Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரியுங்கள்!

யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரியுங்கள்!

“எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையும் மாண்பும் வல்லமையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள்.”—வெளி. 4:11.

பாடல்கள்: 112, 133

1, 2. நம் ஒவ்வொருவருக்கும் எது தெளிவாகத் தெரிய வேண்டும்? (ஆரம்பப் படம்)

மனிதர்களை ஆட்சி செய்யும் தகுதி யெகோவாவுக்கு இல்லை என்று பிசாசு சொல்வதாக முந்தின கட்டுரையில் பார்த்தோம். யெகோவா நியாயமற்ற விதத்தில் ஆட்சி செய்கிறார் என்றும், மனிதர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொண்டால் சந்தோஷமாக இருப்பார்கள் என்றும் அவன் சொல்கிறான். சாத்தான் சொல்வது சரியா? ஒருவேளை, மனிதர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்வதாகவும், என்றென்றும் வாழ்வதாகவும் வைத்துக்கொள்வோம். கடவுளுடைய ஆட்சி இல்லாமல் அவர்களால் சந்தோஷமாக வாழ முடியுமா? கடவுளோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் என்றென்றும் சுதந்திரமாக வாழும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது, உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா?

2 இந்தக் கேள்விகளுக்கு உங்களால் மட்டும்தான் பதில் சொல்ல முடியும்! அதனால், இந்தக் கேள்விகளைப் பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் கவனமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படி யோசித்துப் பார்க்கும்போது, யெகோவாவுக்கு மட்டுமே ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது என்பதும், அவரால் மட்டும்தான் சிறந்த விதத்தில் ஆட்சி செய்ய முடியும் என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும். அதோடு, நம் இதயப்பூர்வமான ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் தகுதி அவருக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும். ஏனென்றால், இவற்றுக்கெல்லாம் பைபிளில் ஆணித்தரமான ஆதாரங்கள் இருக்கின்றன. இப்போது, யெகோவாவுக்கு மட்டுமே ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறது என்பதற்கு பைபிளில் என்ன ஆதாரம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்கு இருக்கிறது

3. இந்தப் பிரபஞ்சத்தின் உன்னதப் பேரரசராக இருப்பதற்கான தகுதி ஏன் யெகோவாவுக்கு இருக்கிறது?

3 யெகோவா மட்டும்தான் இந்தப் பிரபஞ்சத்தின் உன்னதப் பேரரசர்! ஏனென்றால், அவர்தான் சர்வவல்லமையுள்ள கடவுள், அவர்தான் படைப்பாளர். (1 நா. 29:11; அப். 4:24) ஒரு பரலோக தரிசனத்தில், கிறிஸ்துவின் சக ராஜாக்களான 1,44,000 பேரும் இப்படிச் சொன்னார்கள்: “எங்கள் கடவுளாகிய யெகோவாவே, நீங்கள் மகிமையும் மாண்பும் வல்லமையும் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர். ஏனென்றால், நீங்கள்தான் எல்லாவற்றையும் படைத்தீர்கள், உங்களுடைய விருப்பத்தின்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன.” (வெளி. 4:11) யெகோவா எல்லாவற்றையும் படைத்திருப்பதால், பூமி மற்றும் பரலோகத்தில் இருக்கிறவர்களை ஆட்சி செய்யும் உரிமை அவருக்கு இருக்கிறது.

4. கடவுளின் உன்னத அரசாட்சியை எதிர்த்து கலகம் செய்கிறவர்கள், சொந்தமாகத் தீர்மானிக்கும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஏன் சொல்லலாம்?

4 சாத்தான் எதையுமே படைக்காததால், இந்தப் பிரபஞ்சத்தை ஆட்சி செய்யும் உரிமை தனக்கு இருப்பதாக அவன் உரிமை கொண்டாடவே முடியாது. சாத்தானும், முதல் மனித ஜோடியும் யெகோவாவின் உன்னத அரசாட்சிக்கு எதிராகக் கலகம் செய்ததன் மூலம் அகங்காரமாக நடந்துகொண்டார்கள். (எரே. 10:23) சொந்தமாகத் தீர்மானிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு இருந்தது என்பதற்காக, யெகோவாவின் அரசாட்சியை ஒதுக்கித்தள்ளும் உரிமை அவர்களுக்கு இருந்ததா? இல்லை. சொந்தமாகத் தீர்மானிக்கும் சுதந்திரத்தை வைத்து மக்கள் தீர்மானங்கள் எடுக்கலாமே தவிர, படைப்பாளரான யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்ய முடியாது. அப்படிக் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்கிறவர்கள், சொந்தமாகத் தீர்மானிக்கும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் அர்த்தம். மனிதர்களாகிய நம் எல்லாருக்கும் யெகோவாவுடைய ஆட்சியும் வழிநடத்துதலும் நிச்சயம் தேவை!

