வாசகர் கேட்கும் கேள்விகள்
எந்த அர்த்தத்தில், ‘மூன்றாம் பரலோகத்துக்கும்’ ‘பூஞ்சோலைக்குள்ளும்’ பவுல் எடுத்துக்கொள்ளப்பட்டார்?—2 கொ. 12:2-4.
ஒரு மனிதன் ‘மூன்றாம் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை’ பற்றி, 2 கொரிந்தியர் 12:2, 3-ல் பவுல் சொன்னார். யார் அவர்? கொரிந்திய சபையாருக்கு எழுதியபோது, கடவுள்தான் தன்னை அப்போஸ்தலனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை பவுல் வலியுறுத்தினார். (2 கொ. 11:5, 23) பிறகு, “எஜமானிடமிருந்து வந்த அற்புத தரிசனங்களையும் செய்திகளையும்” பற்றிச் சொன்னார். மற்ற சகோதரர்களைப் பற்றி இங்கே பவுல் சொல்லவில்லை. அதனால், அற்புத தரிசனங்களையும் செய்திகளையும் பெற்ற மனிதன் என்று சொன்னபோது, தன்னைப் பற்றித்தான் அவர் குறிப்பிட்டார் என்று சொல்வது சரியாக இருக்கிறது.—2 கொ. 12:1, 5.
அதனால், ‘மூன்றாம் பரலோகத்துக்கும்,’ ‘பூஞ்சோலைக்குள்ளும்’ எடுத்துக்கொள்ளப்பட்ட அந்த மனிதன் பவுல்தான்! (2 கொ. 12:2-4) ‘செய்திகள்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்; இது, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை வெளிப்படுத்துவதற்காகக் குறிப்பிடப்பட்டதாகத் தெரிகிறது.
பவுல் பார்த்த ‘மூன்றாம் பரலோகம்’ எதைக் குறிக்கிறது?
பைபிளில், ‘பரலோகம்,’ அதாவது வானம், என்ற வார்த்தை சொல்லர்த்தமான வானத்தைக் குறிக்கலாம். (ஆதி. 11:4; 27:28; மத். 6:26) ஆனால், அதற்கு மற்ற அர்த்தங்களும் இருக்கின்றன. சிலசமயங்களில், மனித ஆட்சியை அது குறிக்கிறது. (தானி. 4:20-22) அல்லது தெய்வீக ஆட்சியைக் குறிக்கலாம்; உதாரணத்துக்கு, கடவுளுடைய அரசாங்கத்தின் மூலம் நடக்கும் தெய்வீக ஆட்சியைக் குறிக்கலாம்.—வெளி. 21:1.
அப்படியென்றால், தான் ‘மூன்றாம் பரலோகத்தை’ பார்த்ததாகப் பவுல் சொன்னதற்கு என்ன அர்த்தம்? சிலசமயங்களில், ஒரு விஷயத்தை வலியுறுத்துவதற்காக அல்லது அதன் வலிமையைக் கூட்டுவதற்காக, பைபிள் அதைத் திரும்பத் திரும்ப மூன்று தடவை சொல்கிறது. (ஏசா. 6:3; எசே. 21:27; வெளி. 4:8) ‘மூன்றாம் பரலோகத்தை’ பற்றிப் பவுல் பேசியபோது, எல்லாவற்றையும்விட உயர்ந்த ஓர் ஆட்சியைப் பற்றிப் பேசினார். அதாவது, இயேசு கிறிஸ்துவாலும், அவரோடு சேர்ந்து ஆட்சி செய்யப்போகிற 1,44,000 பேராலும் ஆளப்படுகிற மேசியானிய அரசாங்கத்தைப் பற்றி அவர் பேசினார். (வேதாகமங்களின் பேரில் உட்பார்வை—ஆங்கிலம், தொகுதி 1, பக். 1059, 1062-ஐப் பாருங்கள்.) அப்போஸ்தலன் பேதுரு, கடவுள் வாக்குக் கொடுத்த ‘புதிய வானத்துக்காக’ நாம் காத்திருக்கிறோம் என்று எழுதியபோது, இந்த அரசாங்கத்தைப் பற்றித்தான் எழுதினார்.—2 பே. 3:13.
‘பூஞ்சோலை’ என்று பவுல் சொன்னதற்கு என்ன அர்த்தம்?
இந்த வார்த்தைக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் இருக்கலாம். (1) குடியிருப்பதற்காக மனிதனுக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட இடத்தை மனதில் வைத்துப் பார்க்கும்போது, ‘பூஞ்சோலை’ என்பது, எதிர்காலத்தில் இந்தப் பூமியில் வரப்போகிற பூஞ்சோலையைக் குறிக்கலாம். (2) புதிய உலகத்தில் கடவுளுடைய மக்கள் அனுபவிக்கப்போகிற ஓர் அருமையான ஆன்மீகச் சூழலைக் குறிக்கலாம். (3) வெளிப்படுத்துதல் 2:7-ல் சொல்லப்பட்டிருக்கிறபடி, பரலோகத்தில் இருக்கிற அருமையான சூழலை, அதாவது ‘கடவுளுடைய பூஞ்சோலையை,’ குறிக்கலாம்.—காவற்கோபுரம், ஜூலை 2015, பக். 8 பாரா 8-ஐப் பாருங்கள்.
2 கொரிந்தியர் 12:4-ல், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பவுல் விளக்கியபோது, இந்த மூன்று விஷயங்களும் அவருடைய மனதில் இருந்திருக்கும் என்று சொல்லலாம்.
சுருக்கம்:
2 கொரிந்தியர் 12:2-ல் சொல்லப்பட்டிருக்கிற ‘மூன்றாம் பரலோகம்,’ ‘புதிய வானத்தை,’ அதாவது இயேசு கிறிஸ்துவாலும் 1,44,000 பேராலும் ஆளப்படுகிற மேசியானிய அரசாங்கத்தை, குறிப்பதாகத் தெரிகிறது.—2 பே. 3:13.
அந்த அரசாங்கம் எல்லாவற்றையும்விட உயர்ந்ததாக இருப்பதால், அது ‘மூன்றாம் பரலோகம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பவுல் “எடுத்துக்கொள்ளப்பட்ட” அந்த ‘பூஞ்சோலை,’ வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கலாம்: (1) இந்தப் பூமியில் வரப்போகும் பூஞ்சோலையைக் குறிக்கலாம். (2) இப்போது அனுபவிக்கிற ஆன்மீகப் பூஞ்சோலையைவிட மிக உயர்ந்ததை, அதாவது புதிய உலகத்தில் அனுபவிக்கப்போகிற ஆன்மீகப் பூஞ்சோலையை, குறிக்கலாம். (3) இந்தப் பூமியில் வரப்போகிற பூஞ்சோலையோடு ஒன்றிணையப்போகிற பரலோகத்திலிருக்கும் ‘கடவுளுடைய பூஞ்சோலையை’ குறிக்கலாம்.
புதிய உலகம் என்பது, புதிய வானமும் புதிய பூமியும் ஒன்றிணைந்ததாக இருக்கும். பரலோக அரசாங்கமும் பூஞ்சோலைப் பூமியில் யெகோவாவுக்குச் சேவை செய்கிற மனிதகுலமும் ஒன்றிணைந்த ஒரு புதிய ஏற்பாடாக அது இருக்கும்.