படிப்புக் கட்டுரை 27
யெகோவாவைப் போலவே சகிப்புத்தன்மையைக் காட்டுங்கள்
“சகித்திருப்பதன் மூலம் உங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்வீர்கள்.”—லூக். 21:19.
பாட்டு 114 பொறுமை—ஒரு அருமையான குணம்
இந்தக் கட்டுரையில்... *
1-2. நாம் சோர்ந்துவிடாமல் இருப்பதற்கு ஏசாயா 65:16, 17 நமக்கு எப்படி உதவுகிறது?
2017-ல் “சோர்ந்துவிடாதீர்கள்!” என்ற தலைப்பில் அருமையான ஒரு மண்டல மாநாட்டை நாம் எல்லாருமே அனுபவித்தோம். நம் வாழ்க்கையில் கஷ்டங்கள் வரும்போது அதை எப்படிச் சமாளிக்கலாம் என்று கற்றுக்கொண்டோம். இப்போது நான்கு வருஷங்கள் ஓடிப்போய் விட்டன.
2 இப்போதும் நாம் சில கஷ்டங்களைச் சகித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஒருவேளை, உங்கள் குடும்பத்தாரோ, நண்பரோ இறந்துபோயிருக்கலாம். பயங்கரமான நோயால் நீங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கலாம். இல்லையென்றால், உங்களுக்கு வயதாகிக்கொண்டே போகலாம். இயற்கைப் பேரழிவாலோ, வன்முறையாலோ துன்புறுத்தலாலோ நீங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கலாம். கோவிட்-19 பெருந்தொற்று மாதிரியான நோய்களின் பாதிப்புகள் உங்களுக்கு இருக்கலாம். இப்படிப்பட்ட கஷ்டங்களே இல்லாத ஒரு வாழ்க்கைக்காக... இப்படிப்பட்ட நினைவுகளே உங்கள் மனதுக்கு வராத ஒரு வாழ்க்கைக்காக... நீங்கள் ஏங்கிக்கொண்டிருக்கலாம்.—ஏசாயா 65:16, 17-ஐ வாசியுங்கள்.
3. நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்?
3 ஒவ்வொரு நாளும் நாம் கஷ்டப்பட்டுதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தில் நாம் இன்னும் நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கலாம். (மத். 24:21) அதனால், நாம் தொடர்ந்து சகிப்புத்தன்மையைக் காட்டுவதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். “சகித்திருப்பதன் மூலம் உங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்வீர்கள்” என்று இயேசு சொன்னார். (லூக். 21:19) நம்மை மாதிரியே கஷ்டப்படுகிறவர்கள் எப்படியெல்லாம் சகிப்புத்தன்மையைக் காட்டுகிறார்கள் என்று தெரிந்துகொள்வதன் மூலம் நாமும் அந்தக் குணத்தை காட்டுவதற்குப் பழகிக்கொள்ளலாம்.
4. சகித்திருக்கிற விஷயத்தில் யெகோவாதான் தலைசிறந்த முன்மாதிரி என்று ஏன் சொல்லலாம்?
4 சகித்திருக்கிற விஷயத்தில் யெகோவாதான் தலைசிறந்த முன்மாதிரி. இதை நினைக்கும்போது ஒருவேளை உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், அவர் எதையெல்லாம் சகித்துக்கொண்டிருக்கிறார் என்று யோசித்துப் பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்பட மாட்டீர்கள். சாத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிற இந்த உலகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சினைதான். யெகோவா நினைத்தால் ஒரே நொடியில் இதற்கு எல்லாம் முடிவுகட்டிவிடுவார். ஆனால், அதைச் சரிசெய்யப்போகிற காலத்துக்காக அவர் காத்துக்கொண்டிருக்கிறார். ரோ. 9:22) அந்தக் காலம் வரும் வரைக்கும் அவரும் தொடர்ந்து சில விஷயங்களைச் சகித்துக்கொண்டுதான் இருக்கிறார். அப்படி அவர் சகித்துக்கொண்டிருக்கும் ஒன்பது விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
(யெகோவா எதையெல்லாம் சகித்துக்கொண்டிருக்கிறார்?