5. யெகோவாவின் தீர்மானங்கள் சரியானவை என்று ஏன் சொல்லலாம்?

5 ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்கு இருப்பதற்கான இன்னொரு காரணத்தைக் கவனியுங்கள். யெகோவா தன்னுடைய அதிகாரத்தை நியாயமாகப் பயன்படுத்துகிறார்; அவருடைய நியாயம் பரிபூரணமானது! “யெகோவாவாகிய நான் மாறாத அன்பையும் நியாயத்தையும் நீதியையும் காட்டுகிற கடவுள் . . . இவற்றை நான் விரும்புகிறேன்” என்று யெகோவா சொல்கிறார். (எரே. 9:24) எது சரி என்று தீர்மானிக்க யெகோவாவுக்கு மனித சட்டங்கள் அவசியம் இல்லை. ஏனென்றால், எது சரி என்பதற்கான தராதரத்தை நிர்ணயிப்பதே அவர்தான். தன் பரிபூரணமான நியாயத்தின் அடிப்படையில் யெகோவா மனிதர்களுக்குச் சட்டங்களைத் தந்திருக்கிறார். “நீதியும் நியாயமும் உங்களுடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன” என்று சங்கீதக்காரன் சொன்னார். அதனால், யெகோவாவுடைய எல்லா சட்டங்களும், நியமங்களும், தீர்மானங்களும் சரியாகத்தான் இருக்கும். (சங். 89:14; 119:128) யெகோவா நியாயமற்ற விதத்தில் ஆட்சி செய்கிறார் என்று சாத்தான் சொல்கிறான். ஆனால், நியாயமான ஒரு உலகத்தை அவனால் இதுவரை கொண்டுவர முடியவில்லை.

6. உலகத்தை ஆட்சி செய்வதற்கான உரிமை யெகோவாவுக்கு இருக்கிறது என்பதற்கான ஒரு காரணம் என்ன?

6 ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்கு இருப்பதற்கான இன்னொரு காரணம், இந்த முழு பிரபஞ்சத்தையும் கவனித்துக்கொள்வதற்குத் தேவையான அறிவும் ஞானமும் அவரிடம் இருப்பதுதான்! எந்த மருத்துவராலும் சரிசெய்ய முடியாத நோயைச் சரிசெய்வதற்குத் தேவையான திறமையை தன் மகனுக்கு அவர் கொடுத்திருந்தார். (மத். 4:23, 24; மாற். 5:25-29) ஒருவேளை அவையெல்லாம் நமக்கு அற்புதங்களாக இருக்கலாம். ஆனால், யெகோவாவுக்கு அவையெல்லாம் அற்புதங்களாக இருக்கவில்லை. நம் உடலைப் பற்றியும், அது செயல்படும் விதத்தைப் பற்றியும் அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால், நம் உடல்நலப் பிரச்சினைகளை அவரால் சரிசெய்ய முடியும். இறந்தவர்களையும் உயிரோடு கொண்டுவர முடியும், இயற்கைப் பேரழிவுகளையும் தடுக்க முடியும்.

7. சாத்தானால் ஆளப்படும் இந்த உலகத்தைவிட யெகோவா ஞானமுள்ளவர் என்று எப்படிச் சொல்லலாம்?

7 சாத்தானால் ஆளப்படும் இந்த உலகத்தால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் சமாதானத்தைக் கொண்டுவர முடியவில்லை. உலக சமாதானத்தை யெகோவாவால் மட்டுமே கொண்டுவர முடியும். (ஏசா. 2:3, 4; 54:13) யெகோவாவின் அறிவையும் ஞானத்தையும் பற்றி தெரிந்துகொள்ளும்போது, அப்போஸ்தலன் பவுலைப் போலவே நாமும் உணருவோம். “ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள் எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நீதித்தீர்ப்புகள் ஆராய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை!” என்று அவர் சொன்னார்.—ரோ. 11:33.

