படிப்புக் கட்டுரை 51
எப்போதும் “இவர் சொல்வதைக் கேளுங்கள்”
“இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்; இவர் சொல்வதைக் கேளுங்கள்.”—மத். 17:5.
பாட்டு 54 ‘இதுதான் வழி’
இந்தக் கட்டுரையில்... *
1-2. (அ) இயேசுவின் மூன்று அப்போஸ்தலர்களிடம் கடவுள் என்ன சொன்னார், அதன்படி அவர்கள் செய்தார்களா? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
கி.பி. 32-ஆம் வருஷம். பஸ்கா பண்டிகை முடிந்த பின்பு, அப்போஸ்தலர்களான பேதுருவும் யாக்கோபும் யோவானும் ஒரு மலை உச்சியில் இருந்தார்கள். அநேகமாக, அது எர்மோன் மலையின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். அப்போது, ஒரு அற்புதமான தரிசனத்தைப் பார்த்தார்கள். அதாவது, இயேசுவின் தோற்றம் மாறியதைப் பார்த்தார்கள். “அவருடைய முகம் சூரியனைப் போல் பிரகாசித்தது, அவருடைய மேலங்கி ஒளியைப் போல் பளிச்சிட்டது.” (மத். 17:1-4) அந்தத் தரிசனத்தின் முடிவில், கடவுளுடைய குரலைக் கேட்டார்கள். “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்; இவர் சொல்வதைக் கேளுங்கள்” என்று கடவுள் சொன்னார். (மத். 17:5) அதற்குப் பின்பு, இந்த மூன்று அப்போஸ்தலர்களும் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் இயேசு சொன்னதைக் கேட்டு நடந்தார்கள். நாமும் அவர்களைப் போலவே நடக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.
2 என்னென்ன விஷயங்களைச் செய்வதை நிறுத்தினால் நாம் இயேசுவின் குரலைக் கேட்கிறோம் என்று போன கட்டுரையில் பார்த்தோம். இயேசு சொன்ன என்ன இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
“இடுக்கமான வாசல் வழியாகப் போங்கள்”
3. நாம் என்ன செய்ய வேண்டுமென்று மத்தேயு 7:13, 14 சொல்கிறது?
3 மத்தேயு 7:13, 14-ஐ வாசியுங்கள். இரண்டு பாதைகளைப் பற்றி இயேசு சொன்னார். ஒன்று, “விசாலமான” பாதை, இன்னொன்று, “குறுகலான” பாதை. மூன்றாவதாக ஒரு பாதை கிடையாது. இந்த இரண்டு பாதைகளில் நாம் எதில் போகப்போகிறோம் என்று முடிவெடுக்க வேண்டும். இது ஒரு முக்கியமான முடிவு. ஏனென்றால், இந்த இரண்டு பாதைகளில் ஒன்று மட்டும்தான் நம்மை முடிவில்லாத வாழ்க்கைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
4. “விசாலமான” பாதையைப் பற்றி விளக்குங்கள்.
4 இந்த இரண்டு பாதைகளுக்கும் இருக்கிற வித்தியாசங்களை நாம் மனதில் வைக்க வேண்டும். “விசாலமான” பாதையில் நிறைய பேர் போகிறார்கள். ஏனென்றால், அதில் போவது சுலபம். வருத்தமான விஷயம் என்னவென்றால், நிறைய பேர் அந்தப் பாதையிலேயே தொடர்ந்து போக நினைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அதில் போய்க்கொண்டிருப்பவர்களைப் போலவே நடக்க வேண்டுமென்றும் ஆசைப்படுகிறார்கள். ஆனால், அந்தப் பாதையில் போகும்படி நம்மைத் தூண்டுவது பிசாசாகிய சாத்தான்தான் என்றும் அது அழிவில்தான் போய் முடியும் என்றும் அவர்களுக்குத் தெரிவதில்லை.—5. “குறுகலான” பாதையைக் கண்டுபிடிப்பதற்கும் அதில் தொடர்ந்து நடப்பதற்கும் சிலர் எப்படியெல்லாம் முயற்சி எடுத்திருக்கிறார்கள்?