5. யெகோவாவின் பெயர்மீது எப்படிக் களங்கம் சுமத்தப்பட்டிருக்கிறது, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
5 தன்னுடைய பெயர்மேல் சுமத்தப்பட்ட களங்கத்தை யெகோவா சகித்துக்கொண்டிருக்கிறார். யெகோவாவுக்கு அவருடைய பெயர் ரொம்ப பிடிக்கும், ஒவ்வொருவரும் அதை மதிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (ஏசா. 42:8) ஆனால், கிட்டத்தட்ட 6,000 வருஷங்களாக அவருடைய பெயர்மீது களங்கம் சுமத்தப்பட்டிருக்கிறது. (சங். 74:10, 18, 23) அப்படி, முதன்முதலாக களங்கம் சுமத்தியவன் பிசாசு (பிசாசு என்றால் “இல்லாததையும் பொல்லாததையும் சொல்கிறவன்” என்று அர்த்தம்). ஏதேன் தோட்டத்தில்தான் அவன் அதைச் செய்தான். ஆதாமும் ஏவாளும் சந்தோஷமாக இருப்பதற்குத் தேவையான ஏதோவொன்றை யெகோவா கொடுக்காமல் இருக்கிறார் என்று அவர்மேல் குற்றம் சுமத்தினான். (ஆதி. 3:1-5) அன்றுமுதல் இன்றுவரை அவன் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறான். மனிதர்களுக்குத் தேவையானவற்றை யெகோவா கொடுக்காமல் இருக்கிறார் என்று சொல்கிறான். தன்னுடைய அப்பாவின் பெயர்மேல் சுமத்தப்பட்ட களங்கத்தை நினைத்து இயேசு ரொம்பவே கவலைப்பட்டார். அதனால்தான், “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்” என்று ஜெபம் செய்யச் சொல்லி தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார்.—மத். 6:9.
6. ஆட்சி செய்யும் உரிமை தனக்கு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக யெகோவா ஏன் இவ்வளவு காலத்தை அனுமதித்திருக்கிறார்?
6 தன்னுடைய உன்னத அரசாட்சிக்கு வந்த எதிர்ப்பை யெகோவா சகித்துக்கொண்டிருக்கிறார். பரலோகத்தையும் பூமியையும் ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது. அவர் ஆட்சி செய்யும் விதம்தான் சிறந்தது. (வெளி. 4:11) ஆனால், ஆட்சி செய்வதற்கு அவருக்கு உரிமை இல்லை என்று தேவதூதர்களையும் மனிதர்களையும் நினைக்க வைப்பதற்கு பிசாசு முயற்சி செய்திருக்கிறான். அவருக்கு அந்த உரிமை இருக்கிறதா இல்லையா என்று நிரூபிப்பதற்குக் கொஞ்சம் காலம் தேவைப்பட்டது. அந்தக் காலத்தை அனுமதித்ததால் கடவுளுடைய தயவு இல்லாமல் செயல்படும்போது, அது மோசமான விளைவுகளில்தான் போய் முடியும் என்பதை மனிதர்களால் பார்க்க முடிகிறது. (எரே. 10:23) கடவுள் இப்படிப் பொறுமையாக இருப்பதால், ஆட்சி செய்யும் உரிமை அவருக்கு மட்டும்தான் இருக்கிறது என்பது முழுமையாக நிரூபிக்கப்படும். அதற்குப் பின்பு, அந்தக் கேள்விக்கே இடம் இருக்காது. தன்னுடைய ஆட்சியில் மட்டும்தான் உண்மையான அமைதியும் சமாதானமும் கிடைக்கும் என்பதை யெகோவா நிரூபிக்கப்போகிறார். இப்படி, அவர் ஆட்சி செய்யும் விதம்தான் சரியானது என்பதை எல்லாருமே தெரிந்துகொள்ளப்போகிறார்கள்.