யெகோவாவின் ஆட்சிதான் சிறந்தது

8. யெகோவா ஆட்சி செய்யும் விதத்தைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

8 யெகோவாவுக்கு மட்டும்தான் ஆட்சி செய்யும் உரிமை இருப்பதாக பைபிள் தெளிவாகச் சொல்கிறது. அதோடு, யெகோவாதான் சிறந்த ஆட்சியாளர் என்பதற்கான காரணத்தையும் அது சொல்கிறது. அவர் அன்பாக ஆட்சி செய்வது அதில் ஒரு காரணம்! அவர் “இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர், உண்மையுள்ளவர்.” அவருடைய இந்தக் குணங்களை நினைத்துப் பார்க்கும்போது, நம்மால் அவரிடம் இன்னும் நெருங்கிப்போக முடிகிறது. (யாத். 34:6) கடவுள் நம்மை மதிப்பு மரியாதையோடு நடத்துகிறார். நாம் நம்மை கவனித்துக்கொள்வதைவிட அவர் நம்மை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார். தன் ஊழியர்களுக்கு யெகோவா நல்லது செய்வதில்லை என்று பிசாசு சொல்வது, சுத்தப் பொய்! நாம் என்றென்றும் வாழும் நம்பிக்கையைப் பெறுவதற்காக யெகோவா தன் அருமை மகனையே கொடுத்திருக்கிறார்!சங்கீதம் 84:11-ஐயும், ரோமர் 8:32-ஐயும் வாசியுங்கள்.

9. தனிப்பட்ட நபர்கள்மீதும் யெகோவா அக்கறையோடு இருக்கிறார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

9 ஒரு தொகுதியாக, யெகோவா தன் மக்களை நேசிக்கிறார். தனிப்பட்ட ஒவ்வொரு நபர்மீதும் அவர் ரொம்ப அக்கறையாக இருக்கிறார். பூர்வ காலங்களில் என்ன நடந்தது என்று யோசித்துப் பாருங்கள். கிட்டத்தட்ட 300 வருஷங்களாக, நியாயாதிபதிகள் மூலம் யெகோவா தன் தேசத்தை வழிநடத்தினார்; எதிரிகளை ஜெயிக்க அவர்களுக்கு உதவினார். அந்த இக்கட்டான காலகட்டத்தில்கூட, தனிப்பட்ட நபர்கள்மீது யெகோவா அக்கறை காட்டினார். அப்படி அக்கறை காட்டப்பட்டவர்களில் ஒருவர்தான் ரூத். அவர் இஸ்ரவேல் பெண் இல்லை என்றாலும், யெகோவாவை வணங்க அவர் நிறைய தியாகங்களைச் செய்திருந்தார். அதற்குப் பலனாக, கணவரையும் மகனையும் தந்து யெகோவா அவரை ஆசீர்வதித்தார். அதோடு, ரூத்தின் மகன், மேசியாவுடைய வம்சாவளியின் ஒரு பாகமாக ஆனார். அதோடு, ரூத்தின் வாழ்க்கை சரிதை, ரூத்தின் பெயரிலேயே ஒரு பைபிள் புத்தகமாக இருக்கும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். ரூத் மறுபடியும் உயிரோடு வந்து இதையெல்லாம் கேள்விப்படும்போது, அவருக்கு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!—ரூத் 4:13; மத். 1:5, 16.

10. யெகோவா கடுமையாக ஆட்சி செய்வதில்லை என்று எப்படிச் சொல்லலாம்?

10 யெகோவா கடுமையாக ஆட்சி செய்வதில்லை. அவருக்குக் கீழ்ப்படிகிறவர்கள் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் உணருகிறார்கள். (2 கொ. 3:17) “மகத்துவமும் மேன்மையும் அவருடைய சன்னிதியில் இருக்கின்றன. பலமும் சந்தோஷமும் அவருடைய வீட்டில் இருக்கின்றன” என்று யெகோவாவைப் பற்றி தாவீது சொன்னார். (1 நா. 16:7, 27) “உங்களை ஆனந்தமாகப் புகழ்கிறவர்கள் சந்தோஷமானவர்கள். யெகோவாவே, உங்களுடைய முகத்தின் ஒளியில் அவர்கள் நடக்கிறார்கள். அவர்கள் உங்களுடைய பெயரை நினைத்து நாளெல்லாம் சந்தோஷப்படுகிறார்கள். உங்களுடைய நீதியால் உயர்வு அடைந்திருக்கிறார்கள்” என்று சங்கீதக்காரனாகிய ஏத்தான் எழுதினார்.—சங். 89:15, 16.

