Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்​—⁠மியன்மாரில்

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்​—⁠மியன்மாரில்

“அறுவடை அதிகமாக இருக்கிறது, ஆனால் வேலையாட்கள் குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பச் சொல்லி அறுவடையின் எஜமானிடம் கெஞ்சிக் கேளுங்கள்.” (லூக். 10:2) சுமார் 2,000 வருஷங்களுக்கு முன்பு இயேசு சொன்ன இந்த வார்த்தைகள், மியன்மாரில் இன்று இருக்கும் சூழ்நிலைக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கிறது. ஏனென்றால், ஐந்தரை கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில், நல்ல செய்தியைப் பிரசங்கிக்க வெறும் 4,200 பிரஸ்தாபிகள்தான் இருக்கிறார்கள்.

இருந்தாலும், தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்த நாட்டில் நடக்கும் ஆன்மீக அறுவடையில் உதவுவதற்காக, ‘அறுவடையின் எஜமானான’ யெகோவா, வெவ்வேறு நாடுகளில் இருக்கும் நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகளின் இதயங்களைத் தூண்டியிருக்கிறார். அவர்கள் தங்களுடைய நாட்டை விட்டு வருவதற்கு என்ன காரணம்? மியன்மாருக்கு மாறி வருவதற்காக அவர்கள் என்ன செய்தார்கள்? இப்போது என்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள்? அதைப் பற்றிப் பார்க்கலாம்.

“வாங்க, இங்க நிறைய பயனியர்கள் தேவைப்படுறாங்க!”

ஜப்பானில் பயனியர் சேவை செய்யும் காஸுஹீரோ என்ற சகோதரருக்கு, சில வருஷங்களுக்கு முன்பு காக்காய்வலிப்பு வந்ததால் அவர் சுயநினைவை இழந்துவிட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டுபோகப்பட்டார். அவரைப் பரிசோதித்த டாக்டர், இரண்டு வருஷங்களுக்கு அவர் கார் ஓட்டக் கூடாது என்று சொல்லிவிட்டார். அதைக் கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். ‘நான் எப்படி தொடர்ந்து பயனியர் சேவை செய்ய போறேன்? இந்த சேவைய நான் ரொம்ப நேசிக்குறனே!’ என்று தனக்குள் நொந்துகொண்டார். பிறகு யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்தார். தொடர்ந்து பயனியர் சேவை செய்ய உதவும்படி கெஞ்சினார்.

காஸுஹீரோ மற்றும் மாரி

அதற்குப் பிறகு என்ன நடந்ததென்று காஸுஹீரோ சொல்கிறார்: “ஒரு மாசத்துக்கு அப்புறம், மியன்மார்ல சேவை செஞ்சிட்டு இருந்த என்னோட நண்பர் என் நிலைமைய பத்தி கேள்விப்பட்டு எனக்கு ஃபோன் பண்ணுனாரு. ‘மியன்மார பொருத்தவரைக்கும் பெரும்பாலும் பஸ்லதான் எல்லாரும் பயணம் செய்வாங்க. நீ இங்க வந்தா, கார் இல்லாமயே நல்லா ஊழியம் செய்யலாம்’னு சொன்னாரு. மியன்மாருக்கு போறதுக்கு என் உடம்பு ஒத்துழைக்குமானு நான் டாக்டர்கிட்ட கேட்டேன். அதுக்கு அவரு, ‘காக்காய்வலிப்புக்கு சிகிச்சை கொடுக்குறதுல நிபுணரா இருக்குற ஒரு டாக்டர், மியன்மார்ல இருந்து இப்போ ஜப்பானுக்கு வர்றாரு. அவர உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்குறேன். மறுபடியும் உங்களுக்கு வலிப்பு வந்துச்சுனா அவர் உங்கள கவனிச்சுக்குவாரு’னு சொன்னாரு. அத கேட்டதும் எனக்கு ஒரே ஆச்சரியம்! யெகோவா கொடுத்த பதிலா அத நான் எடுத்துக்கிட்டேன்.”