7. யெகோவாவுக்கு எதிராக யார் கலகம் செய்தார்கள், அதற்கு அவர் என்ன செய்யப்போகிறார்?
7 தன்னுடைய பிள்ளைகளில் சிலர் தனக்கு எதிராக கலகம் செய்ததை யெகோவா சகித்துக்கொண்டிருக்கிறார். தேவதூதர்களையும் மனிதர்களையும் எந்தக் குறையும் இல்லாமல் பரிபூரணமாக யெகோவா படைத்தார். ஆனால், சாத்தான் (சாத்தான் என்பதற்கு “எதிர்ப்பவன்” என்று அர்த்தம்) பரிபூரணமாக இருந்த ஆதாமையும் ஏவாளையும் யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் செய்ய வைத்தான். மற்ற தேவதூதர்களும் மனிதர்களும் அந்தக் கலகத்தில் சேர்ந்துவிட்டார்கள். (யூ. 6) அதற்குப் பின்பு, யெகோவாவின் சொந்த ஜனங்களாக இருந்த இஸ்ரவேல் மக்கள் அவரை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பொய் தெய்வங்களைக் கும்பிட்டார்கள். (ஏசா. 63:8, 10) அதனால், அவர்கள் தனக்கு துரோகம் செய்ததாக யெகோவா நினைத்தார். இவ்வளவு நடந்தும் யெகோவா அதை எல்லாம் சகித்துக்கொண்டார். இவை எல்லாவற்றுக்கும் முடிவுகட்டும் வரை அவர் தொடர்ந்து சகித்துக்கொண்டுதான் இருப்பார். இப்படி முடிவுகட்டிய பின்பு அவரும் சரி, அவருடைய ஊழியர்களும் சரி, எந்தவொரு மோசமான விஷயத்தையும் சகித்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
8-9. யெகோவாவைப் பற்றி சாத்தான் எப்படி எல்லாம் பொய் சொல்லியிருக்கிறான், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
8 பிசாசு ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிற பொய்களை யெகோவா சகித்துக்கொண்டிருக்கிறார். சுயநலத்துக்காகத்தான் யோபு யெகோவாவை வணங்குகிறார் என்று அவன் சொன்னான். சொல்லப்போனால், அவரை உண்மையாக வணங்கிய ஊழியர்கள் எல்லாரையும் பற்றி அவன் அப்படித்தான் சொன்னான். (யோபு 1:8-11; 2:3-5) இன்று வரைக்கும் அவன் அதே குற்றச்சாட்டைதான் சுமத்திக்கொண்டிருக்கிறான். (வெளி. 12:10) அதனால், நமக்கு வருகிற சோதனைகளை நாம் சகித்திருந்தால்... கடைசி வரைக்கும் உண்மையாக இருந்தால்... அவன் சொன்னது எல்லாம் பொய் என்பதை நம்மால் நிரூபிக்க முடியும். அப்படிச் செய்தால், யோபுவின் சகிப்புத்தன்மைக்கு அவர் எப்படிப் பலன் கொடுத்தாரோ அதே மாதிரி நமக்கும் பலன் கொடுப்பார்.—யாக். 5:11.
9 யெகோவா கொடூரமானவர் என்றும் நாம் படுகிற கஷ்டங்களுக்கு எல்லாம் அவர்தான் காரணம் என்றும் பொய் மதத் தலைவர்கள் வழியாக சாத்தான் சொல்கிறான். கொடுமை என்னவென்றால், ஒரு குழந்தை இறந்துவிட்டால், ஒரு தேவதூதர் வேண்டும் என்பதற்காக கடவுள்தான் அந்தக் குழந்தையை பரலோகத்துக்கு எடுத்துக்கொண்டார் என்று சிலர் சொல்கிறார்கள். இது எவ்வளவு மோசமான ஒரு பொய்! இப்படிச் சொல்வதன் மூலம் கடவுள்மேல் எவ்வளவு அபாண்டமாகப் பழிபோடுகிறார்கள். ஆனால், இதையெல்லாம் நாம் நம்புவதில்லை. நமக்குத் தெரிந்தவர்கள் யாருக்காவது மோசமான வியாதி வந்துவிட்டாலோ, அவர்கள் இறந்துவிட்டாலோ கடவுள்மேல் பழிபோடுவது இல்லை. அதற்குப் பதிலாக, இந்த எல்லாவற்றையும் அவர் கண்டிப்பாகச் சரி செய்வார் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். யெகோவா அன்பான கடவுள் என்பதை மற்றவர்களிடமும் சொல்கிறோம். இப்படி எல்லாம் செய்யும்போது, தன்னைப் பழித்துப் பேசுகிறவனுக்கு யெகோவாவால் பதிலடி கொடுக்க முடியும்.—10. யெகோவாவைப் பற்றி சங்கீதம் 22:23, 24 என்ன சொல்கிறது?