5 இப்போது, “குறுகலான” பாதையைப் பற்றிப் பார்க்கலாம். கொஞ்சம் பேர்தான் அதைக் கண்டுபிடிப்பார்கள் என்று இயேசு சொன்னார். அதற்கான காரணத்தை அவர் அடுத்த வசனத்திலேயே சொன்னார். அதாவது, போலித் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொன்னார். (மத். 7:15) இன்றைக்கு ஆயிரக்கணக்கான மதங்கள் இருப்பதாகவும், அதில் பெரும்பாலான மதங்கள் உண்மைகளைச் சொல்லிக் கொடுப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். இவ்வளவு மதங்கள் இருப்பதைப் பார்த்து லட்சக்கணக்கான ஜனங்கள் விரக்தியடைந்து, குழம்பிப்போகிறார்கள். அதனால், முடிவில்லாத வாழ்க்கைக்குக் கொண்டுபோகிற ஒரு பாதை இருக்கிறதா என்று கண்டுபிடிக்க அவர்கள் முயற்சிகூட எடுப்பதில்லை. ஆனால், அதைக் கண்டுபிடிக்க முடியும்! “நீங்கள் எப்போதும் என் வார்த்தைகளைக் கடைப்பிடித்தால் நிஜமாகவே என் சீஷர்களாக இருப்பீர்கள்; சத்தியத்தைத் தெரிந்துகொள்வீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொன்னார். (யோவா. 8:31, 32) மற்றவர்களைப் போல் இல்லாமல், நீங்கள் சத்தியத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தீர்கள். அது பாராட்ட வேண்டிய விஷயம். அதற்காக, பைபிளை ஆழமாகப் படிக்க ஆரம்பித்தீர்கள். அப்போது, கடவுள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்றும் இயேசு என்ன சொல்லியிருக்கிறார் என்றும் தெரிந்துகொண்டீர்கள். உதாரணத்துக்கு, பொய் மத போதனைகளை ஒதுக்கித்தள்ள வேண்டுமென்றும், அதிலிருந்து வந்த பழக்கவழக்கங்களை நிறுத்த வேண்டுமென்றும் பொய் மத பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது என்றும் யெகோவா எதிர்பார்க்கிறார் என்று தெரிந்துகொண்டீர்கள். நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்களோ அதன்படி செய்வது அவ்வளவு சுலபமில்லை என்பதையும் தெரிந்துகொண்டீர்கள். (மத். 10:34-36) தேவையான மாற்றங்களைச் செய்வது உங்களுக்குக் கஷ்டமாக இருந்திருக்கலாம். ஆனாலும், யெகோவாமேல் அன்பு வைத்ததால்... அவரைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டதால்... நீங்கள் தொடர்ந்து மாற்றங்கள் செய்தீர்கள். இதைப் பார்த்து யெகோவாவின் மனம் எவ்வளவு சந்தோஷப்பட்டிருக்கும்!—நீதி. 27:11.
குறுகலான பாதையில் தொடர்ந்து நடங்கள்
6. சங்கீதம் 119:9, 10, 45, 133 சொல்கிறபடி, குறுகலான பாதையில் தொடர்ந்து நடக்க எது நமக்கு உதவி செய்யும்?