11. யெகோவாவின் உன்னத அரசாட்சிதான் சிறந்தது என்ற நம் நம்பிக்கையை நாம் எப்படிப் பலப்படுத்தலாம்?

11 யெகோவா நல்லவர் என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்க யோசிக்க, அவர்தான் சிறந்த ஆட்சியாளர் என்பது நமக்குப் புரியும். “வேறு எந்தவொரு இடத்திலும் ஆயிரம் நாட்கள் இருப்பதைவிட, உங்கள் பிரகாரங்களில் ஒரேவொரு நாள் இருப்பது மேல்!” என்று சொன்ன சங்கீதக்காரனைப் போலவே நாமும் உணருவோம். (சங். 84:10) எது நமக்குச் சந்தோஷத்தைத் தரும் என்று நம்மை வடிவமைத்தவரும் நம் படைப்பாளருமான யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். நம் தேவைக்கும் அதிகமாகவே அவர் நமக்குத் தருகிறார். யெகோவா சொல்வதைச் செய்யும்போது, நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்; அளவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்போம். அவர் சொல்வதைச் செய்வதற்கு நாம் ஒருவேளை தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தால்கூட, நம்மால் சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.ஏசாயா 48:17-ஐ வாசியுங்கள்.

12. நாம் யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிப்பதற்கான முக்கியக் காரணம் என்ன?

12 கிறிஸ்துவின் ஆயிர வருஷ ஆட்சிக்குப் பிறகு, யெகோவாவின் உன்னத அரசாட்சிக்கு எதிராக சிலர் கலகம் செய்வார்கள் என்று பைபிள் குறிப்பிடுகிறது. (வெளி. 20:7, 8) அதற்கு எது காரணமாக இருக்கும்? மக்களை சுயநலமாக நடக்க வைக்க பிசாசு முயற்சி செய்வான். இதைத்தான் அவன் எப்போதுமே செய்திருக்கிறான். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலேயே என்றென்றும் வாழ முடியும் என்று மக்களை நம்ப வைக்க பிசாசு முயற்சி செய்யலாம். ஆனால், அவன் சொல்வது உண்மையாக இருக்கவே முடியாது. அதனால், ‘அந்த மாதிரியான ஒரு பொய்ய நான் நம்புவேனா?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். நாம் உண்மையிலேயே யெகோவாவை நேசித்தால்... அவர் நல்லவர் என்றும் இந்தப் பிரபஞ்சத்தை ஆட்சி செய்யும் உரிமை அவருக்கு இருக்கிறது என்றும் நம்பினால்... அது போன்ற ஒரு பொய்யை நாம் வெறுத்து ஒதுக்குவோம். யெகோவா அன்பாக ஆட்சி செய்கிறவர்; அதனால், அவருடைய உன்னத அரசாட்சியின்கீழ் மட்டுமே வாழ வேண்டும் என்று நாம் விரும்புவோம்.

யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரியுங்கள்

13. யெகோவாவைப் போலவே நடந்துகொள்வதன் மூலம் அவருடைய உன்னத அரசாட்சியை நாம் ஆதரிக்கிறோம் என்று எப்படிச் சொல்லலாம்?

13 ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்கு இருக்கிறது என்றும், அவர் ஆட்சி செய்யும் விதம்தான் சிறந்தது என்றும் நாம் கவனித்தோம். நம் முழு ஆதரவைப் பெற்றுக்கொள்கிற தகுதி அவருடைய உன்னத அரசாட்சிக்கு இருக்கிறது. உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்ளும்போதும், அவருக்கு உண்மையோடு சேவை செய்யும்போதும், அவருடைய உன்னத அரசாட்சியை நம்மால் ஆதரிக்க முடியும். யெகோவாவைப் போலவே நடந்துகொள்ளும்போது, அவர் ஆட்சி செய்யும் விதத்தை நேசிக்கிறோம் என்பதையும், அவருடைய ஆட்சியை ஆதரிக்கிறோம் என்பதையும் நாம் காட்டுவோம்.எபேசியர் 5:1, 2-ஐ வாசியுங்கள்.

14. மூப்பர்களும் குடும்பத் தலைவர்களும் எப்படி யெகோவாவைப் போலவே நடந்துகொள்ளலாம்?

