ஆன்மீக நபராக இருப்பதன் அர்த்தம் என்ன?
“கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த அதே சிந்தையை [கடவுள்] உங்களுக்கும் கொடுக்கட்டும்.”—ரோ. 15:5.
பாடல்கள்: 84, 5
1, 2. (அ) ஆன்மீக நபர்களாக இருப்பதைப் பற்றி சில சகோதர சகோதரிகள் எப்படி உணருகிறார்கள்? (ஆ) இந்தக் கட்டுரையில் என்னென்ன கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்?
“ஆன்மீக சிந்தை இருக்குறதுனால என்னால சந்தோஷமா இருக்க முடியுது, என் வாழ்க்கையில வர்ற பிரச்சினைகள சமாளிக்க முடியுது” என்று கனடாவில் இருக்கிற ஒரு சகோதரி சொல்கிறார். பிரேசிலில் இருக்கிற ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “ஆன்மீக நபரா இருக்குறதுக்கு நாங்க முயற்சி செஞ்சதுனால, எங்களோட 23 வருஷ குடும்ப வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கு.” பிலிப்பைன்சில் இருக்கிற ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “ஆன்மீக நபரா இருக்குறதுனால, எனக்கு மனநிம்மதி கிடைச்சிருக்கு, வேற வேற பின்னணியிலிருந்து வந்திருக்கிற சகோதர சகோதரிகளோட நல்லா பழக முடியுது.”
2 ஆன்மீக நபர்களாக இருக்கும்போது நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆன்மீகச் சிந்தையை வளர்த்துக்கொள்வதற்கும், மேலே சொல்லப்பட்ட நன்மைகளை அனுபவிப்பதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில், ஆன்மீக நபர்கள் அல்லது ஆன்மீகச் சிந்தையுள்ள நபர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையில், இந்த மூன்று முக்கியமான கேள்விகளுக்கு நாம் பதில்களைப் பார்ப்போம்: (1) ஆன்மீக நபராக அல்லது ஆன்மீகச் சிந்தையுள்ள நபராக இருப்பது எதைக் குறிக்கிறது? (2) ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் செய்ய யார் யாருடைய உதாரணங்கள் நமக்கு உதவும்? (3) ‘கிறிஸ்துவின் சிந்தையை’ வளர்த்துக்கொள்வதற்காக நாம் எடுக்கும் முயற்சி, நம்மை எப்படி ஆன்மீக நபர்களாக ஆக்கும்?
ஆன்மீக நபராக இருப்பது எதைக் குறிக்கிறது?
3. உலகச் சிந்தையுள்ள மனிதனுக்கும் ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதனுக்கும் இருக்கிற வித்தியாசத்தை பைபிள் எப்படி விளக்குகிறது?
3 ‘உலகச் சிந்தையுள்ள மனிதனுக்கும்’ ‘ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதனுக்கும்’ இருக்கிற வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள அப்போஸ்தலன் பவுல் நமக்கு உதவுகிறார். (1 கொரிந்தியர் 2:14-16-ஐ வாசியுங்கள்.) உலகச் சிந்தையுள்ள மனிதன், “கடவுளுடைய சக்தி வெளிப்படுத்துகிற விஷயங்களை ஏற்றுக்கொள்வதில்லை, அவை அவனுக்கு முட்டாள்தனமாக இருக்கின்றன; அவற்றை அவனால் தெரிந்துகொள்ள முடியாது.” ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதன், “எல்லா காரியங்களையும் ஆராய்கிறான்.” அதோடு, அவனுக்கு “கிறிஸ்துவின் சிந்தை இருக்கிறது.” அதாவது, கிறிஸ்துவைப் போலவே சிந்திப்பதற்கு அவன் முயற்சி செய்கிறான். ஆன்மீக நபர்களாக இருக்கும்படி பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். உலகச் சிந்தையுள்ள மனிதனுக்கும், ஆன்மீகச் சிந்தையுள்ள மனிதனுக்கும் வேறு என்ன வித்தியாசங்கள் இருக்கின்றன?
4, 5. உலகச் சிந்தையுள்ள நபரை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கலாம்?