உடனடியாக அவர் மியன்மார் கிளை அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பினார். தானும் தன்னுடைய மனைவியும் மியன்மாரில் பயனியர் சேவை செய்ய விரும்புவதாக அதில் சொல்லியிருந்தார். ஐந்தே நாட்களில், கிளை அலுவலகத்திடமிருந்து, “வாங்க, இங்க நிறைய பயனியர்கள் தேவைப்படுறாங்க” என்ற பதில் வந்தது. உடனே, காஸுஹீரோவும் அவருடைய மனைவி மாரியும் தங்களுடைய இரண்டு கார்களை விற்றார்கள். அதில் கிடைத்த பணத்தை வைத்து மியன்மார் போவதற்கான விசாவையும் விமான டிக்கெட்டுகளையும் எடுத்தார்கள். இப்போது அவர்கள், மண்டலேவில் இருக்கும் சைகை மொழி தொகுதியில் சந்தோஷமாகச் சேவை செய்கிறார்கள். காஸுஹீரோ இப்படிச் சொல்கிறார்: “‘உன் வழியை யெகோவாவிடம் ஒப்படைத்துவிடு. அவரையே சார்ந்திரு, அவர் உனக்காக எல்லாவற்றையும் செய்வார்’னு சங்கீதம் 37:5-ல கடவுள் கொடுத்திருக்குற வாக்குறுதிமேல எனக்கு இருந்த விசுவாசம் இப்போ அதிகமாயிருக்கு.”

யெகோவா வழி திறக்கிறார்

2014-ல், ஒரு விசேஷ மாநாட்டை நடத்தும் பாக்கியம் மியன்மாரில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்குக் கிடைத்தது. வெளிநாட்டைச் சேர்ந்த நிறைய சகோதர சகோதரிகள் அதில் கலந்துகொண்டார்கள். அதில் ஒருவர்தான் அமெரிக்காவைச் சேர்ந்த மோனிக் என்ற சகோதரி. அவருக்கு 34 வயது. “மாநாடு முடிஞ்சு வந்ததுக்கு அப்புறம், என் வாழ்க்கையில அடுத்து நான் என்ன செய்யணும்னு கேட்டு யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சேன். அப்புறம், என்னோட ஆன்மீக இலக்குகளை பத்தி அப்பா அம்மாகிட்ட பேசுனேன். நான் மியன்மாருக்கு போய் சேவை செஞ்சா நல்லா இருக்கும்னு நாங்க நினைச்சோம். ஆனா, அந்த முடிவு எடுக்குறதுக்கு கொஞ்ச காலம் எடுத்துக்கிட்டேன், நிறைய ஜெபம் செஞ்சேன்.” அவர் ஏன் கொஞ்சக் காலம் எடுத்துக்கொண்டார்?

மோனிக் மற்றும் லீ

“ஒரு விஷயத்த செய்றதுக்கு முன்னாடி, ‘செலவை கணக்கு பார்க்கணும்’னு சீஷர்கள்கிட்ட இயேசு சொன்னாரு. அதனால, நான் சில கேள்விகள கேட்டுக்கிட்டேன்: ‘அங்க மாறி போறதுக்கு தேவையான பணம் என்கிட்ட இருக்கா... என்னோட செலவுகள கவனிச்சுக்க நிறைய நேரம் வேலை செய்ய வேண்டியிருக்குமா... அப்படீனெல்லாம் என்னை நானே கேட்டுக்கிட்டேன்.’” பிறகு அவர் இப்படிச் சொல்கிறார்: “மியன்மாருக்கு போறதுக்கு தேவையான பணம் என்கிட்ட இல்லங்கிறது எனக்கு புரிஞ்சுது.” ஆனால், அவரால் எப்படி மியன்மாருக்குப் போக முடிந்தது?—லூக். 14:28.

“ஒரு நாள் என் முதலாளி என்னை பார்க்கணும்னு கூப்பிட்டாங்க. வேலையைவிட்டு எடுக்க போறாங்களோனு நினைச்சு பயந்துட்டேன். ஆனா, நான் நல்லா வேலை செய்றதா சொல்லி என்னை பாராட்டுனாங்க. அதுமட்டுமில்ல, எனக்கு போனஸ் கிடைக்குறதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்குறதாவும் சொன்னாங்க. எனக்கு எவ்வளவு பணம் தேவைப்பட்டுச்சோ, அதே அளவு பணம் கிடைச்சுது!” என்று மோனிக் சொல்கிறார்.