10 தனக்கு ரொம்ப பிடித்த ஊழியர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து யெகோவா சகித்துக்கொண்டிருக்கிறார். யெகோவா கருணை உள்ளம் படைத்த கடவுள். துன்புறுத்தலாலோ நோயாலோ நம்முடைய குறைபாடுகளாலோ நாம் கஷ்டப்படும்போது அவரும் வேதனைப்படுகிறார். (சங்கீதம் 22:23, 24-ஐ வாசியுங்கள்.) நாம் படுகிற வேதனைகள் அவருக்கு நன்றாகத் தெரியும். அதற்கு எல்லாம் முடிவுகட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார், முடிவும் கட்டுவார். (யாத்திராகமம் 3:7, 8-யும் ஏசாயா 63:9-யும் ஒப்பிடுங்கள்.) ரொம்ப சீக்கிரத்தில் நம்முடைய “கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”—வெளி. 21:4.
11. இறந்துபோன தன்னுடைய ஊழியர்களை நினைக்கும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கிறது?
11 இறந்துபோன தன்னுடைய நண்பர்களின் பிரிவை யெகோவா சகித்துக்கொண்டிருக்கிறார். யெகோவாவுக்கு உண்மையாக இருந்த ஆண்கள், பெண்கள் என்று நிறைய பேர் இறந்துபோயிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பார்க்க யெகோவா ஏங்குகிறார். (யோபு 14:15) தன்னுடைய நண்பர் ஆபிரகாமைப் பிரிந்தது அவருக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்! (யாக். 2:23) மோசேயைப் பிரிந்தபோதும் அவர் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார். அவருடன் அவர் “நேருக்கு நேராகப்” பேசினாரே! (யாத். 33:11) தாவீதின் பாடல்களையும் மற்ற சங்கீதக்காரர்களின் அழகான பாடல்களையும் கேட்க அவர் எவ்வளவு ஆசையாக இருப்பார்! (சங். 104:33) இவர்கள் எல்லாரும் இறந்து போயிருந்தாலும் யெகோவா இவர்களை மறக்கவே இல்லை. (ஏசா. 49:15) இவர்களைப் பற்றிய ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களும் அவருக்குத் தெரியும். சொல்லப்போனால், ‘[அவரைப்] பொறுத்தவரை, இவர்கள் எல்லாரும் உயிருள்ளவர்களாகவே இருப்பதாக’ பைபிள் சொல்கிறது. (லூக். 20:38) ஒருநாள், அவர்களை எல்லாம் மறுபடியும் அவர் உயிரோடு கொண்டு வருவார். அவர்களுடைய உருக்கமான ஜெபங்களைக் கேட்பார், அவர்களுடைய வழிபாட்டை ஏற்றுக்கொள்வார். உங்களுக்குப் பிடித்தவர்கள் யாராவது இறந்து போயிருக்கிறார்களா? அப்படி என்றால், இதை எல்லாம் தெரிந்துகொள்வது ரொம்ப ஆறுதலாக இருக்கும்.
12. மோசமான இந்தக் கடைசி நாட்களில் எதையெல்லாம் பார்த்து யெகோவா வேதனைப்படுகிறார்?