4 உலகச் சிந்தையுள்ள ஒரு நபர் எப்படி யோசிப்பார்? இந்த உலகத்தில் பரவலாக இருக்கும் சுயநலமான ஆசைகளில்தான் அவருடைய முழு கவனம் இருக்கும். இந்த மனப்பான்மையைப் பற்றி பவுல் விளக்கியபோது, ‘கீழ்ப்படியாதவர்களிடம் இப்போது செயல்படுகிற சிந்தை’ என்று சொன்னார். (எபே. 2:2) இப்படிப்பட்ட மனப்பான்மை இருப்பதால்தான், இந்த உலகத்தில் இருக்கிற நிறையப் பேர், தங்களைச் சுற்றியுள்ள ஆட்களைப் போலவே நடந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். கடவுளுடைய தராதரங்களைப் பற்றி யோசிக்காமல் தங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை மட்டுமே அவர்கள் செய்கிறார்கள். உலகச் சிந்தையுள்ள ஒரு நபர், வேறு எதையும்விட, தன்னுடைய அந்தஸ்துக்கும் பணத்துக்கும் உரிமைகளுக்கும்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்.
5 “பாவ இயல்புக்குரிய செயல்கள்” என்று பைபிள் எவற்றைக் குறிப்பிடுகிறதோ, அவற்றைத்தான் உலகச் சிந்தையுள்ள ஒரு நபர் பெரும்பாலும் செய்கிறார். (கலா. 5:19-21) கொரிந்துவில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதிய முதல் கடிதத்தில், இப்படிப்பட்டவர்கள் செய்யும் மற்ற விஷயங்களைப் பற்றியும் குறிப்பிட்டார். இவர்கள், ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார்கள், பிரிவினைகளை ஏற்படுத்துகிறார்கள், கலகம் செய்ய மற்றவர்களைத் தூண்டுகிறார்கள், சகோதரனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குப் போடுகிறார்கள், தலைமை ஸ்தானத்தை மதிக்காமல் நடந்துகொள்கிறார்கள், சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும்தான் வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தவறு செய்வதற்கான தூண்டுதல் வரும்போது, உலகச் சிந்தையுள்ள ஒரு நபர் தன்னுடைய ஆசைகளைக் கட்டுப்படுத்துவதில்லை. (நீதி. 7:21, 22) உலகச் சிந்தையுள்ள நபர்கள் கடவுளுடைய சக்தியை இழந்துவிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக யூதாவும் குறிப்பிட்டிருக்கிறார்.—யூ. 18, 19.
6. ஆன்மீக நபரை எப்படி அடையாளம் கண்டுபிடிக்கலாம்?
6 ஆன்மீகச் சிந்தையுள்ள ஒரு நபர், கடவுளோடு இருக்கும் பந்தத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருவார்; உலகச் சிந்தையுள்ள நபரைப் போல் இருக்க மாட்டார். கடவுளுடைய சக்தி தன்னை வழிநடத்தும் விதத்தில் அவர் நடந்துகொள்வார். அதோடு, யெகோவாவைப் போல நடந்துகொள்ள கடினமாக முயற்சி செய்வார். (எபே. 5:1) யெகோவா எப்படி யோசிக்கிறார் என்றும், ஒரு விஷயத்தை யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்றும் தெரிந்துகொள்ள முயற்சி செய்வார். அவருக்கு, கடவுள் ஒரு நிஜமான நபராக இருப்பார். உலகச் சிந்தையுள்ள நபரைப் போல் நடந்துகொள்ளாமல், தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர் கடவுளுடைய தராதரங்களின்படி நடப்பார். (சங். 119:33; 143:10) ‘பாவ இயல்புக்குரிய செயல்களை’ செய்வதற்குப் பதிலாக, ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை’ வளர்க்க முயற்சி செய்வார். (கலா. 5:22, 23) ஆன்மீகச் சிந்தையுள்ள ஒரு நபராக இருப்பதன் அர்த்தத்தை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு, இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு வியாபாரி, தன் வியாபாரத்தை இன்னும் எப்படி விரிவாக்கலாம் என்பதைப் பற்றியே எப்போதும் யோசிப்பார். அதேபோல், ஆன்மீகச் சிந்தையுள்ள ஒரு நபர், கடவுளோடு தனக்கு இருக்கும் பந்தத்தை இன்னும் எப்படிப் பலப்படுத்தலாம் என்பதைப் பற்றியே எப்போதும் யோசிப்பார்.
