆளுனு பேர் எடுத்திருக்கேன்” என்றும் அவர் சொல்கிறார்.
யெகோவா உதவி செய்வார்
யெகோவாவுடைய குணங்களை காட்டும்போது நாம் அவருடைய போதனைகளை அலங்கரிக்கிறோம். (தீத். 2:10) அவருக்கு புகழ் சேர்க்கிறோம். அவருக்கு பிடித்த குணங்களில் நேர்மையும் ஒன்று. நேர்மையாக நடக்கிறவர்களை யெகோவாவுக்கு ரொம்ப பிடிக்கும். நாம் நேர்மையாக நடக்கும்போது நமக்கு உதவி செய்வதாக அவர் வாக்கு கொடுத்திருக்கிறார். அதனால்தான் தாவீது ராஜாவை இப்படி எழுத தூண்டினார்: “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை.”—சங். 37:25.
இது எவ்வளவு உண்மை என்று ரூத்தின் உதாரணத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். அவளுடைய மாமியார் நகோமிக்கு வயதாகிவிட்டது என்பதற்காக அவரை விட்டுவிட்டு ரூத் போகவில்லை. அதற்கு பதிலாக, அவரோடு இஸ்ரவேல் தேசத்துக்கு போனாள். அங்கு உண்மை கடவுளான யெகோவாவை வணங்கினாள். (ரூத் 1:16, 17) வயலின் ஓரத்தில் இருக்கும் கதிர்களை ஏழைகள் பொறுக்கிக்கொள்ள யெகோவா திருச்சட்டத்தில் ஒரு ஏற்பாடு செய்திருந்தார். (ரூத் 2:2-18) அதற்கு கீழ்ப்படிந்து ரூத் கடினமாக வேலை செய்தாள், நேர்மையாக இருந்தாள். தாவீதைப் போலவே ரூத்தையும் நகோமியையும் யெகோவா கைவிடவே இல்லை. அவளுடைய தேவைகளை கவனித்துக்கொண்டது மட்டுமில்லாமல் அவளை அளவுக்கு அதிகமாக ஆசீர்வதித்தார். தாவீது மட்டுமல்ல மேசியாவும் அவளுடைய வம்சத்தில் வருவதற்கும் யெகோவா வழி செய்தார்.—ரூத் 4:13-17; மத். 1:5, 16.
யெகோவாவின் மக்கள் நிறையப் பேர் தங்கள் அடிப்படை தேவைகளை கவனித்துக்கொள்வதற்கு கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இருந்தாலும், நீதி. 12:24; எபே. 4:28.
குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்கு பதிலாக சுறுசுறுப்பாகவும் கடினமாகவும் வேலை செய்கிறார்கள். இதன்மூலம் பணத்தைவிட யெகோவாவுக்கு பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்வதுதான் அவர்களுக்கு ரொம்ப முக்கியம் என்று காட்டுகிறார்கள்.—யெகோவா தேவனால் நமக்கு நிச்சயம் உதவி செய்ய முடியும் என்று ரூத்தைப் போலவே உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் மக்கள் நம்புகிறார்கள். “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று யெகோவா சொன்ன வார்த்தைகளில் அவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. (எபி. 13:5) நேர்மையாக இருப்பவர்களுக்கு தன்னால் உதவி செய்ய முடியும் என்று யெகோவா நிரூபித்திருக்கிறார். அவருடைய மக்களின் அடிப்படைத் தேவைகளை கவனித்துக்கொள்வதாக அவர் கொடுத்த வாக்கை எப்போதும் காப்பாற்றியிருக்கிறார்.—மத். 6:33.
தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த பொருள்களைத்தான் மனிதர்கள் பொக்கிஷமாக பார்க்கிறார்கள். ஆனால், நம்முடைய நேர்மையையும் நல்ல குணங்களையும்தான் யெகோவா பெரிய பொக்கிஷமாக பார்க்கிறார்.