Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

சங்கீதம் 12:7-ஐ எப்படிப் புரிந்துகொள்ளலாம்?

சங்கீதம் 12:1-4-ல், “விசுவாசமானவர்கள் இந்த உலகத்திலிருந்து மறைந்துவிட்டார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு, சங்கீதம் 12:5-7 இப்படிச் சொல்கிறது:

“‘கஷ்டத்தில் தவிக்கிறவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதாலும்,

ஏழைகள் வேதனையில் பெருமூச்சு விடுவதாலும்,

நான் நடவடிக்கை எடுக்கப்போகிறேன்.

அவர்களைக் கேவலமாக நடத்துகிற ஆட்களிடமிருந்து காப்பாற்றுவேன்’ என்று யெகோவா சொல்கிறார்.

யெகோவாவின் வார்த்தைகள் சுத்தமானவை.

அவை களிமண் சூளையில் ஏழு தடவை புடமிடப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட வெள்ளிபோல் இருக்கின்றன.

யெகோவாவே, அவர்களை நீங்கள் காத்திடுவீர்கள்.

அவர்கள் ஒவ்வொருவரையும் இந்தத் தலைமுறையிடமிருந்து என்றென்றுமே பாதுகாப்பீர்கள்.”

‘கஷ்டத்தில் தவிக்கிறவர்களை’ பற்றி கடவுள் என்ன சொல்கிறார் என்று வசனம் 5 சொல்கிறது; அவர்களை அவர் காப்பாற்றுவார்.

வசனம் 6, “யெகோவாவின் வார்த்தைகள் சுத்தமானவை” என்றும் அவை “சுத்திகரிக்கப்பட்ட வெள்ளிபோல் இருக்கின்றன” என்றும் சொல்கிறது. கடவுளுடைய வார்த்தை அப்படித்தான் இருக்கிறது என்று கிறிஸ்தவர்கள் மனதார நம்புகிறார்கள்.—சங். 18:30; 119:140.

சில பைபிள் மொழிபெயர்ப்புகள், சங்கீதம் 12:7-ஐ, “அவற்றை நீங்கள் காத்திடுவீர்கள்” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. முந்தின வசனத்தில் ‘யெகோவாவின் வார்த்தைகளை’ பற்றி சொல்லப்பட்டிருப்பதால், இங்கே கடவுள் தன்னுடைய “வார்த்தைகளை” காப்பாற்றுவதைப் பற்றி பேசுவதாகச் சிலர் நினைக்கிறார்கள். பைபிளை அழிப்பதற்கும் அதைத் தடை செய்வதற்கும் எதிரிகள் நிறைய முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள் என்றும் அவற்றிலிருந்து கடவுள் தன்னுடைய வார்த்தையைக் காத்திருக்கிறார் என்றும் நமக்குத் தெரியும்.—ஏசா. 40:8; 1 பே. 1:25.

இருந்தாலும், வசனம் 5-ல் சொல்லப்பட்டிருப்பதுபோல் யெகோவா தன்னுடைய மக்களையும் காத்துக்கொண்டுதான் வருகிறார். ‘கஷ்டத்தில் தவிக்கிறவர்களையும்’ ‘அடக்கி ஒடுக்கப்படுகிறவர்களையும்’ அவர் ஏற்கெனவே பாதுகாத்து வந்திருக்கிறார், இனிமேலும் பாதுகாப்பார்.—யோபு 36:15; சங். 6:4; 31:1, 2; 54:7; 145:20.

அப்படியென்றால், வசனம் 7-ல் சொல்லியிருப்பது மக்களைக் குறிக்கிறதா கடவுளுடைய வார்த்தைகளைக் குறிக்கிறதா?

இந்தச் சங்கீதத்தில் இருக்கிற எல்லா வசனங்களையும் வைத்துப் பார்த்தால், மக்களைத்தான் குறிக்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது.

சங்கீதம் 12-ன் ஆரம்பத்தில், பொல்லாதவர்களால் ஏமாற்றப்பட்ட யெகோவாவின் ஊழியர்களைப் பற்றி தாவீது சொல்கிறார். பிறகு வசனம் 3-ல், மோசமாக பேசுகிறவர்களுக்கு எதிராக யெகோவா நடவடிக்கை எடுப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தச் சங்கீதத்தை வைத்துப் பார்க்கும்போது, யெகோவா தன்னுடைய மக்களுக்காகச் செயல்படுவார் என்று நாம் உறுதியாக நம்பலாம். ஏனென்றால், அவருடைய வார்த்தைகள் சுத்தமானவை.

அப்படியென்றால், வசனம் 7-ல் யெகோவா காப்பதாகச் சொல்லியிருப்பது, கஷ்டத்தில் தவிக்கிற மக்களைத்தான்.

ஆனால், சில பைபிள் மொழிபெயர்ப்புகள் ஏன் அந்த வசனத்தை, “அவற்றை நீங்கள் காத்திடுவீர்கள்” என்று மொழிபெயர்த்திருக்கின்றன? எபிரெய வேதாகமத்தின் சில நம்பகமான கையெழுத்துப் பிரதிகளில் அப்படி இருக்கிறது. ஆனால், கிரேக்க செப்டுவஜன்ட்டில், “அவர் நம்மை காத்திடுவார்,” “அவர் நம்மை பாதுகாப்பார்” போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அப்படியென்றால், இது கஷ்டத்தில் தவிக்கிற ஒடுக்கப்படுகிற உண்மையுள்ளவர்களைப் பற்றித்தான் பேசுகிறது என்று தெரிகிறது. ஒழுக்கக்கேடான விஷயங்களை ஊக்குவிக்கிற “இந்தத் தலைமுறையிடமிருந்து” அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். (சங். 12:7, 8) எபிரெய வேதாகமத்தின் அரமேயிக் மொழிபெயர்ப்பில் வசனம் 7 இப்படி இருக்கிறது: “கர்த்தரே, நீங்கள் நீதிமான்களைப் பாதுகாப்பீர்கள், இந்தப் பொல்லாதத் தலைமுறையிடமிருந்து அவர்களை என்றென்றும் காத்திடுவீர்கள்.” சங்கீதம் 12:7 கடவுளுடைய வார்த்தையைப் பற்றி அல்ல, ‘விசுவாசமுள்ள’ மக்களைப் பற்றித்தான் பேசுகிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.