7. ஆன்மீகச் சிந்தையுள்ள நபர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
7 ஆன்மீகச் சிந்தையுள்ள நபர்கள் சந்தோஷமானவர்கள் என்று இயேசு சொன்னார். மத்தேயு 5:3 இப்படிச் சொல்கிறது: “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.” ஆன்மீகச் சிந்தையை வளர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மையைப் பற்றி ரோமர் 8:6 இப்படிச் சொல்கிறது: “பாவ காரியங்களைப் பற்றியே யோசிப்பவர்கள் மரணமடைவார்கள், கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றியே யோசிப்பவர்கள் வாழ்வையும் சமாதானத்தையும் அடைவார்கள்.” இந்த வசனங்களிலிருந்து என்ன தெரிகிறது? ஆன்மீகச் சிந்தை இருந்தால் கடவுளோடும் மற்றவர்களோடும் சமாதானமாக இருக்க முடியும். அதோடு, என்றென்றும் வாழும் நம்பிக்கையும் கிடைக்கும்.
8. ஆன்மீகச் சிந்தையை வளர்த்துக்கொள்வதும் அதை காத்துக்கொள்வதும் ஏன் சவாலாக இருக்கலாம்?
8 இன்று, மிக மோசமான ஒரு உலகத்தில் நாம் வாழ்கிறோம். நம்மைச் சுற்றிலும் உலகச் சிந்தையுள்ள நபர்கள்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். அதனால், நம் மனதைப் பாதுகாக்க நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. யெகோவாவின் சிந்தனைகளால் நம் மனதை நிரப்ப வேண்டும்; இல்லையென்றால், இந்த உலகம் தன்னுடைய எண்ணங்களையும் பாவ சிந்தையையும் நம் மனதில் நிரப்பிவிடும். இதை நாம் எப்படித் தவிர்க்கலாம்? ஆன்மீக நபராக நாம் எப்படி இன்னும் நன்றாக முன்னேறலாம்?
நல்ல முன்மாதிரிகளிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
9. (அ) ஆன்மீகச் சிந்தையுள்ள நபர்களாக இருக்க எது நமக்கு உதவும்? (ஆ) நாம் யாரைப் பற்றியெல்லாம் பார்க்கப்போகிறோம்?
9 ஒரு பிள்ளை, தன் அப்பா அம்மாவின் நல்ல முன்மாதிரியைப் பார்த்துக் கற்றுக்கொள்வதும் அதன்படி நடப்பதும் ரொம்ப முக்கியம். அதேபோல், நாமும் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்திருப்பவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்வதும் அதன்படி நடப்பதும் ரொம்ப முக்கியம். இப்படிச் செய்யும்போது, நம்மால் ஆன்மீகச் சிந்தையுள்ள நபர்களாக இருக்க முடியும். அதேசமயத்தில், நாம் எவற்றைச் செய்யக் கூடாது என்பதையும் உலகச் சிந்தையுள்ள நபர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்கிறோம். (1 கொ. 3:1-4) நல்ல முன்மாதிரிகளைப் பற்றியும், கெட்ட முன்மாதிரிகளைப் பற்றியும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது, நல்ல முன்மாதிரிகளாக இருந்த யாக்கோபு, மரியாள் மற்றும் இயேசுவைப் பற்றிப் பார்க்கலாம்.
10. தான் ஒரு ஆன்மீகச் சிந்தையுள்ள நபர் என்பதை யாக்கோபு எப்படிக் காட்டினார்?
10 நம்மில் பெரும்பாலானவர்களைப் போலவே, யாக்கோபின் வாழ்க்கையும் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. அவருடைய சொந்தச் சகோதரனாகிய ஏசா, அவரைக் கொலை செய்ய நினைத்தார். அவருடைய மாமனார், அவரை ஏமாற்றினார். ஆனாலும், ஆபிரகாமுக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதியின் மீது யாக்கோபுக்கு இருந்த விசுவாசம் குறையவே இல்லை. அந்த அருமையான வாக்குறுதியின் நிறைவேற்றத்தில் தன்னுடைய குடும்பத்துக்கும் பங்கு இருக்கிறது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது; அதனால், அவர்களை அவர் நன்றாகப் ஆதி. 28:10-15) யெகோவாவின் தராதரங்களும் அவருடைய விருப்பமும் தன் மனதில் இருப்பதை, யாக்கோபின் சொல்லும் செயலும் காட்டின. உதாரணத்துக்கு, ஏசாவால் தனக்கு ஆபத்து வரப்போகிறது என்று யாக்கோபு நினைத்தபோது, “கடவுளே, உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன், . . . என்னைக் காப்பாற்றுங்கள். . . . நீங்கள் என்னை ஆசீர்வதிப்பதாகவும், என்னுடைய சந்ததியை கடற்கரை மணலைப் போல எண்ண முடியாத அளவுக்குப் பெருக வைப்பதாகவும் சொன்னீர்களே” என்று ஜெபம் செய்தார். (ஆதி. 32:6-12) யெகோவாவின் வாக்குறுதிகள்மீது யாக்கோபுக்கு பலமான விசுவாசம் இருந்தது; தான் வாழ்ந்த விதத்திலிருந்து அதை அவர் நிரூபித்துக் காட்டினார்.