6 முடிவில்லாத வாழ்வுக்குக் கொண்டு போகிற குறுகலான பாதையில் நாம் அடியெடுத்து வைத்த பின்பு தொடர்ந்து அதில் நடக்க வேண்டும். அதற்கு எது உதவும்? இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். நீங்கள் மலைப்பாதையில் போய்க் கொண்டிருக்கும்போது பாதையின் விளிம்பில் தடுப்பு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். வண்டியை ஓட்டுபவருக்கும் வண்டிக்கும் எந்த ஆபத்தும் வராமல் அது தடுக்கிறது. வண்டி ஓட்டுபவர் பாதையின் விளிம்புவரை வந்துவிடாமல் இருப்பதற்கும், ஒருவேளை விளிம்பைத் தாண்டிவிடாமல் இருப்பதற்கும் அது உதவுகிறது. ‘எதுக்குத்தான் இப்படி தடுப்பு போட்டிருக்காங்களோ?’ என்று வண்டி ஓட்டுபவர்கள் யாரும் குறை சொல்ல மாட்டார்கள். அந்தத் தடுப்பைப் போல்தான் பைபிளில் இருக்கிற சட்டங்களும் இருக்கின்றன. முடிவில்லாத வாழ்வுக்கு நம்மைக் கொண்டுபோகிற பாதையில் தொடர்ந்து நடக்க இந்தச் சட்டங்கள் நமக்கு உதவி செய்கின்றன.—சங்கீதம் 119:9, 10, 45, 133-ஐ வாசியுங்கள்.
7. குறுகலான பாதையை இளைஞர்கள் எப்படிப் பார்க்க வேண்டும்?
7 இளைஞர்களே, யெகோவாவின் சட்டங்கள் உங்களை அளவுக்கு அதிகமாக கட்டுப்படுத்துவதாக நினைக்கிறீர்களா? நீங்கள் அப்படி நினைக்க வேண்டும் என்பதுதான் சாத்தானுடைய ஆசை. விசாலமான பாதையில் போகிறவர்கள் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கிறார்கள் என்றும் நீங்கள் எதையோ இழந்துவிட்டீர்கள் என்றும் அவன் உங்களை நினைக்க வைக்கிறான். கூடப் படிக்கிறவர்களைப் போலவும் இன்டர்நெட்டில் நீங்கள் பார்க்கிற ஆட்களைப் போலவும் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்று அவன் உங்களை நினைக்க வைக்கிறான். வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதற்கு யெகோவாவின் சட்டங்கள் தடையாக * ஆனால், தயவுசெய்து இதை மறந்துவிடாதீர்கள்: விசாலமான பாதையில் போகிறவர்களுக்கு அழிவு காத்திருக்கிறது என்பதை அவன் அவர்களிடமிருந்து மறைத்துவிடுகிறான். ஆனால், முடிவில்லாத பாதையில் போகிறவர்களுக்கு ஏராளமான ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன என்று யெகோவா உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.—சங். 37:29; ஏசா. 35:5, 6; 65:21-23.
இருக்கின்றன என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய விருப்பம்.8. ஜோசப்பிடமிருந்து இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
8 ஜோசப் என்ற இளம் சகோதரனுக்கு என்ன நடந்தது என்று இப்போது பார்க்கலாம். * செக்ஸ் வைத்துக்கொள்ளச் சொல்லி கூடப்படித்தவர்கள் அவனை வற்புறுத்தினார்கள். ஆனால், தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்றும் பைபிள் சொல்கிறபடி ஒழுக்கமாக வாழ விரும்புவதாகவும் அவன் சொல்லியிருக்கிறான். ஆனால், அவன் கூடப்படிக்கும் மாணவிகள் அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் இன்னும் அதிகமாக அவனை கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் ஜோசப் விட்டுக்கொடுக்கவே இல்லை. இது தவிர, இன்னொரு பிரச்சினையும் அவனுக்கு வந்தது. அதைப் பற்றி அவன் இப்படிச் சொல்கிறான்: “உயர்கல்வி படிக்கச் சொல்லி ஆசிரியர்கள் என்னை கட்டாயப்படுத்துனாங்க. அப்பதான் நான் மதிப்பு மரியாதையோட வாழ முடியும்னு சொன்னாங்க. அப்படி படிக்கலன்னா நான் வாழ்க்கையில முன்னேற முடியாதுன்னு சொன்னாங்க.” இந்தப் பிரச்சினையை ஜோசப் எப்படிச் சமாளித்தான்? “சபையில இருக்கிறவங்ககூட நான் நெருக்கமா பழக ஆரம்பிச்சேன். அவங்க என்னோட குடும்பம் போல ஆயிட்டாங்க. பைபிளையும் இன்னும் நல்லா படிக்க ஆரம்பிச்சேன். எந்த அளவுக்கு ஆழமா படிச்சேனோ அந்த அளவுக்கு இதுதான் சத்தியங்கறது என் மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு. அதனால யெகோவாவுக்கு சேவை செய்யணும்னு முடிவு செஞ்சேன்” என்று அவன் சொல்கிறான்.