2014 டிசம்பரிலிருந்து மோனிக் மியன்மாரில் சேவை செய்கிறார். தேவை அதிகமுள்ள இடத்தில் ஊழியம் செய்வதைப் பற்றி அவர் எப்படி உணருகிறார்? “இங்க ரொம்ப சந்தோஷமா இருக்கேன். 3 பைபிள் படிப்பு எடுக்குறேன். அதுல ஒரு அம்மாவுக்கு 67 வயசு. அவங்க எப்பவும் சிரிச்ச முகத்தோட கட்டி அணைச்சு என்னை அன்பா வரவேற்பாங்க. கடவுளோட பேர் யெகோவானு தெரிஞ்சிக்கிட்டப்போ, அவங்க அழ ஆரம்பிச்சிட்டாங்க. என்கிட்ட, ‘கடவுளோட பேரு யெகோவானு வாழ்க்கையில இப்போதான் முதல் முதல்ல கேள்விப்படுறேன். நீ என்னைவிட வயசுல சின்னவதான்; இருந்தாலும், இதுவரைக்கும் நான் தெரிஞ்சிக்கிட்ட விஷயத்திலேயே முக்கியமான ஒரு விஷயத்த சொல்லிக்கொடுத்திருக்க’னு சொன்னாங்க. எனக்கும் அழுகை வந்திருச்சு. இந்த மாதிரி அனுபவங்கள் கிடைக்குறப்போ, மனசுக்கு திருப்தியா இருக்கு. தேவை அதிகமுள்ள இடத்துல சேவை செய்றத நினைச்சு சந்தோஷமா இருக்கு” என்று அவர் சொல்கிறார். சமீபத்தில், ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் அவர் கலந்துகொண்டார்.

2013 யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக்கில் மியன்மாரைப் பற்றி வந்த தகவல்களைப் படித்தது, இங்கே வர சிலரைத் தூண்டியிருக்கிறது. லீ என்ற சகோதரிக்கு 30 வயதுக்கும்மேல் ஆகிறது. ஏற்கெனவே தென்கிழக்கு ஆசியாவில்தான் அவர் வாழ்ந்துவந்தார். அவர் முழுநேர வேலை செய்துகொண்டிருந்தார். ஆனால், மியன்மாரைப் பற்றி இயர்புக்கில் படித்ததற்குப் பிறகு, அங்கே சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது. அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் 2014-ல யாங்கூன்ல நடந்த விசேஷ மாநாட்டுல கலந்துக்கிட்டேன். அப்போ, மியன்மார்ல இருந்த ஒரு தம்பதிகிட்ட பேசுனேன். தேவை அதிகம் இருந்ததால சீன மொழி சபைக்கு அவங்க மாறி வந்திருந்தாங்க. எனக்கு அந்த மொழி தெரிஞ்சிருந்ததால, நானும் அங்க மாறி போகலாம்னு முடிவெடுத்தேன். நானும் மோனிக்கும் சேர்ந்து மண்டலேவுக்கு மாறி போனோம். எங்களுக்கு ஒரே ஸ்கூல்ல பகுதி நேர டீச்சர் வேலை கிடைச்சுது. பக்கத்துலேயே ஒரு வீடும் கிடைச்சுது. இங்க வெயில் ஜாஸ்தி; வேற சில அசௌகரியங்களும் இருக்கு. இருந்தாலும், இங்க ஊழியம் செய்றது ரொம்ப நல்லா இருக்கு. இங்க இருக்குற ஜனங்க எளிமையா வாழ்றாங்க, எல்லார்கிட்டயும் மரியாதையா நடந்துக்குறாங்க, நல்ல செய்தியை காதுகொடுத்து கேட்குறதுக்கு நேரம் ஒதுக்குறாங்க. தன்னோட வேலைய யெகோவா வேகப்படுத்துறத பார்க்குறப்போ, எனக்கு புல்லரிக்குது. நான் மண்டலே நகரத்துல சேவை செய்யணுங்கிறது யெகோவாவோட விருப்பங்கிறத உறுதியா நம்புறேன்.”