பார்த்துக்கொண்டார். (11. மரியாள் ஒரு ஆன்மீக நபராக இருந்தார் என்பதை எது காட்டுகிறது?
11 இப்போது, மரியாளைப் பற்றிப் பார்க்கலாம். அவர் ஆன்மீகச் சிந்தையுள்ள நபராக இருந்ததால், இயேசுவுக்குத் தாயாக இருக்கும்படி யெகோவா அவரைத் தேர்ந்தெடுத்தார். தன்னுடைய சொந்தக்காரர்களான சகரியாவையும் எலிசபெத்தையும் பார்க்கப்போனபோது மரியாள் என்ன சொன்னார் என்பதை லூக்கா 1:46-55-ல் வாசித்துப் பாருங்கள். (வாசியுங்கள்.) கடவுளுடைய வார்த்தையை மரியாள் நேசித்தார் என்பதும், எபிரெய வேதவசனங்களை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார் என்பதும் அவருடைய வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. (ஆதி. 30:13; 1 சா. 2:1-10; மல். 3:12) மரியாளும் யோசேப்பும் கல்யாணம் செய்துகொண்ட பிறகும்கூட, இயேசு பிறக்கும்வரை அவர்கள் உறவுகொள்ளவில்லை. தங்களுடைய ஆசையைவிட கடவுள் கொடுத்த பொறுப்பைத்தான் அவர்கள் மிக முக்கியமாக நினைத்தார்கள். (மத். 1:25) அதோடு, இயேசு வளர்ந்துவந்த சமயத்தில் நடந்தவற்றையெல்லாம் மரியாள் ரொம்ப கவனமாகப் பார்த்தார். அதோடு, அவர் கற்றுக்கொடுத்த விஷயங்களை கவனமாகக் கேட்டார். அவற்றையெல்லாம் மரியாள் “தன்னுடைய இதயத்தில் நன்றாகப் பதிய வைத்துக்கொண்டாள்” என்று பைபிள் சொல்கிறது. (லூக். 2:51) மேசியாவைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதிகளில் மரியாள் ரொம்ப ஆர்வமாக இருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. நாமும் மரியாளைப் போலவே எப்போதும் கடவுள் விரும்புகிற செயல்களைச் செய்ய முடியுமா?
12. (அ) இயேசு எப்படித் தன் அப்பாவைப் போலவே நடந்துகொண்டார்? (ஆ) நாம் எப்படி இயேசுவைப் போலவே நடந்துகொள்ளலாம்? (ஆரம்பப் படம்)
12 இதுவரையில் வாழ்ந்தவர்களிலேயே, தலைசிறந்த ஆன்மீகச் சிந்தையுள்ள நபர் என்று யாரைச் சொல்லலாம்? அது இயேசுதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தப் பூமியில் அவர் இருந்தபோது, தன் அப்பாவான யெகோவாவைப் போலவே நடந்துகொள்ள விரும்பியதை தன் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் காட்டினார். அவர் யெகோவாவைப் போலவே யோசித்தார், அவரைப் போலவே உணர்ந்தார், அவரைப் போலவே நடந்துகொண்டார். கடவுளுடைய விருப்பத்தை அவர் செய்தார், அவருடைய தராதரங்களை மதித்தார். (யோவா. 8:29; 14:9; 15:10) உதாரணத்துக்கு, அவருடைய உணர்வுகளைப் பற்றி மாற்கு என்ன சொல்லியிருக்கிறார் என்பதை வாசித்துப் பாருங்கள். பிறகு, யெகோவாவின் கரிசனையைப் பற்றி ஏசாயா என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அந்தப் பதிவோடு ஒப்பிட்டுப் பாருங்கள். (ஏசாயா 63:9-ஐயும், மாற்கு 6:34-ஐயும் வாசியுங்கள்.) உதவி தேவைப்படுகிறவர்களுக்குக் கரிசனையைக் காட்ட எப்போதும் தயாராக இருப்பதன் மூலம் நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோமா? நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும், இயேசுவைப் போலவே நாமும் கண்ணும்கருத்துமாக இருக்கிறோமா? (லூக். 4:43) ஆன்மீகச் சிந்தையுள்ள நபர்கள் கரிசனையோடு நடந்துகொள்வார்கள், மற்றவர்களுக்கு உதவ முயற்சி செய்வார்கள்.