14 தன் வல்லமையை யெகோவா எப்போதுமே அன்பான விதத்தில் பயன்படுத்துகிறார் என்பதை நாம் பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிக்கிற மூப்பர்களும் குடும்பத் தலைவர்களும், அவரைப் போலவே நடந்துகொள்வார்கள்; கடுமையாக நடந்துகொள்ளவோ அடக்கியாளவோ மாட்டார்கள். யெகோவாவையும், அவருடைய மகனையும் போல நடந்துகொள்ள அப்போஸ்தலன் பவுல் கடுமையாக முயற்சி செய்தார். (1 கொ. 11:1) மற்றவர்களைத் தர்மசங்கடப்படுத்தும் விதத்தில் பவுல் எதையும் செய்யவில்லை, சரியானதைச் செய்துதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் இல்லை. அதற்குப் பதிலாக, சரியானதைச் செய்யும்படி அவர்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். (ரோ. 12:1; எபே. 4:1; பிலே. 8-10) இப்படிச் செய்ததன் மூலம் யெகோவாவைப் போலவே பவுல் நடந்துகொண்டார். நாமும் மற்றவர்களை அன்பாக நடத்தும்போது, யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டுவோம்.

15. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலம் நாம் எப்படி யெகோவாவின் அரசாட்சியை ஆதரிக்கலாம்?

15 அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மரியாதை தருவதன் மூலமும், ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலமும் நாம் யெகோவாவின் அரசாட்சியை ஆதரிக்கிறோம். ஒருவேளை, அவர்கள் எடுக்கிற ஏதோவொரு தீர்மானத்தைப் பற்றி முழுமையாகப் புரியாமல் இருந்தாலும், அதை நம்மால் ஒத்துக்கொள்ள முடியாமல் போனாலும், நாம் அதற்கு முழு ஆதரவு காட்டுகிறோம். உலக மக்கள் நடந்துகொள்வதிலிருந்து இது ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது! ஆனால் நாம் யெகோவாவை ஆட்சியாளராக ஏற்றுக்கொள்வதால் அப்படிச் செய்கிறோம். (எபே. 5:22, 23; 6:1-3; எபி. 13:17) நமக்கு மிகச் சிறந்தது கிடைக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுவதாலும், நாம் அவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்கிறோம். அதனால், நிறைய நன்மைகளை அனுபவிக்கிறோம்.

16. யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிப்பவர்கள் எப்படிப்பட்ட தீர்மானங்கள் எடுப்பார்கள்?

16 நம் தீர்மானங்கள் மூலமாகவும் யெகோவாவின் உன்னத அரசாட்சிக்கு நாம் ஆதரவு காட்டலாம். நாம் எதிர்ப்படுகிற ஒவ்வொரு சூழ்நிலைக்கும், யெகோவா குறிப்பிட்ட கட்டளைகளை கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக, அவர் எப்படி யோசிக்கிறார் என்று நமக்குச் சொல்கிறார். உதாரணத்துக்கு, ஒரு கிறிஸ்தவர் எதை உடுத்த வேண்டும், எதை உடுத்தக் கூடாது என்பதற்கான ஒரு பட்டியலை அவர் தரவில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய சாட்சிகளான நாம், பார்ப்பதற்கு அடக்கமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்று சொல்கிறார். (1 தீ. 2:9, 10) நம் தீர்மானங்கள் மற்றவர்களை எப்படிப் பாதிக்கும் என்று யோசித்துப் பார்க்கும்படியும் சொல்கிறார். (1 கொ. 10:31-33) யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதை வைத்து நாம் தீர்மானங்கள் எடுக்கும்போது, அவர் ஆட்சி செய்யும் விதத்தை நேசிக்கிறோம் என்பதையும், அவருடைய ஆட்சியை ஆதரிக்கிறோம் என்பதையும் நாம் காட்டுவோம்.

தீர்மானங்கள் எடுக்கும்போதும் குடும்ப விஷயங்களிலும் யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரியுங்கள் (பாராக்கள் 16-18)

17, 18. யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிப்பதை கிறிஸ்தவத் தம்பதிகள் எப்படிக் காட்டலாம்?