9. குறுகலான பாதையில் தொடர்ந்து நடக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
9 வாழ்வுக்கான பாதையை விட்டு நம்மை விலகவைக்க சாத்தான் விரும்புகிறான். நிறைய பேரைப் போல ‘அழிவுக்குப் போகும்’ அகலமான பாதையில் நாமும் போக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். (மத். 7:13) ஆனால், எப்போதுமே இயேசுவின் குரலைக் கேட்டு நடந்தால்... குறுகலான பாதை நமக்குப் பாதுகாப்பானது என்பதை மனதில் வைத்திருந்தால்... அந்தப் பாதையில் நம்மால் தொடர்ந்து நடக்க முடியும். இதுவரை, இயேசு செய்யச் சொன்ன ஒரு விஷயத்தைப் பற்றிப் பார்த்தோம். இப்போது அவர் சொன்ன இன்னொரு விஷயத்தைப் பற்றிப் பார்க்கலாம்.
மற்றவர்களோடு சமாதானமாகுங்கள்
10. மத்தேயு 5:23, 24 சொல்கிறபடி, நாம் என்ன செய்ய வேண்டுமென்று இயேசு சொன்னார்?
10 மத்தேயு 5:23, 24-ஐ வாசியுங்கள். யூதர்கள் ரொம்ப முக்கியமாக நினைத்த ஒரு விஷயத்தைப் பற்றித்தான் இயேசு இந்த வசனங்களில் சொன்னார். அவர் சொன்னதைக் கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். ஒரு யூதர் எருசலேம் ஆலயத்துக்குப் போய், தான் பலியிட விரும்பும் மிருகத்தை குருவானவரிடம் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறார். அந்தச் சமயத்தில்தான், அவருடைய சகோதரருக்கு அவர்மேல் மன வருத்தம் இருப்பது ஞாபகத்துக்கு வருகிறது. இப்போது அவர் என்ன செய்ய வேண்டும்? காணிக்கையை அங்கேயே வைத்துவிட்டு முதலில் அந்தச் சகோதரனிடம் ‘போக’ வேண்டும். ஏன்? பலி கொடுப்பதைவிட எது ரொம்ப முக்கியம்? “முதலில் அவனோடு சமாதானமாகுங்கள்” என்று இயேசு சொன்னார்!
11. ஏசாவோடு சமாதானம் பண்ண யாக்கோபு எப்படியெல்லாம் முயற்சி செய்தார்?
11 மற்றவர்களோடு சமாதானம் பண்ணுவதைப் பற்றி யாக்கோபின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவர் தன்னுடைய சொந்த ஊரைவிட்டுப் போய் கிட்டத்தட்ட 20 வருஷங்கள் ஆகியிருந்தன. அதற்குப் பின்பு, அவரைச் சொந்த ஊருக்கே போகும்படி தேவதூதர் மூலம் கடவுள் சொன்னார். (ஆதி. 31:11, 13, 38) ஆனால், தன்னுடைய அண்ணன் ஏசா தன்னைக் கொல்ல நினைத்தார் என்பது யாக்கோபுக்குத் தெரியும். (ஆதி. 27:41) அதனால், இன்னும் ஏசா கோபமாகத்தான் இருப்பாரோ என்று நினைத்து யாக்கோபு “பயத்தில் பதறினார்.” (ஆதி. 32:7) அதனால், ஏசாவிடம் சமாதானம் பண்ணும் முயற்சியில் யாக்கோபு இறங்கினார். முதலில், அதைப் பற்றி யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்தார். பின்பு, ஏசாவுக்கு நிறைய அன்பளிப்புகளை அனுப்பினார். (ஆதி. 32:9-15) ரொம்ப வருஷங்களாக பேச்சுவார்த்தை இல்லாத இந்த இரண்டு சகோதரர்களும் நேருக்குநேர் சந்தித்தபோது, மரியாதை கொடுக்க யாக்கோபுதான் முதல்படி எடுத்தார். ஒரு தடவையோ இரண்டு தடவையோ அல்ல, ஏழு தடவை மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார். யாக்கோபு பணிவோடும் மரியாதையோடும் தன்னுடைய சகோதரனிடம் சமாதானம் பண்ணினார்.—ஆதி. 33:3, 4.