13, 14. (அ) இன்றிருக்கும் ஆன்மீகச் சிந்தையுள்ள நபர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) ஒரு உதாரணம் சொல்லுங்கள்.
13 இன்றும், ஆன்மீகச் சிந்தையுள்ள சகோதர சகோதரிகள் நிறையப் பேர் நம் மத்தியில் இருக்கிறார்கள்; இவர்கள் இயேசுவைப் பின்பற்ற கடினமாக முயற்சி செய்கிறார்கள். அவர்கள் ஊழியத்தில் ரொம்ப ஆர்வமாக இருப்பதையும், மற்றவர்களை உபசரிப்பதையும், கரிசனையோடு நடந்துகொள்வதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களிடமும் குறைகள் இருப்பது உண்மைதான்; இருந்தாலும், நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளவும் யெகோவா விரும்புவதைச் செய்யவும் அவர்கள் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். பிரேசிலில் இருக்கும் ரேச்சல் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “இந்த உலகத்தோட பாணி எனக்கு ரொம்ப பிடிச்சிருந்ததால, நான் அடக்கமா உடுத்தாம இருந்தேன். ஆனா, சத்தியம்தான் என்னை ஒரு ஆன்மீக நபரா மாத்துச்சு. மாற்றங்கள் செய்றது அவ்வளவு சுலபமா இல்ல, நிறைய முயற்சி செய்ய வேண்டியிருந்துச்சு. இருந்தாலும் அப்படி செஞ்சது, எனக்கு சந்தோஷத்த கொடுத்துச்சு, வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் கிடைச்சுது.”
14 பிலிப்பைன்சில் இருக்கிற ராலீன் என்ற சகோதரிக்கு வேறு விதமான பிரச்சினை இருந்தது. அவர் சத்தியத்தில் இருந்தாலும், அவருடைய கவனமெல்லாம் மத்தேயு 6:33, 34-ல் இருக்கிற யெகோவாவின் வாக்குறுதியை அவர் முழுமையாக நம்புகிறார். “யெகோவா என்னை பார்த்துக்குவாருங்கிறதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல” என்று ராலீன் சொல்கிறார். இவர்களைப் போன்ற சகோதர சகோதரிகள் உங்கள் சபையிலும் இருக்கலாம். இயேசுவை அவர்கள் எப்படிப் பின்பற்றுகிறார்கள் என்பதை நாம் பார்க்கும்போது, அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்ற நாம் விரும்புவோம்.—1 கொ. 11:1; 2 தெ. 3:7.
உயர்கல்வி படித்து ஒரு நல்ல வேலைக்குப் போவதிலேயே இருந்தது. போகப்போக, ஆன்மீக இலக்குகளை அவர் பின்னுக்குத் தள்ளிவிட்டார். “என் வாழ்க்கையில எதையோ இழந்த மாதிரி இருந்துச்சு. என் வேலையவிட ரொம்ப முக்கியமான ஏதோ ஒண்ணு என்கிட்ட இல்லாதத நான் உணர்ந்தேன்” என்று அவர் சொல்கிறார். தான் சிந்திக்கும் விதத்தை அவர் மாற்றிக்கொண்டார், தன் வாழ்க்கையில் யெகோவாவின் சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். இப்போது,‘கிறிஸ்துவின் சிந்தையை’ வளர்த்துக்கொள்ளுங்கள்
15, 16. (அ) கிறிஸ்துவைப் போல இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) ‘கிறிஸ்துவின் சிந்தையை’ நாம் எப்படிக் காட்டலாம்?