17 கல்யாணமானவர்கள் யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிப்பதற்கான ஒரு வழியைப் பற்றி கவனியுங்கள். ஒருவேளை, கல்யாண வாழ்க்கை அவர்கள் நினைத்தபடி அமையாமல் போகலாம்; அவர்களுடைய வாழ்க்கையில் பெரிய பெரிய பிரச்சினைகள்கூட இருக்கலாம். அப்படி ஏதாவது இருந்தால், பூர்வ இஸ்ரவேல் தேசத்தை யெகோவா எப்படி நடத்தினார் என்பதை நினைத்துப் பார்ப்பதன் மூலம் அவர்கள் நன்மையடையலாம். தன் மக்களுக்குத் தான் ஒரு கணவரைப் போல் இருப்பதாக யெகோவா சொன்னார். (ஏசா. 54:5; 62:4) இஸ்ரவேல் தேசம் நிறைய சமயங்களில் யெகோவாவின் மனதைக் கஷ்டப்படுத்தியது. யெகோவாவுக்கும் அந்தத் தேசத்துக்கும் இருந்த பந்தம், பிரச்சினைகள் நிறைந்த ஒரு கல்யாண வாழ்க்கையைப் போல இருந்தது. ஆனாலும், இஸ்ரவேல் தேசத்தை யெகோவா அப்படியே விட்டுவிடவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களைத் திரும்பத் திரும்ப மன்னித்தார். அதோடு, அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றினார்.சங்கீதம் 106:43-45-ஐ வாசியுங்கள்.

18 யெகோவாவை நேசிக்கிற கிறிஸ்தவத் தம்பதிகள், யெகோவாவைப் போலவே நடந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். கல்யாண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தாலும், பைபிளுக்கு விரோதமாக தங்கள் பந்தத்தை முறித்துக்கொள்ள அவர்கள் வழி தேடுவதில்லை. திருமண உறுதிமொழியை யெகோவா மிக முக்கியமாக நினைக்கிறார் என்பதும், கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் ‘சேர்ந்திருக்க’ வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். பாலியல் முறைகேட்டைத் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் ஒருவர் தன் துணையை விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவரை கல்யாணம் செய்ய முடியாது என்று பைபிள் சொல்கிறது. (மத். 19:5, 6, 9) கல்யாண வாழ்க்கை வெற்றியடைய தங்களால் முடிந்ததைச் செய்வதன் மூலம், கிறிஸ்தவத் தம்பதிகள் யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிக்கிறார்கள்.

19. நாம் தவறு செய்துவிட்டால், என்ன செய்ய வேண்டும்?

19 நாம் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால், சில சமயங்களில் யெகோவாவின் மனதைக் கஷ்டப்படுத்திவிடுகிறோம். இது யெகோவாவுக்குத் தெரிந்திருப்பதால்தான் கிறிஸ்துவை மீட்புவிலையாகத் தந்திருக்கிறார். அதனால், நாம் ஏதாவது தவறு செய்துவிட்டால் யெகோவாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். (1 யோ. 2:1, 2) நம் தவறை நினைத்து வெறுமனே வருத்தப்படாமல், அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். யெகோவாவிடம் நாம் நெருங்கியிருந்தால், அவர் நம்மை மன்னிப்பார், நாம் குணமாவதற்கு உதவுவார். அதோடு, எதிர்காலத்தில் அதே மாதிரியான சூழ்நிலைகளைச் சமாளிக்கவும் நமக்கு உதவுவார்.—சங். 103:3.

20. இப்போதே யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிப்பது ஏன் முக்கியம்?

20 புதிய உலகத்தில், எல்லாரும் யெகோவாவால் ஆட்சி செய்யப்படுவார்கள்; எல்லாரும் அவருடைய நீதியான வழிகளைக் கற்றுக்கொள்வார்கள். (ஏசா. 11:9) ஆனால் இப்போதே, அவர் யோசிக்கும் விதத்தைப் பற்றியும், ஒரு விஷயத்தை நாம் எப்படிச் செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் என்பதைப் பற்றியும் நம்மால் நிறைய தெரிந்துகொள்ள முடியும். சீக்கிரத்தில், யெகோவாவுக்கு ஆட்சி செய்யும் உரிமை இருக்கிறதா என்ற கேள்வியை யாருமே கேட்க மாட்டார்கள்! அதனால், யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும், அவருக்கு உண்மையோடு சேவை செய்வதன் மூலமும், அவரைப் போலவே நடந்துகொள்ள கடினமாக முயற்சி செய்வதன் மூலமும், யெகோவாவின் உன்னத அரசாட்சியை ஆதரிக்க இப்போதே நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யலாம்.