ஜெபத்தை யெகோவா கேட்கிறார்

ஜெபத்துக்கு இருக்கும் வல்லமையை, தேவை அதிகமுள்ள இடங்களுக்கு மாறிப்போன நிறைய பேர் அனுபவித்திருக்கிறார்கள். ஜும்ப்பா-நவோ தம்பதியைப் பற்றிப் பார்க்கலாம். ஜும்ப்பாவுக்கு 37 வயது; அவருடைய மனைவி நவோவுக்கு 35 வயது. அவர்கள் ஏற்கெனவே ஜப்பானில் இருக்கிற ஒரு சைகை மொழி சபையில் சேவை செய்துகொண்டிருந்தார்கள். பிறகு ஏன் மியன்மாருக்கு மாறினார்கள்? ஜும்ப்பா இப்படிச் சொல்கிறார்: “தேவை அதிகமுள்ள ஒரு நாட்டுக்கு போய் சேவை செய்யணுங்குற ஆசை எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப நாளா இருந்துச்சு. எங்க சபையில் இருக்குற ஒரு சகோதரர், மியன்மாருக்கு மாறிப்போனாரு. எங்ககிட்ட கொஞ்ச பணம்தான் இருந்துச்சு. இருந்தாலும், மே 2010-ல மியன்மாருக்கு மாறி வந்தோம். இங்கிருக்குற சகோதர சகோதரிகள், எங்கள ரொம்ப அன்பா வரவேற்றாங்க.” மியன்மாரில் சைகை மொழியில் பிரசங்கிப்பதைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “ஜனங்க ரொம்ப ஆர்வமா இருக்காங்க. காதுகேட்காதவங்ககிட்ட சைகை மொழி வீடியோக்கள காட்டுறப்போ, அவங்க ரொம்ப ஆச்சரியப்பட்டு போறாங்க. இங்க வந்து யெகோவாவுக்கு சேவை செய்யணும்னு நாங்க எடுத்த தீர்மானத்த நினைச்சு ரொம்ப சந்தோஷப்படுறோம்.”

நவோ மற்றும் ஜும்ப்பா

ஜும்ப்பா-நவோ தம்பதி பணத்துக்கு என்ன செய்தார்கள்? “3 வருஷத்துக்கு அப்புறம், சேமிச்சு வைச்சிருந்த பணத்துல கிட்டத்தட்ட எல்லாமே செலவாயிடுச்சு. அடுத்த வருஷத்துக்கு வீட்டு வாடகை கொடுக்குறதுக்கு போதுமான அளவு பணம் இல்ல. நானும் என் மனைவியும் ஊக்கமா ஜெபம் செஞ்சோம். எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடந்துச்சு! கிளை அலுவலகத்துல இருந்து ஒரு கடிதம் வந்துச்சு. அதுல, தற்காலிக விசேஷ பயனியர்களா சேவை செய்றீங்களானு எங்ககிட்ட கேட்டிருந்தாங்க. நாங்க யெகோவாவ நம்புனோம், அவரு எப்பவும் எங்கள கைவிடமாட்டாருங்குறத அனுபவத்துல பார்த்தோம். ஒவ்வொரு விஷயத்துலயும் அவரு எங்கள நல்லா பார்த்துக்கிறாரு” என்று ஜும்ப்பா சொல்கிறார். சமீபத்தில் இவர்கள் இரண்டு பேரும் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொண்டார்கள்.

நிறைய பேரை யெகோவா தூண்டுகிறார்

இப்போது, சிமோனா-ஆனா தம்பதியைப் பற்றிப் பார்க்கலாம். 43 வயதான சிமோனா, இத்தாலியைச் சேர்ந்தவர்; 37 வயதான அவருடைய மனைவி ஆனா, நியுசிலாந்தைச் சேர்ந்தவர். மியன்மாருக்கு வர இந்தத் தம்பதியை எது தூண்டியது? “2013 இயர்புக்குல மியன்மாரை பத்தி வந்த விஷயங்கள்தான்!” என்று ஆனா சொல்கிறார். சிமோனா இப்படிச் சொல்கிறார்: “மியன்மார்ல இருக்குறது பெரிய பாக்கியம். இங்க வாழ்க்கை ரொம்ப எளிமையா இருக்கு. யெகோவாவோட வேலைய செய்றதுக்கு நிறைய நேரம் கிடைக்குது. தேவை அதிகமுள்ள இடத்துல சேவை செய்றப்போ, யெகோவா நம்மள நல்லா பார்த்துக்குறாரு. அது ஒரு அருமையான அனுபவம்!” (சங். 121:5) ஆனா இப்படிச் சொல்கிறார்: “எப்பவும் விட இப்ப நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நாங்க எளிமையா வாழ்றோம். என் கணவரோட நிறைய நேரம் செலவு செய்றேன். எங்களுக்குள்ள இருக்குற நெருக்கம் கூடியிருக்கு. அருமையான புது நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. இங்க இருக்குற ஜனங்களுக்கு சாட்சிகள்மேல எந்த தப்பான எண்ணமும் இல்ல. அவங்களுக்கு இருக்குற ஆர்வத்தை பார்க்குறப்போ, ரொம்ப சந்தோஷமா இருக்கு!”