12 கெட்டவர்கள் மற்றவர்களைக் கொடுமைப்படுத்துவதை யெகோவா சகித்துக்கொண்டிருக்கிறார். முதன்முதலில் ஏதேன் தோட்டத்தில் கலகம் ஆரம்பித்தபோதே நிலைமைகள் இன்னும் மோசமாகும் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். இன்றைக்கு உலகத்தில் இருக்கிற அநியாய அக்கிரமம், அநீதி, வன்முறை எல்லாவற்றையும் யெகோவா வெறுக்கிறார். முக்கியமாக, பலவீனமானவர்களையும் தங்களையே பாதுகாக்க முடியாத நிலைமையில் இருக்கிறவர்களையும் பார்த்து அவர் அனுதாபப்படுகிறார். உதாரணத்துக்கு, அனாதைகளையும் விதவைகளையும் பார்த்து அவர் அனுதாபப்படுகிறார். (சக. 7:9, 10) தன்னுடைய ஊழியர்கள் கொடுமைகளை அனுபவிக்கும்போதும், அவர்கள் சிறையில் தள்ளப்படும்போதும் யெகோவா வேதனைப்படுகிறார். அவர் மாதிரியே சகித்துக்கொண்டிருக்கிற உங்களை அவர் ரொம்ப நேசிக்கிறார். இதில் உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம்.
13. மனிதனின் வாழ்க்கை எப்படிக் கீழ்த்தரமாக மாறியிருக்கிறது, யெகோவா என்ன செய்யப்போகிறார்?
13 மனிதர்களின் கீழ்த்தரமான வாழ்க்கையை யெகோவா சகித்துக்கொண்டிருக்கிறார். மனிதர்களைத் தன்னுடைய சாயலில் யெகோவா படைத்தார். ஆனால், அவர்களுடைய வாழ்க்கை கீழ்த்தரமாக ஆகவேண்டும் என்று சாத்தான் ஆசைப்படுகிறான். நோவாவின் நாட்களில் மனிதர்கள் “மிக மோசமாக நடந்துகொண்டதை” பார்த்தபோது “யெகோவா பூமியில் படைத்த மனிதர்களை நினைத்து வருத்தப்பட்டார், உள்ளத்தில் மிகவும் வேதனைப்பட்டார்.” (ஆதி. 6:5, 6, 11) இன்றைக்கு நிலைமை மாறி இருக்கிறதா? இல்லை! இன்றைக்கு உலகத்தில் எங்கே பார்த்தாலும் ஒழுக்கக்கேடான செயல்கள் நிறைந்திருக்கின்றன. ஏன், ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும்கூட ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுகிறார்கள்! (எபே. 4:18, 19) இதைப் பார்க்கும்போது பிசாசுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! யெகோவாவின் ஊழியர்கள் இந்தப் பாவத்தில் விழுந்துவிடும்போது அவனுக்கு ரொம்பவே கொண்டாட்டமாக இருக்கும்! ஆனால், யெகோவாவின் பொறுமைக்கு எல்லை இருக்கிறது. ஒழுக்கக்கேடான செயல்கள் எல்லாவற்றையும் யெகோவா எந்த அளவுக்கு வெறுக்கிறார் என்பதைச் சீக்கிரத்தில் காட்டப்போகிறார்.
14. யெகோவாவின் படைப்புகளை மனிதன் என்ன செய்துகொண்டிருக்கிறான்?
14 பூமியை மனிதன் நாசம் பண்ணிக்கொண்டிருப்பதை யெகோவா சகித்துக்கொண்டிருக்கிறார். ‘மனிதனை மனிதன் அடக்கி ஆளுவது’ மட்டும் இல்லாமல் பூமியையும் அவன் நாசமாக்கிக் கொண்டிருக்கிறான். யெகோவா அவனுடைய பொறுப்பில் விட்டிருக்கிற மிருகங்களையும் அவன் சரியாகக் கவனித்துக்கொள்வது இல்லை. (பிர. 8:9; ஆதி. 1:28) இன்னும் கொஞ்சம் வருஷத்துக்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தாவர வகைகளும் மிருக இனமும் அழிந்துவிடும் என்று சில வல்லுநர்கள் சொல்கிறார்கள். இயற்கை செத்துமடிந்து கொண்டிருப்பதாகச் சிலர் சொல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், சந்தோஷமான விஷயம் என்னவென்றால், ‘பூமியை நாசமாக்குகிறவர்களை நாசமாக்கப்’ போவதாக யெகோவா சொல்லி இருக்கிறார். அதற்குப் பின்பு, இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறப் போகிறது.—வெளி. 11:18; ஏசா. 35:1.
யெகோவாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
15-16. நாம் ஏன் சகித்திருக்கிறோம்? ஓர் உதாரணம் சொல்லுங்கள்.
15 ஆயிரக்கணக்கான வருஷங்களாக யெகோவா எதையெல்லாம் சகித்துக்கொண்டிருக்கிறார் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். (“ யெகோவா எதையெல்லாம் சகித்துக்கொண்டிருக்கிறார்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.) அவர் நினைத்தார் என்றால் ஒரே நொடியில் இந்த எல்லாவற்றுக்கும் முடிவுகட்ட முடியும். ஆனால், அவர் பொறுமையாக இருப்பதால் நமக்குதான் நன்மை! இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்கப்போகிற விஷயம் தெரிகிறது. ஆனால், அந்தக் குழந்தை பயங்கர உடல்நல பிரச்சினைகளோடுதான் பிறக்கும் என்றும், ரொம்ப நாள் உயிரோடு இருக்காது என்றும் அவர்களுக்குத் தெரிய வருகிறது. அந்தக் குழந்தை பிறந்த பின்பு, அதைக் கவனிப்பதற்கு நிறைய நேரமும் சக்தியும் தேவைப்படும் என்பது அவர்களுக்குப் புரிகிறது. ஆனாலும், அந்தக் குழந்தையை அவர்கள் பெற்றெடுப்பார்கள். அந்தக் குழந்தைமேல் அன்பு இருப்பதால் அதைக் கவனித்துக்கொள்வதில் என்ன கஷ்டம் வந்தாலும் சகித்துக்கொள்வார்கள். அதைச் சந்தோஷமாக வைத்துக்கொள்வதற்கு அவர்களால் முடிந்ததை எல்லாம் செய்வார்கள்.
மத். 24:36) அவர்மேல் நமக்கு அன்பு இருக்கிறது. (1 யோ. 4:19) அதனால்தான், அவருடன் சேர்ந்து சகித்திருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம்.
16 ஆதாமின் சந்ததியில் வந்த நாம் எல்லாருமே அந்தக் குழந்தை மாதிரி இருக்கிறோம். யெகோவா அந்தத் தம்பதி மாதிரி இருக்கிறார். ஆனால், அந்தத் தம்பதிக்கும் யெகோவாவுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அந்தத் தம்பதியால் அவர்களுடைய பிரச்சினையைச் சரிசெய்ய முடியாது. ஆனால், யெகோவாவால் நம்முடைய பிரச்சினையைச் சரிசெய்ய முடியும். அப்படிச் செய்வதற்கு அவர் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். (17. எபிரெயர் 12:2, 3-ல் இயேசுவைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிற விஷயம் தொடர்ந்து சகித்திருப்பதற்கு நமக்கு எப்படி உதவி செய்யும்?
17 சகித்திருக்கிற விஷயத்தில் யெகோவாதான் தலைசிறந்த முன்மாதிரி. இயேசுவும் தன்னுடைய அப்பா மாதிரியே சகித்திருந்தார். அவர் ஒரு மனிதனாக இந்தப் பூமியில் இருந்தபோது, கேவலமான பேச்சுகளையும் அவமானத்தையும் மரக் கம்பத்தில் சித்திரவதைகளையும் சகித்துக்கொண்டார். (எபிரெயர் 12:2, 3-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் முன்மாதிரிதான் சகித்திருப்பதற்கான பலத்தை இயேசுவுக்குக் கொடுத்தது. அதே முன்மாதிரி நம்மையும் பலப்படுத்தும்.