15 இயேசுவை நாம் எப்படிப் பின்பற்றலாம்? ‘கிறிஸ்துவின் சிந்தையை’ நாம் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று 1 கொரிந்தியர் 2:16 சொல்கிறது. ‘கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த அதே சிந்தை’ நமக்கும் இருக்க வேண்டுமென்று ரோமர் 15:5-ம் சொல்கிறது. நாம் கிறிஸ்துவைப் போல் இருக்க வேண்டுமென்றால், அவர் எப்படி யோசித்தார், உணர்ந்தார், நடந்துகொண்டார் என்பதைப் பற்றியெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு எதையும்விட யெகோவாவோடு தனக்கு இருந்த பந்தத்தைத்தான் இயேசு முக்கியமாக நினைத்தார். நாமும் இயேசுவைப் போல நடந்துகொண்டால், யெகோவாவை இன்னும் நெருக்கமாகப் பின்பற்ற முடியும். அதனால்தான், இயேசு எப்படி யோசித்தார் என்பதை நாம் கற்றுக்கொள்வது ரொம்ப முக்கியம்.
16 இயேசுவைப் போலவே யோசிக்க நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? அவருடைய சீஷர்கள், அவர் அற்புதங்கள் செய்ததைக் கவனித்தார்கள்; பெரிய கூட்டத்துக்கு முன்னால் அவர் போதித்ததைக் கேட்டார்கள்; எல்லா தரப்பட்ட மக்களையும் அவர் எப்படி நடத்தினார் என்பதைப் பார்த்தார்கள்; யெகோவாவுடைய நியமங்களை அவர் எப்படிக் கடைப்பிடித்தார் என்பதைக் கவனித்தார்கள். “அவர் செய்த எல்லா காரியங்களுக்கும் நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம்” என்று சொன்னார்கள். (அப். 10:39) இன்று, நம்மால் இயேசுவைப் பார்க்க முடியாது. ஆனால், சுவிசேஷ பதிவுகள் நம்மிடம் இருக்கின்றன; அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள அவை நமக்கு உதவும். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய புத்தகங்களைப் படித்து, அவற்றைத் தியானித்துப் பார்த்தால், இயேசு எப்படி யோசித்தார் என்பதைப் பற்றி நாம் அதிகமாகத் தெரிந்துகொள்ள முடியும். அப்படித் தெரிந்துகொள்ளும்போது, நம்மால் ‘அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்ற’ முடியும். அப்போது, “அவர் காட்டிய அதே மனப்பான்மையை” நம்மாலும் காட்ட முடியும்.—1 பே. 2:21; 4:1.
17. கிறிஸ்துவைப் போல யோசிக்கும்போது நமக்கு என்ன நன்மை கிடைக்கும்?
17 கிறிஸ்துவைப் போல யோசிப்பதால் நமக்கு என்ன நன்மை? சத்தான உணவைச் சாப்பிட்டால் நாம் நல்ல உடல் பலத்தோடு இருப்போம்; அதேபோல், கிறிஸ்துவின் சிந்தையால் நம் மனதை நிரப்பினால் நாம் நல்ல ஆன்மீக பலத்தோடு இருப்போம். அப்போது, ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இயேசு எப்படி நடந்துகொள்வார் என்பதை நம்மால் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொள்ள முடியும். அப்படித் தெரிந்துகொள்ளும்போது, யெகோவாவுக்குப் பிடித்த ஞானமான தீர்மானங்களை நம்மால் எடுக்க முடியும்; சுத்தமான மனசாட்சியையும் அனுபவிக்க முடியும். இவையெல்லாம், ‘எஜமானாகிய இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்வதற்கு’ நமக்கு நியாயமான காரணங்களைத் தருகின்றன, இல்லையா?—ரோ. 13:14.
18. ஆன்மீகச் சிந்தையுள்ள நபராக இருப்பதைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்?
18 ஆன்மீகச் சிந்தையுள்ள நபர்களாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை நமக்கு உதவியது. கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்ட நல்ல முன்மாதிரிகளைப் பற்றி நாம் தெரிந்துகொண்டோம். ‘கிறிஸ்துவின் சிந்தையை’ வளர்த்துக்கொள்ளும்போது, யெகோவாவைப் போல நம்மால் யோசிக்க முடியும் என்பதையும், அவரோடு நெருக்கமான பந்தத்தை அனுபவிக்க முடியும் என்பதையும் தெரிந்துகொண்டோம். ஆனால், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஆன்மீக ரீதியில் நாம் பலமாக இருக்கிறோமா என்று எப்படித் தெரிந்துகொள்வது? ஆன்மீக ரீதியில் பலமுள்ளவர்களாக இருப்பதற்கு நாம் என்ன செய்யலாம்? நாம் ஆன்மீக ரீதியில் பலமாக இருப்பது, நம் வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்தக் கேள்விகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.