12. யாக்கோபிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 ஏசாவைச் சந்திப்பதற்கும் அவரோடு பேசுவதற்கும் யாக்கோபு என்னவெல்லாம் செய்தார் என்பதிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். முதலில், யெகோவாவிடம் உதவி கேட்டு கெஞ்சினார். பின்பு, தான் செய்த ஜெபத்துக்குத் தகுந்தபடி நடந்துகொண்டார். எப்படியென்றால், ஏசாவிடம் சமாதானம் பண்ணும்போது ஒரு சுமூகமான சூழல் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். இரண்டு பேரும் சந்தித்தபோது, யார்மேல் தப்பு என்பதைப் பற்றி யாக்கோபு பேசவில்லை. ஏனென்றால், தன்னுடைய சகோதரனிடம் சமாதானம் ஆவதுதான் அவருடைய குறிக்கோளாக இருந்தது. நாமும் யாக்கோபைப் போல் எப்படி நடந்துகொள்ளலாம் என இப்போது பார்க்கலாம்.
மற்றவர்களோடு சமாதானமாவது எப்படி?
13-14. யாரையாவது நாம் புண்படுத்திவிட்டோம் என்பது தெரியவந்தால் என்ன செய்ய வேண்டும்?
13 முடிவில்லாத வாழ்வுக்கு நம்மைக் கூட்டிக்கொண்டு போகிற பாதையில் தொடர்ந்து நடக்க வேண்டுமென்றால், சகோதர சகோதரிகளிடம் நாம் சமாதானமாக இருக்க வேண்டும். (ரோ. 12:18) ஒருவேளை, நாம் யாரையாவது புண்படுத்திவிட்டோம் என்பது தெரியவந்தால் என்ன செய்யலாம்? யாக்கோபைப் போல் யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்ய வேண்டும். நம்முடைய முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி அவரிடம் கேட்க வேண்டும்.
14 நம்மைப் பற்றியும் நாம் யோசித்துப்பார்க்க வேண்டும். இந்தக் கேள்விகளை நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘எனக்குள்ள இருக்கிற பெருமைய விட்டுட்டு பணிவோட போய் மன்னிப்பு கேட்கறேனா, சமாதானமாகறேனா? சமாதானம் ஆக நான் முதல்படி எடுக்கறப்போ யெகோவாவோட மனசும் இயேசுவோட மனசும் எப்படி இருக்கும்?’ இந்தக் கேள்விகளை நன்றாக யோசித்துப்பார்த்தால் இயேசு சொல்வதைக் கேட்போம். நம்முடைய சகோதரனிடமோ சகோதரியிடமோ சமாதானம் ஆவதற்கு பணிவோடு அவர்களைப் போய்ப் பார்ப்போம். இந்த விஷயத்தில் நாம் யாக்கோபைப் போலவே நடந்துகொள்ளலாம்.
15. ஒரு சகோதரரோடு சமாதானம் பண்ணுவதற்கு எபேசியர் 4:2, 3-ல் இருக்கிற ஆலோசனை நமக்கு எப்படி உதவும்?