சிமோனா மற்றும் ஆனா

உதாரணத்துக்கு, ஒரு அனுபவத்தை ஆனா சொல்கிறார்: “ஒரு நாள், சந்தையில ஒரு கல்லூரி மாணவிகிட்ட சாட்சி கொடுத்தேன். மறுபடியும் வந்து பார்க்குறதாவும் சொன்னேன். திரும்பவும் போய் பார்த்தப்போ, அந்த பொண்ணு அவளோட ஃப்ரெண்டை கூட்டிக்கிட்டு வந்திருந்தா. அடுத்த தடவை, இன்னும் கொஞ்சம் பேர கூட்டிக்கிட்டு வந்தா. அப்புறம், இன்னும் சிலர கூட்டிக்கிட்டு வந்தா. இப்போ அந்த அஞ்சு பேருக்கும் நான் பைபிள் படிப்பு எடுக்குறேன்.” சிமோனா இப்படிச் சொல்கிறார்: “ஜனங்க நல்லா பழகுறாங்க, விஷயங்கள தெரிஞ்சுக்கணும்னு நினைக்குறாங்க. நிறைய பேருக்கு பைபிள் செய்தியில ஆர்வம் இருக்கு. எல்லாருக்கும் சொல்லிக்கொடுக்க எங்களுக்குதான் நேரம் இல்ல.”

சாச்சிவோ மற்றும் மிஸுஹோ

மிஸுஹோ என்ற சகோதரி ஜப்பானைச் சேர்ந்தவர். அவருடைய கணவர் பெயர் சாச்சிவோ. மியன்மாருக்கு மாறிப்போவதென்று தீர்மானம் எடுப்பதற்கு, அவர்கள் என்னென்ன நடைமுறையான படிகளை எடுத்தார்கள்? மிஸுஹோ இப்படிச் சொல்கிறார்: “தேவை அதிகமுள்ள ஒரு நாட்டுல சேவை செய்யணுங்குற ஆசை என் கணவர் சாச்சிவோக்கும் எனக்கும் ரொம்ப நாளா இருந்துச்சு. ஆனா எங்கே போறது? 2013 இயர்புக்குல மியன்மார பத்தி படிச்சோம். நெஞ்ச தொடுற அனுபவங்கள் அதுல இருந்துச்சு; அதெல்லாம் எங்க மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு. அதுக்கு அப்புறம், மியன்மாருக்கு மாறி போக முடியுமாங்குறத பத்தி நாங்க யோசிச்சோம்.” சாச்சிவோ இப்படிச் சொல்கிறார்: “யாங்கூனுக்கு போய் ஒரு வாரம் சுத்தி பார்த்துட்டு வரலாம்னு முடிவெடுத்தோம். அதுதான் மியன்மாரோட முக்கியமான நகரம்! அந்த நகரத்த வேவு பார்த்தோம்னுகூட சொல்லலாம். அங்க இருக்குற நிலவரத்தை தெரிஞ்சுக்குறதுக்காக நாங்க செஞ்ச ஒரு சின்ன பயணம், மியன்மாருக்கு மாறிப்போகணுங்குற தீர்மானத்துக்கு வர்றதுக்கு உதவியா இருந்துச்சு.”

அழைப்பை ஏற்றுக்கொள்வீர்களா?