18. யெகோவா பொறுமையாக இருப்பதால் நிறைய நன்மைகள் கிடைத்திருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள 2 பேதுரு 3:9 எப்படி உதவுகிறது?
18 இரண்டு பேதுரு 3:9-ஐ வாசியுங்கள். இந்த உலகத்தில் இருக்கிற அநியாய அக்கிரமங்களுக்கு எல்லாம் எப்போது முடிவுகட்ட வேண்டுமென்று யெகோவாவுக்குத் தெரியும். அவர் பொறுமையாக இருப்பதால் திரள்கூட்டமான மக்கள், அதாவது லட்சக்கணக்கான ஜனங்கள், அவரை வணங்க முடிகிறது, புகழ முடிகிறது. அவர் இவ்வளவு பொறுமையாக இருந்ததால்தான் இந்த லட்சக்கணக்கான ஜனங்கள் இந்தப் பூமியில் பிறந்து, அவர்மேல் அன்பு வைத்து அவருக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் எதிர்காலத்தில் யெகோவா ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறபோது, அவர் இவ்வளவு காலம் பொறுமையாக இருப்பது எவ்வளவு சரியானது என்பது தெரிய வரும்!
19. நாம் என்ன செய்வதற்கு உறுதியாக இருக்க வேண்டும், நமக்கு என்ன பலன் கிடைக்கும்?
19 சந்தோஷத்தோடு சகித்திருப்பது எப்படி என்பதை யெகோவாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். சாத்தான் என்னதான் அவருக்கு மனவேதனையைக் கொடுத்தாலும், அவர் எப்போதுமே ‘சந்தோஷமுள்ள கடவுளாக’ இருக்கிறார். (1 தீ. 1:11) யெகோவா அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துகிற வரைக்கும்... அவருடைய அரசாட்சிதான் சரியானது என்பதை நிரூபிக்கிற வரைக்கும்... அநியாய அக்கிரமத்துக்கு எல்லாம் முடிவு கட்டுகிற வரைக்கும்... நம்முடைய பிரச்சினைகளை எல்லாம் நிரந்தரமாகத் தீர்த்து வைக்கிற வரைக்கும்... நாமும் பொறுமையோடு இருந்தால் தொடர்ந்து சந்தோஷமாக இருக்க முடியும். யெகோவா எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். அதனால், நாமும் தொடர்ந்து சகித்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கலாம். அப்படிச் செய்தால், யாக்கோபு 1:12-ல் சொல்லியிருக்கிற வார்த்தைகள் நம்முடைய விஷயத்திலும் உண்மையாகும். அந்த வசனம் இப்படிச் சொல்கிறது: “சோதனைகளைச் சகித்துக்கொண்டே இருக்கும் மனிதன் சந்தோஷமானவன்; ஏனென்றால், யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்படும்போது, வாழ்வு என்ற கிரீடம் அவனுக்குக் கிடைக்கும். தன்னிடம் தொடர்ந்து அன்பு காட்டுகிறவர்களுக்கு அதைத் தருவதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்.”
பாட்டு 139 பூஞ்சோலையில் வாழ்க்கை
^ பாரா. 5 நாம் எல்லாருமே ஏதோ ஒரு பிரச்சினையோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். அதில் நிறைய பிரச்சினைகளுக்கு இப்போதைக்குத் தீர்வில்லை. அவற்றை எல்லாம் நாம் சகித்துதான் ஆக வேண்டும். ஆனால் நாம் மட்டுமல்ல, யெகோவாவும் நிறைய விஷயங்களைச் சகித்துக்கொண்டுதான் இருக்கிறார். அதில் ஒன்பது விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். அவர் சகிப்புத்தன்மை காட்டுவதால் என்னென்ன நன்மைகள் கிடைத்திருக்கின்றன என்றும் சகிப்புத்தன்மை காட்டும் விஷயத்தில் அவரிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.