15 ஏசாவை யாக்கோபு சந்தித்தபோது, யார்மேல் தப்பு என்பதைப் பற்றி வாக்குவாதம் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நிலைமை மோசமாகத்தான் ஆகியிருக்கும். அப்படியென்றால், ஒரு சகோதரரிடம் சமாதானம் பண்ணுவதற்கு நாம் போகும்போது பணிவாக நடந்துகொள்ள வேண்டும். (எபேசியர் 4:2, 3-ஐ வாசியுங்கள்.) இதைப் பற்றி நீதிமொழிகள் 18:19 என்ன சொல்கிறதென்று கவனியுங்கள்: “மதில் சூழ்ந்த நகரத்தைப் பிடிப்பதைவிட புண்பட்ட சகோதரனை சமாதானப்படுத்துவது ரொம்பவே கஷ்டம். வாக்குவாதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல் பலமாக இருக்கும்.” ஆனால், நாம் பணிவோடு போய் மன்னிப்பு கேட்கும்போது, நம்முடைய சகோதரரோடு சமாதானம் பண்ண முடியும்.
16. ஒரு சகோதரரோடு சமாதானம் பண்ணுவதற்கு நாம் செய்ய வேண்டிய இன்னொரு விஷயம் என்ன, ஏன்?
16 நம்முடைய சகோதரரோடு சமாதானம் பண்ணுவதற்கு நாம் இன்னொரு விஷயத்தையும் செய்ய வேண்டும். அதாவது, அவரிடம் நாம் என்ன சொல்லப்போகிறோம், எப்படிச் சொல்லப்போகிறோம் என்பதைப் பற்றி நன்றாக யோசித்துப்பார்க்க வேண்டும். அவருக்கு நம்மேல் ஏதாவது மனஸ்தாபம் இருந்ததென்றால், அதை எடுத்துப் போடுவதற்கு உதவும் விதத்தில் நாம் பேச வேண்டும். ஆரம்பத்தில் அவர் கோபமாக எதையாவது பேசிவிடலாம். அதற்காக, நாம் கோபப்படக் கூடாது. நம்மேல் எந்தத் தப்பும் இல்லை என்று அவரோடு வாக்குவாதம் செய்யக் கூடாது. வாக்குவாதம் செய்துகொண்டிருந்தால் அவரோடு சமாதானம் ஆக முடியுமென்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாக முடியாது. யார்மேல் தப்பு இருக்கிறது என்று நிரூபிப்பதைவிட சகோதரரோடு சமாதானம் பண்ணுவதுதான் ரொம்ப முக்கியம் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.—1 கொ. 6:7.
17. கில்பர்ட்டிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
17 சமாதானம் பண்ணுவதற்காக கில்பர்ட் என்ற சகோதரர் எந்தளவு முயற்சி செய்தார் என்று பார்க்கலாம். “எனக்கும் என் பொண்ணுக்கும் இடையில நிறைய பிரச்சன இருந்துச்சு. நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் ஒற்றுமையா இருக்கணும்கறதுக்காக ரெண்டு வருஷத்துக்கு மேல நான் முயற்சி செஞ்சேன். மனசு திறந்து பேசறதுக்கும் அமைதியா பேசறதுக்கும் என்னால முடிஞ்சதெல்லாம் செஞ்சேன்” என்று அவர் சொல்கிறார். கில்பர்ட்
வேறு என்னவெல்லாம் செய்தார்? “ஒவ்வொரு தடவயும் அவகிட்ட பேசப் போறதுக்கு முன்னாடி ஜெபம் செஞ்சேன். கோபமா ஏதாவது பேசிடக் கூடாதுங்கறதுல உறுதியா இருந்தேன். நான் செஞ்சதுதான் சரின்னு நிரூபிக்கிறதுக்கு பதிலா அவள மன்னிக்கிறதும் அவகூட சமாதானம் பண்ணறதும்தான் சரிங்கறத புரிஞ்சுகிட்டேன்” என்றும் அவர் சொல்கிறார். கில்பர்ட் இப்படிச் செய்ததற்கு பலன் கிடைத்ததா? “இன்னைக்கு என் குடும்பத்துல இருக்கிற எல்லார் கூடயும் நான் ஒற்றுமையா இருக்கேன். எனக்கு மன சமாதானம் இருக்கு” என்று கில்பர்ட் சொல்கிறார்.18-19. யாரையாவது நாம் புண்படுத்திவிட்டால், என்ன செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும், ஏன்?