ஜேன், டானிகா, ராட்னி மற்றும் ஜோர்டன்

ராட்னி-ஜேன் தம்பதி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேருக்கும் 50 வயதுக்கும்மேல் ஆகிறது. அவர்களுக்கு ஜோர்டன் என்ற மகனும் டானிகா என்ற மகளும் இருக்கிறார்கள். 2010-லிருந்து இவர்கள் எல்லாரும் மியன்மாரில் சேவை செய்கிறார்கள். “ஜனங்களுக்கு ஆன்மீக விஷயங்கள்ல இருக்குற தாகத்த பார்த்து நெகிழ்ந்துபோயிட்டோம். மியன்மார் மாதிரியான இடத்துக்கு போய் சேவை செய்யுங்கனு தாராளமா நான் மத்த குடும்பங்களுக்கும் சொல்வேன்” என்று ராட்னி சொல்கிறார். ஏன் அப்படிச் சொல்கிறார்? “இங்க வந்தது, ஆன்மீக ரீதியில எங்க குடும்பத்துக்கு ரொம்ப ரொம்ப உதவியா இருந்துச்சு. நிறைய இளைஞர்கள், ஃபோன்... கார்... வேலைனு... இத பத்தியே யோசிச்சிட்டு இருக்காங்க. ஆனா எங்க பிள்ளைங்க, ஊழியத்துல பேசுறதுக்கு புது வார்த்தைகள கத்துக்குறதுல பிஸியா இருக்காங்க. பைபிள பத்தி தெரியாதவங்ககிட்ட எப்படி பேசறதுனு கத்துக்குறாங்க. கூட்டத்துல, உள்ளூர் மொழியில பதில் சொல்றதுக்கும் முயற்சி செய்றாங்க. நம்ம வழிபாடு சம்பந்தப்பட்ட மத்த விஷயங்கள்லயும் மும்முரமா இருக்காங்க.”

ஆலிவர் மற்றும் ஆனா

அமெரிக்காவைச் சேர்ந்த ஆலிவர் என்ற சகோதரருக்கு 37 வயது. தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்யும்படி மற்றவர்களையும் உற்சாகப்படுத்த அவர் ஆசைப்படுகிறார். ஏன்? “என்னோட சௌகரியத்த பார்க்காம யெகோவாவுக்கு சேவை செய்றதால, நிறைய பலன்கள் கிடைச்சிருக்கு. வீட்ட விட்டு வேற இடத்துக்கு மாறிப்போனது, எந்த சூழ்நிலை வந்தாலும் யெகோவாமேல வைச்சிருக்கிற நம்பிக்கையில உறுதியா இருக்குறதுக்கு உதவியா இருந்துச்சு. முன்னபின்ன தெரியாத சகோதரர்களோட சேர்ந்துதான் நான் சேவை செய்றேன். ஆனா எங்க நம்பிக்கை எல்லாமே ஒண்ணுதான். இந்த விதத்துல நாங்க ஒற்றுமையா இருக்கோம். கடவுளோட அமைப்புல மட்டும்தான் இது முடியும்” என்று ஆலிவர் சொல்கிறார். இப்போது, ஆலிவரும் அவருடைய மனைவி ஆனாவும் சீன மொழி சபையில் சுறுசுறுப்பாகச் சேவை செய்கிறார்கள்.

ட்ரேஸில்

52 வயதான ட்ரேஸில் என்ற சகோதரி ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். 2004-லிருந்து இவர் மியன்மாரில் சேவை செய்கிறார். அவர் இப்படிச் சொல்கிறார்: “யாருக்கெல்லாம் சூழ்நிலை ஒத்துப்போகுதோ, அவங்கெல்லாம் தேவை அதிகமுள்ள இடத்துக்கு போய் சேவை செய்யணும்னு தாராளமா சொல்வேன். அப்படி செய்யணுங்குற எண்ணம் இருந்தாபோதும், யெகோவா நம்ம முயற்சிகள ஆசீர்வதிப்பாரு; இத நான் அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டேன். இப்படியொரு வாழ்க்கை எனக்கு கிடைக்கும்னு நினைச்சுக்கூட பார்த்தது இல்ல. இதுல கிடைக்குற திருப்தி வேற எதுலயும் கிடைக்காது.

மியன்மாரில் சேவை செய்யும் இந்த சகோதர சகோதரிகளின் இதயப்பூர்வமான வார்த்தைகள், நியமிக்கப்படாத பிராந்தியத்தில் இருக்கும் நேர்மையுள்ளம் படைத்த ஜனங்களுக்கு உதவுவதைப் பற்றி யோசித்துப்பார்க்க உங்களை உற்சாகப்படுத்தட்டும்! தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்யும் இவர்கள், “மியன்மாருக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்!” என்று அழைக்கிறார்கள்.