18 நீங்கள் ஒரு சகோதரனையோ சகோதரியையோ புண்படுத்திவிட்டதாகத் தெரிய வந்தால், இயேசு சொன்னபடி அவரோடு சமாதானம் ஆவதில் உறுதியாக இருங்கள். அதற்கு, முதலில் யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். சமாதானம் பண்ணுவதற்காக அவருடைய சக்தியை நம்பியிருங்கள். இப்படிச் செய்தால், நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். அதுமட்டுமல்ல, இயேசு சொன்னதைக் கேட்டு நடக்கிறீர்கள் என்பதையும் நிரூபிக்கிறீர்கள்.—மத். 5:9.
19 “சபைக்குத் தலையாக” இருக்கிற இயேசு கிறிஸ்து வழியாக யெகோவா நமக்கு ஆலோசனைகள் கொடுக்கிறார். (எபே. 5:23) அதற்காக, நாம் அவருக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். அப்போஸ்தலர்களான பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் போல, நாமும் இயேசு ‘சொல்வதைக் கேட்க’ உறுதியாக இருக்கலாம். (மத். 17:5) யாரையாவது புண்படுத்திவிட்டால் அவரோடு எப்படி சமாதானம் பண்ணுவது என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விளக்கமாகப் பார்த்தோம். இதில் சொல்லியிருக்கிறபடி நாம் செய்தால், முடிவில்லாத வாழ்க்கைக்கு கூட்டிக்கொண்டு போகிற குறுகலான பாதையில் நாம் தொடர்ந்து நடக்க முடியும். அப்படி நடந்தால், இன்றைக்கு நமக்கு ஏராளமான ஆசீர்வாதங்கள் கிடைக்கும். எதிர்காலத்தில் முடிவில்லாத ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.
பாட்டு 130 மன்னியுங்கள்
^ பாரா. 5 முடிவில்லாத வாழ்வுக்குப் போகும் இடுக்கமான வாசல் வழியாக நுழையும்படி இயேசு சொல்லியிருக்கிறார். சகோதர சகோதரிகளிடம் சமாதானமாக இருக்கும்படியும் அவர் சொல்லியிருக்கிறார். அவர் சொல்வதைப் போல் செய்யும்போது என்னென்ன சவால்கள் வரலாம்? அவற்றையெல்லாம் நாம் எப்படிச் சமாளிக்கலாம்? அதைப் பற்றி இப்போது பார்க்கப்போகிறோம்.
^ பாரா. 7 இளைஞர்கள் கேட்கும் 10 கேள்விகளும் பதில்களும் என்ற சிற்றேட்டில் “கூடப்படிக்கிற மாணவர்களின் தொல்லையை எப்படிச் சமாளிக்கலாம்” என்ற 6-வது கேள்வியையும், jw.org வெப்சைட்டில் கூடப்படிப்பவர்களின் தொல்லையை சமாளியுங்கள்! என்ற ஒயிட் போர்டு அனிமேஷன் வீடியோவையும் பாருங்கள். (பைபிள் போதனைகள் > டீனேஜர்கள் என்ற தலைப்பில் பாருங்கள்.)
^ பாரா. 8 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
^ பாரா. 56 படவிளக்கம்: தடுப்பு போட்டு பாதுகாக்கப்பட்டிருக்கிற “குறுகலான” ஒரு பாதையை கடவுள் கொடுத்திருக்கிறார். அதில் தொடர்ந்து நடந்தால், ஆபாசம்... ஒழுக்கங்கெட்ட சகவாசம்... உயர் கல்வியை முதலில் வைக்க வேண்டுமென்ற அழுத்தம்... போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடியும்.
^ பாரா. 58 படவிளக்கம்: ஏசாவோடு சமாதானம் பண்ணுவதற்காக யாக்கோபு ஏழு தடவை மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்.